மீன் துள்ளியான் அவர்களின் வலைப்பூவில் சுமைதாங்கிக்கற்களும் திண்ணைகளும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பார்த்தேன்.( அதானே! அடுத்தவுக சொன்னப்புறந்தான் ஞாபகம் வரும்.) எங்கள் செட்டிநாட்டு கிராமங்களிலும் சுமைதாங்கிக்கற்களும்,வீட்டுக்கு வீடு திண்ணைகளும் உண்டு.ஒரு குடும்பத்தில் கர்ப்பிணிப் பெண்கள் இறந்துவிட்டால் அந்தப் பெண்ணின் ஞாபகமாக சுமைதாங்கிக்கல் நடும் பழக்கம் இன்றும் உள்ளது.சுமையோடு சொர்க்கம் போன பெண்ணின் ஆன்மசாந்திக்காக நடப்படுகிறது. ஊரணிக்கரைகளில் சுற்றிலும் இந்தக்கல் நடப்பட்டு,இன்றும் தண்ணீர் எடுக்க வரும் பெண்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.கண்மாய்க்கரைகளில் கதிர்க்கட்டு சுமந்து வரும் மக்கள் உபயோகத்திற்கும் உள்ளது இன்றும்.
அந்தக்காலத்தில் அன்னக்காவடிகள்,ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாட்டு வண்டிகளில் பயணம் செய்பவர்களுக்கென உணவு கொள்ளவும்,மாலை நேரங்களில் அக்கம்,பக்கம் குடும்பத்துடன் அளவளாவவும் முகப்புத் திண்ணைகளும்,பின்பக்கம் கொல்லைத் திண்ணைகள் அம்மி,ஆட்டுக்கல் போட்டு மசாலா மாவு அரைக்க,துலக்கிய பாத்திரங்களைக் கழுவிகவிழ்த்து வைக்கவென உபயோகத்தில் இருந்து வந்தது.முகப்புத் திண்ணைகளின் மூலையில் பானை வைத்து தினமும் தண்ணீர் மாற்றி,ஒரு குவளையும் வைக்கப்படும்.இப்போது பொறியாளர் கொண்டு நவீனமாக வீடு கட்ட ஆரம்பித்து திண்ணைகளை மறந்து,சிங்க்,வாஷ் பேசின் என்று நமது பயணம் போய்க்கொண்டிருக்கிறது.திண்ணைகளில் அமர்ந்து நம் மக்களும் வம்பளக்கவே,நமது தலைமுறை திண்ணைகளைத் தவிர்க்கிறது.அதோடு காலம் இருக்கிற இருப்பில், இருக்கிற திண்ணைகளில் வெளியாட்களை அனுமதிப்பதும் உசிதமில்லை.
அன்னசத்திரங்கள்,தண்ணீர்ப்பந்தல்கள் ஒருகாலத்தில் நித்தமும் இருந்திருக்கிறது.இன்றும் எங்கள் கிராமங்களில் ஊர்ப்பொது இடத்தில் தண்ணீர்ப்பந்தல் வீடு ஒன்றும் உள்ளது. திருவிழாக்காலங்களில் பயன்படுத்தப்படுகிறது.அன்னசத்திரங்கள் கல்யாண மண்டபங்களாக மாறிவிட்டது.குன்றக்குடி,பழனி,ராமேஸ்வரம்,காசி போன்ற ஊர்களில் மொத்த ஊரும் சேர்ந்து நாட்டார் மடங்களை நிறுவி,நிர்வகித்துவருகிறார்கள்.எங்கள் ஊரிலிருந்து யார் போனாலும், எப்போது போனாலும் முன்னறிவிப்பு செய்துவிட்டு போய்த் தங்கிக்கொள்ளலாம்.வேக உலகில் அன்னசத்திரம்,தண்ணீர்ப்பந்தல் இவையெல்லாம் நிர்வகிக்க நேரமின்றியும்,பொருளாதாரப் பிரச்சினைகளாலும் பழையனக்கழிதலாய் கடந்து போய்விட்டது.இப்போதெல்லாம் திருவிழாக்காணவென அக்கம் பக்கம் ஊர்களில் இருந்துவரும் கூட்டமே குறைந்துவிட்டது.இரவு தெய்வத்திருவுருக்களை எழுந்தருளச்செய்து,ஊர் சுற்றி வரும்போது ஒவ்வொரு வீட்டிலும் காபி,பானகம்,சுண்டல் தருவது வழக்கம்.இப்போதும் தருகிறார்கள்.வாங்கி அருந்துவதற்கு சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு தவிர்த்துவிடுகிறார்கள்.அதனாலேயே என்னவோ எல்லோரிடமும் ஒரு இணக்கம்,சுமுகம் இல்லாது சுவர் எழுப்பிக்கொண்டு,உன்னைவிட நான் மட்டமா? என்ற ஒரு கேள்வி அனைத்துக்கண்களிலும் பிரதிபலிக்கிறது.முன்நாட்களில் திருமணம்,கல்யாணம் போன்றவை சொந்தபந்தங்களுக்கு ஊர்,ஊராய்ப் போய்ச்சொல்லப்போனால் அம்மாவுக்கு அம்மாவோட அண்ணன் மனைவியோட என்று நீளும் சொந்தம்.இப்போதெல்லாம் நெருங்கிய சொந்தங்கள்,நட்பு என்று சுருக்கமாகி விட்டதோடு,கல்யாணவீடு மாலையே வெறுமையாகிவிடுகிறது.எனது குழந்தைப்பருவத்தில் இதையெல்லாம் பார்த்ததால் இப்போது மனம் மருகுகிறது.ஆனால் நம்குழந்தைகள் இதையெல்லாம் அறியாததால் இவையெல்லாம் சரிதான் என்கின்றனர்.ஒரு கல்யாண வீட்டில் நான்கு நாட்கள் உட்கார்ந்திருப்பதாவது?முன் எப்போதும் இல்லாத காலமாற்றம் வெகு வேகமாக நமது தலைமுறையில் நடந்திருப்பதால் மனதளவில் ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாக இருக்கிறது.காலத்தின் போக்கில் போகிறவர்கள் தான் வாழத்தகுதியுள்ளவர்கள்.இந்த மாற்றங்களை மனதளவில் ஏற்று நாமும் வாழ்ந்து தானே ஆகவேண்டும்.உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் தானே நம் மரபு.
//எல்லோரிடமும் ஒரு இணக்கம்,சுமுகம் இல்லாது சுவர் எழுப்பிக்கொண்டு,உன்னைவிட நான் மட்டமா? என்ற ஒரு கேள்வி அனைத்துக்கண்களிலும் பிரதிபலிக்கிறது//
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மையான விசயம்....காலம் மாறுகிறதோ இல்லையோ மனிதர்களின் எண்ணங்களில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது...
உங்கள் அந்தக் கால நினைவுகளின் பகிர்வு சுவையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.