கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

29.12.09

6.உக்காரை

தேவையான பொருட்கள்

1.பாசிப்பருப்பு - 1 உழக்கு
2.ரவை அல்லது பச்சரிசி மாவு -1 உழக்கு
3.வெல்லம் - 600 கிராம்
4.தேங்காய் - 1 மூடி
5.நெய் அல்லது டால்டா -1/4 கிலோ
6.முந்திரி -25 கிராம்

             முதலில் பாசிப்பருப்பை வறுத்து பதமாக வேகவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.ரவை அல்லது பச்சரிசி மாவை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.பின் அடிகனமான பாத்திரத்தைக் காயவைத்து சிறிது நெய் ஊற்றிக்காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு அதே நெய்யில் தேங்காய்த்துருவலை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு எல்லா நெய்யையும் ஊற்றி காய்ந்ததும் ரவையைக் கொட்டி நன்றாக வறுத்துக்கொண்டு பாசிப்பருப்பு வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்கவைத்து ரவையில் ஊற்றிக் கிளறவும்.பச்சரிசி மாவாக இருந்தால் இரண்டு டம்ளர் தண்ணீர் அதிகம். அதனால் பாசிப்பருப்பு வேகவைத்த தண்ணீரை தெளித்துக் கிளறவும்.மாவு நன்றாக வெந்ததும் வடிகட்டிய பருப்பு,வதக்கிய தேங்காய் கொட்டிக்கிளறவும்.நன்றாக சுருண்டு வந்ததும் வெல்லத்தை தூளாக்கி சேர்த்து நன்றாகக் கிளறி, முந்திரி சேர்த்து, இறக்கவும். பாசிப்பருப்பு குழைந்து விட்டால் அல்வா போன்ற சுவையுடனும்,பதமாக இருந்தால் உதிரியாகவும் இருக்கும்.உக்காரை மீந்துவிட்டால் பூரண உருண்டைகளாக உருட்டி மாவில் நனைத்துப் போட்டால் இனிப்புச்சீயம் தயார்.

28.12.09

5.மாவு உருண்டை

தேவையான பொருட்கள்

1.பாசிப் பருப்பு - 2 உழக்கு
2.பச்சர்சி - 1/2 உழக்கு
3.சீனி - 2 1/2 உழக்கு
4.நெய் - தேவையான அளவு

         பாசிப்பருப்பையும் பச்சரிசியையும் தனிதனியே பொன்னிறமாக வறுத்து சன்னமாக பொடித்துக்கொள்ளவும்.சீனியையும் சன்னமாகப்பொடிக்கவும்.இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.பிறகு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து காயவைத்து நெய்யை ஊற்றி காய்ந்ததும் மாவைக்கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கி வைத்து உருண்டைகளாகப்பிடிக்கவும்.ஆறிவிட்டால் நெய் உறைந்து பிடிக்க முடியாது உதிரும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாகச்செய்து கொள்ளவும்.நெய் பிடிக்காதவர்கள் டால்டாவையும் பயன் படுத்தலாம்.எங்கள் ஊரில் இது சீர்ப் பலகாரம்.செய்வதும் சுலபம்.உடலுக்கும் நல்லது.

27.12.09

பாலையநாடு

                ஒவ்வொருவருக்கும் தாய்நாடு,தாய் மொழி மீது ஒரு பற்று இருப்பது போல சொந்த ஊர், பிறந்த மண் மீது ஒரு காதல் இருக்கும்.எனக்கு என் பிறந்த மண்ணோடு கூட எங்கள் மக்களுக்கு உரிமையான 'பாலையநாடு' என்று சொல்லப்படுகிற 16 கிராமங்கள் மீதும் தீராக்காதல். இத்தனைக்கும் ஆற்றுப் பாசனமோ,மழை அதிகம் பெய்து வளம் கொழிக்கும் பூமியோ அல்ல.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்களே! அப்படி பாலை பூமியாக இருந்தாலும், பிறந்த ஊர் என்பதால் மிகச்செல்லம்,மிகப்பிரியம் எங்கள் கிராமங்கள்.

                    எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்) வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி 'பாலையநாடு' என்றும் கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் 'கள்ள நாடு' என்றும்,மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை 'மறவர் சீமை' என்றும் பிரிவுகள் உண்டு.இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற இரு பிரிவுகள் உண்டு. இதன் பொருள் மேற்கத்திய கிராம மக்கள்,கிழக்கத்திய கிராமமக்கள் என்பது.எங்கள் மேலின வல்லம்பர் மக்கள் வாழும் பதினாறு கிராமங்களை பாலைய நாடு என்கின்றனர்.நாங்கள் கொள்ளக்,கொடுக்க என்று எல்லா உறவுகளையும் இந்தப் பதினாறு ஊர்களுக்குள் தான் வைத்துக்கொள்வோம். இந்தப் பதினாறு ஊர் மக்களும் உலகின் எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி உள்ளனர்.இப்போது சில ஆண்டுகளுக்கு முன் கீழின,மேலின மக்கள் ஒன்று கூடி உறவுகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

           எங்கள் கிராமங்களில் நகரத்தார் மக்களின் கொடையால் தடுக்கி விழுந்த இடமெல்லாம் மேல்,உயர் நிலைப்பள்ளிகள்,மகளீர்,இருபாலரும் படிக்கும் கல்லூரிகள். அதனால் 1950க்குப் பிறகு எங்கள் ஊரில் படித்த மக்கள் அதிகம்.எங்களின் பதினாறு கிராமங்களில் நான் பிறந்த ஊர் பாலையூர் - கண்டனூர்.(நடுவண் அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் ஊர்) இந்த ஊரில் ஒரு வருடம் விளையும். ஒரு வருடம் விளையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிழைப்புத் தேடி எங்கள் மக்களும் புலம் பெயரத்தொடங்கினர்.புலம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கைகொடுத்தது.நகரத்தார் மக்களுடன் எங்கள் மக்களும் அவர்களோடு உதவியாளர்களாக,கணக்குப்பிள்ளைகளாக அன்னிய தேசங்களுக்கு பொருளீட்டச் சென்றனர்.ஊரில் எஞ்சியிருந்த மக்கள் விவசாயம்,ஆடுகள்,மாடுகள்,கோழிகள் வளர்ப்பில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.இத்தோடு குழந்தைகளைப் பள்ளியனுப்பி படிக்கவைத்துள்ளனர்.வீடு,தோட்டம்,வயல்,கட்டுத்தறி தான் எங்கள் பெண்களின் உலகம்.மாலை நேரம் திரைப்படம்.திரையரங்கம் முன் கூடும் கூட்டம், அதை நம்பி தேநீர்,உணவு விடுதிகள்,பத்திரிக்கை,வார,மாத இதழ்கள்,நாவல்கள்,திரைப்படப்பாடல் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு புத்தகக்கடை இப்படி ஊரே களையாக இருக்கும். நாங்களும் பிழைப்பிற்காக வேற்று ஊரில் இருந்து, அவ்வப்போது வயல் வேலைக்காகவும்,திருவிழா,உறவுகளில் திருமணங்கள் இப்படி வந்து போவதுண்டு.அப்போதெல்லாம் எங்களைக்கவரும் விசயங்கள் மூன்று.1.கண்மாய்,2.வயல்,3.திரையரங்கம்.நாங்கள் இருந்த ஊரில் திரையரங்கம் இருந்தாலும் கட்டுப்பாடு அதிகம். சொந்த ஊரில் சொந்தங்களின் சலுகை. இப்படி எங்களின் குழந்தைப்பருவ சொர்க்கம்.எல்லா சமூக மக்களும் குறிப்பறிந்து உதவி,இயைந்து வாழ்ந்தார்கள்.

  காலம் மாறியது.மாற்றங்களுக்கு எங்கள் கிராமங்களும் விதிவிலக்கல்ல.எங்கள் ஊரில் எல்லா சமூகத்திலும் கற்றவர்கள் அதிகமாகி,பணப்புழக்கம் அதிகமாகி வாழ்க்கை வசதிகள் பெருகின.தோட்டங்கள் தரிசாகிப் போயின. பசுக்கள் நிறைந்தன.கண்மாய் மழைக்காலத்திலும் நிறையாது போனது. காரணம் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்தது.காடு,மேடுகள் மனைகளாகிய காரணம்.கண்மாயில் நீர் குறைந்ததால் ஊரில் இரு சமூக மக்களின் வேறுபாடுகளால் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு.மற்ற சமூக மக்களுக்கு யார் பக்கம் சேருவது என்ற குழப்பம்.இப்படி வயல் வரப்புகளும் தரிசாகி கருவேலமரம் மண்டி முள் காடாய்க் கிடக்கிறது.பசுக்களுக்கு வைக்கோல்,புல் கிடைக்காது கட்டுத்தறிகளும் வெறுமையாயின. இந்த வெறுமைகளை நிரப்ப தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டுக்கு வீடு வருகை தந்தன.திரையரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என்று அதன் உரிமையாளர் அதையும் இழுத்து மூட அதை நம்பியிருந்த உணவகம்,புத்தகக்கடைகளும் தன் கதவுகளை அடைக்க நம்மைப்போல் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு வெறுமையான ஊரைப்பார்த்து துக்கத்தில் தொண்டை அடைக்கிறது.கூடிக்களித்திருந்த,உறவுகளாய் இருந்த எல்லா சமூக மக்களும் பழைய இணக்கமில்லாது அவரவர் வேலை அவரவர்க்கு.

              இந்த வேறுபாடுகளைக் களைய, எங்கள் ஊர் மறுபடி பசுமை பெற எந்த அவதாரத்தை இறைவன் அனுப்புவாரோ? காத்திருக்கிறோம்.

26.12.09

4.கும்மாயம்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 உழக்கு
உளுந்து - 1 உழக்கு
பச்சரிசி - 1 உழக்கு
கருப்பட்டி 
நெய் 

              பருப்பு வகைகளை தனித்தனியே வறுத்து, பச்சரிசியையும் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து சன்னமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.இதில் தேவையானளவு எடுத்து அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் மாவைப்போட்டு புரட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.இனிப்பிற்குத் தேவையான அளவு கருப்பட்டி எடுத்துத் தூளாக்கி சிறிது தண்ணீர் கலந்து பாகு காய்ச்சவும்.நன்றாக வாசனை வந்ததும் வடிகட்டி மாவுடன் கட்டியில்லாமல் கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும்.இடையிடையே நெய் சேர்த்து கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். ருசியுடன் சத்தும் நிறைந்தது.

3.மசாலாச்சீயம்

தேவையான பொருட்கள்:

1.பச்சரிசி - 1 உழக்கு
2.உளுந்து - 3/4 உழக்கு
3.தேங்காய் - 1 மூடி (பெரியது)
4.சின்ன வெங்காயம் - சிறிது
5.பச்சை மிளகாய் - 4
6.கடுகு - சிறிது
7.கறிவேப்பிலை - சிறிது
8.உப்பு
9.எண்ணெய்

         அரிசி,உளுந்து இரண்டையும் நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து ஆட்டுரலில் ஒட்டு ஒட்டாக அரைத்து ஓரளவு கெட்டியாக ஆட்டி ருசிக்கேற்ற உப்புப்போட்டு அரைத்து எடுக்கவும்.தேங்காயைத் துருவி வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலையை சிறிதாக நறுக்கவும்.அடுப்பில் இருப்புச்சட்டியைக் காயவைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி,வாசனை வந்ததும் தேங்காய்த் துருவலையும் போட்டு வதக்கி ஆட்டி எடுத்த மாவில் இந்தக்கலவையைக் கலந்து எண்ணெயைக் காயவைத்து அதில் மாவை சிறிது பெரிதாக கைவிரல் நுனியில் கிள்ளி விடவும்.எண்ணெய் புகையக்கூடாது.நன்றாக வெந்ததும் பொன்நிறமாக எடுத்து விடவும்.தேங்காய் ,வெங்காயம் வதக்கி அரைத்த சட்னியுடன் பரிமாறவும்.பால் பணியாரத்திற்கு அரைக்கும் மாவிலேயே இதையும் செய்து விடலாம்.இந்தப் பலகாரம் கணிசமாக இருக்கும்.

2.பால் பணியாரம்

தேவையான பொருட்கள்:

1.பச்சரிசி - 1 உழக்கு
2.உளுந்து - 3/4 உழக்கு
3.தேங்காய் - 1 மூடி (பெரியது)
4.சீனி - தேவையான அளவு
5.எண்ணெய் - தேவையான அளவு
           அரிசி,உளுந்து இரண்டையும் நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து ஆட்டுரலில் ஒட்டு ஒட்டாக அரைக்கவும்.அரைக்கும் போது சுற்றி வழித்து விட்டு குருணை இல்லாமல் கெட்டியாக ஆட்டி எடுக்கவும். குருணை இருந்தால் பணியாரம் வெடிக்கும்.ஆட்டி எடுத்ததும் எண்ணெயைக் காயவைத்து அதில் மாவை சிறியதாக கோலிக்குண்டு அளவில் கைவிரல் நுனியில் கிள்ளி விடவும்.எண்ணெய் புகையக்கூடாது. புகைந்தால் பணியாரம் நிறம் மாறிவிடும்.நன்றாக வெந்ததும் நிறம் மாறாது எடுத்து விடவும்.தேங்காயைத் துருவி,நன்றாக அரைத்துப் பால் பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அதில் சீனியைக் கொட்டி கரைத்துக் கொள்ளவும்.பணியாரத்தை சிறிது தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து தேங்காய்ப்பாலில் ஊறவைத்துப் பரிமாறவும்.

தாலாட்டு - 2

               என் அம்மா மிக அழகாக தாலாட்டுப் பாடுவார்கள்.என் அம்மாவிற்கு நாங்கள் ஐந்து பெண்கள்,ஒரு ஆண் என்று ஆறு குழந்தைகள்.நாங்கள் எல்லோருமே நல்ல உயரமாக,ஆரோக்கியமாக இருப்போம்.நான் உங்களுக்குத் தந்த உணவும், தாலாட்டும் தான் காரணம்,என்பார் என் அம்மா.தாலாட்டுப் பாடினால் குழந்தைகள் சீக்கிரம் வளர்வார்கள் என்ற நம்பிக்கை எங்கள் மக்களிடம் உண்டு.அதனால் எங்கள் குழந்தைகளுக்கும் தாலாட்டுப் பாடித் தூங்கவைப்பதுடன் எங்களை தாலாட்டு கற்றுக் கொள்ளச்சொல்வார்கள். அப்படி ஒரு சுலபமான தாலாட்டு. இந்தப்பாடலைப் பாடித்தான் என் மகளைத் தூங்க வைத்தேன். இந்தப்பாடலைப் பாடித்தான் என் மகனைத் தூங்கவைத்தேன்.(எங்கோ கேட்ட வசனம் மாதிரி இருக்கிறதா?) அந்தத் தாலாட்டு.

ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே ராராரோ!
யாரடிச்சார் ஏனழுதாய் என் கண்ணே
அடிச்சாரச்சொல்லி அழு
யாரும் அடிக்கவில்லை
அம்மான் மார் (மாமா) காணவில்ல
அத்தை அடிச்சாளோ அல்லிப் பூச்செண்டாலே
மாமா அடிச்சாரோ மல்லிகப்பூக் கையாலே
ஆயா அடிச்சாரோ அமுதூட்டும் கையாலே
ஐயா அடிச்சாரோ தாங்கி வரும் கையாலே
சித்தி அடிச்சாளோ திலகமிடும் கையாலே
அவனாய் அழுகிறான் அதிக முரண்டாலே
தானாய் அழுகிறான் தவத்து முரண்டாலே
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய் நோக
அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் தூங்கான்.
பொழுதோடு அமுதிடுங்கள்
புண்ணியவார் பேரனுக்கு
பகலோடு அமுதிடுங்கள்
பாண்டியவார் பேரனுக்கு
மசன்டை அமுதிடுங்கள்
மகராசா பேரனுக்கு
பாலுக்கழுதானோ? பவளவாய் பொன் சொரிய
தேனுக்கழுதானோ? செம்பவள வாய் நோக
கரும்புக்கழுதானோ? கனி மொழிந்த வாயாலே
தாங்கத்தடுக்கு இருக்கு உனக்கு
தங்கத்தால் ஆன தொட்டில்
ஏந்தத் தடுக்கு இருக்கு உன்னை
ஏந்திழையார் தொட்டிலிட.
அரசோ நவமணியோ உன்
அங்கமெல்லாம் தங்க மயம்
ஆளப்பிறந்தவனே!
அழுகிறதும் உன் முறையோ?
கனிமொழிந்த வாயாலே
கண்ணிலிட்ட மை கரைய
கண்ணும் கமலப்பூ
கண்ணிரண்டும் தாமரைப்பூ
மேனி மகிழம்பூ என் கண்ணே
மெல்ல நீ கண் வளராய்..
ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே ராராரோ!

25.12.09

நகரத்தார் சமூகப் பெண்கள்

        ஒரு சமூக உயர்வு, அந்தச்சமூகம் அவர்களது பெண்களை மதித்து நடத்துவதில் தான் இருக்கிறது.நகரத்தார்களின் உயர்விற்கு நகரத்தார் பெண்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது. நகரத்தார் சமூகப் பெண்களை ஆச்சி என்று அழைப்பார்கள்.இவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள்.கொடையுள்ளம் கொண்டவர்கள். இவர்கள் வீடுகளுக்குச்சென்று யாரும் உணவு உண்ணாது திரும்ப முடியாது.இவர்களும் நகரத்தார் ஆண்களைப்போல மந்திர உப்தேசம் பெற்று சிவ பூசை எடுப்பார்கள்.சிவபூசை எடுத்து விட்டால் புலால் உண்ண மாட்டார்கள்.முற்காலத்தில் நகரத்தார் ஆண்கள் வெளிதேசங்களுக்கு வணிக நோக்கில் செல்லும் போது பெண்களை அழைத்துச்செல்லும் வழக்கம் அவர்களிடமில்லை.ஆகவே வீட்டு நிர்வாகம்,செல்வ நிர்வாகம் அ முதல் ஃ வரை ஆச்சிகள் தான். இன்சொல்,சிரித்த முகம், எல்லோரையும் அப்பச்சி என்று அழைக்கும் நேயம்,செல்வத்தில் வளர்ந்ததால் எளிமை,வீட்டு வேலைகளில்,உடை உடுத்துவதில்,பொருத்தமான நகைகள் அணிவதில் ஒரு நறுவிசு,பண்ட பாத்திரங்களைப் பேணுவதில் ஒரு அக்கறை,சுத்தம்,நாகரீகப்பாங்கு,சமையல்,பொருட்களை அழகுற அடுக்கி வைத்தல் (ஒதுங்க வைப்பது - ஒரு வீட்டு சாமான் களையும் ஒரு சுவற்றலமாரியில் அடுக்கிவிடுவார்கள்.அடுக்கி வைத்துவிட்டு ஞாபகமாய்ச்சொல்வார்கள்) விருந்தோம்பல் கைவேலைகள் ஆகியன இவர்களது பண்பு. மளிகைபொருடகளை அந்தந்தப் பருவத்தில் வருடத்திற்கு மொத்தமாக வாங்கி துப்புரவு செய்து வெயிலில் காயவைத்து டப்பாக்களில் கொட்டிவைத்து சரியான இடை வெளிகளில் காயப்போட்டு பூச்சி,புழுப்பிடிக்காமல் கவனமாக சேமித்து வைப்பார்கள். (ஏதாவது விட்டுப்போயிருக்கலாம்)

            ஆண்கள் வெளிதேசங்களில் வருடக்கணக்கில் இருந்தாலும் வீடு,சொத்து, உறவு,குழந்தைகள் பராமரிப்பை கைதேர்ந்த நிர்வாகத்திறமையுடன் செய்வார்கள்.அந்தக்காலத்தில் மற்ற சமூகப் பெண்களைப்போல இவர்களும் பள்ளி செல்ல அனுமதியில்லை என்றாலும் தமிழ்ப்பற்றுடன் புலவர்களின் பாடல்கள்,தாலாட்டுப்பாடல்கள், தேவாரம்,திருவாசகம்,அபிராமி அந்தாதி,திருப்புகழ்,திருமகள் துதி,சரஸ்வதி துதி,சுப்ரமண்ய புஜங்கம் இவற்றை எல்லாம் வாய் மொழியாகக் கேட்டு உச்சரிப்பு பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் பாடுவார்கள்.இப்போது அவர்கள் படிப்பில் சிகரம் தொட்டு எல்லா நிலைகளிலும் பணிபுரிகிறார்கள்.கோலம் அதிலும் மணவறையில் போட மனைக்கோலம், நடுவீட்டில் போட நடுமனைக்கோலம்,அடுப்பு,பொங்கல் பானைகளில் அதற்கான கோலம் என்று விதம் விதமாகப்போடுவார்கள்.அந்தக்கோலங்களிலும் ஒரு திருத்தம் அழகு இருக்கும். எங்கள் பெண்கள் கோவிலுக்குப் போனால் நகரத்தார் பெண்களின் கைவண்ணத்தைத் தனியாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.நகரத்தார் பெண்கள் கண்ணாடிக்கல் நகைகளை அணிவதில்லை.ரத்தின மணிகள் தான் பெரும்பாலும் வைர நகைகள் தான் அணிவார்கள்.இவர்களில் விதவைகள் ,விவாக ரத்தான பெண்கள் மறுமணம் செய்வதில்லை.ஆண்கள் செய்து கொள்வதை அனுமதிக்கும் இவர்கள் சமூகம், பெண்கள் செய்தால் சமூகப்பிரஷ்டம் செய்யும் பழக்கம் இவர்கள் சமூகத்தில் இருந்து வந்திருக்கிறது.விதவைகள் வெள்ளைப்புடவை, வெள்ளை ரவிக்கை தான் அணிவார்கள்.நெற்றியில் பொட்டு வைக்காமல் திருநீற்றை பட்டையாகப்பூசுவார்கள்.இப்போதும் அப்படித்தான். விதவைகள் தங்களுக்குக் குழந்தை இல்லாத பட்சத்தில் பிற பங்காளி குடும்பப் பிள்ளைகளை சுவீகாரம் எடுத்து வாரிசுரிமை தருவார்கள்.வீடு வெறும் வீடாகப்போடக்கூடாது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.இப்போது குழந்தை இல்லாத இளம் விதவைகள்,விவாக ரத்தானவர்கள் மறுமணம் புரிகிறார்கள்.

             நகரத்தார் பெண்கள் தீட்சை எடுக்கும் வழக்கமுள்ளவர்கள் என்பதால் ஆச்சார அனுஷ்டானங்களுடன் பூசை நியதிகளைக்கடைப்பிடிப்பவர்கள்.காலை குளித்து மஞ்சள் பூசி,குங்குமமிட்டு இறைவனை வணங்கி பிறகு தான் மற்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.கோவில்கள்,திருத்தலம்செல்வது,விரதங்களைக்
கடைபிடிப்பது ஆகியவற்றை ஒரு நியதியுடன் செய்யும் பழக்கமுள்ளவர்கள்.ஒரு குடும்பத்தில் பெண்குழந்தை பிறந்து விட்டால் இவர்கள் அந்தக்குழந்தை பிறந்த நாளிலிருந்து சாமான் சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.நகை,சீதனப் பணம் சேர்த்து வங்கிகளில் கணக்கிலும் லாக்கரிலும் வைத்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதைத் தொடுவதில்லை.நுண்மாண் நுழை புலம் கொண்ட இப்பெண்கள் நற்பண்புகள்,நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டு தம் கணவர்கட்கு நன் மந்திரியாகவும்,குடும்பத்தை சிக்கனமாக நடத்துவதில் பொருளாதார நிபுணர்களாகவும்,ஆயகலைகளில் சிறந்தவர்களாகவும்,அறவாழ்வும்,பக்திசிரத்தையும் கொண்டு விளங்குபவர்கள்.அழகும் அறிவும் இவர்களின் மரபு வழி வருவது.தைரியம் மிகுந்த இந்தப்பெண்கள் மற்ற சமுதாயப்பெண்களுக்கு வழிகாட்டிகள்.அது எப்படி என்று அடுத்த கட்டுரையில் இடுகையிடுவோம்.

24.12.09

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு

           உலகில் ஒவ்வொரு சமூகத்திற்கும் உருவான, வளர்ந்த ,தேய்ந்த வரலாறுகள் இருக்கும்.ஒவ்வொரு சமூகத்திலும் குறைகள்,நிறைகள் இருக்கும். குறைகளை எண்ணி வெட்கப்படுதலோ அன்றி நிறைகளை எண்ணி கர்வப்படுதலோ மனித அறியாமை.குறைகளும்,நிறைகளும் கொண்டவன் தானே மனிதன்.ஒரு தனிமனிதனுக்குள்ளேயே நூறு குறை,நிறை எனும் போது ஒரு சமூகத்தின் குறைகளுக்கு வெட்கப்படுவது அர்த்தமற்றது. அதனால் ஒரு சமூகம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது என் வரையில் ஒரு அறிவுத்தேடல். தமிழ் நாட்டின் ஒவ்வொரு சமூக மக்களும் ஒரு குறு நில மன்னனின் வம்சாவளிகளாக, அவர்கள் வழி வந்தவர்களாகத் தான் இருப்பார்கள் என்று என் ஐயா (தாத்தா) கூறுவார்கள்.உலக வரலாற்றைப் பாடம் படிக்கும் ஒவ்வொரு சமூக மக்களும் தங்களது வரலாற்றை அறிந்து கொண்டால் தமிழ்நாட்டின் வரலாறு கிடைத்துவிடும்..தமது பழம்பெருமைகளை அறிந்து கொண்டால் குறைகளை அகற்றி,நமது முன்னோர்களின் ராஜபாட்டையில் வழிதவறாது நாம் நடையிட இயலும். நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை நான் வலைப்பூவில் இடுகையிடுவதன் காரணம் -- நகரத்தார் மக்களின் வரலாறின்றி எங்கள் சமூக வரலாற்றை எழுத முடியாதது ஒன்று.ஒரு சமூகத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு வரலாறா? என்ற திகைப்பும்,பிரமிப்பும் ஒரு காரணம்.
                  கிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள்.காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும்,எந்தச்சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது.இவர்கள் ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள்.கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது.
"நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
 குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்"
என்ற குறளுக்கேற்ப தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக்கொண்டான்.தன வைசியர்களான இவர்கள் பொன்,ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது.ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப்போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது.வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது,2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டு சோழ நாட்டிற்கு வந்தார்கள். சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச்சோழன் என்னும் அறிவிற் சிறந்த நீதிமானானவன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு,மேற்கு,தெற்குத் தெருக்கள் ஒதுக்கிவிடப்பட்டு அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது.அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது.ஒரு கலையிலோ,தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும்,செல்வத்தில் யாருக்கும் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது.
                1400 வருடங்களுக்குப்பிறகு சோழ வம்சத்திலும் ஒரு புல்லுருவி நகரத்தார்களுக்கு எதிராகத் தோன்றினான். பூவந்திச்சோழன் என்னும் அந்த அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும்,அவர்களது அனைத்துச்செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச்செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி செய்துகொண்டார்கள் என்று 'நாட்டுக்கோட்ட நகரத்தார் சரித்திரம்' கூறுகிறது.ஆனால் ஆச்சிமார்கள் கூறுகையில் பல தேசங்களுக்கும் கொண்டுவிற்கப்போன ஆண்மக்கள் திரும்பும் முன் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டான கடற்கோள் அழிவால் நகரத்தார் மக்களை கடல் கொண்டதாகக் கூறுவார்கள். ஒரு வேளை சிறியவர்களிடம் இந்தக் கொடுமைகளைக் கூற மனம் விழையாது மாற்றிக் கூறியிருக்கலாம்.
                 ஒரு புத்தகத்தில் படித்த மனதை விட்டு நீங்காத ஒரு கருத்து. பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.சிலப்பதிகார நாயகன் கோவலன், நாயகி கண்ணகி குடும்பத்தினர்,பட்டினத்தார் ஆகியோர் நகரத்தார் சமூகத்தினரே!
               கலியுகம் 3808ம் ஆண்டில் பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ "எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்" என்று கூற சோழ  மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.
                   இளையாற்றங்குடியில் வாழ்ந்த நகரத்தார் மக்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமைக்குறைவால் 9 பிரிவுகள் ஏற்பட்டு ஒரு பிரிவிற்கு இளையாற்றங்குடிக்கோவிலும் மற்ற 8 பிரிவினர் தமக்குத் தனியாக கோவில் வேண்டி பாண்டிய மன்னனிடம் வேண்ட மன்னனும் அதற்கிணங்கி 8 பிரிவினருக்கும் மாற்றூர்,வைரவன்பட்டி,இரணியூர்,பிள்ளையார்பட்டி,நேமம்,இலுப்பைக்குடி,
சூரைக்குடி,வேலங்குடி ஆகிய 8 ஊர்க்கோவில்களையும் அதற்குரிய க்ஷேத்திர சுவாத்தியங்களையும் விட்டுக்கொடுத்ததாக கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த 9 கோவில்களும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சிவ க்ஷேத்திரங்கள்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருள்புரிவதில் உலகப் புகழ்பெற்ற கீர்த்தியாளர்.
              திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பர்மா,ரங்கூன்,செய்கோன், மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மரக்கலங்களில் 'கொண்டுவிக்க'ச்சென்று, அங்கிருந்து பொன்,நவரத்தின மணிகள்,தேக்கு,அழகிய வேலைப்பாடுடைய கலைப்பொருடகள்,மங்குச்சாமான்கள்,இன்னும் எத்தனையோ பொருட்களை கப்பல்,கப்பலாகக் கொண்டு வந்து இறக்கியவர்கள் இந்த நகரத்தார் சமூகத்தினர். இந்த மக்களால் நாட்டுப் பொருளாதாரம் சிறந்தது மட்டுமன்றி இவர்கள் தொழில் கருதிச்சென்ற அயல் நாடுகளின் பொருளாதரத்தையும் பன் மடங்கு வளர்த்தவர்கள்.சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தமிழகத்தின் பண்டையப்பெருமை,பண்பாடுகளை பாதுகாத்து கால மாறுதலுக்கேற்பத் புத்துணர்வுடனும், விழிப்புணர்வுடனும் தாமும் பொருந்திக்கொள்ளும் மனோபலம் மிக்கவர்கள்.மொழி, தேச அமைப்பு தெரியாத இடங்களில் கூட மனத்துணிச்சலுடன் கடல் கடந்து சென்று மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டியவர்கள் நகரத்தார்கள். தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் வரலாறு நாட்டவர் அனைவருக்கும் பயன்படும் ஒன்றாகும்.

                இந்தக் கட்டுரையில் ஏதும் தவறுகள் இருப்பின் நாங்கள் பிறந்த செட்டிநாட்டின் ஆச்சிமார்கள் சொன்ன கதைகளின் தவறுகள். ஆகவே மன்னித்து சுட்டிக்காட்டினால் கட்டுரை உடன் மாற்றப்படும்.


                      நன்றி!

அரண்மனை வீடுகளின் மரச்சிற்பங்கள்



            பர்மாத் தேக்கு மரத்தில் இழைக்கப்பட்ட அரண்மனை வீடுகளில் இருக்கும் மரச்சிற்ப வேலைப்பாடுகள்.




            இது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்போதும் மரச்சிற்ப வேலை செய்யும் கைவினைஞர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிலைப் படிகளில் மட்டும் இன்றும் செய்து கொள்கிறோம். அதற்கு நகரத்தார் மக்களின் வீடுகளில் மாதிரி காண்பித்துச்செய்வதுண்டு.கூலி தான் மயக்கம் வர வைத்து விடுகிறது.


22.12.09

1.வெள்ளைப் பணியாரம்

            செட்டிநாட்டுப் பலகாரங்கள்ல அதிகம் பேசப்படுற பலகாரம் இது தாங்க.அன்னக்கிளி படத்துல திரு பஞ்சு அருணாச்சலம் அவர்கள் முத்துச்சம்பா பச்சரிசி பாட்டுல சொல்லுவார் பாருங்க,அதுமாதிரி பஞ்சு பஞ்சா இந்த வெள்ளைப் பணியாரம் இருக்கக்கூடாது.முட்டையோட வெள்ளைக்கரு இருக்கும் பாருங்க அப்புடி இழையா,மென்மையா இருக்கணும்.சில பேர் வெள்ளைப் பணியாரத்துக்கு நாலிக்கு ஒண்ணு,அதாவது பச்சரிசி நாலு உழக்கு போட்டா,ஒரு உழக்கு உளுந்து போடுவாக.அப்புடிப் போட்டா வெள்ளைப்பணியாரம் கந்தரப்பம் ஆயிடும்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி
உளுந்து
பால்
உப்பு
சமையல் எண்ணெய்

          முதலில் பச்சரிசியை உழக்கில் எடுக்கும் போது உழக்கை தலைவழித்து என்பார்களே அப்படி மட்டமாக அளந்து அதன் உச்சியில் உளுந்தைக் குவித்து அளக்கவும்.இப்படி உங்களுக்கு எவ்வளவு தேவையோ அளந்து எடுத்து நன்றாகக் களைந்து (இல்லாவிட்டால் பணியாரம் நிறம் மட்டாக இருக்கும்) ஊற வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறியதும் ஆட்டுரலில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு மாதிரி பதத்தில் இருக்கலாம்.உப்புப் போட்டு அரைத்து எடுத்து கொஞ்ச நேரம் குளிர் சாதனப்பெட்டியில் (10 நிமிடம்) வைத்து எடுத்து கரண்டியால் முட்டை அடிப்பது போல் அடித்து சிறிது பால் கலந்து மறுபடி அடித்துக் கொள்ளவும்.அலுமினியம் அல்லது இரும்பு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து சிறு குழி கரண்டியில் மாவு எடுத்து ஊற்றி பணியாரம் மேலே மிதக்கும் போது அரி கரண்டியை வைத்து எண்ணெயை பணியாரம் மீது தள்ளிவிடவும் (பாத்துங்க! மேல பட்டு கொப்புளிச்சா நா பொறுப்பில்ல) வெள்ளை நிறம் மாறுமுன்னே எடுத்து விடவும்.இந்தப் பணியாரத்திற்கு மிளகாய்ச்சட்னி தான் சரியான இணை.

20.12.09

முளைக்கொட்டுப் பாடல் (கும்மி)

தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே
தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே 


சாலையோரம் குச்சுக்கட்டி தங்கிப்போவோம் பொண்ணே
சாலைக்காரன் கண்டவொடன ஓடிப்போவோம் பொண்ணே 
இன்னங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா (தனத்தந்தினா) 


மந்தையோரம் குச்சுக்கட்டி மழைக்கிருப்போம் பொண்ணே
மந்தைக்காரன் கண்டவொடன ஓடிப்போவோம் பொண்ணே
இன்னுங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா (தனத்தந்தினா)  


ஈச்சம்பத்தை இருண்ட பத்தை இருந்து போவோம் பொண்ணே 
இன்னுங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா 
தாழம் பத்தை தழைஞ்ச பத்தை தங்கிப்போவோம் பொண்ணே
இன்னுங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா (தனத்தந்தினா)  


அடி அண்ணா அண்ணா என்காதடி அறிவுகெட்ட பொண்ணே 
அட பொண்ணே பொண்ணே என்காதடா புத்திகெட்ட அண்ணா 


ஆலோலங்கிளி ஆலோலம் அன்னக்கிளிகளாம் ஆலோலம்
நெட்டிக்கா (ய்), சுட்டிக்கா(ய்) நிறஞ்ச காது ஓலக்கா(ய்) 
மாரிக்கா(ய்) சோளிக்கா(ய்) மஞ்ச நல்ல சரட்டுக்கா(ய்)
அட நெட்டிக்கா (ய்), சுட்டிக்கா(ய்) நிறஞ்ச காது ஓலக்கா(ய்) 
அட மாரிக்கா(ய்) சோளிக்கா(ய்) மஞ்ச நல்ல சரட்டுக்கா(ய்)


தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே 
தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே









வயல் வேலை - ஒரு யோகம்

      வயல் வேலை பார்த்ததுண்டா? நண்பர்களே! "ஆடு மேய்த்திருக்கிறீர்களா? அது ஒரு தவம்" என்பார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.வயல் வேலை ஒரு யோகம்.நான் பிறந்த போது என் அப்பாவிற்கு சென்னை அம்பத்தூரில் T.I.சைக்கிள் தொழிற்சாலையில் வேலை. சில காலம் சென்னை வாசி.என் அப்பா சொந்தத் தொழில் செய்ய முடிவு செய்து, பிறகு சென்னையை விட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு குடி பெயர்ந்தோம்.அறந்தாங்கி ஒரு ரெண்டுங்கெட்டான் நகரம். எங்கள் அம்மா,அப்பா இருவருமே விவசாயக் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் பசுக்கள்,கோழிகள் வளர்த்தோம்.எனக்கு 12 வயதிருக்கும்.அப்போது என் ஆயா (என் அம்மாவின் தாயார்) கால் பரீட்சை விடுமுறைக்கு என்னை அவர்களின் கிராமத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.அதுவரை முழுப்பரீட்சை விடுமுறைக்கு,திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் மட்டுமே சென்றிருந்த நான் முதல் முறையாக ஆவணி மாதத்தில் செல்கிறேன்.குன்றக்குடி அருகில் உள்ள பலவாங்குடி - வயல்,கண்மாய்,நகரத்தார்களின் அரண்மனைவீடுகளைக்கொண்ட அழகான சிற்றூர்.ஆனால் திருவிழா நாட்களில் ஜே!ஜே! என்று ஊரைப்பார்த்துவிட்டு அமைதியாக இருந்த ஊர் எனக்குப் பிடிக்கவில்லை. மறு நாள் என் ஆயா,' ஏத்தா? வயலுக்கு வர்றியா? தொலிக்கு (உழுத நடவு செய்யப் போகிற வயல்) கொல (பசுந்தாள்) வெட்டிப்போட்டுட்டு வருவோம்' என்றார்கள்.சரியென்று சோறு வடித்து,வெந்தைய மாங்காய் ஊறுகாயுடன்,கருணைக்கிழங்கு புளிக்குழம்பு (காரக்குழம்பு) வைத்து சோறு தூக்குச்சட்டியில் வைத்து எல்லாவற்றையும் ஒரு கோட்டப்பொட்டி என்பார்கள் (பனையோலையில் செய்தது) அதில் அடுக்கி எடுத்துக்கொண்டு துணி,கயிறு எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டோம்.இதெல்லாம் எதற்கு?என்ன,ஏது ஒன்றூம் புரியவில்லை.

       ஒரு சிறிய தோட்டம் போனதும் ஆயா இது தான் உங்க தோட்டமா? என்றேன். "'ஆமா! இது தான் மக புள்ளைக்கும்,மகன்முட்டுப் புள்ளைக்கும் உள்ள வித்தியாசம்.நம்மவுட்டான்னு கேப்பியா,உங்கவுட்டா? போடி மருக்கோலி' என்று சொல்லிவிட்டுஅங்கிருந்த மரங்களை ஒரு முறை பார்வையிட்டார்.புங்க மரம்,பூவரசமரம்,வாகை மரங்கள் இருந்தன.நீண்ட தொரட்டியை(அலக்கு?) வைத்து கிளைகளை ஒடித்து கொப்புக்கொப்பாக ஒடித்துக்கட்டி என் தலையில் தூக்கிவிட்டு தானும் தூக்கிக்கொண்டு 'ஆத்தா! நான் முன்னால போறேன். நீ பின்னாடியே வா!! கனமாத்தெரிஞ்சா அங்குனயே போட்டுட்டு நில்லு.நா அப்பறம் வந்து தூக்கிக்கிட்டுப் போறேன்' எங்கள் வீட்டில் வேலை செய்வது பழக்கமென்பதால் எனக்கு கனம் தெரியவில்லை.கண்மாய் தாண்டி,வயல்களுக்கு ஊடே நடந்து ஆயாவின் செய்யில் கொண்டு போய்தான் போட்டேன்.என் ஆயா அதை எங்கும் பிரித்துப்போட நான் சேற்றில் கால்களால் அழுத்திவிட 'அடி விடு அது தன்னால இறங்கிரும்' என்பதைக் கண்டுகொள்ளாமல் குதித்து மிதித்தேன்.உடையெல்லாம் செம்மையான சகதி.மறுபடி அதே போல் அத்தனை இலை தழைகளையும் கொண்டு வந்து போட்டுவிட்டு காலை உணவு தோட்டத்தில்,மதிய உணவு கண்மாய்க்கரையில்.புது அனுபவம்.மாலை போகும் போது கண்மாயில் குளித்து வீடு திரும்பினோம்.மறுனாள் மாட்டுச்சாணம் சேர்த்து வைத்ததை வயலுக்கு கொண்டு போய் முதல் நாள் போலவே. எனக்கு சுற்றுலா வந்தது போல் இருந்தது.இதை என் தம்பி தங்கைகளிடம் சொன்னதும் அரைப் பரீட்சை விடுமுறைக்கு நான்,நீ என்று போட்டாப்போட்டி.நீங்கள்லாம் இன்னும் கொஞ்சம் பெருசானவொன்ன கூட்டிக்கினு போறேன் என்று சொல்லி மறுபடி நான் மட்டும். இந்த முறை களையெடுக்க. என் ஆயாவிற்கு நான்கு செய்தான். அதனால் ஆள் தேவையில்லை.இந்த முறை நாற்றங்காலில் இருந்தது போல நாற்று கிளிப்பச்சை நிறத்தில் இல்லாமல் அடர்ந்த பச்சை நிறம்.அப்போது நாற்றங்கால்களில் மட்டும் இருந்த நாற்று இப்போது வயல் முழுதும்.ஒரே பச்சைப்பாய் விரித்தது போல.பரவசம்.தாய் வரப்பு என்பார்கள்.அந்தவரப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். இரு கைகளையும்விரித்து பாட்டுப்பாடிக்     கொண்டே ஓடுகிறேன். உங்களுக்குதெரியுமா? இந்த இடத்திற்கெல்லாம் இளையராஜா அவர்களின் பாடல் தான் பொருத்த ம். களையெடுத்துவிட்டு மதிய உணவிற்கு வாய்க்காலில் கால் கழுவும் போது வழுக்கிவிட சேற்றுக்குள் விழ எல்லோரும் என்னாத்தா?மொசப்புடுச்சியா? என ஆமா! உங்க வய என்ன வளுக்குது என்று நான் சொல்ல எங்க வய,உங்க வய இல்லடி.எல்லா வயலுந்தான் வழுக்கும் என்று ஒரு உறவு கிண்டலாகச்சொல்ல மற்றவர்கள் சிரிக்க விழுந்ததை விட அவர்கள் சிரித்தது வெட்கமாகிவிட்டது.

     அதற்குப்பிறகு நான் +2 முடித்து கல்லூரி படிப்பிற்கு காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் சீத்தா லெக்ஷ்மி ஆச்சி மகளீர் கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் வந்து சேர்ந்தேன். என் ஆயா வீடு இல்லாவிட்டால் நான் அஞ்சல் வழிக்கல்வி தான் பயின்றிருப்பேன்.என் ஆயா வீட்டில் இருந்து கல்லூரி செல்லும் போது பசுந்தாள் உரமிடுவது,களையெடுப்பது இதெல்லாம் முன்னால் செய்திருப்பதால் விடுமுறை நாட்களில் அந்த வேலைகளை வைத்துக்கொள்வோம்.கதிரறுப்பு அது எப்படியும் ஒரு வாரம் இழுக்கும்.அப்போது கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு முதல் நாள் சமையல் செய்து எடுத்துக்கொண்டு,வேலையாட்கள் மூவர் மொத்தம் ஐந்து பேர்.'ஆத்தா! இப்புடிப் புடிச்சு இப்புடி அறுக்கனும்' வகுப்பு எடுக்கப்பட்டது.சிறிது நேரம் ஒழுங்காக போய்க்கொண்டிருக்க அந்தக்கதிர்த்தாள்களில் ரத்தம். வலி தெரியவில்லை.ஆழமான காயம்.உடனே என் ஆயா பதறி ஒரு கதிர் அறுக்கும் அரிவாளில் என் எச்சிலைத் துப்பச்சொல்லி இன்னொரு அரிவாளை வைத்து உரசி அந்தக்காயத்திலிட ரத்தம் நின்றது. சத்த உக்காரு.நல்லாத்தேன் போ! என்றார்கள். ஆனால் பொருட்படுத்தாது நான் வேலை செய்தேன்.அறுத்த கதிர்களை கட்டிஎடுத்து களம் கொண்டு சேர்க்கவேண்டும்.கதிர்க்கட்டை என் தலையில் தூக்கி வைத்துக் கொஞ்ச நேரம் சரியாக இருக்க கொஞ்ச தூரம் நடந்ததும் தலை கதிர்க் கட்டுக்குள் போக, வழி தெரியவில்லை. முன்னால் போகும் பெண்ணின் கொலுசணிந்த கனுக்காலைப்பார்த்துக்கொண்டே,வயிறளவு கண்மாய்த்தண்ணீரில் நடந்து களம் கொண்டு சேர்த்தாயிற்று.அப்போது தான் என்னோடு கதிரறுக்க வந்த அக்கா சொன்னார்கள் 'கருதுக்கட்ட தலைக்கு வக்கிற எடத்துல கருத மடிச்சு வைப்பாகள்ல அங்குன தலைய வச்சா தல உள்ள போகாது'. அது சரி ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் நுட்பம்.

  கதிர் அடிப்பது அடுத்த வேலை.கதிரடிப்பது ஆண்களின் வேலை.கதிரடிப்பவர்களுக்கு பெண்கள் கதிரை அடுக்காக, லாவகமாகப் போட அவர்கள் தங்கள் கைக்கயிற்றால் அதைச்சுற்றிப்பிடித்து கட்டையில் அடிப்பார்கள்.'ஒனக்கு வராது,தள்ளு',என்பார்கள். வராதாவது. அடிப்பவர் சாப்பாட்டுக்குப் போனதும் மற்றவரை 'அண்ணே! வாங்க நான் போடுறேன். அடிங்க' என்று அதையும் செய்வேன்.அடித்த நெல்லைத் தூற்றி பொலி போட்டு சாக்குகளில் கட்டிவிட்டு அடித்த கதிர்த்தாளை போர் வைத்துவிட்டு தலையடி நெல்லோடு வீடு திரும்புவோம்.மறுநாள் போரடிப்பது.அந்தத்தாள்களைப் பிரித்து போட்டு மாடுகளைப் பூட்டி அந்தத் தாள்களின் மீது சுற்றி வரவேண்டும். உண்மையில் இது போரடிக்கும் வேலை.துவைந்த தாள்களை திருப்பி,திருப்பி விட்டு இருந்த ஒன்றிரண்டு நெல் மணிகளும் உதிர்ந்ததும் வைக்கோலைப் பிரித்து எடுத்து நெல்லை ஒன்று சேர்த்து, தூற்றி வீடு கொண்டு சேர்க்க வேண்டும்.இந்த நெல்லை சூட்டடி நெல் என்பார்கள். இந்த நெல்லைத் தான் முதலில் உபயோகிப்பார்கள்.வைக்கோலை உழுதவர்கள் வீட்டில் கட்டிகொண்டு போய் போட்டுவிட்டு வேலை முடியும். களத்து வேலை செய்யும் போது கதிர்த்தாள்களில் உள்ள 'சொனை' பட்டு முகமெல்லாம் கருப்பு கருப்பு தடிப்பாய் ஆகிவிடும்.கிராமத்தில் பழகியவர்கள் அந்த வேலையை லாவகமாக செய்ய அடுத்தடுத்து நானும் கற்றுகொண்டுவிட்டேன்.கதிரறுக்கும் போது அனைவர் முகத்திலும் சந்தோசம் வெளிச்சம் போடும்.அதுவே மழையில்லாது சாவியாகிப்(ஒரு கதிர் நெல் மணி விளைந்து ஒரு கதிர் விளையாது பட்டுபோய் இருப்பது) போய் விட்டால் அழுது கொண்டே அறுப்பார்கள்.அந்த வேதனை காணப்பொறாது.

            அந்த கிராமத்து மக்கள் காலை நான்கு மணிக்கு விழித்து மாடுகளை ஓட்டி வந்து பால் டிப்போவில் அவர்கள் முன் பால் கறந்து அவர்களிடம் கொடுத்துவிட்டு,மிச்சப்பாலை வீட்டுக்குக்கொண்டு வந்து காபி போட்டுக் குடித்ததும் வேலை,வேலை தான்.மாட்டுக்குத் தண்ணீர் இறைப்பது,சாணத்தை அள்ளிக் குப்பைக்குக் கொண்டு செல்வது,வைக்கோல் பிடுங்கி எடுப்பது,மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவது,பிறகு மாடுகள் மேய்ந்து வீடு திரும்புவதைத் தண்ணீர் காட்டி,கட்டி கொட்டிலில் வைக்கோல் போடுவது...ஓய்வாவது,ஒழிச்சலாவது.இப்படி சதா வேலை இருக்கும்போது மனஉளைச்சலுக்கு அர்த்தமாவது தெரியுமா?எந்த உறவுகளின் வீடுகள் போனாலும் மாலை வீடு திரும்பி விடுவார்கள்.

    தாழம்பூ புதர் மண்டிய கண்மாய்க் கரையும்,செங்கழுநீர் நிறைந்த கண்மாயும்,கண்மாய்க்கரை ஐயனார் கோவிலும், கண்மாய்க்கரையில் படர்ந்து கிடக்கும் பொன்னாங்கண்ணிக்கீரையை கிள்ளி எடுத்து தாவணி முந்தானையில் நிரப்பி வருவதும் நினைவை விட்டு நீங்காதவை.இப்போது அந்த கிராமத்தின் இளைஞர்கள் எல்லோரும் பிழைப்பு தேடி புலம் பெயர பெண்கள் குழந்தைகள் படிப்பைக் காரணம் காட்டி பக்கத்து சிறுநகரங்களுக்கு குடிபெயர அந்த ஊர் இன்னும் அமைதியாகிவிட்டது. வீடுகள் எல்லாம் பூட்டிகிடக்க சாலைகள் வெறுமையாய்...


        பூட்டிய அந்தக் கதவுகள் திறக்கத் திருவிழா வரவேண்டும்.அந்த நினைவுகள் வந்துவிட்டால் நான் இறையிடம் வேண்டுவது ஒன்று தான்.இந்த பூமியை சேதமில்லாது பழமைக்கு மாற்றிவிடு.எங்களின் சொர்க்கத்தை திருப்பிக்கொடுத்துவிடு.

முளைக்கொட்டுப்பாட்டு

 ஒரு முளைக்கொட்டுப்பாட்டு

தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே
தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே

ஆண (யானை) வாரதப்பாருங்கடி
ஆண அசஞ்சு வாரதப்பாருங்கடி
ஆணத் தடம் போல ஐயனார் சாமிக்கு
அட்டிய மின்னலப் பாருங்கடி (தன்னன)

குதுர (குதிரை) வாரதப் பாருங்கடி
குதுர குதிச்சு வாரதப்பாருங்கடி
குதுரத்தடம் போல ஐயனார் சாமிக்கு
கொலுசு மின்னலப் பாருங்கடி (தன்னன)

பாம்பு வாரதப் பாருங்கடி
பாம்பு பதுங்கி வாரதப்பாருங்கடி
பாம்புத் தடம் போல ஐயனார் சாமிக்கு
பதைக்க (பதக்கம்) மின்னலப் பாருங்கடி (தன்னன)

தேங்கா உடைக்கவே தண்ணி தெரிக்கவே
தெப்பக்குளம் ரெண்டும் தத்தளிக்க
மாயவன் தங்கச்சி மதுர மீனாச்சி
எப்ப வருவாளோ தெப்பம் பாக்க (தன்னன)

பாலை (ஒரு வகைப்பழம்) பழுத்ததைப் பாருங்கடி
பாலை பக்கம் பழுத்ததைப் பாருங்கடி
பாலைப்பழம் போல பாலைய நாட்டார்க்கு
பல்லு வரிசையப் பாருங்கடி

தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே
தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே

  

பாலையநாட்டு திருவிழா - மாரியம்மன் பொங்கல்

                 எங்கள் கிராமங்களில் 'மாரியம்மன் பொங்கல்' என்று பங்குனி மாதத்தில் எட்டு நாள் காப்புக்கட்டி,எட்டாவது நாள் ஊரே ஒன்று கூடி மாரியம்மன் கோவில் முன்பாக ஆடு,கோழி வெட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடுவது வழக்கம். அந்த திருவிழாக்காலத்தில் ஊரே களையாக இருக்கும்.பிழைப்பிற்காக புலம் பெயர்ந்து சென்ற மக்கள் ஒன்று கூடி எங்களின் உறவுகளும் வருகை தரும் அந்த நாட்கள் அடுத்த முறை ஊருக்குப் போகும் வரை சக்தி தரும், நினைவை விட்டு நீங்கா நாட்கள்.இந்த திருவிழாவிற்கு முளைப்பாரி போடும் வழக்கம் உண்டு.வீட்டுக்குவீடு முளைப்பாரி போட்டு தூக்கி வந்து பிள்ளையார் கூடம் என்றழைக்கப்படும் ஊர்ப்பொது இடத்தில் வைத்து அதோடு ஊர்ப் பொதுவில் கரகம் போட்டு அதில் மஞ்சளால் மாரியம்மனின் முகம் வரைந்து சாமியாடி தூக்கி வந்து முளைப்பாரிகளின் நடுவில் வைப்பது வழக்கம்.அந்தக்கரகத்தில் மாரி அம்மன் குடியிருப்பதாய் ஐதீகம்.இரவு முழுவதும் அந்தக்கரகத்திற்கு தீபாராதனை நடை பெறும்.இரவெல்லாம் பிள்ளையார் கூடத்தின் முன்னால் உள்ள பொட்டல் வெளியில் முளை கொட்டுவது(கும்மி கொட்டுவது),விடியலில் வீடு சென்று குளித்து,அலங்காரம் செய்து முளைப்பாரிகளை தலையில் வைத்து மாரியின் பெருமை கூறும் பாடல்களை ஒருவர் பாட மற்றவர்கள் குலவையிட்ட படி கொண்டு சென்று நீர் நிலைகளில் கொட்டி விட்டு வருவோம்.

       காவடிகள்,பால் குடங்கள்,அக்னிச்சட்டி எடுத்து ஊரை வலம் வந்து கோவிலில் கொண்டு போய் சேர்ப்பது எல்லாம் திரு விழாவின் ஒரு அங்கம்.ஒவ்வொரு மண்டகப்படியின் போதும் உபயதாரர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு.வள்ளி திருமணம், பவளக்கொடி,அரிச்சந்திரன் நாடகங்கள் இருந்த இடத்தை இப்போது ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் என்ற குத்தாட்ட நிகழ்ச்சிகள் பிடித்துகொண்டன.முளைக்கொட்டும் எங்கள் ஊர்களில் அருகி விட்டன.
        
        காவடிகள் , பால் குடங்கள் ஊர்வலம் வருகையில் காவடிச்சிந்து பாடுவார்கள்.காவடி தூக்கி வரும் அன்பர்கள் அருள் வந்து ஆடும் போது காவடிச்சிந்துக்கு ஒரு நடனமிடுவார்கள் பாருங்கள்,"அப்பன் அம்பலத்தில் இப்படித் தான் ஆடியிருப்பாரோ" என்று நினைத்துக் கொள்வதுண்டு.இப்பொது காவடி தூக்கி வரும் போது 'வேல் வேல்,அரோகரா' என்ற சப்தங்களுடன் காவடி ஊர்வலம் முடிந்து விடுகிறது.இப்போதெல்லாம் திரு விழாவிற்கு ஊருக்குப் போகும் போதெல்லாம் முளைப்பாரி கொண்டு போய் பிள்ளையார் கூடத்தில் வைத்துவிட்டு வருவதோடு சரி. வீட்டில் வந்து தூங்கி விடுகிறோம்.என் ஆயா (என் அம்மாவின் தாயார்) தன் மலரும் நினைவுகளுக்குப் போய்விடுவார். "ஒங்க ஐயா இருக்குங் காலத்துல திருவிளாக்குன்னே ஆடு,கோளி வளக்குறது. அது போக காட்டுல மொசக்குட்டி(முயல்) புடிச்சாந்து பஞ்சாரத்துல அடச்சு வைக்கிறது, விறா மீனு கொண்டாந்து பறங்கி (வட்டத்தாழி போல் பெரிய அண்டா) அண்டாவில போட்டு வச்சு ஊரெல்லாம் திருவிழாச்சொல்லி சனம் வந்துச்சுன்னா அந்தத் தெருவே கூட்டு வண்டியாத்தான் இருக்கும்.விருந்து முடிச்சு ஒங்க ஐயா சருக வேட்டி,துண்டு தோள்ல போட்டு நெத்தியில சந்தனப் பொட்டுவச்சு பொட்டலுக்கு வந்தாருன்னா சந்தனத் தேரே வந்த மாதிரி இருக்கும்.கரகத்தக் கும்பிட்டுட்டு தோளுத் துண்ட எடுத்து தலைப்பாக் கட்டி முளைக்கொட்டுப் பாட்டு பாட ஆரம்பிச்சாருன்னா, அந்த மாரியாத்தாளே தச்சுருவா கரகத்துலர்ந்து தலையாட்டுவா.ஹும் அது ஒரு காலம்" என்பார்.இதையெல்லாம் நானும் அறிவேன் என்பதால் அதே நினைவுகளில் கண்ணீர் கரை கட்டிவிடும்.இப்போது சரிகை வேட்டியா? ராம ராஜன் மாதிரி என்று எங்கள் வீட்டில் ஆண்கள் வெள்ளை வேட்டி உடுத்துகிறார்கள். அதுவரை பரவாயில்லை.

         காலம் மாற,மாற நமது கலாச்சாரங்கள் மாறினால் நமது அடையாளம் மறைந்து போகாதோ? எட்டுத் திக்கும் செல்வோம்.கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.நமது பாரம்பர்யங்களை மறவாதிருக்கவும் வேண்டுமல்லவா? என்று நமது பழக்க வழக்கங்கள்,மரபுகள் நமது அடையாளமாகிவிட்டதோ, நமது அடையாளங்களைநாம் காப்பாற்றிக்கொள்வதால் நமது தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்கூறுமல்லவா?

8.12.09

நூற்றாண்டுச்சிறப்பு மிக்க செட்டிநாட்டின் அரண்மனை வீடுகள்


பனை ஓலை கொட்டானில் கலைவண்ணம்

சிறு சிறு சீசாக்களில் பாசி மணி கலைவேலை

செட்டிநாட்டு கிராமங்கள்



                         சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களை செட்டிநாட்டு கிராமங்கள் எனக் குறிப்பிடுவர்.நாகரீகத்திலும்,நல்ல பழக்க,வழக்கத்திலும், ஆன்மீக மற்றும் அறிவுத்தேடல் உள்ள ஒரு சமூகம் தான் 'நகரத்தார்' என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகம்.இந்த சமூகத்தாரிடம் மற்ற மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகள் ஆயிரம்.செட்டிநாட்டு கிராமங்களில் அரண்மனை போன்ற வீடுகள், கற்பனை செய்ய முடியாத சிற்பச்செல்வங்கள் கொண்ட பிரம்மாண்ட சிவாலயங்கள், ஊரணிகள், கல்விக்கூடங்கள் என கிராமங்களின் அடையாளங்கள் மாறிப்போன, நகரச்சந்தடிகள் அற்றுப்போன ஓர் உன்னதமான,கண்களுக்கு விருந்தான கிராமங்கள் தான் எங்கள் செட்டிநாட்டு கிராமங்கள். 

              இங்குள்ள மக்கள் பகுத்தறிவு மிக்கப் பண்பாளர்கள். வெள்ளந்தி தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் இங்குள்ள மக்களிடம் காணமுடியாது.நடை,உடையில் நாகரீகம்,நல்ல கல்வி,நல்ல உணவுப்பழக்கம்,சிறந்த,தெளிவான ஆன்மீகச்சிந்தனை,அயராத உழைப்பு,முன்னேற்றச்சிந்தனைகள்,வீட்டுப்பராமரிப்பில் ஒரு மேன்மை, உள்ளத்தூய்மை, புறத்தூய்மை பேணுதல்,குழந்தைகளை பேணி அவர்களை கல்வி கேள்விகளில் மேம்படுத்தி எளிமையான வாழ்க்கை வாழும் இந்த மக்களின் தர்ம சிந்தனை போற்றுதலுக்கு உரியது.

            இந்தியாவின் எந்த மூலைக்குப் போனாலும் இப்படி ஒரு கிராமங்களைக்காண முடியாது.இந்த சமூகப் பெண்களின் கைவேலைகள் கலை நயம் மிக்கவை.இவர்களின் பண்பாடு பழக்கவழக்கங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் எல்லா மக்களையும் இவை சென்றடைவதுடன் ஒரு மேன்மையான மக்களை, மேன்மையான சமுதாயத்தை,எல்லோர் மனத்திலும் ஒரு தன் முனைப்பை ஏற்படுத்த இயலும் என்பதுடன், நம்முடன் வாழும் ஒரு பெரிய நாகரீகச்சமுதாயத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் நமது 
அறிவுத்தேடலில் ஒன்றாகிறது.

                   அடியேன் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச்சேர்ந்தவள் அல்லள். அவர்களின் பண்பாட்டில் ஈர்க்கப்பட்ட பாலைய நாட்டில் உதித்தவள். எங்கள் மக்களும் நகரத்தார் மக்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொண்டு உறவு சொல்லி அழைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்த ஒரு மேன்மையான வாழ்க்கையை பதிவுலகிற்கு தெரியப்படுத்த விழைகிறேனே அன்றி விளம்பரத்திற்கோ இரு சாதிகளை உயர்த்தும் எண்ணமோ கிஞ்சித்தும் கிடையாது.

ஒவ்வொரு மக்களையும் பற்றி ஆய்வு செய்பவர்கள், நகரத்தார் சமூகத்தின் பண்பாடுகளை கண்டு அதிசயிக்கிறார்கள். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் புகழ் பெற்றுவிடும் இந்தமக்களின் உயர்ந்த பண்பாட்டு நெறிகள், இந்த மக்களின் வரலாறு, இவர்கள் சமூகத்திற்கு அளித்த கொடைகள் குறித்து வரும் கட்டுரைகளில் பதிவு செய்வோம். 

நன்றி!



தாலாட்டுப் பாடல்

           எங்கள் பாலைய நாட்டு கிராமங்களில் குழந்தைகள் தூங்குவதற்கு தாலாட்டுப் பாடுவார்கள். அந்தத் தாலாட்டு பெரியவர்களையும் தூங்கவைத்து விடும்.அந்தப் பாட்டுகள் புலவர்களின் கவிதைகளுக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை. பொருட்செறிவு மிக்க அந்த பாடல்கள் பெரும்பாலும் வீரத்தாலாட்டுகளாகவே இருக்கும்.அப்படி ஒரு தாலாட்டு


ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!
கண்ணுக்குக் கண்ணெழுதி
கடைக்கண்ணுக்கே மையெழுதி,
தூங்காத கண்ணுக்குத்
துரும்பு கொண்டு மையெழுதி,
அயராத கண்ணுக்கு
அரும்பு கொண்டு மையெழுதி
உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
எங்கள் குறை தீர்க்க வந்த
இந்திரனும் நீ தானோ?
மனக்கவலை தீர்க்க வந்த
மாமணியும் நீதானோ?
கலி தீர்க்க வந்த
கண்மணியும் நீ தானோ?
சங்கு முழங்க
சமுத்திரத்தில் மீன் முழங்க
எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தாயோ?
சரியாய் முழங்கவென்று
தாயிடத்தில் வந்தாயோ?
செம்பொன் வெட்டி தூண் நிறுத்தி
சீனி கொண்டு கால் நாட்டி
கம்ப மகள் சேனையர்க்கு- என் ஐயா நீ
கைக்குதவியாய் வந்தவனோ?
ராராட்டத் தூணசைய ராமர் கையில் அம்பசைய
அம்பு முழுதசைய ஆளப்பிறந்தாயோ?
வில்லு முருகசைய விளங்கப்பிறந்தாயோ?
காடு வெட்டி நாடாக்கி, கழனியெல்லாம் கதிராக்கி
கள்ளரெல்லாம் உள்ளமர்த்தி
நாடு பெற்று வருவார்கள்  ராஜாவோ? உங்களய்யா!
வெற்றி பெற்று வருவார்கள் வீமரோ உங்களய்யா!
ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!




7.12.09

நலம் தரும் கிராம வாழ்க்கை



             இன்று பெரிய நகரங்களில் கலக்கிகொண்டிருக்கும் பெரும் புள்ளிகளை ஒரு கணக்கெடுப்போமா? இசை ஞானி இளையராஜா அவர்கள், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முதல் திருமதி பரவை முனியம்மா அவர்கள் வரை ஒரு பட்டியல் தாயரித்தால் பெரும்பான்மையானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்.உரமான உடல், திடமான மனது,எதற்கும் அஞ்சாத, எதையும் சமாளிக்கும் ஆற்றல் சளைக்காத உழைப்பு, இவை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ரத்தத்தில் கலந்தது.கிராமங்களில் வயல் வேலை, தோட்ட வேலை,கால் நடை வளர்ப்பு,வீட்டு வேலை,என்று ஓய்வே இன்றி வேலைகள் இருக்கும்.வேலைகளை முடித்துவிட்டு பள்ளி சென்று வருவதே பெரிய ப்ரயத்தனம்.பள்ளிகளும் தொலை தூரம் நடந்து செல்லுமாறு இருக்கும்.இந்த மாதிரியான வாழ்க்கைச்சூழல் அவர்களுக்குள் விடாமுயற்சியை, எதிர்காலம் பற்றிய கனவுகளை, கற்பனைகளை,கடும் உழைப்பை,எதையும் தாங்கும் இதயத்தை, சாதிக்கும் மனப்பான்மையை, விதைக்கிறது.இதோடு கூட கல்வியும், அனுபவமும் சேரும் போது அவர்களால் சிகரம் தொட முடிகிறது.

           இன்று நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு அரிசி எங்கிருந்து வருகிறது? தெரியாது.வயல், வரப்பு,நாற்று,நடவு,களையெடுத்தல், கதிர் அறுத்தல்,இது பற்றி ஏதும் தெரியாது.பிறந்த மண்ணுக்கு அழைத்து வர பெற்றோர் ஆசை கொண்டாலும் 'போரடிக்கும்' என்கிறார்கள். வாசலில் சாணம் தெளிப்பதைப்பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.நமது பாரம்பர்யத்தை அறிவியல் கண்ணொட்டத்துடன் ஆராய்ந்து பின்பற்றத் துடிக்கிறார்கள் மேல் நாட்டவர்கள். நாமோ நாகரீகம் என்ற பெயரில் நமது பொக்கிஷங்களின் அருமை புரியாது வழித் தடங்களை மாற்றிக்கொள்கிறோம்.இதன் விளைவுகள் விபரீதமாய்ப் பயணிக்கிறது.செட்டிநாட்டுப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பள்ளிகள், கல்லூரிகள்.எங்கள் கிராமங்களில் ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் கல்வி கற்கிறார்கள்.அவர்களால் கழனிகளிலும் வேலை செய்யமுடியும்.கணிப்பொறியிலும் வேலை பார்க்க இயலும்.

             எல்லோரையும் நகரத்தை விட்டு கிராமத்திற்கு அனுப்பி விடுவோமா? என்று கேலி செய்கிறீர்களா நண்பர்களே! நான் சொல்ல வருவது கிராமத்தின் உணவுப்பழக்கம், வேலைப்பழக்கம்,நவநாகரீகங்களைக் கடைபிடிக்கும்போது ஒரு சுயகட்டுப்பாடு, ஆரோக்கியம் பேணுவது போன்ற கருத்துக்களை. சில தாய்மார்கள் கூறுவார்கள் அட! நம்ம தான் அப்படி வளந்தோம்னா, அதுகளையுமா? என்று குழந்தைகளை நோஞ்சாண்களாக, வேக உணவு விரும்பிகளாக, சோம்பேறிகளாக, படிப்பை மட்டுமே வலியுறுத்தி குணங்களைக் கோட்டைவிட்டு வளர்க்கும் நகர நாகரீகத்தைத்தான் சொல்கிறோம்.சேணம் பூட்டிய குதிரைகளாய் குழந்தைகளை வளர்த்து பணம் பண்ணும் வித்தை கற்றுக்கொடுத்தோம்.பண்பாடு,கலாச்சாரம் இவற்றின் அருமை தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற வேதனை தான். பழமைக்கு திரும்பும் மனோபாவம் எல்லோருக்கும் வராதா? எங்களின் இளமைக்காலம் நம் சந்ததியர்க்கும் கிடைக்காதா? என்ற ஆதங்கம். வேறொன்றுமில்லை.

எங்கள் கிராமங்கள்

                கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்று அண்ணல் காந்தியடிகள் வர்ணித்தார். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் உயிர்நாடி கிராமமாகத்தான் இருக்க முடியும். இல்லையென்றால் தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு கண்டு, உணவுப்பொருளுக்கு உலக அரங்கில் கையேந்தும் நிலை தான். நமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. இன்று தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் விளை நிலங்களின் மேலும் கவனம் செலுத்துவது நம் எதிர்காலச்சந்ததியர்க்கு அவசியம் என்பதை மறந்து அவர்களை ஒரு பொறியியல் வல்லுனராகவோ ஒரு மருத்துவராகவோ ஒரு ஆசிரியராகவோ இப்படி தொழில் சார்ந்த உற்பத்தித்துறையில் அல்லது பணிபுரிவோராகவோ ஆக்குவதற்கு முனைகிறோம்.இதில் குழந்தைகளுக்கு அறிவுரை வேறு-நாந்தான் காட்டையும், கழனியையும், ஆட்டையும் மாட்டையும் கட்டிகிட்டு அழுகிறேன்னா நீயாவது படிச்சுப்பெரிய வேலைக்குப் போகணும். சரிதான்.நல்லதுதான். ஆனால் எல்லோரும் வேலைக்குச்சென்றால் சோறு கொடுப்பது யார்?

                  நகரங்களின் ஜரிகை மின்னல்களில் மயங்கி புலம் பெயரும் கிராம மக்களுக்கு இரண்டு தலை முறை கடந்ததும் சொந்த மண் மறந்து போகிறது. அந்த மண்ணின் மீதான அபிமானம் காணாமல் போய் விடுகிறது. வசதியான வாழ்க்கை, வளமான வருமானம் கண்டு பழகிப் போன உள்ளம் கிராமம் திரும்ப விரும்புவதில்லை.திரை கடலோடியும் திரவியம் தேடுபவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.விவசாயி என்றால் கல்யாணச்சந்தையில் வேண்டாத மாப்பிள்ளை. எனவே தான் இளையதலை முறை விவசாயத்தை தேர்ந்தெடுக்க பயம் கொள்கிறது.மேலும் இயற்கை ஏமாற்றும் வேளைகளில் உண்டாகும் நஷ்டங்களும் விவசாயிகளின் தன்னம்பிக்கையை அசைத்துவிட விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விடுபட வைக்கிறது.

                இன்னும் எங்கள் செட்டிநாட்டு கிராமங்களோ மழை வளமற்ற பாலை பூமி. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர்களை கூட்டாக 'பாலைய நாடு' என்பார்கள். இந்தப் பாலைய நாட்டில் பதினாறு ஊர்கள் அடங்கும்.தமிழக அரசு எங்கள் ஊர்கள் அடங்கிய மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தது. வானம் பார்த்த பூமி என்பதால் இளையோர் கிராமங்களை விட்டு
புலம் பெயர்ந்து நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கிறார்கள்.ஆனாலும் எங்கள் ஊர் அமைப்பு, சொந்த ஊரின் மீதான பற்று அவர்களை வெளியிடங்களில் நிரந்தரமாக்கி விடுவதில்லை. இது உண்மை.குல தெய்வப் ப்ரார்த்தனை, குலதெய்வத்திற்குப் படையல் போன்ற காரணங்கள் எங்கள் மக்களை சொந்த கிராமங்களோடு பிணைத்து வைக்கும்.செட்டிநாட்டு கிராம மக்கள் கலாரசனை, கல்வி, கேள்விகளில் தேர்ச்சி, நாகரீக மேம்பாடு, உணவு மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் சிறப்பு, விருந்தோம்பல், உயர்ந்த பண்பாடு,கலாச்சாரம் ஆகிய மேம்பட்ட குண நலங்களுடன் திகழ்பவர்கள்.பழையனக் கழிதலும், புதியனப் புகுதலும், கால மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள்.


         இப்படி எழுதுவதன் நோக்கம் எங்கள் கிராமமக்களைப் பற்றி இந்த பதிவுலகிற்கு ஒரு அறிமுகம் தரும் நோக்கே அன்றி யாரையும் பழிக்கும் நோக்கம் கிடையாது. மக்கள் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை.தமிழ் நாட்டின் அனைத்து கிராம மக்களின் அறியாமை நீக்கும் பொருட்டு எமது மக்களின் பழக்கவழக்கங்களை இங்கு பகிர்ந்து கொள்வோமே!


              ஒவ்வொரு வீடும் ஒளி பெற பெண் கல்வி அவசியம்.அறிவே தெய்வம். அறிவை மேம்படுத்தி நகர மக்களுக்கு இணையாகக் கல்வியில் மேம்பட்டு,தனது உரிமைகளையும், அதிகாரங்களையும் அறிந்து தத்தமது கிராமங்களை மேம்படுத்தினால் தெருக்களில் தேனாறும், பாலாறும் ஓடுகிறதோ, இல்லையோ, நமது மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.நமது மக்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு,நமது மாநிலம் ஒரு சமச்சீர் வளர்ச்சியும் பெறும். அது தான் இந்தத தளத்தின் நோக்கமே தவிர வேறு இல்லை 

2.12.09

பொய்யாய் பழங்கதையாய்

இன்று
காந்திய கிராமங்களின் மீது
கவனம் அற்றுப்போனதால்
இட நெருக்கடியில் இன்னலுறும் நகரங்கள்
ஏர் பிடிக்க மறந்ததால்
சீர் கெட்டுப்போன கிராமமக்கள்

சொந்த ஊரின் ராஜாக்கள்
சொத்து சேர்க்க வெளி நாட்டு வீதிகளில்..
இயந்திரமாய் வேலை செய்து
வியர்வைத்துளிகளை விலை பேசும்
இவர்கள்
சொந்த மண்ணில் சுகமாயிருப்பதால்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறார்கள்
மனித இயந்திரங்களாய்...

எங்கள்
கிராமத்து பிரம்மாண்ட வீடுகளில்
தட்டுத் தடுமாறும் வயோதிகர்கள்
நகரத்தின் தீப்பெட்டி வீடுகளில்
காற்றுக்கும் திண்டாடி
குடிநீருக்கும் அலைந்து
களைத்து நிற்கிறது இந்தத்தலைமுறை

ஆலமரமும் அரசமரக் காற்றும் உடல் தழுவ
கோவில் பிரகாரம் சுற்றி
ஊரணிப்படிக்கட்டில் ஊர்க்கதை பேசிய சுகம்
மழைச்சாரலில் உடல் நனைய
ஓடும்
மழை நீரில் காகிதக்கப்பல் விட்டு
களித்த சுகம்
நட்ட நாற்று வேர்ப்பிடித்து
நல்ல பச்சை நிறம் திரும்பி
காற்றில் சரசரத்து வரப்பில் வழிந்து விழ
நடக்கும் கால்களில் குறுகுறுக்கும் சுகம்
கண்மாய் மடை திறந்து
வாய்க்கால் வழி பாயும் நீரில்
கெண்டையும், கெழுத்தியும் கொஞ்சி விளையாட
விரல்களால் அளைந்து விளையாடும் சுகம்
தூரத்து தொடுவானம் வரை
மேயும் ஆடு மாடுகள்
கண்மாய்க்கரை முழுதும்
நாரையும் கொக்கும்
நடந்து விளையாட
சகதியும் சந்தனமாய்
உடம்பெங்கும் தெளித்திருக்க
கண்மாயில் குளித்து வீடு திரும்பும் சுகம்
வாடகைக் கவலையின்றி
சொந்தவீட்டில் புரண்ட சுகம்
இப்படி
எதுவுமே இல்லை
இந்தத்தலைமுறைக்கு
பாவம்!
முதுகில் சுமக்கும் புத்தகப்பையும்
தினமும் அழுத்தும் பாடச்சுமையுமாய்
பொழுது கழிவதே போதும் என்றாகிவிடுகிறது
மாலை விளையாட்டு மறந்தே போனது
இன்று
வாழ்க்கைப் பயணம்
வரைமுறையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது
குதிரைப்பந்தயமாய்...
பந்தயக்குதிரைகளாய்
பணயம் வைத்தது யார்?
வாழ்க்கையின் இனிமை தெரியாமல்
அந்தந்தப்பருவத்தின் அருமை புரியாமல்
உறவுகளின் நெருக்கம் அறியாமல்
தாயின் மரணத்திற்கும் மின்னஞ்சல் அனுப்பும்
இந்த
வேக வாழ்க்கையின் மீது தான்
எல்லோருக்கும் மோகம்.
வேண்டும் ஒரு புது உலகம்
அதில்
பாரதி கேட்ட
காணி நிலமும் கண் மயக்கும் மரங்களும்
சோலைக்குயிலோசையும்
சொக்கும் தென்றல் காற்றும்....