வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற அரசாங்கத்தின் வேண்டுகோளை,புதுக்கவிதை முதல் புதுப்புது நகைச்சுவையாக்கி நாம் கப்பல் விட்ட கதைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு,உண்மையான அக்கறையோடு அணுகலாம்.ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை.அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.அதோடு மரம் வளர்ப்பது மன இறுக்கத்தைத் தவிர்க்கும் என்பது சமீபக்கண்டுபிடிப்பு.ஆக மரம் வளர்ப்பதில் நிறைய அனுகூலம் நமக்குத்தான்.மரம்,செடி,கொடிகள் வளர்த்து,அதனுடன் உரையாடிப்பாருங்கள்.செல்லப்பிராணிகளிடம் அன்பு காட்டி தடவிக் கொஞ்சுவோமே அப்படி கொஞ்சிப்பாருங்கள்.அவை பசுமையாய்,செழிப்பாய் வளர்வதோடு இயல்பான ஆயுள் தாண்டி வளர்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
நாங்கள் இருக்கும் வீடு வாடகை வீடு.வீட்டைச்சுற்றிலும் இருக்கும் இடத்தில் எழுமிச்சை,சுண்டைக்காய்,கறிவேப்பிலை,கொய்யா,பலா,செம்பரத்தை,மஞ்சள்,இஞ்சி,பூச்செடிகள்,கீரை வளர்க்கிறோம். சிறிய இடம் தான்.ஆனால் அதை சரியாக உபயோகப்படுத்தினால் நிறைவான பலன் கிடைக்கும்.அது போக அத்திமரம் ஒன்று உள்ளது.அத்தி பூத்தாற்போல என்பார்களே அதற்கு அர்த்தம் அந்த மரத்தைப்பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்.இலைகளைக்கூட மொட்டையாக உதிர்த்துவிட்டு நிற்கும்."என்னடா! இப்படி ஆயிட்ட?" என்று அதன் சருக்குகளைக்கூட்டி அதன் வேரில் தள்ளிவிட்டு வந்து பத்து நாள் கழித்துப்பார்த்தால் பச்சைப்பசேல் என்று துளிரடித்து சிரிக்கும்.நமக்கே சந்தோசமாக இருக்கும்.இரண்டு நாள் கழித்துப்பார்த்தால் கிளைகளில் கொத்து கொத்தாக பச்சை நிறத்தில் காய்கள்.அப்புறம் பழுத்து ஆப்பிள் நிறத்தில் பழங்கள்.அந்தப்பழங்களை எ ப்படிப் பதப்படுத்துவது என்று தெரியாது.ஒரு பழம் முக்கிய பூமியில் ஆறு ரூபாயாம்.இங்கே அத்தனை பழங்களும் ஜலதாரையில் வீணாகிறது.அதன் சருகுகள் கொட்டுவதைப்பார்த்து வீட்டு உரிமையாளர் கிளைகளை வெட்டிவிடுவோம்.உங்களுக்கு சிரமமில்லை என்றார்கள்.நாங்கள் வேண்டாம் என்று தடுத்து விட்டோம். முக்கிய காரணம் அதன் கிளைகள் தகரம் வேயப்பட்ட கூரையில் தவழ்ந்து கிடப்பதால் கோடை வெயிலின் உக்கிரம் வீட்டுக்குள் சற்றும் இருக்காது.கோடையில் எங்கள் வீடு மட்டும் சொர்க்கம்.செம்பரத்தை மலர்கள் பூசைக்கு,இலைகள் நம் கேசத்திற்கு.இலைகளைப்பறித்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி தலையில் தடவிக்கொண்டு நமது வேலைகளைக்கவனித்துவிட்டுக் குளிக்க ஷாம்பூ போட்டது போல் முடி பளபளப்பாய் இருக்கும்.பூச்செடிகள் வளர்த்துப்பாருங்கள்.அதன் மலர்கள் நம் மனதை உற்சாகப்படுத்தும் ஊக்கமருந்து.அந்த மகிழ்ச்சி ஊற்றுக்கு எதுவும் ஈடு கிடையாது
ஒரு முறை பொங்கலுக்கு வாங்கிவந்த மஞ்சள் கொத்தில் ஒரு மஞ்சள் உதிர்ந்து விட்டது. அதை எடுத்து வைத்து மறந்து போய் பத்து நாள் கழித்துப்பார்த்ததில் அது முளைவிட்டிருந்தது.பதித்து வைத்து,மாட்டுச்சாணம் கொண்டு வந்து காய வைத்து,உதிர்த்து உரமிட அப்படியே தொடர்ந்து ஆறு வருடமாக மஞ்சள் கொத்து வாங்குவதில்லை என்பதோடு நண்பர்களுக்கும் பொங்கல் பரிசு.வருடத்திற்கு பத்துகிலோ மஞ்சள் எடுக்கிறோம்.ஆனால் அதை எப்படிப்பக்குவப்படுத்துவது என்பது தெரியாமல் விழிக்கிறோம்.மாவடு இஞ்சி,ரோஜா,கனகாம்பரம்,சம்பங்கி போன்ற ஆரஞ்சு வண்ணப்பூ வகை ஒன்று இப்படி சின்ன இடத்தில் நெருக்கியடித்து வளர்க்கிறோம்.கப்பல் போக்குவரத்துத் துறை பனிமனையில் பணிபுரியும் நண்பர் ஒருவர் சிறிய மண்வெட்டி ஒன்று செய்து தர தோட்ட வேலை இனிமையாய்ப்போகிறது.சுண்டைக்காயின் மகத்துவம் இங்குள்ளவர்களுக்குப்புரியாததால் சுண்ட மரம் இங்கு சில இடங்களில் வேலியாகப் பயன்படுகிறது.பாக்குமரம்,தென்னை மரம் இல்லாத வீடுகள் இல்லை.பாக்கு மரம் பூத்தால் மருதாணிப்பூவின் வாசனையாக இருக்கும்.பாக்குப்பழங்களைப் பொறுக்கி காயவைத்து சுத்திவைத்து உடைத்து உருண்டையான பாக்கை விற்பது வழக்கம்.சராசரியாக மாதம் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று கிலோ வரை பாக்கு கிடைக்கும்.பெரிய வருமானம் ஒன்றுமில்லை தான்.ஆனால் வீணாகவில்லை என்பது மனதுக்கு நிறைவு. இங்குள்ள லோக்கல் மக்கள் முருங்கை,மாங்காய் இவற்றைப்பறிக்க மாட்டார்கள்.வீணாய்ப்போகும்.ஆனாலும் தோட்டமிடுவது,செடிகள் வளர்த்து வீடுகளை அழகுறப்பேணுவதில் வல்லவர்கள்.ஆனால் தற்போது வீட்டு வாடகைக்கு ஆசைகொண்டு மரங்களை வெட்டி வீடுகளைப் பெருக்குகிறார்கள்.ஆனாலும் தொட்டியில் விதவிதமான செடிகள் வளர்க்கிறார்கள்.
செடிகள் வளர்ப்பதற்கு பெரிய இடம் தேவையில்லை.உபயோகமற்ற சின்னச்சின்ன பாத்திரங்களில் செடி வளர்க்க மன அழுத்தம் மறையும்.நம் மனது எப்போதும் ஈரமாக,கோபமற்று குளுமையாக இருக்கும்.அதோடு நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது.குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும்.அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத்தேவையான நிழல்,குளுமை கிடைப்பதோடு,ஆரோக்கியத்திற்கும் நல்லது.கொஞ்சம் நேசம்,கொஞ்சம் மெனக்கெடல்,கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம்.உடலுக்கும் பயிற்சி.அழகுக்கு அழகு.குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.(நமக்கும் தான்)மனமிருந்தால் மார்க்கமுண்டு.உபயோகித்துத் தூக்கி எறியும் பெரிய அளவு கோப்பைகளில்,குளிர்பானப்பாட்டில்களில்,எண்ணெய்க் கொள்கலன் களில் தற்போது செடி வளர்க்கிறார்கள்.உங்களின் சாளரங்களும் பசுமையால் நிறைய செடி வளருங்கள்.குருவிகள்,காக்கைகளையும் நண்பர்களாக்க வேண்டுமா? மரம் வளருங்கள்.
1990ம் வருடம் கிட்டத்தட்ட 80 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி, 20 வருடத்தில் 130 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியாகிவிட்டது.காடுகளை அழித்து வெற்று நிலங்களை அதிகமாக்கி விட்டோம்.காடுகளை அழித்தலாலும்,தங்கம்,கனிமம்,நிலக்கரிச்சுரங்கம் தோண்டுவதாலும்,மற்றும் முறையற்ற வேளாண்மையாலும் தான் வெற்று நிலம் பெருகிவிட்டது என்கிறார்கள்.நண்பர்களே! பூமியை அகழ்பவர்கள் அகழ்ந்து காயப்படுத்தட்டும். அவர்களைத் திருத்த நாம் யார்? ஆனால் நாம் மரம் வளர்ப்போம்.நமது ஆரோக்கியம் காப்போம்.
அருமை.. சொர்க்கத்தில் வாழ்கிறீர்...
பதிலளிநீக்குமனுஷன் மரமாயிட்டான், அதான் இப்டிலாம் கெஞ்ச வேண்டியிருக்குது...
பதிலளிநீக்கு"பூச்செடிகள் வளர்த்துப்பாருங்கள்.அதன் மலர்கள் நம் மனதை உற்சாகப்படுத்தும் ஊக்கமருந்து." நிச்சயமாய். சிறிதாய் இருந்தாலும் அது மகிழ்ச்சியைத் தரும்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவு அருமை....
பதிலளிநீக்குசெடி வளர்பதை பற்றி அழகாக விழக்கி எழுதி இருக்கீர்கள்.
ஓட்டு போட்டாச்சு..
பதிலளிநீக்குஎத்தனை பேருக்கு இந்த அருமை தெரியும்.. எங்க வீட்டுலயும் செடி வெக்க இடம் ஒதுக்கனும்னு சொன்னேன்.. எங்க... யாரும் போது நல நோக்கோட, பிற்காலத்தி மனசில வெச்சு செயல்படரதில்லை.. அதுதான் பிரச்சினை..
முடிஞ்சா "home" அப்படிங்கற டாகுமெண்டரி படத்தை டவுன்லோட் பண்ணி பாருங்க..
நம்மள மாறி ஆளுகளுக்கு ரொம்ப தேவை..
உங்கள மாறி மனிதர்களை பின்தொடர்வது மட்டும் இல்லாமல் பின்பற்றவும் நினைக்கிறேன்..
முடிந்தால் என் பதிவுகளையும் பாருங்கள்.. உங்கள் கருத்தோடு ஒத்துப் போகும்..
நன்றி..
சொல்ல மறந்து விட்டேன்..
பதிலளிநீக்குமேலே உள்ள இயற்கை வீடு உங்கள் ப்லோக்'கிற்கு மிகவும் அழகு சேர்க்கிறது.. அங்கே போய் வாழ வேண்டும் போல் தோன்றுகிறது..
சூப்பர்..
நன்றி..
அந்தமான் வாழ்க்கையை எங்களுக்கு அழகாக அறிமுகம் செய்கின்றீர்கள்.
பதிலளிநீக்குநல்ல நடை.
இங்குள்ள இதழாளர்கள் தங்களைப் பயன்படுத்தி அந்தமான் தமிழை அறிமுகம் செய்யலாம்.
காத்திருப்போம்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
பகிர்வுக்கு நன்றி மேடம்.
பதிலளிநீக்கு//அதோடு நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது.குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும்//
பதிலளிநீக்குஅருமையான செய்தி, உபயோகமான பதிவு.
சாடியில் செடிவளர்க்கும் எனக்கு பதிவு மிக உற்சாகம் தருகிறது.
தங்கள் வீட்டு மரங்களின் படங்களும் போட்டிருக்கலாம்.
good one.
பதிலளிநீக்குஇந்தப் பக்கத்தைப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.
http://goodnewsindia.com/pointreturn/online/home/
good .........................best .......................chanceless..........................no word to say...........
பதிலளிநீக்கு