எங்கள் பாலைய நாடு பதினாறு கிராமங்களிலும் பங்குனி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பொங்கல் விமரிசையாக நடக்கும்.ஏதாவது ஒரு திங்கட் கிழமையில் காப்புக்கட்டி, அடுத்து வரும் ஒன்பதாவது நாள் செவ்வாய்க்கிழமையில் பொங்கல் வைத்து திருவிழா முடியும். பெரும்பாலும் பங்குனி மாதத்தின் அனைத்து செவ்வாய்க்கிழமைகளுமே ஏதாவது ஒரு ஊரில் மாரியம்மன் பொங்கலாகத்தான் இருக்கும்.எட்டு நாள் காப்புக்கட்டி, ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமைகளில் ஊர் ஒன்று கூடி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, கோழி,ஆடு வெட்டி பலியிட்டு சமைத்து,மாவிளக்கு,அரியரிசி,துள்ளுமாவு,இளநீர்,பானகம், நீர்மோர், வேப்பிலைக்கரகம் வைத்துப்படைப்பது வழக்கம்.கோடையின் வெக்கையில் அம்மை போன்ற நோய்கள் தாக்காமலிருக்க கொண்டாடப்படும் இந்த எட்டு நாட்களும் வீடுகளின் முகப்பில் வேப்பிலை செருகப்பட்டிருக்கும்.ஊர் கூடி முளைப்பாரி போட்டு ஊர்ப்பொது இடமான பிள்ளையார் கூடத்தில் கொண்டுவந்து வைத்து விடிய விடிய முளைக்கொட்டுவதும் (கும்மி கொட்டுவது) உண்டு.முளைப்பாரி போடும் வீடுகளில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். வெளியார் யாரையும் வீடுகளின் உள்ளே விட மாட்டார்கள்.
முளைப்பாரி போடும் முறை.
பங்குனி மாதத்தில் ஒரு திங்கட்கிழமை காப்புக்கட்டி, அடுத்துவரும் வியாழனன்று முளைப்பாரி போடுவார்கள். முளைப்பாரி போடுவதற்கு ஓடுகள் மண்,பளிங்கு,மங்கு,எவர்சில்வர் என்று அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து,கழுவி,காய வைப்பார்கள்.அந்த ஓடுகள் ஒரு குடத்தை பாதியில் வெட்டிய வடிவில் இருக்கும். அதன் வாய்ப்பகுதி தரையில் படும்படி வைத்து முளைப்பாரி போடுவார்கள். முளைப்பாரி போடுவதற்கு காய்ந்த மாட்டுச்சாணம் சேகரிப்பார்கள்.முதலில் முளைப்பாரி ஓட்டில் பெரிய மாட்டுச்சாணக்கட்டிகளை பரப்பி,அதன் மேல் சிறிய கட்டிகளைப்பரப்பி, அதன் மேல் மாட்டுச்சாணத்தை உடைத்து, சல்லடை கொண்டு சலித்து, அந்த சலித்த மணல் போன்ற சாணத்தை பரப்பி அதன் மீது முளைப்பாரிக்கு போடவேண்டிய விதைகளைப்பரப்புவார்கள். பெரும்பாலும் முளைப்பாரிக்கு நடுவில் சோளம்,மொச்சை, தட்டைப்பயறு விதைகளும், ஓரத்தில் சுற்றிப்போட கேப்பை (கேழ்வரகு) போடுவார்கள்.சிலர் அழகுக்காக நெருஞ்சி,கொழுஞ்சி விதைகளைப்போடுவார்கள்.பிறகு அதன் மேல் மறுபடி சலித்த சாணத்தைப்போட்டு, சல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவார்கள்.பிறகு கூடையைக் குப்புறப்போட்டு மூடி வைப்பார்கள். தினமும் இரு வேளையும் குளித்து, முளைப்பாரிக்கு தண்ணீர் காட்டுவார்கள். மாலை நேரம் விளக்கேற்றி சாமி கும்பிட்டு, முளைப்பாரிக்கும் தீப,தூபம் காட்டுவார்கள். பிறகு மாரியம்மன் பொங்கலன்று வீட்டில், கோவில் வாசலில் அவரவர் வழக்கப்படி பொங்கல் மற்றும் சம்பிரதாயங்கள் முடித்து பள்ளயம் போட்டு பூஜை செய்வார்கள். பிறகு, முளைப்பாரி ஓடுகளை சுற்றித்துடைத்து முளைப்பாரிக்கு பூ சுற்றி, எடுத்து வருவார்கள். முளைப்பாரி சரியாக வளராமல் இருந்தாலோ, அழுகிப்போயிருந்தாலோ அபசகுனமாகக் கருதுவார்கள்.
பாலைய நாட்டின் பள்ளத்தூர் என்ற ஊரில் மட்டும் முளைப்பாரி போட்டு முளைக்கொட்டாமல், (கும்மி) மாரியம்மன் பொங்கல் திருவிழாவின் போது, விளந்தானை அடிப்பார்கள்.ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விளையாட்டின் போது ஆண்கள் வேட்டி கட்டி இருகாலில் கண்ணகி சிலம்பு எனப்படும் சிலம்பு அணிந்து,இரு வரிசையாக நின்று கொண்டு,கோலாட்டக்குச்சிகள் வைத்து விளையாடுவார்கள்.ஒருவர் விளந்தானைப்பாட்டுப் பாட மற்றவர்கள் அதைத்திரும்பப் பாடி ஆடுவார்கள்.மற்ற ஊர்களில் இந்த விளந்தானை கிடையாது.
விளந்தானை பாட்டு
தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே
பிள்ளையாரை நோக்கி பிடித்தோம் விளந்தானை
சூரியனை நொக்கி தொடுத்தோம் விளந்தானை
சூரியனே சந்திரனே சுவாமி பகவானே
இந்திரனை நோக்கி எடுத்தோம் விளந்தானை (தானானே )
அய்யனாரை நோக்கி அடித்தோம் விளந்தானை
வெண்கலத்தைக் கீறியே விளக்கெரம்ப நெய் வார்த்து
நானாட நீயாட நடுவே சிலம்பாட
வேப்பங்க் கொழுந்தாட வேடிக்கை பாக்குறா மாரியாத்தா (தானானே )
கண்குளிரப் பாக்குறாடா காரியக்கார மாரியாத்தா
மனங்குளிரப் பாக்குறாடா மகமாயி மாரியாத்தா
அஞ்சிலம்பு கொஞ்சிவர மணிச்சிலம்பு ஓசை கேட்க
காற்சிலம்பு கொஞ்சிவர காவல் காக்குறா மாரியாத்தா (தானானே)
ஆந்தையும் கூகையும் அலறும் அந்தக்காட்டிலே
ஆகாசத் தண்ணிப்பந்தல் வைக்கிறாராம் சோலைமலை
ஊசி நுழையாத உடைவேளங்காட்டுக்குள்ளே
ஒத்தக்குதிரை ஓட்டி வாராராம் கருப்பண்ணே (தானானே )
குடுகுடுப்பைத் தேங்காய் அடிமடியிலே கட்டிக்கிட்டு
கூத்தியா வீடு தேடிப் போராராம் பெரியண்ணே
கூத்தியாட்டக் குடுக்கிற பணத்தை குளத்த வெட்டுடா பெரியண்ணே
அள்ளிக் குடிக்கலாம் ஆவல் தெளியலாம் (தானானே )
நாவெடுத்து நான் பாட நல்ல மழை பெற
பூவெடுத்துச்சாத்துங்களே பூமலை நாயகி அம்மனுக்கு
திருமயத்து மெய்யனோட பாதம் மறையவே
திட்டக்கிண்றும் சிறு ஊரணியும் பெருகவே (தானானே )
வயல்நாச்சியம்மனோட பாதம் மறையவே
வட்டக்கிண்றும் வாய்க்காலும் பெருகவே
பட்டான் பட்டான் பன்னாங்கு படையலப் பட்டான் பன்னாங்கு
நெத்தியில துண்டப்போட்டு நேரே போட்டான் பன்னாங்கு (தானானே)
வாந்த மணலில ஊர்ந்து போகும் ஊமாச்சி
அதுவைப் பிடிப்பானேன் கூரைக்கடிப்பானேன்
கோட்டையப்பிடிக்கபோய் கோயில் மாட்டை மேய்க்கப்போய்
வீட்டுக்கு வந்தா விளக்கேத்தல சோத்தப் போடுடா சுப்பையா (தானானே)
ஆத்திக்குச்சியும் பொன்னாலே ஆவரங்குச்சியும் பொன்னாலே
காது வளர்த்த மாரியாத்தாளுக்கு காது ரெண்டும் பொன்னாலே
சித்தாடை கொஞ்சுடுத்தி சிறுக மடிகோலி
செம்பருத்திப் பூப்பறிக்கப் போறாளே மாரியாத்தா (தானானே)
ஆடை உடுத்தி அகல மடி கோலி
ஆவாரம் பூப்பறிக்க போறாளே மாரியாத்தா
போதுமாடி மாரியாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கு
போதாட்டி என் செய்வேன் பொலுப்பி முடியலாம் (தானானே)
பத்துமாடி மாரியாத்தா பத்தினியார் கொண்டைக்கு
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
கதிரறுத்து சேறுகட்டி களஞ்சியத்தின் மேலேறி
வருஷக்கணக்கெழுத வாராளாம் மாரியாத்தா (தானானே)
சோமணத்தான் தாராயோ தோளில் போட்டு ஆடேனோ
கடுக்கனைத்தான் தாராயோ காதில் போட்டு ஆடேனோ
மகராசி பெரியவ வயல் வழியே வந்தாளே
சம்பா விளையுமே தரிசு பொறையேறுமே (தானானே)
மூலையில நின்னுக்கிட்டு மூக்கைச்சிந்தி அழுதாலும்
முத்து வர்ணக்கண்டாங்கி தந்தாவுல்ல நான் போவேன்
கதவு இடுக்குல நின்னுக்கிட்டு கண்ணப்பினைஞ்சு அழுதாலும்
காரைக்கால் துப்பட்டா தந்தாவுல்ல நான் போவேன் (தானானே)
காட்டுக்குச்சிய வெட்டிக்கிட்டு கறியுஞ்சோறு தின்னுப்புட்டு
வீலவயித்தக் காட்டிக்கிட்டு வீட்டுக்கொருத்தன் வந்தானா
மாரியாத்தா வந்தாளாம் ஒரு மாக்கொழுக்கட்டை தந்தாளாம்
பூமாத்தா வந்தாளாம் ஒரு பூக்கொழுக்கட்டை தந்தாளாம் (தானானே)
பெரியநாயகி வந்தாளாம் ஒரு மொக்கட்டை எழும்பு தந்தாளாம்
தானானே தானானே தானானே தானானே தானானே
கம்பே உளறுதே எம்பாட்டு ஏறல
ஆடத்தெரியாதவன் ஆட வந்து நிக்கிறான்
பாடத்தெரியாதவன் பாடவந்து நிக்கிறான்
தூங்கப்பயலே பாடுடா சவங்கப்பயலே ஆடுடா (தானானே)
மூணு முக்கூடு வீதியில மூணு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி
நாலு முக்கூடு வீதியில நாலு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி (தானானே)
அவிச்ச கறியத் தின்னுப்புட்டு ஆமக்கமாரையும் ஏச்சுப்புட்டு
திருவாரூர் தேர்போல சிரிச்சு நிக்குறா பாருங்களே
நாட்டமான கொத்தரிக்கு யார்யாரு அம்பலம்
கண்ணப்பன் சேருவை காளையப்பன் அம்பலம் (தானானே)
கொத்துக்கொத்து வீரப்பன் கோடாரி வீரப்பன்
நரியன் பிலியனும், நல்லதொரு மாமாலன்
வாழ்த்துறோம் வாழ்த்துறோம் மனம் மகிழ வாழ்த்துறோம்
அண்ணனும் தம்பியும் அதிபதியா வாழவே
மாமனும் மச்சினனும் மலைபோல வாழவே
கொண்ட இடம் கொடுத்த இடம் கோத்திரமா வாழவே
தென்னை வச்சு பயிரேத்துர சேருவாரர் வாழவே
அகத்திவச்சு பயிரேத்துர அம்பலகாரரும் வாழவே
முருங்கை வச்சு பயிரேத்துர முத்தஞ்சேர்வை வாழவே
கும்பஞ்சுமந்து வரும் குயவனாரும் வாழவே
குட்டி புடிச்சு வரும் கோனாரும் வாழவே
ஏத்தாப்பு போட்டுவரும் ஏகாளி வாழவே
சாஞ்ச பனையேறும் சாணானும் வாழவே
கொட்டி முழக்கி வரும் வெட்டியானும் வாழவே
எம்பாட்டுக் கேட்டவர்கள் எல்லோரும் வாழவே (தானானே)
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் தழைத்து முசியாமல் தான் வாழ்வாரே (தானானே)
எல்லா மக்களும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, நோயின்றி ஆரோக்கியமாக நீடுழி வாழ எங்க ஊர் மாரியாத்தாவை வேண்டுகிறேன். எங்க ஊர் (பாலையூர் - கண்டனூர்) மாரியம்மன் பொங்கல் வரும் செவ்வாய்க்கிழமை (06.04.10) அன்று நடை பெற உள்ளது.புதன் கிழமை காலை பால்குடம்,காவடி,தேர்க்காவடி,பழக்காவடி எடுப்பதும் நடைபெறும்.