கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

4.1.10

வாழ்க்கை வரம்

         நம் தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும்,ஒவ்வொரு சமூக மக்களுக்கும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடு வெவ்வேறாக இருக்கிறது.இப்படித்தான் வாழ வேண்டுமென சிலர்.எப்படியும் வாழலாம் என்று சிலர்.யாரைப்பற்றியும்,எதைப்பற்றியும் கவலை இல்லாது தன் இலக்குகளே குறியாய் வெறித்தனமான வாழ்க்கை வாழும் சிலர்.இருக்கும் போது எல்லோருக்கும் உதவி பின் அடுத்தவரை எதிர்பார்த்து சிலர்.எந்தக்குறிக்கோளும் இல்லாது வாழ்க்கை நீரோட்டத்தோடு இயைந்து வாழும் சிலர்.இப்படி ஒவ்வொரு வித மனிதருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதமான முகம் காட்டி, வெவ்வேறான அனுபவங்களைக் கொடுக்கிறது.ஒருவரின் வாழ்க்கை பற்றிய பார்வை இன்னொருவரின் பார்வையினின்று வேறுபடுகிறது.என்வரை சுமையற்ற வாழ்க்கை தான் சிறப்பு.எளிமையான வாழ்க்கை.தேடல் இருக்க வேண்டும்.ஆனால் அது நம் அமைதியைக் குலைப்பதாக இருந்தால் தேவையில்லை.ஓடுபவர்களைப்பார்த்து ஓடுபவர்கள் தான் இன்று பெருகிவிட்டனரே தவிர தனக்கு என்ன தேவை என்ற தெளிவில்லாத ஓட்டம் தான் ஓடுகின்றனரோ என்றும், அல்லது நாம் தாம் நம் தேவைகளைச்சுருக்கி ஓடத்தெரியாது, ஓடுபவர்களை விமர்சிக்கிறோமோ என்று குழம்பும்.ஆனால் ஓடிக்களைத்தவர்கள் சலிப்பாய் நொந்து மயங்கும் போது நாம் சரி என்று பெருமை கொள்ளும் மனது.இது என் பார்வை.வாழ்க்கையின் பொருளீட்டும் பக்கத்தோடு,நம் மனதின் ரசனைப்பக்கம்,பிடித்ததை அனுபவிக்கும் பக்கம் இப்படிப் பக்கங்களையும் புரட்டி வாழ்க்கையைப் படிப்பவர்கள் நிறைவாய் வாழ்கிறார்கள். ஏதாவது ஒரு பக்கத்தோடு நின்று விடுபவர்கள் ஒரு குறையோடு, மற்றவர்கள் தான் நமது இந்த வாழ்க்கைக்குக் காரணம் என்ற வெறுப்போடும் கடந்து போய்விட, பூமி மட்டும் எல்லாவற்றையும் தனக்குள் செரித்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது.

           நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் அனுமதி கேட்டு எங்கள் ஊர் ஊரணிக்கரையைச்சுற்றி கூடாரம் போட்டுத் தங்கும் ஒரு கூட்டம்.கூடைகள்,வடிதட்டுகள்,அழுக்குத்துணிபோடும் ஆளுயரக்கூடைகள்,மூங்கில் தட்டிகள் முடையும் ஆந்திரப் பிரதேசத்து மக்கள். பாமரர்கள்.ஆனால் மிக அழகானவர்கள்.சிறு குழந்தைகளை தோளில் தூளி கட்டி தூக்கிக்கொண்டு பெண்களும்,பெரிய சுமைகளோடு ஆண்களும் வந்திறங்குவர்.வந்த சற்று நேரத்தில் கூடாரங்கள் தயாராகி பெண்கள் கல் கூட்டி அடுப்பு மூட்ட குழந்தைகள் புரியாத மொழியில் சிட்டுக்குருவிகள் போல் கீச்கீச் என்று கத்திய படி ஊரணிக்கரை மர நிழலில் சுற்றிச்சுற்றி விளையாட ஊரணிகரை முழுதும் அவர்கள் ராஜாங்கம் தொடங்கும்.அழுகை,கண்ணீர்,சண்டை பார்க்க முடியாது. அவர்களின் பலம் ஒற்றுமை என்பதை உணர்ந்த படிக்காத அந்தப் பாமர மக்களின் முகம் எப்போதும் புன்னகை மலர்ந்து ஒரு இணக்கம் விகசித்தபடி இருக்கும்.வே டிக்கை பார்க்கும் எங்களிடம் அவர்கள் மொழியில் பேசுவார்கள்.புரியாமல் நாங்கள் சிரித்த படி ஓடி விடுவோம்.கூடை முடைவதற்கு தேவையான மூலப்பொருட்களை ஆண்கள் சேகரித்துவர பெண்கள் அவர்களின் கூடைகள் முதலியவற்றை விற்பதற்கு வீதிவீதியாகக் கொண்டு செல்வர்.அரிசிக்கு,பணத்திற்கு கூடைகளை விற்றுத் திரும்பி சமையல் முடித்து ஊரணிக்கரையில் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து உணவு உண்டு,மறுபடி பேசியபடி,பாடியபடி கூடை முடைய ஆரம்பிக்க குழந்தைகள் சிட்டுக்குருவிகளாய் விளையாடும். மாலை நேரங்களில் அந்தப் பக்கம் நடக்கும் போதே முகப்பூச்சு வாசனை மூக்கைத் துளைக்கும்.எங்கள் ஊர் திரையரங்கில் காட்சி ஆரம்பிக்கும் முன் பாட்டுப் போடுவார்கள்.அந்தப்பாட்டு சத்தம் கேட்டு சிறிது நேரத்தில் கூட்டமாக திரைப்படம் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். எதிர்ப்படும் மக்கள் இவர்களை வேடிக்கை பார்த்தபடி போவார்கள்.இந்த மக்கள் இருக்கும் வரை ஊரணிக்கரையில் இரவில் நடமாடப் பயமின்றிப் போகும்.இவர்களை வேடிக்கை பார்ப்பது,ஏங்குவது என் வேலை.என் அம்மா எப்போதும் வேலை வேலை என்றிருக்கும் பெண்மணி.எங்கள் ஊர்ப் பெண்கள் அனைவரும் அப்படித்தான்.பத்தடி தூரத்தில் திரை அரங்கு இருந்தும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட படம் பார்க்க முடியாது."அவுங்க நாடோடிங்க.நம்ம குடியானவுக.கூத்தாடிக மாதிரி படம் படம்னு திரியாத!" என்று என் ஆயா திட்டுவார்கள்.சிரிக்க மறந்த,அக்கம் பக்கம் பேச மறந்த எங்கள் மக்கள் முன் அவர்கள் தான் சிறப்பான வாழ்க்கை வாழ்வது போல் தோன்றும்.என் அம்மாவிடம் என் எண்ணங்களைச்சொல்லும் போது என் அம்மா அழகாகச்சொல்வார்கள்."அவங்க நாளைக்குச்சேர்க்கனும்,பண்ணனும்னு நெனக்கிறதில்ல.புள்ளைகளப் படிக்க வைக்கனும்,கட்டிக்குடுக்கனும்,அதுகளுக்கு சீர் செய்யனும் இப்புடி பொறுப்புக கெடையாது.வீடு வாங்கு,இடம் வாங்குனு தேவைக கிடையாது.நா இப்புடி வீதிவீதியாத் திரிஞ்சு கூட வித்து அத சாயங்காலமே கொண்டேயி தியேட்டர்ல குடுக்க மனசு வருமா? ஆத்தி! அந்தக்காச சேத்து வச்சா நம்ம பொம்பளப்புள்ளைகளுக்கு ஏதாவது வாங்கலாம்னு தோணும்.அது தான் நம்ம.அதுனால தான் நம்ம ஓடிக்கிட்டே இருக்கோம்.நமக்கு ஆசைக,தேவைக அதிகம்." இப்படிப் பேசும் போது கூட என் அம்மாவின் கை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்.

       இவர்களைப்போல் ஆட்டுக்கிடை போடும் மக்கள். இவர்கள் ஊருக்கு வெளியே தோட்டங்களில் கிடை போடுவார்கள்.கூடாரங்கள் ஆங்காங்கே கவிழ்த்து வைத்திருப்பார்கள்.யாருடனும் பழக மாட்டார்கள்.கூட்டம்,கூட்டமான ஆடுகள்,அழகான சின்னச்சின்னக்குட்டிகள் எங்களைக்கவரும்.ஒவ்வொரு நேரம் நள்ளிரவில் மழை வரும்போது நாங்கள் ஆடு, மாடுகளைக் கொட்டகைகளில் பிடித்துக் கட்டும்போது திடீரென அந்த மக்கள் ஞாபகம் வரும்.இந்த மழையில் எப்படித் தூங்குவார்கள்? என் அம்மா சொல்வார்கள்," எல்லாமே பளக்கந்தான்.வசதிகளப் பளகாட்டா பிரச்சினையே இல்ல." வாழ்க்கையை சுலபமாக வாழும் அந்த மக்கள் தங்களின் சுமைகளை சாபங்களாக எண்ணாது, உள்ளதை வைத்து நல்லது செய்து கொள்ளப் பழகிய அந்த மக்களின் வாழ்க்கை முறை எளிமையானது.இறையிடம் கூட எதையும் எதிர்பார்த்து வாழாது, வருவதை ஏற்று வாழும் அவர்களின் வாழ்க்கை அழகானது. இன்றும் கூட எங்கள் ஊருக்குப்போகும் போது இந்த மக்களைப் பார்த்துவிட்டால் பழைய நினைவுகளில் மூழ்கி விடுவேன்.என் அம்மா எல்லோரிடமும் சொல்வார்கள்,"இவளுக்கு அவுகள மாதிரி இருக்கனும்னு ஆச" என்று.இப்போதும் அந்த மக்களின் சிறுவர்கள் வ ருவார்கள். கூடைகளை ஏந்தி தெலுங்கில் பேசி,கைகளால் சாடை காட்டி புரியவைக்க முயன்றபடி வரும் அவர்களைப் பார்த்து சில தெலுங்கு நண்பர்களின் உபயத்தால் கற்றுக்கொண்ட சிற்சில வார்த்தைகளைப் பேசினால் போதும்.ஐ! என்று பொங்கிச்சிரிப்பார்கள்."ம்ம்.இப்ப உங்க பாஷையும் கத்துக்கிட்டா! கூட்டிக்கிட்டுப் போங்கடா!" என்று சிரிப்பார்கள் என் அம்மா.என் குழந்தைகள் ,"ம்க்கும்..அஸ்க்கு,புஸ்க்கு" என்று என்னைக்கட்டிக் கொள்ள நமக்கு இருப்பு மறந்து போகும்.

             நமது மக்கள் வாழ்க்கையை முறையாக்குகிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட சட்ட திட்டங்களை வகுத்து,உறவுகளைப்பெருக்கி,விருந்து,சீர்,ஆடம்பரம் ஆகியவற்றைப்பழக்கி வாழ்க்கையை சிக்கலாக்கிவிட்டார்கள்.சிக்கலான வாழ்க்கையை தலைமுறை தலைமுறையாக இன்னும் சிக்கலாக்கி சிடுக்கெடுக்க முடியாத சீக்குப்பிடித்த வாழ்க்கை ஆகிப்போனது.பிடிக்கிறதோ இல்லையோ எல்லோரும் வாழும் வாழ்க்கையை வழிமொழிந்து தொடர வேண்டிய கட்டாயத்தில் நாம்.எங்கள் கிராமங்களில் எங்களுக்கு முந்தியத் தலைமுறையின் (அம்மாக்கள்) பாடு பெரும் பாடு.அதற்கு முந்தியத் தலை முறையின் (பாட்டிகள்) பாடு பெரும்,பெரும்...பாடு. ஏதோ நாங்கள் கற்ற கல்வி எங்களின் சுயம் விளங்க  விளக்க  உதவுகிறது.

3 கருத்துகள்:

  1. உங்களோட கருத்து ரொம்ப நிதர்சனமானது.பிள்ளைக , எதிர்காலம் , சொத்து சேர்க்கனும் அப்டினு தங்களுக்காக வாழாத ஒரு வாழ்கை முறையை தான் என் பெற்றோரும் கடைபிடிக்கறதா நானும் யோசிச்சதுண்டு -சுபத்ரா

    பதிலளிநீக்கு
  2. //இப்புடி வீதிவீதியாத் திரிஞ்சு கூட வித்து அத சாயங்காலமே கொண்டேயி தியேட்டர்ல குடுக்க மனசு வருமா? ஆத்தி! அந்தக்காச சேத்து வச்சா நம்ம பொம்பளப்புள்ளைகளுக்கு ஏதாவது வாங்கலாம்னு தோணும்.அது தான் நம்ம.அதுனால தான் நம்ம ஓடிக்கிட்டே இருக்கோம்.நமக்கு ஆசைக,தேவைக அதிகம்."//

    உங்க அம்மா அழகா சொல்லிருக்காங்க....குடும்பம் என்பது தியாகம்தான்...இது தொடர்கதை.

    பதிலளிநீக்கு