கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

15.7.10

ஆசைகள்

காயசண்டிகையின்
தீராப்பசி
ஒவ்வொரு மனதிலும்
தீராத ஆசைகளாய்....
அட்சய பாத்திரத்தில் சுரக்கிறது,
அன்னத்திற்கு பதிலாக செல்வங்கள்.
 மணிமேகலைகளோ
அட்சய பாத்திரத்தில் சுரக்கும்
செல்வங்களை அள்ளி
இன்று, நாளை,வருங்காலம்,
தலைமுறைகள் தாண்டி தாமே சேமிக்க
நசுங்கி,நலியும்
அட்சயபாத்திரங்கள்.

ஆசை ஒழி என்ற புத்தனின் சிலைகளைக் காட்சிப்பொருளாக்கி
வழிபாட்டறையில் குபேரர்கள்.
போதிமரங்கள் எல்லாம்
விறகுக்குப்போன ஒரு பொழுதில்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.
கீதையின் வாசகங்கள் உதட்டுச்சாயமாய்
குரானும், விவிலியமும் சரிகை ஆடைகளாய்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.


போதுமென்ற மனதுகள் பரிகசிக்கப்பட,
பசிய மனதுகள் காழ்ப்பை உமிழ,
காழ்ப்பு நெருப்பாகி, பூமி சிதிலமாகி,
கந்தர்வர்களும் அரக்கர்களாய்...
யுகத்துக்கொரு அவதாரம் என்றது போய்
நூறு அவதாரங்கள் ஒரு யுகத்தில்
சம்ஹாரங்கள் முடிந்தபாடில்லை.
கனவுகளுடன் உறங்கியது போய்
கவலைகளுடன் உறங்க வைக்கும் 
ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........

11.7.10

இரவல் நகை

சமீபத்தில் என் குழந்தையின் பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கதை. ஒரு பெண் பார்ட்டிக்குச் செல்ல தன் தோழியின் வைர நெக்லஸை இரவல் பெற்றுச்சென்று திரும்பி வரும் வழியில் தொலைத்து விடுகிறாள்.எங்கும் தேடிக்கிடைக்காமல், காவல் துறையில் மனுக்கொடுத்து விட்டு அழுகிறாள். அவளின் கணவனோ திட்டித்தீர்க்கிறான். கணவன் தன் வேலையை விருப்ப ஓய்வில் எழுதிக்கொடுத்து பணம் பெற்று அந்தப்பணத்தில் தோழிக்கு வைர நெக்லஸ் புதிதாக வாங்கிக்கொடுத்து பிரச்சினையை முடித்து, தோழியும் வேற்றிடம் போய்விடுகிறாள்.

இவர்களின் அன்றாட வாழ்வு மிகச்சிரமமாகிவிட, ராணி மாதிரி இருந்தவள் தானும் வேலைக்குச்செல்கிறாள். குடும்பத்தில் பால், பழம், குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்கிறார்கள். தினமும் கணவர், குழந்தைகளின் குத்தல் பேச்சு வேறு. அழகு பிம்பமாக இருந்தவளைக் குலைத்துப்போடுகிறது வறுமை.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சோர்ந்த நடையுடன் வீடு திரும்பும் இவளை எதேச்சையாகப்பார்க்கும் தோழி பிரமிக்கிறாள்."நீதானா இது? எப்படி இப்படி ஆளே மாறிப்போனாய்? என்ன நோய் உனக்கு" என்று பரிவுடன் கேட்கும் தோழியிடம் உண்மை சொல்ல, அவளோ "அது தானா அது இன்னும் அதே பளபளப்புடன் இருக்கிறது. அது என் கணவர் வாங்கி வந்த கவரிங் நகை. முதன்முதலில் அணிந்து வந்த போது நீங்கள் எல்லாம் புகழ்ந்ததும் நானும் ஒரு பெருமைக்காக ஆமாம் வைரம் என்றேன். நல்லவேளை இன்னும் அது என்னிடம் தான் இருக்கிறது" என்று சொல்லித் திரும்பத்தந்தாலும் திரும்பாதவை எத்தனை? என்று கதை முடிந்தது. 

இன்னும் பெண்களுக்குள் இந்த இரவல் நகைப்பழக்கம் உள்ளது.ஒருவரின் உடமைகளா அவருக்குப்பெருமை சேர்க்கிறது?சிலர் பண உதவி கேட்கும் போது பணம் இல்லாவிடில் நகையைத்தர வேண்டி பெற்று, திருப்பித்தர முடியாது நட்பை இழக்கிறார்கள்.


எங்கள் கிராமங்களில் ஒரு இருபது வருடங்களுக்கு முன் வறுமை தன் கோரக்கரங்களால் எங்கள் மக்களின் வாழ்வாதாரங்களோடு விளையாண்டு கொண்டிருந்தது. கை ரேகைகள் அழிய உழைத்த போதிலும் அவர்களின் வறுமை ரேகைகள் அழிந்த பாடில்லை.
 
பிள்ளைகளின் படிப்பு, அதன் வழி முன்னேற்றம் பெரிதாகக் கருதப்படாது, நம் வீடு, மாடு, கன்று, வயல், தோட்டம் இப்படி குறுகிய கண்ணோட்டத்தில் வாழ்ந்து, விழிப்புணர்வற்று, உயரும் தந்திரமற்று, குறிக்கோளற்று, வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் எங்கு கொண்டு செல்கிறதோ அந்த வழி சென்று காலம் கொண்டு சென்றபடி வாழ்ந்தவர்கள்.படிப்பு என்பதை அவசியமாய் உணராதவர்கள். அன்றாட வாழ்க்கை கூட சிலருக்கு மாமியார் வீட்டு சீதனப்பொருட்களை விற்று நடந்திருக்கிறது. இப்படியொரு நடப்பில் நகை சேமிப்பு என்பது பெரும்பாலும் வெளியூர்,வெளிநாடுகளில் தொழில் முனைந்தவர்களால் மட்டுமே சாத்தியமாயிருந்தது எனலாம்.

என் ஆயாவிடம் இரட்டை வடம் ஒரு சங்கிலியும், ஒற்றை வடம் ஒரு சங்கிலியும் இருந்தது. உறவினர் பெரும்பாலும் இறந்தவர் வீடுகள், கல்யாண வீடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில், என் ஆயாவிடம் இரவல் வாங்கி அணிந்து செல்வார்கள்.அந்த இரட்டை வடம் சங்கிலியோ அந்த கால கட்டத்தில் அனைத்து மணமகளின் கழுத்தையும் அலங்கரித்தது எனலாம். 

ஒரு முறை எங்கள் உற்வுப்பெண்மணி ஒருவர் வேறு ஒருவரிடம் நகையை இரவல் வாங்கி வந்து, அணிந்து சென்று விட்டு, அந்த சங்கிலியில் இரண்டு கண்ணிகளைக் கழற்றி விட்டு பின் நகையை திருப்பித் தந்து, அதை சங்கிலி இரவல் கொடுத்தவர் கண்டுபிடித்து, பெரிய ரகளை. அது முதல் நாங்கள் எங்கள் ஆயாவிடம் இரவல் தருவதைத் தடுப்பதுண்டு. என் ஆயா படிக்காதவர். அதனால் அந்தச்சங்கிலியின் நீளத்தை தன் கைப்பிடியில் அளந்து சுவற்றில் கோடு போட்டு வைத்திருப்பார். சங்கிலி திரும்ப வந்ததும் பிடிகளை எண்ணி சரிபார்ப்பார். இத்தனைக்கும் என் ஆயா அந்தச்சங்கிலி தேய்ந்து விடுமென்று எங்கும் போனால் வந்தால் தான் அணிவார். கைம்பெண்ணுக்கு எதுக்கு வீட்டில் சங்கிலி என்பார். நல்ல வேளையாக இப்படி எந்த சம்பவங்களும் அவரது வாழ்வில் நடைபெறவில்லை.நகைகள் பெரும்பாலும் பெண்களின் மனதோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 

இன்றும் கூட எங்கள் மக்கள் வங்கி சேமிப்பு, பணச்சேமிப்பு என்று இருப்பதில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்ததும், சொத்து சேர்ப்பதிலும், தங்கம் சேர்ப்பதிலும் குறியாய் இருப்பார்கள். தேவையென்றால் அவற்றை விற்று தேவைகளை சமாளிப்பார்கள். அவசிய செலவுகளுக்கென சேமிப்பு, காப்பீடுகளில், பங்குகளில் முதலீடு இப்படி எல்லாம் சேமிக்க இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

9.7.10

கூடுகள் தேடி....

சாளரவெளியினில் தெரியும்
மரக்கிளையில் கூடு கட்டி
சிறகு சிலுப்பி
தலை கவிழ்த்துப் பார்க்கும்
தேன் சிட்டு ஜோடியொன்று.

அதிகாலை எழுப்பும் அலாரம் எனக்கு
அதன் கீசென்னும் குரல்
கதிர்கள் சீறும் காலையில்
திசைகள் கிழித்து
சின்னச்சிறகால் வானளந்து
உண்டி தேடி கூடு திரும்பி
சுபமானது அதன் வாழ்க்கை

மழைக்கும், வெயிலுக்கும்
காற்றுக்கும், புயலுக்கும் தாங்குமா கூடு?
கேள்விகளோடு தூக்கம் தொலைத்தாலும்
விடியலில்
விசனங்களற்ற அதன் குரல்.
எதற்கும் பொருந்திப்போகப் பாடம் சொல்லும்.

நகர்ந்தன நாட்கள்...
தந்திரங்களற்ற தேன்சிட்டுகள்
எங்கோ வேற்றிடம் தேடி.
புதிய மரம், புதிய கூடு
ஒரு நாளும் திரும்பவில்லை
பழைய கூட்டின் உரிமை தேடி
பழைய மரக்கிளைக்கு.

கட்டுகள் எதுவுமின்றி
சுதந்திர வெளியில்
திசைகளற்ற வானில் சிறகசைக்கும்
எங்கோ வனத்தில்
ஏதோ மரத்தில் அதெற்கென ஒரு கூடு.

கூடுகளும், உடைமைகளுமே
தேடலாகிப்போன எமக்கோ
விலக்க முடியா விலங்குகளுடன்
தேன் சிட்டாகும் கனவுகள் மட்டும்

8.7.10

மாற்றங்கள்

மாற்றம் ஒன்று மட்டும் தான் மாற்றமே இல்லாதது என்றான் ஒரு புதுக்கவிஞன்.மாற்றங்கள் நல்லதாக இருக்கும் போது மகிழும் மனம், கெடுதல்களைக் கண்டு சலனப்படும்.ஒவ்வொரு இரு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குப்போகும் போதும் ஊருக்குள் சில மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்கள், வெற்றுநிலங்களில் புது வீடுகள், இளையோர் சிலரின் வயோதிகத்தோற்றம், குழந்தைகள் சிலரின் வியத்தகு வளர்ச்சி, போனமுறை போனபோது இருந்த சிலரின் மறைவு இப்படி நிறைய. சில ஆச்சர்யம், சில சந்தோசம், சில வருத்தம். இந்த முறை என்னை வளர்த்த என் ஆயா இல்லாத வெறுமை தவிர மற்ற படி எல்லாம் சுகமே! நலமே!

எங்களின் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டம். ஆற்றுப்பாசனம், இயற்கை நீரோடைகள், கால்வாய்கள் எதுவுமே எங்கள் ஊர்களில் கிடையாது. ஊரணி, கண்மாய்கள் உண்டு. அவை மழைக்காலத்தில் மட்டும் நிரம்பிக்கிடக்கும்.இப்போது, அவைகள் மழைக்காலத்தில் கூட நிரம்பி வழிவதெல்லாம் கிடையாது. காரணம், வெற்று நிலங்களில் வீடுகள், சுற்றுச்சுவர்கள் என்று எழுப்பியபடியால், மழை நீர் வரத்து திசை மாறி, நீர் நிலைகளுக்கு, போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே எங்கும், கரிசல் பூமி போல், பாரதி ராஜாவின் "கருத்தம்மா" படத்தில் காட்டப்படும் பொட்டல் காடுகளாகக் கிடந்தன. இந்த வருட விடுமுறைக்குப் போன போது, ஊருக்குள் பசுமையை தரிசிக்க முடிந்தது. எல்லா வீடுகளிலும் ஒரு குளுமையை உணர முடிந்தது. மக்கள் மரம் நடுதலின் முக்கியத்துவத்தையும், பசுமையின் பயனையும் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பது குறித்து சந்தோசம். பேருந்துப்பயணத்தின் போது, கவனித்த போதும் சாலைகள், வீடுகளின் வெற்றிடங்களை மரங்களும் செடிகொடிகளும் நிரப்பி இருந்தது. தமிழ்நாட்டின் மின் வெட்டில், மின்சார விசிறி இல்லாத போதும், கோடை தகிக்காமல் சமாளிக்க முடிந்தது.


ஒவ்வொரு வீடுகளிலும் உரக்குழிகள் உண்டாக்கி, இயற்கை உரத்தயாரிப்பில் பெரும்பாலான பெண்கள் ஈடுபட்டிருந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. வீட்டின் காய்கறிக்கழிவுகள், மாட்டுச்சாணம், ஆட்டுக்கழிவுகள், இலை, தழைகள் கொண்டு உரம் தயாரித்து, வீட்டுக்கும் உபயோகித்து, வேண்டுபவர்களுக்கும் விற்பனை செய்கிறார்கள்.ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபாடு அதிகரித்திருந்த போதிலும் பாக்கெட் பால் விற்பனை அமோகம் தான்.ஆனால் பாலித்தீன் பைகளின் உபயோகம் மட்டும் குறைந்தபாடில்லை.கிராமப்புற மக்களுக்கு அதன் தாக்கமும், சுற்றுச்சூழலைக் கெடுப்பதில் அதன் வீர்யமும், வீச்சும் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். தோட்டங்கள், வயல்வெளிகள், வீட்டின் சுற்றுப்புறம் அனைத்தையும் நீக்கமற நிறைத்திருந்தது.வேலிக்கருவை மரங்களில் கிழிந்த தோரணங்களாய் தொங்கிக்கொண்டிருந்தது விகாரமாய். அந்தமானில் நெகிழும் பைகளுக்குத் தடை விதித்துள்ளது போல் தமிழக அரசும் தடை விதித்தால் குப்பைகள் குறையும். பைகளை உபயோகித்த பின் பறக்கவிடாமல், ஒரே இடத்தில் சேகரித்து வைக்கும் விழிப்புணர்வு கூட அற்றுப்போய் இருக்கின்றனர் நம்மவர்.
அந்தமானில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மீள் சுழற்சிக்காக முக்கிய பூமி அனுப்பும் வியாபாரிகளுக்கு கப்பல் சத்தம் (fright) கிடையாது. 


ஊருக்குள் காங்கிரீட் வீடுகள் அதிகமாகி, குடிசைகள் அற்றுப்போயிருந்தது. சுபிட்சம் கூடியிருந்தது. மகளீர், சுய உதவிக்குழுக்கள் மூலமும், அவரவர் கல்வித் தகுதிக்கேற்றார் போல் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்க, பெரும்பாலான ஆண்கள் வெளி நாடுகளில் அல்லது வெளி நகரங்களில் சம்பாதிப்பதின் நிமித்தம்.பெண்களும் கணவனின் அருகாமையை விட, வசதியான வாழ்விற்கு தம்மைத் தயார் படுத்திக்கொண்ட தைரியம், மன உறுதியைக் கண்டு, இது தியாகமா? அன்றி சுயநலமா? என்று கேள்வி மனதைக்குடைந்தது. இருக்கும் அவர்கள் மனதிலும் யாருமறியாத ஆசாபாசங்களும், கண்ணீரும். அவர்கள் எதார்த்தங்களை அனுசரித்து குடும்பம் நடத்தும் பொறுப்பு பிடித்திருந்தது.அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து, செல்வம் சேர்த்து, "எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல சம்பாதிக்கிறார்" என்று பெருமை பொங்கக் கூறும் அவர்களின் அறியாமை பிடித்திருந்தது.குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற அவர்களின் நியாயமான குறிக்கோள் பிடித்திருந்தது.மொத்தத்தில் எங்கள் ஊர்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது சந்தோசம் தான். ஆனாலும் நம் நாட்டின் மனித வளம் மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது நல்லதா? புரியவில்லை.


பேருந்துகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும் அதிகம் கேட்க நேர்ந்த வார்த்தைகள் - "அவன் நல்லா இருப்பானா? பெத்த வயிறு பத்தி எரியுது!" - தாயாராய் இருக்க வேண்டும். "எந்தம்பி நல்லவன் தான். வந்தவ சரியில்ல. மேல ஒருத்தன் எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கான் - சகோதரி. இப்படியான வசனங்கள். நமது பெண்களின் பெருந்தன்மை குறைந்து அனைவரும் குறுகிய வட்டங்களுக்குள் தம்மைப் பூட்டிகொண்டார்களா? நமது ஆண்களின் நியாய உணர்வு அற்று விட்டதா? கேள்விக்கு விடை கிடைக்காமல் நாம். மொத்தத்தில் இன்று பெண்களில் பெரும்பாலானோருக்கு பேராசை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது வருத்தந்தான். காலம் அனைவைரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்.