கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

11.1.10

லெட்சுமிப்பசு.

        பலாப்பட்டறை,கருவேல நிழல் இந்த இரண்டு வலைப்பூவிலும் 'லெட்சுமிப்பசு' குறித்த பதிவு பார்த்ததும் எங்கள் வீட்டு லெட்சுமிப்பசு ஞாபகம் வந்துவிட்டது.சிலநேரங்களில் சிலமனிதர்களால் தர இயலாத நெகிழ்ச்சியை, மனிதர்கள் தொடமுடியாத நமது மனதின் உயிர்ப்பான பக்கத்தைத் தொட்டுவிடும் வல்லமை நமது வளர்ப்பு பிராணிகளுக்குண்டு.இதை பிராணிகளை அன்போடு,தாய்மையோடு வளர்க்கும் அத்தனை உள்ளங்களும் அறியும்.முதன்முதலில் லெட்சுமி எங்கள் வீட்டிற்கு வந்தது ஒரு வெள்ளிக்கிழமை.என் அம்மா கற்பூரம் காட்டி குங்குமமிட்டு "ஐயோ! எவ்ள அழகு.எங்க புடிச்சீங்க இத" என்று கேட்க என் அப்பா," அத ஏன் கேட்கிற? தரகர் காமிச்ச மாடெல்லாம் எனக்குப்புடிக்கல.யோசனையா ஆத்தங்குடிப்புள்ளையார் கோவில்ல உக்கார்ந்திருந்தப்ப மாடுகள மேச்சு அந்த வழியா ஓட்டிக்கிட்டு போனாங்க.நான் தரகர் கிட்ட இந்த மாதிரி மாடா இருந்தாத் தேவல.பாருங்க மகாலக்ஷ்மி மாதிரி இருக்குன்னேன்.ஓட்டிக்கிட்டுப்போனவரு காதுல விழுந்து இது கூட விக்கறது தாங்க.வேணுமின்னா வீட்டுக்கு வாங்க வெல பேசுவோம்னாரு.போயி பேசி கன்னோட ஆயிரத்து ஐநூறு ரூபாய்னு வாங்கியாந்தாச்சு.சந்தோசமா?"மாட்டைத் தொட்டு தடவி ரசித்தும் அடங்கவில்லை எங்களுக்கு.அக்கம் பக்கம் விலை அதிகம் என்று சொன்னாலும் என் அம்மாவிற்கும்,எங்களுக்கும் பிடித்ததால் என் அப்பாவிற்கு நிரம்பப்பிடித்துவிட்டது.அதன் அடர் மையிட்டது போன்ற அகன்ற பிரகாசமான விழிகள்,சீரான அழகான கொம்புகள்,நல்ல வாளிப்பான உடல்,அதன் பால் நிறம் அனைத்தும் கவர்ந்துவிட்டது.விளையாட அழைத்த பிள்ளைகளிடம் நாங்கள் மாட்டைக்காண்பித்து வரமறுத்து துள்ளும் கன்றோடு விளையாட,திண்ணையில் உட்கார்ந்திருந்த என் அப்பாவும்,சித்தப்பாவும் புன்னகைகளைப் பரிமாறியபடி,"மாடு முட்டும்,பாத்து" என்றுவிட்டுப்போனார்கள்.அக்கம் பக்கம் பிள்ளைகளுடன் பெருமை அடித்து மாளவில்லை.நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி ஏக மனதாய் அதற்கு லெட்சுமி என்று பெயர் சூட்டினோம்.நாங்கள் எத்தனை முறை அழைத்தாலும் வாளாவிருக்கும் பசு என் அம்மா அழைத்தால் மட்டும் அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பும்.பால்,தயிர்,நெய்,பால் டிப்போவில் முதல் தேதி பாலுக்குப்பணம் கிடைக்கும் போது கூடவே கிடைக்கும் பால்கோவா இவற்றால் மனதும் வயிறும் நிரம்பிப்போனது.

      அதன் பிறகு சொந்த ஊரில் இருந்து என் அப்பா கடைவைத்திருந்த அறந்தாங்கிக்குப் போன போதும் மாட்டுவண்டியில் பின்னால் கட்டி கூட்டிவந்த அன்று இரவு லெட்சுமிக்கு என் அம்மா புளிய இலை,வேப்பிலை வேக வைத்த தண்ணிரால் குளிப்பாட்டி கொட்டகையில் கட்டிவைத்தார்.அறந்தாங்கியில் சுற்றிலும் கிராமங்கள் என்பதால் செவ்வாய்க்கிழமை சந்தையில் வைக்கோல்,தினம் பெண்கள் விற்கும் புல்கட்டு என்று லெட்சுமிக்கு ஏகப்பராமரிப்பு."நமக்கு சாண் வயிறு,அதுக்கு சதுரமெல்லாம் வயிறு" என்று என் அம்மா அவளையும் ஒரு குழந்தையாக கவனிக்க அவளோ எங்களுக்கு இன்னொரு தாயானாள்.வருடம் ஒன்று கன்று ஈனும்.காளைக்கன்றுகளை பால் குடி மறந்ததும் விற்று விட்டு,கிடேரிக்கன்றுகளை வீட்டில் வளர்க்க பசுக்கள் பண்ணையாகியது.லெட்சுமிக்கு வேற்று மனிதரை இனம் கண்டு விரட்டும் பழக்கம் இருந்ததால் வெளியூர்ப் பயணம் போகும் போது அதை அவிழ்த்துவிட்டு பெரிய கதவைப்பூட்டிவிட்டுப்போவோம்.என் அம்மாவும்,என் அப்பாவும் இல்லாத நேரத்தில் மற்ற மாடுகளிடம் சுலபமாக பால் கறந்து விடலாம்.லெட்சுமியை அண்டுவது சிரமம்.அதனால் தொரட்டிக்கம்பை எடுத்து அதன் கழுத்து,மூக்கணாங்கயிறோடு சேர்த்து கோர்த்துப் பிடித்து அது விரட்ட நான் ஓடி கல்தூண் மறைவில் நின்று கயிற்றால் பிணைத்து கன்றை அவிழ்த்துவிட்டதும் அதன் கோபம் அடங்கி கன்றை நாக்கால் துழாவ ஆரம்பிக்கும்.அப்போது நான் பால் கறப்பேன்.

     அது கன்று ஈனும் நாளில் என் அப்பாவும்,அம்மாவும் உறங்காமல் விழித்திருந்து,இளங்கொடி போட்டதும் அவளை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி சாக்கு விரித்து,கன்றை அதன் அருகில் விட்டுவிட்டு பிறகு தான் படுப்பார்கள்.அது என்னவோ அவள் எங்கள் வீட்டில் இருந்த பதினைந்து வருடங்களிலும் இரவு நேரத்தில் தான் ஈன்றது.காலை எழுந்து பார்த்தால் துள்ளும் கன்று பார்த்து ஒரே சந்தோசமாகிவிடும்."அம்மா! ராத்திரிப்பூரா நீங்களும் அப்பாவுந்தூங்கலையா?" என்றால் ,"ம்ம்.சரிதான்.மாடு வளக்குறதுன்னா சும்மாவா! உங்கள வளக்குற மாதிரி வளக்கனும்.அது வயித்துக்குள்ள நாம குடியிருந்தாத்தான் அது பலன் குடுக்கும்" என்பார் என் அம்மா.லெட்சுமிப்பசு வயதாகி தளர்வடைந்த போதில் என் அப்பாவின் தோழர் ஒருவர்,"இவ்ள நாளு நம்ம வீட்டுல வளத்த பசு நம்ம வீட்டுல செத்துச்சுன்னா வீட்டுக்கு நல்லத்தில்ல" என்று கூற என் அப்பாவும்,என் அம்மாவும் விற்று விட மற்ற பசுக்களும் ஒவ்வொன்றாக நோய்வாய்ப்பட்டு இறந்தது.என் அப்பா நன்றாக சாப்பிட்டுவிட்டு படுத்தவர்கள் இரவில் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதித்து மூன்றாம் நாள் திடீரென தனது 52ம் வயதில் இறக்க,குருவிக்கூடு போன்ற குதூகலமான எங்கள் இல்லம் சோகத்தில் மூழ்கியது.சிலர் நீண்ட நாள் வளர்த்த பசுவை விற்றதுதான் காரணம் என்றனர்.என் அம்மாவும் ராமேஸ்வரம்,காசி இங்கெல்லாம் கோதானம் செய்தார்கள்.பால்பானையைக்கழுவிக் கவிழ்த்தறியாத நாங்கள் இன்று பதப்படுத்திய பால் வாங்குகிறோம்.என் அப்பாவின் இறப்புக்குப்பிறகு சொந்த ஊர் திரும்பியதும் சொந்தங்கள் எல்லோரும் பசு வளர்க்கப் பரிந்துரைத்தனர்.ஆனால் என் அம்மா மறுத்துவிட்டார்.மீண்டும் பசு வளர்ப்பு தவிர்க்கப்பட்டது என் அப்பாவின் நினைவாலா? லெட்சுமியின் நினைவாலா? என் அம்மாவிடம் கேட்க எங்கள் யாருக்கும் தைரியமில்லை.

2 கருத்துகள்:

  1. அருமையா எழுதி இருக்கீங்க சகோதரி::)) வாழ்த்துக்கள்..::) லெட்ச்சுமி எல்லா இடங்களிலும் இருக்கிறாள் ...::))

    பதிலளிநீக்கு