கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

11.7.10

இரவல் நகை

சமீபத்தில் என் குழந்தையின் பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கதை. ஒரு பெண் பார்ட்டிக்குச் செல்ல தன் தோழியின் வைர நெக்லஸை இரவல் பெற்றுச்சென்று திரும்பி வரும் வழியில் தொலைத்து விடுகிறாள்.எங்கும் தேடிக்கிடைக்காமல், காவல் துறையில் மனுக்கொடுத்து விட்டு அழுகிறாள். அவளின் கணவனோ திட்டித்தீர்க்கிறான். கணவன் தன் வேலையை விருப்ப ஓய்வில் எழுதிக்கொடுத்து பணம் பெற்று அந்தப்பணத்தில் தோழிக்கு வைர நெக்லஸ் புதிதாக வாங்கிக்கொடுத்து பிரச்சினையை முடித்து, தோழியும் வேற்றிடம் போய்விடுகிறாள்.

இவர்களின் அன்றாட வாழ்வு மிகச்சிரமமாகிவிட, ராணி மாதிரி இருந்தவள் தானும் வேலைக்குச்செல்கிறாள். குடும்பத்தில் பால், பழம், குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்கிறார்கள். தினமும் கணவர், குழந்தைகளின் குத்தல் பேச்சு வேறு. அழகு பிம்பமாக இருந்தவளைக் குலைத்துப்போடுகிறது வறுமை.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சோர்ந்த நடையுடன் வீடு திரும்பும் இவளை எதேச்சையாகப்பார்க்கும் தோழி பிரமிக்கிறாள்."நீதானா இது? எப்படி இப்படி ஆளே மாறிப்போனாய்? என்ன நோய் உனக்கு" என்று பரிவுடன் கேட்கும் தோழியிடம் உண்மை சொல்ல, அவளோ "அது தானா அது இன்னும் அதே பளபளப்புடன் இருக்கிறது. அது என் கணவர் வாங்கி வந்த கவரிங் நகை. முதன்முதலில் அணிந்து வந்த போது நீங்கள் எல்லாம் புகழ்ந்ததும் நானும் ஒரு பெருமைக்காக ஆமாம் வைரம் என்றேன். நல்லவேளை இன்னும் அது என்னிடம் தான் இருக்கிறது" என்று சொல்லித் திரும்பத்தந்தாலும் திரும்பாதவை எத்தனை? என்று கதை முடிந்தது. 

இன்னும் பெண்களுக்குள் இந்த இரவல் நகைப்பழக்கம் உள்ளது.ஒருவரின் உடமைகளா அவருக்குப்பெருமை சேர்க்கிறது?சிலர் பண உதவி கேட்கும் போது பணம் இல்லாவிடில் நகையைத்தர வேண்டி பெற்று, திருப்பித்தர முடியாது நட்பை இழக்கிறார்கள்.


எங்கள் கிராமங்களில் ஒரு இருபது வருடங்களுக்கு முன் வறுமை தன் கோரக்கரங்களால் எங்கள் மக்களின் வாழ்வாதாரங்களோடு விளையாண்டு கொண்டிருந்தது. கை ரேகைகள் அழிய உழைத்த போதிலும் அவர்களின் வறுமை ரேகைகள் அழிந்த பாடில்லை.
 
பிள்ளைகளின் படிப்பு, அதன் வழி முன்னேற்றம் பெரிதாகக் கருதப்படாது, நம் வீடு, மாடு, கன்று, வயல், தோட்டம் இப்படி குறுகிய கண்ணோட்டத்தில் வாழ்ந்து, விழிப்புணர்வற்று, உயரும் தந்திரமற்று, குறிக்கோளற்று, வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் எங்கு கொண்டு செல்கிறதோ அந்த வழி சென்று காலம் கொண்டு சென்றபடி வாழ்ந்தவர்கள்.படிப்பு என்பதை அவசியமாய் உணராதவர்கள். அன்றாட வாழ்க்கை கூட சிலருக்கு மாமியார் வீட்டு சீதனப்பொருட்களை விற்று நடந்திருக்கிறது. இப்படியொரு நடப்பில் நகை சேமிப்பு என்பது பெரும்பாலும் வெளியூர்,வெளிநாடுகளில் தொழில் முனைந்தவர்களால் மட்டுமே சாத்தியமாயிருந்தது எனலாம்.

என் ஆயாவிடம் இரட்டை வடம் ஒரு சங்கிலியும், ஒற்றை வடம் ஒரு சங்கிலியும் இருந்தது. உறவினர் பெரும்பாலும் இறந்தவர் வீடுகள், கல்யாண வீடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில், என் ஆயாவிடம் இரவல் வாங்கி அணிந்து செல்வார்கள்.அந்த இரட்டை வடம் சங்கிலியோ அந்த கால கட்டத்தில் அனைத்து மணமகளின் கழுத்தையும் அலங்கரித்தது எனலாம். 

ஒரு முறை எங்கள் உற்வுப்பெண்மணி ஒருவர் வேறு ஒருவரிடம் நகையை இரவல் வாங்கி வந்து, அணிந்து சென்று விட்டு, அந்த சங்கிலியில் இரண்டு கண்ணிகளைக் கழற்றி விட்டு பின் நகையை திருப்பித் தந்து, அதை சங்கிலி இரவல் கொடுத்தவர் கண்டுபிடித்து, பெரிய ரகளை. அது முதல் நாங்கள் எங்கள் ஆயாவிடம் இரவல் தருவதைத் தடுப்பதுண்டு. என் ஆயா படிக்காதவர். அதனால் அந்தச்சங்கிலியின் நீளத்தை தன் கைப்பிடியில் அளந்து சுவற்றில் கோடு போட்டு வைத்திருப்பார். சங்கிலி திரும்ப வந்ததும் பிடிகளை எண்ணி சரிபார்ப்பார். இத்தனைக்கும் என் ஆயா அந்தச்சங்கிலி தேய்ந்து விடுமென்று எங்கும் போனால் வந்தால் தான் அணிவார். கைம்பெண்ணுக்கு எதுக்கு வீட்டில் சங்கிலி என்பார். நல்ல வேளையாக இப்படி எந்த சம்பவங்களும் அவரது வாழ்வில் நடைபெறவில்லை.நகைகள் பெரும்பாலும் பெண்களின் மனதோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 

இன்றும் கூட எங்கள் மக்கள் வங்கி சேமிப்பு, பணச்சேமிப்பு என்று இருப்பதில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்ததும், சொத்து சேர்ப்பதிலும், தங்கம் சேர்ப்பதிலும் குறியாய் இருப்பார்கள். தேவையென்றால் அவற்றை விற்று தேவைகளை சமாளிப்பார்கள். அவசிய செலவுகளுக்கென சேமிப்பு, காப்பீடுகளில், பங்குகளில் முதலீடு இப்படி எல்லாம் சேமிக்க இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

5 கருத்துகள்:

 1. `தி டயமண்ட் நெக்லெஸ் ’ எனும் இந்த கதை நானும் படித்திருக்கிறேன். நீங்கள் கூறியது போல், திரும்ப கிடைக்காதவை எத்தனை என நம்மையும் நினைத்து பார்க்க வைக்கும் அருமையான கதை.
  நல்ல பகிர்வு தோழி.

  பதிலளிநீக்கு
 2. //பெண்களுக்குள் இந்த இரவல் நகைப்பழக்கம் உள்ளது.//nice done

  பதிலளிநீக்கு
 3. \\அதனால் அந்தச்சங்கிலியின் நீளத்தை தன் கைப்பிடியில் அளந்து சுவற்றில் கோடு போட்டு வைத்திருப்பார். சங்கிலி திரும்ப வந்ததும் பிடிகளை எண்ணி சரிபார்ப்பார்.//

  என்னக் கணக்கா இருந்திருக்காக பாருங்க :)

  பதிலளிநீக்கு
 4. இந்த கதை நானும் படித்திருக்கிறேன். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 5. வாய்மொழியாகக் கேட்ட கதை...நீங்க இன்னும் விபரமா சொல்லியிருக்கீங்க.

  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு