கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

21.1.10

வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள்

பூமியின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலம். இதில் விளைநிலமாகப் பயன்படக்கூடிய மண் - பூமி - நிலம் என்று கணக்கில் கொண்டால் மூன்றில் ஒரு பங்கில் இரண்டு சதவிகிதம் தான்.அந்த இரண்டு சதவிகிதமும் வீட்டு மனைகளாக மாறி வருவதைப்பார்க்கும் போது, எப்படி ஒரு அழிவை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க வேண்டிய கட்டாய காலத்தில், கட்டாய நிமிடங்களில், நாமிருக்கிறோம்.கிராமங்கள் அதிகம் கொண்ட நாடு நமது நாடு.விவசாயம் தான் நமது அடிப்படையான,ஆதித்தொழில்.நம் மக்கள் ஏரை மறந்த அன்றே சீர் கெட்டுப் போனோம்.

விவசாய நண்பர்களைச்சொல்லிக் குற்றமில்லை.எங்கள் கிராமங்களில், சேற்றில் கால் வைத்தவன் பாடு கற்காலத்தை விட்டு நகராமல் இருக்கும் போது,கல்வி கற்று,"ஒயிட் காலர் ஜாப்" கலாச்சாரத்திற்கு மாறியவர்கள் பொற்காலத்தின் வசதி வாய்ப்புகளை அனுபவிப்பதைப்பார்த்து விவசாயத்தை கைவிட்டவர்கள் அதிகம்.விவசாயத்திலிருந்து, மாடுகள்,ஆடுகள்,கோழி வளர்ப்பு என்றிருந்தவர்கள் வெளிநாடுகளுக்குச்சென்று சுபிட்சம் கண்டதும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுத்தால் நம் பரம்பரையையே விவசாயத்திலிருந்து விட்டு விடுதலையாகிவிடலாம் என்று நம்ப ஆரம்பித்து,மனைவி,குழந்தைகளை வேற்று ஊர்களில் குடியமர்த்தி குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்து,இன்று கிராமங்களே வெறுமையாகிக் கிடக்கும் சூழ்நிலை. ஆக ஒரு பரம்பரை விவசாயி,விவசாயம் நம் கிராமங்களின் அடிமைத்தளை,அதிலிருந்து நம் பரம்பரையை மீட்டு விட்டோம் என்று ஆசுவாசப்படும் அளவு அவனை சிந்திக்கத் தள்ளியது நம் சமூகம். விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்தவர்களின் வாரிசுகள் பட்டம் பெற்று நல்ல வருவாயில் இருந்து கொண்டு, நாமும் மற்றவர்களைப் போல் வாங்கி சாப்பிடுவோம்,உடலை வருத்தி விவசாயம் வேண்டாம்,யாருக்காவது விற்று விடுங்கள் என்ற நிலைக்கு வந்து,விற்ற சாலையோர விளைநிலங்கள்,வீடுகளாயும்,கல்வி நிலையங்களாயும் மாறிப்போனது என்பது தான் இன்றைய நிலை.ஒரு விவசாயக்குடும்பம், தன் வாழ்நாளில் நல்ல அரிசியை குடும்பத்தேவைகளுக்கு விற்று விட்டு சூட்டடி நெல் என்ற இரண்டாம் தர நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியையும்,குருணை அரிசியில் சமைக்கப்பட்ட உணவையும் தான் உண்டு தன் வாழ்நாளைக் கழிக்கும். இன்று இந்த நிலை மாறியிருக்கிறது என்பதில் இன்றையப் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சி.(என்னையும் சேர்த்து) எங்கள் கிராமங்களில் சாலையோர கண்மாய்கள் கூடத் தூர்க்கப்பட்டு,மொத்த ஊரும் சேர்ந்து கண்மாயைப் பட்டாப்போட்டுக்கொண்ட கதைகள் உண்டு.

விவசாயம் இன்று ஒரு லாபமற்ற,நிச்சயமற்ற ஒரு தொழில்.நாட்டின் மற்ற தொழில் வளர்ச்சியடைந்து விட்டதால் விவசாய வேலைக்கு கூலியாட்கள் கிடைப்பதும் குதிரைக்கொம்பு.அரசாங்கம் கொள்முதல் விலையை அதிகரிக்கவும்,விவசாயிகளுக்கு சலுகைகளை அதிகரிக்கவும்,விவசாய நிலங்களை வீட்டு மனைகளாய் அங்கீகரிக்க மறுக்கவும் வேண்டும்.அந்தமானில் விளைநிலங்களை வீட்டு மனைகளாய் அங்கீகரிக்க நிறையக்காலம் பிடிக்கும்.அதோடு "High value agriculture" என்ற திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் அளவில் தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு 5600/ ரூபாய் மானியமும் 200 வாழை மரங்களுக்கு அதுவும் பச்சைநாடா ரகத்திற்கு மட்டும் 2600/ரூபாயும், தோட்டங்களுக்குத் தேவையான உரம்,விதை,கன்றுகள்,பூச்சிமருந்துகள்,விவசாய அதிகாரிகளின் தொடர்ந்த ஆலோசனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு விதை நெல்,உரங்கள்,பூச்சிமருந்துகள் இலவசம். ஆனால் அரசு கொள்முதல் செய்யுமளவு நெல் உற்பத்தி இல்லை.காய்கறித்தோட்டங்கள்,பூந்தோட்டம் ஆகியவற்றிற்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.தேங்காயில் இருந்து தயரிக்கப்படும் கொப்பரை வெளிச்சந்தையில் 25 - 30 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படும் நிலையில் இங்கு தீவுகளின் "விவசாயக்கூட்டமைப்பு" தீவின் தென்னை விவசாயிகளிடமிருந்து 44 ரூபாய்க்கு நேரடிக்கொள்முதல் செய்கிறது.இடைத்தரகரிடமோ,வியாபாரிகளிடமோ கொள்முதல் செய்வதில்லை.இதனால் தேங்காய்களைப்பறிக்காமல் வீணாவது தடுக்கப்பட்டதோடு,தென்னை விவசாயிகள் கொப்பரைத்தயாரிப்பில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகிறார்கள்.  Integrated Dairy Development Scheme என்ற திட்டத்தின் கீழ் பால் மாடுகள் வாங்குவதற்கும் ஐம்பது சதவிகித மானியத்தில் வங்கிக்கடனுதவி,கால்நடைகளுக்குத்தேவையான மருத்துவம்,மருந்துகள்,இனவிருத்திக்குத்தேவையான ஊசிகள், உயர் ரக ஆடுகள் கால ஒப்பந்த அடிப்படையில் இலவசமாகத்தருவது,இப்படி வசதிகளை தீவு நிர்வாகம் தருகிறது.தமிழ் நாட்டில் என்ன நிலை என்று எனக்குத் தெரியாது.ஆனால் முக்கிய பூமியில் விளைச்சல் அதிகமானால் தான்,
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அற்ற ஒன்றியப்பகுதியில் வசிக்கும்     நாங்கள் பயமின்றி,பட்டினியின்றி உணவு கொள்ளமுடியும்.


விழுப்புரம் மாவட்டம்,ஆகாசம்பட்டு விவசாயி சேஷாசலம் அவர்கள் தனது வெண்பாவில் வெளிப்படுத்துகிறார் தன் வலியை.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவரா?- அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சை எண்ணிப்பார்த் தாதெரியும்
ட்ராக்டருக்கு வள்ளுவனா ரே"

"நெத்து வெடிக்கையிலே பத்துகிலோ, தேன்தடவி
அத்தை உடைச்சாக்க ஆறுகிலோ - குத்தி
எடுத்துப் பொடைச்சாக்க அஞ்சுகிலோ ஆச்சே
அடச்சாமி இந்த உளுந்து"

இப்படித்தான் உழுதவன் கணக்குப்பார்த்து உழக்கு கூட மிஞ்சாது விவசாயத்தைக் கைவிட்டது விவசாயக்குடும்பங்கள்.எங்கள் கிராமங்களில் தோட்டம் போடவேண்டிய கட்டாயமின்றி,கால்நடைகள் வளர்க்க வேண்டிய கட்டாயமின்றி , பெண்களும்,ஆண்களும் நகர வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக்கொண்டனர்.நிலத்தையும்,மண்ணையும் நேசிப்பவர்கள் (என்னைய மாதிரி!) இப்படிக் கவிதையும் கட்டுரையும் எழுதிக்கொண்டு.இந்தத்தலைமுறையின் புத்தகங்களில் கூட இல்லை விவசாயத்தின் பெருமை சொல்லும் பழமொழிகள்.விதைக்கிற அன்னிக்கு ஊருக்குப்போயிட்டு அறுக்கிற அன்னிக்கு வந்து அழுதா முடியுமா?,ஆடிப்பட்டம் தேடி விதை,அகல உழுவதை விட ஆழ உழு,காற்றுள்ள போதே தூற்றிக்கொள் (எனக்கும் மறந்துவிட்டது)  இந்தப்பழமொழிகளுக்கும், வயல்,வரப்பு,நாற்று,நடவு,களையெடுப்பு,களம்,கதிர்,போரடித்தல்,நெற்பொலி இந்த வார்த்தைகளுக்கும் இன்றையத்தலைமுறைக்கு அர்த்தம் தெரியாது.அமெரிக்க நாட்டின் வேளாண் துறை விஞ்ஞானி ஒருவர்,"இந்தியாவின் நீர்ப்பாசன நிலப்பரப்பு கிட்டத்தட்ட அமெரிக்காவிற்கு இணையாக இருக்கிறது.ஆனால் உணவு உற்பத்தியில் இந்தியா அமெரிக்காவைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு பின் தங்கியிருக்கிறது.இதற்குக் காரணம் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா பின் தங்கியிருப்பதுவே. ஆனால்,இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் மற்ற பகுதிகளைவிட நான்கு மடங்கு உற்பத்தி பெருக்குகின்ற விஞ்ஞானம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் இது நமக்கெல்லாம் பெருமை.

6 கருத்துகள்:

 1. மிக அழகான ஆழமான இடுகை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. //வயல்,வரப்பு,நாற்று,நடவு,களையெடுப்பு,களம்,கதிர்,போரடித்தல்,நெற்பொலி இந்த வார்த்தைகளுக்கும் இன்றையத்தலைமுறைக்கு அர்த்தம் தெரியாது.//

  நிச்சயமாக தெரியாது...

  அரிசி எப்படி வந்தது என்று கேட்டால் திரு திரு என முழிக்கிறான் பட்டணத்தில் படிக்கும் என் நண்பன் மகன்...

  பதிலளிநீக்கு
 3. கடைசி பத்தியில் தமிழ் நாட்டுக்கே பெருமை என எழுதியிருக்கிறீர்கள். இங்கும் பெருசா ஒண்ணும் வாழலெ. விவசாயிகள் தொடர்ந்து இன்னல் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்க்ரீட் காடுகளாக மாறிக்கொண்டுத்தான் இருக்கின்றன. இதை மாற்ற முடியும் அரசாங்கம் மனது வைத்தால்.

  அமெரிக்காவை போல தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும். மேலும் அந்தமானில் செய்வது போல விவசாயிகளுக்கு உதவவேண்டும். ஆனால் இங்குள்ள அரசியல் வாதிகள் ஓட்டுக்காக மக்களின் வரிப்பணத்தையே மக்களுக்கு இலவசம் என கூறி அரிசி, டிவி, எரிவாயு என எல்லாவற்றையும் கொடுப்பதால் மக்கள் சோம்பேறிகளாகிக்கொண்டு வருகின்றனர்.

  இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கட்டுரை நன்றாக எழுதப்பட்டுள்ளது. தமிழமுதம், பண்புடன், முத்தமிழ் குழுமங்களில் இதை மீள்பதிவு செய்கிறேன் நன்றி.
  http://groups.google.com/group/tamizhamutham
  http://groups.google.com/group/panbudan
  http://groups.google.com/group/muththamiz

  பதிலளிநீக்கு
 5. From: செல்வன்

  60 கோடி பேர் ஆளுக்கு கால் ஏக்ராவை வைத்துகொண்டு விவசாயம் செய்தால் அந்த தொழில் எப்படி உருப்படும்?அதை செய்கிறவனுக்கு எப்படி லாபம் வரும்?

  லூசுதனமாக நில உச்சவரம்பு சட்டம், உழுபவனுக்கே நிலம் சொந்தம் மாதிரி திட்டங்களை கொண்டுவந்து சோஷலிச பொருளாதாரம் நம் நாட்டை நாசம் செய்து வைத்திருக்கிறது.நில உச்சவரம்பு சட்டத்தை எடுத்தால் பெரும் கார்ப்பரேட்டுகள் லட்சகணகான ஏக்ராவில் நிலம் வாங்கி பயிர் செய்யும்.இந்தியா ஒரே வருடத்தில் உலகின் அதிக விவசாய உற்பத்தி செய்யும் நாடாகிவிடும்.காவிரி,பாலாறு என எந்த பிரச்சனையும் கிடையாது.நாப்பது லட்சம் விவசாயிகள் பயிர் செய்வதுக்கு பதில் நாலு கம்பனிகள் காவிரி ஆற்றுபடுகையில் பயிர் செய்தால் அவர்களுக்குள் வெகு எளிதாக நீர் பகிர்மான பிரச்சனையை பேசி தீர்த்துகொள்வார்கள்.

  ஆனால் இப்படி எல்லாம் செய்தால் நாடு உருப்பட்டுவிடுமே?அதனால் இப்படி நடக்க அரசியல்வியாதிகள் விடமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு