ஒவ்வொரு தாயும் கண்டிப்பாகத் தன் மக்களுக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டியிருப்பார்கள்.நான்நமதுஇளம்பிராயத்தைச்சொல்கிறேன்.இப்போதெல்லாம் தொலைக்காட்சி காட்டி பயமுறுத்தி,அலைபேசியில் அளவளாவி சோறு ஊட்டுகிறார்கள் இளம் தாய்மார்கள்.அது சரி. இதெல்லாம் காலத்தையும் வசதியையும் பொறுத்தது.நாங்கள் சிறுபிள்ளைகளாய் இருந்த போது ஞாயிற்றுக்கிழமைகளில் பௌர்ணமி வந்தால் நிலாச்சோறு கண்டிப்பாக உண்டு.சில நினைவுகள் தரும் சுகம் இருக்கிறதே அது அனுபவிப்பவர்களுக்குத்தான் புரியும்.நினைவுகள் சட்டென்று புன்முறுவலையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கும்.காலத்தையும்,நிகழ்வுகளையும் மீட்டெடுக்கும் சக்தி மனிதனுக்குத் தரப்பட்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் தரவேண்டும் என்று தான் இறைவன் நினைவுகளைத் தந்தாரோ?நினைவுகளை மீட்டெடுக்கும் போதுகளில் உடலின் பிராயம் மாறாது போனாலும் கூட மனதின் பிராயம் மாறித்தான் போகிறது.கடலை உருண்டையும்,இலந்தப்பழத்தையும் பார்த்ததும் பள்ளிநாட்கள்ஞாபகம் வருவதுபோல். மீண்டுவருவதைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சுவாரஸ்யம்,அதை எழுத்தில் வடிக்கும் ஒரு சுகம் இந்த நிலாச்சோறைப்பகிர்ந்து கொள்வதில் கிடைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை எங்கள் அப்பாவிற்கு கடை விடுமுறை.அன்று நிலவு புறப்பட்டதுமே,'ம்ம்,இன்னிக்கு வாசல்ல சாப்புடலாமா? மணி என்ன சாந்தி பாரு',அப்பா சொல்லுமுன்னே சடக்கென ஓடி,'அப்பா ஏளு'. 'சரி இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும்' என்று வாசலில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து அப்பா அமர,என் அம்மா அருகில் திண்ணையில் அமர நாங்கள் என்ன வேலை செய்தாலும்,படித்தாலும் அப்படியே மூடிவிட்டு வாசலில் வரிசையாக,வசதியாக அமர்ந்து கொள்ள எங்கள் பெற்றொரின் பிறந்த கதை,வளர்ந்த கதைகள் மொழியப்படும்.சில கதைகள் சிரிப்பையும்,சிலகதைகள் சோகத்தையும் பிரதிபலிக்கும்.வறுமையின் நிறம் என்றும் சிவப்பு தானே.
எட்டு மணி ஆனதும் பிரம்புப்பாய் எடுத்து வந்து சாணம் தெளித்த வாசலில் விரித்து,சாப்பாட்டு பாத்திரங்களைப்பரப்பி,தட்டுக்கழுவி அரைவட்டமாக உட்கார நடுவில் என் அம்மா அமர்ந்தபடி பரிமாறுவார்கள்.ஒவ்வொரு முகத்திலும் நிலா வெளிச்சம் ஒரு குளுமையை உண்டாக்கி சாந்தமான அழகை வெளிப்படுத்தும்.வாசல் விளக்கையும் எரியவிட்டு நிலவு வெளிச்சத்தில் சாப்பிடுவோம்.ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட நிலா வெளிச்சம் இருக்கிறதே என்று சாப்பிட எத்தனிக்க என் அப்பாவோ 'இருங்க. அம்மா விளக்கேத்திக்கிட்டு வரட்டும்' என்றார்கள்.என் அப்பா எப்போதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் விளக்கேற்றியதும் சாப்பிட்ட கையைக் கழுவி விட்டு பின் சாப்பாட்டைத் தொடர்வார்கள்.அன்றும் அது போல கை கழுவி சாப்பாட்டைத் தொடர எப்போதும் கேட்கத் தோணாது போன கேள்வி அன்று தோன்றியது.'ஏம்ப்பா கை கழுவிட்டு சாப்புடுறீங்க' என்றதும் 'அது சும்மா தான்.நீ சாப்புடு' என என் அம்மா கதை சொல்லத் தொடங்க என் அப்பா,'புள்ளைக பயப்படுங்க' என்று தடுக்க நாங்கள் வற்புறுத்த அம்மா சொல்லத் தொடங்கினார்.'இப்புடித்தான் எங்க ஊர்ல ஒரு வீட்டுல நிலாச்சோறு வாசல்ல சாப்புட்டாங்களாம்.அப்ப காத்துல வெளக்கு அணைஞ்சு போயிடுச்சாம்.அவுக மறுவடி வெளக்க ஏத்திட்டுப் பாத்தா அவுக தட்டுலருந்த மாங்கொட்டையக் காணுமாம்?நீ எடுத்தியா? நீ எடுத்தியான்னு ஒருத்தர ஒருத்தர் கேட்டு இல்லையின்னு சொல்லிக்கிட்டு இருக்கையில கொல்லச்சந்துல சீச்சீ கொசவ வீட்டு மாங்கொட்ட ஒரே புளிப்புனு சத்தம் கேட்டுச்சாம்.அது யாரு பேயி.அதுனால தான் கரண்டு இல்லாதப்ப காத்து கருப்பு சாப்புடும்னு கையக்கழுவிட்டு சாப்புடுறாக' என்று என் அம்மா கதை முடிக்க நான் தட்டோடு எழுந்து,'நெலாச்சோறும் வேண்டாம்.ஒண்ணும் வேண்டாம்.வாங்க உள்ள' என்று நடுங்க என் அப்பா தன்னருகில் அமர்த்திக்கொண்டு, 'நா இருக்கையில எம் புள்ளைக கிட்ட ஏதாச்சும் வருமா? சும்மா சாப்புடு' என்று தைரியம் கொடுத்தாலும் இன்றும் இருட்டு எனக்கு பயம்.இறந்த வீடுகளுக்குப்போய் வந்தால் பிணம் கட்டுகளுடன் தலை மாட்டில் நிற்பது போல் கனவு வரும்.மிகத்தைரியமான பெண் என்று யாராவது சொன்னால் என் கணவர்,'ம் வாங்க.கரண்ட் இல்லாத நேரம் வந்தீங்கன்னா நீங்க இன்னொரு சாந்தியப்பாக்கலாம்' என்று வாரினாலும் என் அம்மா,தங்கைகள்,என் கணவர் எல்லோரும்,' ஐயோ! இருட்டுன்னா அவ பயப்புடுவா' என்று அக்கறைப்படும் போது சில பலவீனங்கள் கூட இப்படித்தான் அழகாகிறது பேய்க்கதைகள் கேட்பதில்,பேய்ப்படங்கள் பார்ப்பதில் அலாதிப்பிரியம்.
இன்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பௌர்ணமி வந்துவிட்டால் நிலாச்சோறு ஞாபகம் வந்து உற்சாக ஊற்றுகளை அடைக்கும்.யாருமறியாது கண்ணீரையும் நினைவுகளையும் பத்திரப்படுத்துவேன்.யார் கண்டார்கள்.வாழ்க்கையின் கடைசி தினங்களில் துணை வருவதற்கு இந்த நினைவுகள் பயன்படுமாயிருக்கலாம்.என் இதழ்களில் புன்னகை வரவழைக்கும் காரணிகளாக இவை இருக்கலாம்.அதனால் வலைப்பூவில் பகிர்ந்து கொண்டாலும் கூட பத்திரமாய் வைத்திருக்கிறேன் அந்த வண்ண நினைவுகளை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக