கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

16.1.10

தேவை ஒரு வழிகாட்டி

தமிழக கிராமங்களின் இயற்கையோடு கூடிய வாழ்க்கை- பனிநேரத்தில் சூரியக் கதிர்கள் பூமியைத் தொடும் ஆரம்பக்காலையின் அமைதியை ரசித்தபடி பருகும் சூடான தேநீரை சொட்டுசொட்டாக அருந்தி சுவைக்குமொரு உணர்வினைப்போல் வாழ்க்கையின் அத்தனை கோணங்களையும் வாழ்ந்து,சமூக மதிப்பீடுகளின் வகையறிந்து,நியாய,அநியாயங்கள் உணர்ந்து ஊருக்கு சொல்லும் உபதேசங்கள் தான் இல்லத்திலும் என்று இலக்கோடு வாழ்ந்து, இன்பதுன்பம் வாழ்வின் இயல்பென்று எதார்த்தங்களை ஏற்று வாழும் மனிதர்களை நகர் இயல்பு பயமுறுத்துகிறது.வாகன இரைச்சலும்,பேராசை மனிதர்களும்,யாரையும் வீழ்த்தி தான் மட்டும் மேலேறும் நண்டின் கூறுகளும் விதைக்கப்பட்ட பெரும்பான்மை மனிதர்களின் உலகமாக நகரங்கள் இருக்க அதன் ஆடம்பர சரிகை மின்னல்கள் இளையோரை வீழ்த்தி இகழ்ச்சியாய் பரிகசிக்க அவர்களும் தயாராகிவிடுகிறார்கள் நிலத்திற்கேற்ற திரிபுகளோடு.இவர்கள் பாடு குற்ற உணர்வற்று ஒன்றிப்போக நாம் எங்கே போகிறோம் என்ற கவலையோடு வருபவர்கள் பாடு நகரங்களில் ஒன்றவும் முடியாது,தொடரவும் முடியாது வெறும் பொருளாதார மேன்மைக்காக தன்னை மறந்த இயந்திர வாழ்க்கைக்கு அடிமையாகிப் போகின்றனர்.சொந்த இயல்புகள் மறந்து போய்,திணிக்கப்பட்ட உணர்வுகளோடு,சீக்குப்பிடித்த சிந்தனையும்,தெளிவற்ற எண்ணங்களுமாய் மனவளமற்று மறுகித் தவிக்கும் நிலை தான் இன்று நகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் பாடு.

நகரத்தின் கூறுகளை,ஊடகங்களின் உபயத்தால் மனதளவில் கொண்டுவந்துவிட்ட கிராமமக்கள் பாடு இன்னும் திண்டாட்டமாகப் போய்க்கொண்டிருக்கிறது.பேராசை,எதையாவது எதிர்பார்த்து உறவுகளைக்கொண்டாடும் மனோபாவம்,நான்,எனது என்ற சுயநலப்பார்வை,உடல் உழைப்பிற்கு சோம்பித்திரிவது,அடுத்தவர் உயர்வு கண்டு பொறாத குணம்,நியாமற்ற வம்புப்பேச்சுகள்,கடமை உணர்வற்று,பொறுப்புகளைத்தள்ளிவிடும் மனோபாவம் பெருகிவருகிறது.மேலைநாடுகள் நாகரீக உச்சியில் வெறுப்படைந்து நமது எளிமையை நாடி வாழ்க்கைமுறையை மொத்தமாக மாற்றி அமைக்கத்துடிக்க நாம் நமது இயல்பு மாறி நாகரீக உச்சியை நோக்கிப்பயணிக்கிறோம்.அந்தமான் போன்ற அமைதியான இயற்கைச்சூழலில் இயல்பான நீரோட்டம் போல் தெளிந்த வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் தாயகத்தில் நகரங்களையும் ஏற்க இயலாது,சொந்த கிராமங்களையும் ஏற்க இயலாது பொய்முகங்களுடன் புன்னகை புரிய வேண்டிய சூழல்.

வருடத்தின் சேமிப்புகளைக் கரைக்கவென்றே முக்கியபூமிப்பயணம் மேற்கொண்டும் எப்போது நம் ஊர் செல்வோம் என்று தவிக்கும் மனதோடு தான் சுற்றிவரவேண்டிய நிர்ப்பந்தம்.எல்லோர் முகத்திலும் ஒரு அந்நியத்தனம்.அவர்கள் மாறிவிட்டார்களா? இல்லை நமது பார்வை மாறிவிட்டதா? என்ற கேள்விகள் தாம் சுழல்கிறது மனதில்! எங்கள் ஊர்களில் கோவிலில் பிரார்த்தனை முடித்து ஊரணிக்கரைப்படிக்கட்டில் அமர்ந்து இளமை நாட்களை நினைவு கூர்வது வழக்கம்.இப்போது பாசிபிடித்து நாற்றம் எடுக்கும் ஊரணிகள்.வீட்டுக்குவீடு குழாய்த்தண்ணீர் வந்துவிட்டதால் ஊரணிகள் கவனிப்பாரற்று.ஊர்த்திருவிழாவின் போது தெய்வத்திருமஞ்சன நீராட்டிற்கு காலம் காலமாக ஊரணியில் தண்ணீர் எடுக்கப்படும் காலம் போய் இன்று கோவிலுக்குள்ளேயே கிணறு அமைத்து குழாய் வழி வரும் தண்ணீரில் திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஊரின் நில அடையாளமாகச்சொல்லப்பட்டு வந்த ஊரணி கேட்பாரற்று.பெண்கள் சிலர் மலரும் நினைவுகளில் வருத்தமடைந்தாலும் ஆணாதிக்க சமுதாயமான எங்கள் ஊரில் இந்தக்குரல் எடுபடாது.

மழைக்காலத்தில் மட்டும் நீரோடும் ஆறு எங்கள் ஊரில் உண்டு.தண்ணீர் வற்றியதும் அந்த ஈரமணல் பரப்பில் பசுமையான தாழம்புதர்கள் உண்டு.அந்தப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் இருப்பிடங்களின் எல்லைகளை நகர்த்தி ஆற்றைக் குறுக்கியதோடல்லாமல்,ஆற்றின் அமைப்பைக்கால்வாய் ஆக்கி,கழிவிடமாக்கி இன்று சப்பாத்திகள்ளியின் விளைவிடமாய் ஆகிப்போனது.இப்படி எங்கள் கிராமத்தின் அடையாளங்களை அழித்து, முன்னேற்றம் கண்டு விட்டதாய் பிதற்றும் ஊர்மக்களைப் பார்க்கும் போது கசப்பு ஊறுகிறது மனதில்.வீட்டு வேலை,வயல் வேலை,ஆடு,மாடுகள்,தோட்டமிடுதல்,ஊர்ச்சாலையில் கீரைகள்,காய்கறிகள் வியாபாரம் என்று சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்த பெண்கள் இப்போது படிப்பு,பக்கத்து நகரங்களுக்கு வேலை,ஊடகம் என்று முடங்கிப்போய், பருத்த உடலுடன் வியாதிகளின் கிடங்காய்,நொந்து வாழும் வாழ்க்கை. பலர் முகத்தில் உற்சாகம் இல்லை.சிலர் முகத்து உற்சாகமும் பலரின் வம்புகளால் திருடப்பட்டுவிடுகிறது.வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை நல்லெண்ணங்கள் களையப்பட்ட மனங்கள் எப்படி உற்சாகத்தை உருவாக்கும்.உழைப்பு இருந்தால்,செல்வம் வரும்.செல்வம் வந்தால்,தன்னம்பிக்கை வரும்.தன் மேல் நம்பிக்கை உள்ள ஒரு மனம் அடுத்தவரைப்பார்த்து பொறாமை கொள்ளாது.அதோடு தன் தேவைகளை தெளிவாய் அறிந்து அதைத்தேடும் மனது ஒரு நாளும் அமைதியை இழக்காது.அடுத்தவரின் உடமைகளைப்பர்த்து அது நமக்குத் தேவை இருக்கிறதோ,இல்லையோ அது வேண்டி தன் அமைதி இழக்கும் மொத்தக்குடும்பத்தின் அமைதி இழக்கும் குணம்,தன்னம்பிக்கை, உழைப்புமற்ற மக்களின் நோய் தீர என்ன செய்வது? யாராவது வழிகாட்டுங்கள்!

4 கருத்துகள்:

 1. நல்லா எழுதியிருக்கீங்க. வழிகாட்டி ம் ம் :-)

  பதிலளிநீக்கு
 2. உங்களுடைய அத்தனை சிந்தனைகளை இன்று ஒரே மூச்சில் படித்தேன். அந்த அளவிற்கு உங்கள் உழைப்பு. தமிழ்நாட்டை தாண்டிப் போய் வாழ்ந்தாலும் உங்கள் தமிழ்ப்பற்று, எழுத்தாற்றல், கூர்மையான நோக்கங்கள் அத்தனைக்கும் என் வாழ்த்துகளை இங்கு பதிய வைக்க விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அரிய பதிவு.

  //எல்லோர் முகத்திலும் ஒரு அந்நியத்தனம்.அவர்கள் மாறிவிட்டார்களா? இல்லை நமது பார்வை மாறிவிட்டதா? என்ற கேள்விகள் தாம் சுழல்கிறது மனதில்!//

  நாம் நினைத்துக்கொள்வதுதான் இப்படி. பேசிப்பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்.

  //இப்படி எங்கள் கிராமத்தின் அடையாளங்களை அழித்து, முன்னேற்றம் கண்டு விட்டதாய் பிதற்றும் ஊர்மக்களைப் பார்க்கும் போது கசப்பு ஊறுகிறது//

  நாம ஊர்லயே இருந்துட்டு இந்தப் பேச்சு பேசிருக்கனும்.

  //தன் மேல் நம்பிக்கை உள்ள ஒரு மனம் அடுத்தவரைப்பார்த்து பொறாமை கொள்ளாது.அதோடு தன் தேவைகளை தெளிவாய் அறிந்து அதைத்தேடும் மனது ஒரு நாளும் அமைதியை இழக்காது.//

  நல்லதொரு சிந்தனை.

  முடிவாக அவரவரே அவரவருக்கு நல்லதொரு வழிகாட்டி.

  பதிலளிநீக்கு
 4. உலகம் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடியே. சொர்க்கமும் நரகமும் பார்க்கும் கண்ணில் தான் உள்ளது.

  சொர்க்கத்தை நீங்கள் கண்டறிய குட் லக். :-)))

  பதிலளிநீக்கு