கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

21.9.10

எங்கே போகிறோம்?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, ஒரு லட்சியம், ஒரு இலக்கு நிச்சயம் இருக்கும். அது நிறைவேறியதும் இன்னொன்று. இப்படித்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் காலம் காலமாக. இப்படித்தான் நமது வாழ்க்கைப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக நமது பயணங்களில் போகும் வழியில் இடரென்றால் புறப்பட்ட இடத்திற்கே, அதே புள்ளிக்கே திரும்பி வர இயலும். ஆனால் வாழ்க்கைப்பயணத்தில், நாம் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை, தடைகளை, தடங்கல்களைக்கண்டு பயந்து புறப்பட்ட இடத்தில், அதாவது தாயின் கர்ப்பத்தில் தங்கிவிட முடியாது. வந்து பிறந்து விட்டோம். வாழ்ந்து பார்க்க வேண்டும். வாழ்வதையும் ஆனந்தமாக வாழ வேண்டும். நமது வாழ்க்கையை வென்றெடுக்க வேண்டும்.இப்படியான ஆசைகள் எல்லோருக்கும் உண்டு. எல்லோருக்கும் இலக்குகள் வெவ்வேறு. ஆனால் வாழ்க்கை நிலைப்பாடு ஒன்று தான். பாதைகள் வேறு. ஆனால் பயணம் ஒன்று தான்.இந்தியாவில் காதல் தோல்வியிலும், தேர்வுத் தோல்வியிலும் அதிகமான இளைஞர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் எனில், இளம்பெண்கள் பேராசையாலும், கலாச்சாரப் புரிதலின்றியும், அவசர முடிவுகளாலும் நம்பிக்கை இழக்கிறார்கள். வெற்றியின் அளவுகோல் இன்று, பணமாக உடமையாக இருக்கிறது. யாருக்கும் அமைதியான, நேயம் நிறைந்த வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.அமைதியான வாழ்க்கையை விரும்பும் இளைஞன் சோம்பேறி என்று இகழப்படுவது தான் உண்மை. டாலர் கனவுகள், வெளிநாட்டு மோகம் இளைஞர்களை மட்டுமல்ல, நடுத்தர வயதினரையும் பிடித்தாட்டுகிறது.போதுமென்ற மனம் இல்லாத காரணத்தால் எப்படியாவது, எதை அடகு வைத்தாவது, எதை இழந்தாவது வெளிநாடு சென்று, பொருளீட்டி குவித்து விடத்துடிக்கிறார்கள். எல்லா வெற்றிடத்தையும், எல்லா வெறுமையையும் பணம் ஒன்றே இட்டு நிரப்பி விடுமென்று எண்ணும் மனோபாவம் பெருகி வருகிறது.வெளிநாட்டு வேலையில் பொருளீட்டுபவர்களும், அவர்கள் குடும்பத்தினரின் அலட்டல் மிகுந்த நடவடிக்கைகளும் ஏனையோரையும் அந்தப் பாதையில் பயணிக்க நிர்ப்பந்திக்கின்றனர்.

போர்க்காலங்களில் வீட்டுக்கொரு ஆண் படையில் சேர வேன்டுமென்பார்கள். எங்கள் ஊரில் வீட்டுக்கொரு இளைஞர் வெளிநாட்டு வேலைக்கு உருவாகித் தயாராவது இன்றைய நிலை. நிறைய வீடுகளில், வீட்டுக்கொருவர் வெளிநாடு சென்று வறுமை துடைத்து, தாரிசு வீடும், வீட்டுப்பெண்களுக்கு நகை, வசதியான வாழ்க்கை என்று வருவதைப் பார்த்து, உள்ளூரில் நிரந்தர வேலை, வசதி என்று இருப்பவர்களும் அதை விட்டு, வெளிநாடு செல்லும் கனவுகளில் இருப்பதை விட்டுப் பறந்து சிறகொடிந்து, வீடு திரும்ப வெட்கப்பட்டு காடோ, கதியோ என்று போகும் அவலத்தை நினைத்தால் மனம் வெதும்புகிறது. வெளிநாட்டு வீதிகளில் தங்கமும், வைரமும் கொட்டிக்கிடக்கிறதா என்ன? நம்மவர்களைத் தவறாக வழி நடத்தும் சக்தி எது? குடும்பத்தின் அண்மை, பாசம், நல்ல உணவு இதெல்லாம் இல்லாவிட்டாலும் கூட பணமிருந்தால் போதும் என்ற மனநிலைக்கு, இவர்கள் தள்ளப்படும் காரணம் என்ன? இந்தக்கேள்விகளுக்கு வெளிநாடு வாழ் சகோதரர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

என் மாமா ஒரு நூற்பாலையில் நிரந்தர வேலை. வசதியான வீடு, தோட்டம், நிச்சயம் வருடம் தோறும் விளையும் வயல் இப்படி அனைத்தும் இருந்தும் வெளிநாட்டு மோகம் எப்படி அவர் மனதில் நுழைந்ததோ தெரியாது. முதலில் அமெரிக்காவிற்கு ஆள் எடுக்கும் பேர்வழியிடம் பணம் கொடுத்து, பாதி போய், பாதி மீண்டது. அப்போதே நாங்கள் எச்சரித்தோம். சிறிது காலம் அடங்கி இருந்து, பின் மலேசியாவிற்கு ஆள் எடுப்பவரிடம் பணம் கட்டி, மலேசியா சென்றும் விட்டார். அங்கு போனதும் தான் தெரிந்தது விசாவில் மோசடி என்று.கையிருப்பெல்லாம் ஏஜண்டிடம் கட்டியாயிற்று. வெறும் கையோடு ஊருக்குத் திரும்ப சங்கடப்பட்டு,அங்கிருந்த ஒரு நண்பர் ஒளிந்து வாழ்ந்து சம்பாதிக்கலாம் என்று கூற, அதற்கு உடன்பட்டு, கொஞ்ச நாளில் பிடிபட்டார். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் துக்கம் என்றால் அப்படி ஒரு துக்கம். இந்த அவமானத்தில் இருந்து எப்படி மீண்டு வருவார் என்ற கேள்வி எங்களை அரித்தெடுக்க, தெரிந்தவரைத் தொடர்பு கொண்டால், அவர், "வழக்கு முடிந்ததும் ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் பயப்படவேண்டாம்" என்று ஆறுதல் கூறினார்.வழக்கு முடிந்து ஊர் திரும்பியவரை அழைத்து வரப்போனவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. ராஜா போல் இருந்தவர் அழுக்குச்சட்டையும், பரிதாபமான கோலமும். அவர் தங்கி இருந்த அறை நண்பர்கள் அவரது உடைமைகளைப் பங்கு வைத்துக் கொண்டார்களாம். மாற்றுத் துணி வாங்கிக்கொடுத்து அழைத்து வந்து ஒரு மாதம் வீடு வராமல், உடலும், மனமும் தேறி வந்ததும் பிறகு சொந்த வீடு திரும்பினார். இப்போது வெளிநாடு குறித்து எதுவும் பேசுவதில்லை. அவர் முகத்தில் களை மறைந்து, புன்னகை மறைந்து, துக்கம் நடந்த வீட்டின் மனிதர் போல் நடமாடும் அவர் பழைய மாதிரி எப்போது மீண்டு வருவார் என்ற எதிபார்ப்பில் எங்கள் குடும்பம் மொத்தமும்.

4 கருத்துகள்:

 1. குடும்பத்தின் அண்மை, பாசம், நல்ல உணவு இதெல்லாம் இல்லாவிட்டாலும் கூட பணமிருந்தால் போதும் என்ற மனநிலைக்கு, இவர்கள் தள்ளப்படும் காரணம் என்ன? இந்தக்கேள்விகளுக்கு வெளிநாடு வாழ் சகோதரர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.


  .......உங்கள் குடும்ப நண்பரின் நிலைமை அறிந்து வேதனையாக தான் இருக்கிறது..... ஆனால், வெளிநாடுக்கு போக வேண்டும் என்று இருப்பதற்கு பல காரணங்கள் - ஒவ்வொருவரின் தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை, ஆர்வம், ஆசை, தேவைகள், decision, வேலையில்லா திண்டாட்டம், கனவு etc...etc... அந்த முடிவினால் வரும் விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு எடுக்கும் பக்குவமும் இருக்க வேண்டுமே.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் மாமா போல் நம் சிவகங்கை பகுதியில் நிறைய பேர் இருக்கிறார்கள் சகோதரி. மாமா மீண்டும் சகஜநிலைக்குத் திரும்பி வரும் நாள் விரைவில் வரும். நம்பிக்கையோடு இருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்க்கைப்பயணத்தில், நாம் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை, தடைகளை, தடங்கல்களைக்கண்டு பயந்து புறப்பட்ட இடத்தில், அதாவது தாயின் கர்ப்பத்தில் தங்கிவிட முடியாது. வந்து பிறந்து விட்டோம். வாழ்ந்து பார்க்க வேண்டும்.

  ----------------

  நல்ல வரிகள் சாந்தி

  பதிலளிநீக்கு
 4. எப்படி இருக்கீங்க? மிக நீண்ட நாட்களாகிறது உங்களை பதிவுகள் பக்கம் பார்த்து.

  இந்தப் பதிவின் மூலமாக பல விசயங்களை யோசிக்க வைக்கிற மாதிரி நயமாக எடுத்து முன் வைச்சிருக்கீங்க. பதிவின் ஒவ்வொரு வரியுமே ஹைலைட் செய்யப்படதக்கவையே!!

  //வெற்றியின் அளவுகோல் இன்று, பணமாக உடமையாக இருக்கிறது. யாருக்கும் அமைதியான, நேயம் நிறைந்த வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.அமைதியான வாழ்க்கையை விரும்பும் இளைஞன் சோம்பேறி என்று இகழப்படுவது தான் உண்மை.//

  கருப்படிக்கப்பட்ட உங்களின் வாசகத்திற்கு என்னுடைய பதில் - ரொம்ப வருத்தப்படத்தக்க எதார்த்த சந்திப்பில் இருக்கிறோம். இன்றைய நிலையில் பெரும்பாலோரின் எண்ணவோட்டம் இப்படியாகத்தன் வளர்ந்து நிற்கிறது. ஒரு சமூகமாகவே நாம் அந்த திசையில் நடந்து கொண்டிருக்கிறோம். இதுவே, அத்தனை பெரும் நஷ்டங்களுக்கும், நிம்மதி இழப்பிற்கும் காரணமாகிறது.

  //இல்லாவிட்டாலும் கூட பணமிருந்தால் போதும் என்ற மனநிலைக்கு, இவர்கள் தள்ளப்படும் காரணம் என்ன? இந்தக்கேள்விகளுக்கு வெளிநாடு வாழ் சகோதரர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.//

  இதனில் கொஞ்சம் ஊடுருவி தனிப்பதிவா போடுவோம். இந்த வெளிநாடு வாழ் மக்களா - எந்த இழப்பையோ ஈடுகட்டிக் கொள்ள அந்த புற வய பீத்தல்கள் தேவைப்படுகிறது அவர்களுக்கு. அதனைக் கண்டு பல பேருக்கு அந்த மயக்கம் ஒட்டிக் கொள்கிறது.

  உங்கள் மாமா மிக வேகமாக இதிலிருந்து வெளி வந்து மீண்டும் இழந்த புன்னகையைப் பெறுவார் என்று நம்புவோம்.

  நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு