கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

3.3.10

கிராமத்து மணம்

எங்கள் கிராமங்களில் அவல், பனங்கிழங்கு, நவாப்பழம் (நாவல் பழம்) நெல்லிக்காய்,மா வத்தல்,புளியங்காய்,ஈச்சங்காய் - பழம்,கொட்டிக்கிழங்கு,பாலப்பழம்,வீரப்பழம் இவையெல்லாம் எங்கள் பால்ய பருவத்தின் ஈர்ப்புகள்.

ஆடி மாதம் நாற்றுப்பாவுவதற்கு விதை நெல் கொண்டு போய்,நாற்றங்காலில் பாவியது போக மீந்த மீத நெல்லில் அவல் இடிப்பார்கள்.நெல்லை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து,மறுநாள் காலை தண்ணீரை வடித்து,ஒரு சணல் சாக்கில் கொட்டி இறுகக் கட்டி,அந்த மூட்டையின் மீது ஒரு பாரத்தை வைத்து ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள்.மூன்று நாள் கழித்துப்பார்த்தால் அந்த நெல் முளை விட்டு வந்திருக்கும்.முளைவிட்ட நெல்லை நன்றாகக் கொதிக்கும் நீரில் கொட்டி,தட்டுப்போட்டு மூடி ஒரு இரவு வைத்து மறுநாள் காலை வடி கூடையில் கொட்டி,தண்ணீர் வடிந்ததும்,பழைய மண்சட்டியில் சிறிது,சிறிதாகப் போட்டு படபடவென,பொரியும் வரை,வறுத்து நேரடியாக உரலில் கொட்டி,தாமதிக்காமல் உலக்கையால் இடிப்பார்கள்.நன்றாக வறுபட்டு விட்டால் அது அவலாக மாறாது.நெற் பொரியாகிவிடும்.வறுபடாவிட்டாலும் அவல் சரியான பக்குவமாக இராது.வறுத்தது ஆறிவிட்டாலும்,உரலில் இடிக்கும் போது நுணுங்கிவிடும்.சரியான பக்குவத்தில் வறுத்து,அடுப்புக்கு அருகிலேயே உரல் வைத்து இடித்து,சொளகிலிட்டு (முறம்) புடைத்து உமி நீக்கி அவலைத் தனியாகப் பிரிப்பார்கள்.இப்படித் தயாரிக்கப்படும் அவல் உடலுக்கு சத்து.ருசியும் கூட.குறுவை நெல்லில் தயாரிக்கப்படும் அவல் சிவப்பு நிறமாக இருக்கும்.

பனம்பழம் கிடைக்கும் காலத்தில் பனம்பழம் சாப்பிட்டு கொட்டைகளை தூர எறியாமல்,மண்,மாட்டுச்சாணம் காய்ந்து உதிர்த்தது கலந்து பாத்திபோல் செய்து அதில் பனங்கொட்டைகளைப்பதித்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைத்தெளித்து விடுவார்கள்.சித்திரை,வைகாசியில் பதிக்கப்படும் பனங்கொட்டைகள் மார்கழி மாதவாக்கில் கிழங்கு இறங்கியிருக்கும்.பாத்திகளை பொறுமையாகத் தோண்டி எடுத்து கிழங்குகளைப்பிரித்து எடுப்பார்கள்.

நாவல்பழம் பறிக்கப்போய் வந்தால் என்ன காரணமோ காய்ச்சல் வந்துவிடும்.நவ மரத்தில் பேய் இருக்கும் அதான்! என்று பயமுறுத்துவார்கள்.பாலப்பழம் சாப்பிட்டால் சூயிங்கம் போன்று இருக்கும்.நுங்கு,பதனீர்,சீம்பால்,கண்மாய் அழித்து கடைசியாய்ப் பிடித்து வரப்படும் கெண்டைக்குஞ்சு,கெழுத்தி மீன்,கண்மாய் விராமீன்,உரம் போடாமல் பயிரிடப்படும் சோளக்கருது (கதிர்),கீரைத்தண்டு,தோட்டத்துக்கத்திரிக்காய் இப்படி கிராமத்து ஸ்பெஷல் ஐட்டங்கள் ம்.ம்.. இப்போது நினைத்தாலும் மனமும்,நாவும் இனிக்கிறது.ஆனால் இவையெல்லாம் இப்போதும் கிடைக்கிறது.ருசிதான் மாறிவிட்டது.இதற்குக்காரணம்,மண்ணின் மணம் மாறிவிட்டதா?,காலம் மாறியதன் விளைவா? நமக்கு வயதானதன் காரணமா? எதுவாக இருந்தாலும் அந்தக்காலம் மீண்டு வருமா? ஏக்கத்துடன்...

1 கருத்து:

  1. அவல் சூப்பர். வாழ்த்துக்கள். அருமையாக ரசிக்கும் படி எழுதுகிறீர்கள்

    பதிலளிநீக்கு