கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.9.11

கடிதங்கள்இப்போதெல்லாம்
 யாருமே எனக்கு கடிதம் எழுதுவதில்லை

தேரோட்டமா? திருவிழாவா?
நாற்றுப்பறிப்பா? நடவா?
களையெடுத்தலா? கதிர் அறுப்பா?
செய்தி கொண்டு வரும் அந்த மஞ்சள் நிற அஞ்சலட்டை.

நலம் நலமறிய எழுதவும்
உப்புக்கண்டம் போடவும்
ஓடுடைத்து புளி வாங்கவும்
தூதாகப் போகும் இன்லண்ட் கடிதம்

படித்த கடிதங்களை,
பொத்திப் பாதுகாத்து
காலம் கடந்து குப்பையான ஒரு பொழுதில்
கிழித்தெறிய களைந்த போது
ஒவ்வொரு வார்த்தையிலும்
உறைந்து கிடந்தது கடந்த காலம்

23.9.11

தும்பைப்பூக்கள்


கடைசிக்கால
நிம்மதிக்கனவுகளுடன்,
வானம் தொடும் ஆவலும்,
ஏணி வைக்கும் முயற்சிகளுமாய்,
பெரு நகரச் சமுத்திரத்தில் அமுதம் தேடி
மூழ்கி, எழுந்து, நீந்தி, திளைத்து……

கனவுகளில் வலம் வருகிறது
தட்டான் பிடித்த பொழுதுகளும்
தவளை கத்தும் மழை இரவுகளும்

நட்ட செடிகளில்
முதல் பூவும் முதல் பிஞ்சும்,.
திருவிழாக்கடைகளில் பஞ்சுமிட்டாயும், ரப்பர் கடிகாரமும்,
வயல் வரப்புகளில்,
கண்மாய்க்கரைகளில்
கதிர்க்களங்களில் உண்ட கஞ்சியும், ஊறுகாயும்,
நல்ல நாள் பார்த்து சமைத்த
புது அரிசிச்சோறும், கறிக்குழம்பும்,
தும்பைப்பூக்களில் தேனருந்தும் பட்டாம்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்,
ஊரணிப்படிக்கட்டுகளில்
அந்தி நேரங்களில் ஒலிக்கும் துணி தப்பும் ஒலியும்,
கலவைக்குரல்களையும் திரித்து, திரித்து,
விரியும் நினைவில் சொன்ன கதைகளில்
மெல்ல இளகும் மனவெளி..
உறங்கிப்போன குழந்தைகள் கனவில்
தும்பைப்பூக்களும், தாமரைகளும்..
.
அரவமற்ற ஊரணிக்கரைகளில் பூத்துக்கிடக்கிறது
பறிக்க ஆளில்லாத தாமரைகள்

13.9.11

எங்கள் கொற்றவை
ஒரு நெடுங்கனவின் நீட்சியாய்
துரத்திக்கொண்டே இருக்கிறது அவள் குறித்த காட்சிகள்.
மறக்க நினைத்தாலும் உள்ளத்தில்
தைத்துக்கொள்கிறது அவளின் துயரங்கள்

வாழ்க்கை வஞ்சித்த வனதேவதை அவள்.
நாகரீகத்தின் சாயல் அறியாத கிராமத்துக்கொற்றவை.
அன்பும், கற்பும் மட்டுமே அவளின் ஆயுதங்கள்
கஞ்சிக்கலயத்தில் கதிரவனையும் சுமந்து
கழனி, காடெல்லாம் பண்படுத்தி
கதிர் வளர்த்தாள்
வனம் பெருக்கினாள்
மாலை சூரியனை மலை முகட்டில் விட்டு
நிலவைக்கூட்டி வீடு வருவாள்.
காலம் அவளின் முந்தானையில்.
பொறுக்கிவந்த சுள்ளியில் சுடர் வளர்த்து
வயிற்றின் பசித்தீ போக்கி,
மீத உணவில்
காலை காக்கைக்கு ஒரு பிடி அன்னம்
இரவு பைரவருக்கு ஒரு பிடி என்று ஒதுக்கிவைப்பாள்.
ஆலை அரிசி உண்டதுமில்லை.
ஆகாத உணவை தின்றதுமில்லை.
மருந்தும், விருந்தும் அறிந்ததுமில்லை.
.உதவி என்போருக்கு உயிர் தருவாள்.
அன்பைக்கூட அதட்டலாய்க்காட்டுவாள்.
சுற்றத்தின் துயர் தீர்ப்பாள்
முந்தையத் தலைமுறைப்பெண்களின்
பிறவிக்கலி தீர்க்கும் சுமைதாங்கியாய் அவள்.

அவள் உடலின் உயிர்க்கடிகாரம்
அவளை உட்கார ஒட்டாமல் விரட்டிக்கொண்டேயிருக்க
எப்போதும் இயற்கையோடு உறவாடியபடி இருந்தாள்.
மனிதர்களிடம் மட்டும் விலகியே இருந்தாள்.
தேவைகளை அவசியத்தேவைகளாக மட்டுறுத்தி
ஆசைகளைப்பொசுக்கி அறம் வளர்த்தாள்.
யுகம் யுகமாய் வாழ்ந்த பெண்களின்
துயர் படிந்த குறியீடாய் அவள்.

அவளது இல்லில்
அவளின் தனிமைக்குத் துணையாய்
தெய்வங்கள் குடியிருந்தன.
கழனிகளிலும் காடுகளிலும்
மைனாக்களும், மயில்களும்.
காற்றின் திசை பார்த்து மழையின் வரவு சொல்வாள்.
தவளையின் மொழி, முட்டையுடன் எறும்புகள்
பல்லியின் ஒலி, பசுவின் கதறல்
அத்தனைக்கும் அர்த்தம் சொல்லும்
இயற்கையின் அகராதி அவள்.
மண் பயனுற வாழ்ந்த மகளீரின்
மங்காத அடையாளமாய் அவள்

முந்தையத் தலைமுறைப்பெண்கள்
இறக்கித்தந்த தோள் சுமை விட்டு, விடுதலையாகி
பூட்டுகள் விலக்கி புதிதாய்ப்பிறந்த எங்களுக்கு
வியப்பின் வடிவம் அவள்.
பொல்லாப்பொழுதாய் விடிந்த
பனிமூடிய காலைப்பொழுதொன்றில்
நெட்டுயிர்த்துப் பிரிந்தது
எங்கள் குலக்கொற்றவையின் உயிர்க்காற்று.
கண்ணீர்த் துளிகளைத்தவிர கொடுப்பதற்கு எதுவுமில்லாத
யாசகர்களாய் நானும், இந்த பூமியும்.

12.9.11

என் இரவுஇரவின் மடியில்
சூரியன் உறங்க
பூமியின் வெளியில் பாடித்திரிகிறது மௌனம்

இருள் சூழ் வெளியில்
காலத்தின் விரல் பிடித்து நான்.
என் வானத்து நிலா
பால் நிற ஒளியூற்றி இருளை அழிக்க
இருட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

வனாந்தரத்தின் ஒற்றையடிப்பாதையாய்
வானில் நீண்டு கிடக்கிறது ராக்கெட் புகை.
நட்சத்திரம் மின்னும் வானில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காற்றாய்ப்போன என் உறவுகளை.

நித்திரையற்ற இரவினில்
தூங்காத கண்களின் கருப்பு வெள்ளைக்கனவாய்
விரிந்து கிடக்கிறது இரவு.
சலனமற்ற நிசப்தத்தில் உலவுகிறது
என் முன்னோரின் தாலாட்டுகள்.

இலையுதிரும் சப்தத்தில்
நடுங்கும் குருவிகளின் சிறகசைப்பு.
எல்லோரும் உறங்கும் இந்த நடு நிசியின்
ஏகாந்தம்.
தூரத்து ஊர்களின் சந்தைகளுக்கு
ஒற்றை மணி அசைய
ஊர்வலம் போகும் மாட்டு வண்டிகளில்
அசையும் லாந்தர் வெளிச்சம்.

ஏவலாய், எடுபிடியாய்,
காத்துக்கிடந்து, காக்க வைத்து
நிர்ப்பந்தங்களைச் சுமக்கும் கட்டிடக்காடுகளில்
மூச்சடைக்கும் பகலை விடவும் இனிமையானது இரவு.
அதுவும் விடுமுறைக்கு முதல் நாள் இரவு.


எனக்குப்பிடித்திருக்கிறது இந்த இரவு.
வாழ்க்கையை நகர்த்தும் பகலை விட
நான்
வாழும் இந்த இரவு.

9.9.11

ஆண் மனம்

ஓயாத வாயும்
ஊமையான மனதுமாய் அவள்.
ஒரு நாளும் விரித்ததில்லை
அவளின் மனதின் பக்கங்களை அவனிடம்.

எத்தனையோ கதைகள் சொல்வாள்
அவளின் நினைவு தெரிந்த நாள் முதலான நடப்புகளை,
பிடித்த உணவு, பிடித்த உடை,
பிடித்த நிறம், பிடித்த பறவை,
பிடித்த, பிடித்த இன்னும் பிடித்தவெல்லாம் சொன்ன அவள்
சொன்னதே இல்லை பிடித்தவன் பெயரை.

புதிரிலும் புதிரானது அவள் புன்னகை
அவளின் அகன்ற விழியின் பாவைக்குள் புகுந்து
மனவெளிகளை ஆராய எத்தனிக்கும் அவன் பார்வையை
எதார்த்தமாய் இமைத்து
மென்மையாய் நிராகரித்தாள்
அவனின் தூண்டில் இரைகளை அவனுக்கும் பகிர்ந்து
புன்னகை மட்டும் பதிலாய்…

அவள் மனதின் அந்தரங்கப்பக்கங்களின்
அவலமோ, ஆனந்தமோ
அறிவதில் அவன் பிரியம் காட்ட
கடந்த காலம் நான் வாழ்ந்த காலம்
நிகழ் காலம் நமக்கான காலம் என்றாள்.

அவளுக்குத்தெரியும்
ஆயிரம் கதைகள் சொன்னாலும்
ஆண் மனது என்னவென்று……

23.1.11

சிலை அள்ளும் திருவிழா


எங்கள் ஊர் பதினாறு பாலைய நாட்டு கிராமங்களிலும் ஊருக்கு வெளியில் வயல், கண்மாய்க்கரை,கண்மாய் இப்படி அமைந்திருக்கும். கண்மாய்க்கரையில் வரிசையாக நிழல் பரப்பும் பெரிய மரங்கள். வயல் வெளியில் வேலை செய்பவர்களும், ஆடு, மாடு மேய்ப்பவர்களும் உணவு உண்ண, மதிய வேளையில் கண்ணயர இந்த கண்மாய்க்கரை உதவும்.வயலுக்கு சற்று முன்னரே அவரவர்க்கு உரிய, சாணி தெளித்து மெழுகிய களத்துமேடுகள், அருகில் குப்பை சேர்த்து வைக்கும் குப்பைக்குழிகள் இருக்கும். வருடம் பூராவும் சேரும் கட்டுத்தரைக் கழிவுகள், இலை, தழைகள் மற்றும் மக்கும் குப்பைகளை அவரவர்க்கான குப்பைக்குழியில் சேர்த்து வருவார்கள். வயல் உழும் போது குப்பையைக் கொட்டி உழுது நாற்று நடுவார்கள். 

எங்கள் ஊரின் ஒவ்வொரு கிராமங்களின் கண்மாய்க்கரையிலும் காவல் தெய்வம் அய்யனாருக்கு கோவில் உண்டு. இந்தக்கோவிலில் அய்யனாரோடு, பரிவார தேவதைகளாய் கருப்பர், காளி, முனி ஐயா, சன்னியாசி ஆகியோரும் இருப்பார்கள். ஊருக்கு ஊர் இருக்கும் கருப்பர், அய்யனார் ஆகியோருக்கு நாமங்களும் வேறுபடும். பதினெட்டாம் படிக்கருப்பர், நொண்டிக்கருப்பர், ஜோடிக்கருப்பர், சின்னக்கருப்பர் இப்படி கருப்பருக்கும், மேற்கே பார்த்த அய்யனார், மெய்ய அய்யனார், பால விளத்த அய்யனார், குறும்ப அய்யனார், நெல்லி அய்யனார் என்று அய்யனாருக்கும், கரும்பூரணிக்காளி, கருவேப்பிலைக்காளி, ஓசை மணிகாளி, பாம்புக்காளி இப்படி காளிக்கும் ஊருக்கு ஊர் ஒரு நாமம் உண்டு.

வருடத்திற்கொரு முறை குதிரை எடுப்பு, கிடாய் வெட்டுதல் நடக்கும். கிடாய் வெட்டுமன்று, எறிசோறு வீசுதல் நடைபெறும். அய்யனார் கோவில் கிடாய் வெட்டினாலும் அய்யனாருக்கு படைப்பதில்லை. கருப்பருக்குத்தான் படைப்பார்கள். இந்த பூசை இரவில் தான் இருக்கும்.வெட்டிய கிடாய் ரத்தத்தை புது மண் சட்டியில் ஊற்றி சோறு சேர்த்து பிசைந்து, மூன்று உருண்டைகளாக்கி பூசாரி கொண்டு வர, சாமியாடி ஊருக்கு வெளியில் உள்ள வயல் வெளியில் நடு வயலில் வந்து வயலில் வட்டமிட்டு அதற்குள் பூசாரியை நிற்க வைத்து, சாமியாடி மட்டும் அந்த சோற்று உருண்டைகளை வான் வெளியில் வீச ஒரு சோறு கூட சிந்தாமல் துஷ்ட தேவதைகள் பெற்றுக்கொள்ளுமாம். இப்படிச்செய்வதால் ஊருக்குள் துஷ்ட தேவதை வராது என்பது நம்பிக்கை. இன்றும் எங்கள் ஊரில் சாப்பிடும் போது வாய்க்குள் சோறை வீசி உண்ணும் குழந்தைகளை எறிசோறா வீசுற? என்று கண்டிப்பார்கள். திட்டும் போது எறி சோறு பொறக்கி என்பதும் உண்டு. இதற்கு பேய் என்று அர்த்தம்.

எங்கள் பாலைய நாடு பதினாறு ஊரில் எங்கள் பாலையூர் கிராமத்திலும் அதற்கு அருகில் உள்ள கரியப்பட்டி கிராமத்திலும் சிலை அள்ளும் திருவிழா என்ற ஒரு திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. இந்தத்திருவிழாவில் அய்யனார் கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஐம்பொன் சிலைகளை, சாமியாடி அருள் வந்து, தன்னோடு ஒருவரை கண்களைக்கட்டி கூட்டிச்சென்று புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தோண்டி எடுத்து அள்ளி வந்து கோவில் வாசலில் பெரிய தென்னை ஓலைக் கொட்டகையில் வாழை மரம் கட்டி அலங்கரித்து இந்த சிலைகளை கொலுவில் வைப்பது போல் அடுக்கி வைத்து, ஏழு நாட்கள் பூசை செய்வார்கள். அந்தச்சிலைகளோடு அருளாடிகளும் அமர்ந்து, வரும் பக்தர்களுக்கு விபூதி வழங்குவார்கள். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் சிலைகளைக்காண வருவார்கள். ஏழு நாள் திருவிழா முடிந்து அதே போல் கண்களைக் கட்டி கூட்டிச்சென்று சாமியாடி புதைத்து விட்டு வருவார். மறுநாள் காலை தோண்டிய இடத்தை தேடினாலும் கண்டு பிடிக்க முடியாத அளவு புல் ஒன்று போல் முளைத்து இருக்குமாம். இந்த ஐம்பொன் சிலைகளில் ஊர் சுத்திப் பிள்ளையார் என்னும் சிறிய கணபதி சிலை ஒன்று உண்டு. தெருவில் கிடைக்குமாம். ஐ! பிள்ளையார் என்று எடுத்துக் கொண்டு போய் மாடத்தில் வைத்தால் அடுத்த நாள் இன்னொருவர் வீட்டு மாடத்தில் இருப்பாராம். இப்படி ஏழு நாளும் ஊர் சுற்றிவிட்டு ஏழாம் நாள் கொலுவிருக்கச்செல்வாராம். 1970 களில் நடந்த இந்தத் திருவிழா இப்போது நடப்பதில்லை. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அருளாடிகளின் இறப்பு இந்தத் திருவிழாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கரியப்பட்டி கிராமத்தில் இந்த சிலைகளை பல மந்திர பூசைகள் செய்து, கவர்ந்து சென்ற குடும்பம் இன்று இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது என்கிறார்கள். ஆக இரு ஊரிலும் இந்தத்திருவிழா நடப்பதில்லை. இப்படி கால ஓட்டத்தில் காணாமல் போன அதிசயத்திருவிழாக்கள் எத்தனையோ?

இப்போதும் வயலுக்கு காவலுக்குச்செல்லும் ஆண்கள் அய்யனார் கோவில் கண்மாய்க்கரையில் படுத்திருப்பதுண்டு. அப்போதெல்லாம் நடு இரவில் பல்லாக்கு பரிவாரங்ககளோடு , விளக்குகள் ஜொலிக்க சாமி ஊர்வலம் போவது போன்று இருக்குமாம். பெரியவர்கள் சொல்லி அனுப்புவார்கள்,"பார்த்து இருங்கப்பா! ஓட்டம் இருக்க பக்கத்துகள்ல, சாமி போற பாதைகள்ல  படுக்காதீகப்பா" என்று. அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு வேளை புதைக்கப்பட்ட அந்தத் திருவுருக்கள் தான் இரவில் ஊர்வலம் வருகிறதோ என்று!

18.1.11

வரம்

பறவைகள் கூடு திரும்பும்
பொன் மாலைப் பொழுதொன்றில்
தேவதை ஆகும் வரம் கிடைத்தது.

தென்றலில் ஆடும் விரிந்த ஆடை
சிறகுகள் முளைத்தது
தலையைச்சுற்றி ஓளிவட்டம்
மின்னும் கற்களில் சின்ன கிரீடம்

கண்கள் மின்ன
நினைத்துக் குதூகலித்து
உயரப் பறக்கிறேன்.
நிலா, அழைக்கிறது.
நட்சத்திரங்கள் புறம் பேசுகிறது

மழை பொழியத்தொடங்கியது.
வானவில் குடை பிடித்து
வண்ணங்களை குழைத்து
மழைச்சரத்தின் ஊடாய்
பூக்களை அனுப்பியது என் பூமியெங்கும்

புதிதாய் முடிசூடிய அரசியாய்
நகர்வலம் வர
என் ராஜபாட்டை எங்கும் ஒலிக்கும் வாழ்த்தொலிகள்.

காற்றில் கைகளை அசைத்து
எனக்கான உலகை நானே சிருஷ்டித்து
ஆவலும் ஏவலுமாய் நான்
தேவைகள் அற்றுப்போனது.
ஒளிவட்டம் கண்டு மிரண்டனர் மனிதர்கள்

எனது அந்தப்புரத்தோட்டத்தில்
பூக்களுடன், பட்டாம்பூச்சிகளுடன் உறவாடி...
பிரியங்கள் கிடைக்காத வெற்றுவரத்தின் மீதான
வெறுப்பு வளர்ந்த நொடியில்
தூரத்தில் விளையாடும் குழந்தைகளை நோக்கி ஓட..
வழியெங்கும் சிதறின
சிறகில் இருந்த இறகுகளும், கிரீடத்தில் மின்னிய கற்களும்.

16.1.11

வறண்ட நிலத்தின் விளிம்பில்...

வாழ்க்கை ஒரு வறண்ட நிலமாய்
விரிந்து கிடக்கிறது....

நேயம் வறண்டு போன வானிலிருந்து
எப்போதாவது விழும் அன்பின் துளி

துளிர்த்து இலை விட்டு
கிளைத்து வளர்கிறது சுயம்

விதைப்பது நெல்லா? நெருஞ்சியா?
அறியாது விதைத்து விட்டு
விளைந்ததும் அற்றுப்போனது பிடிப்பு

பூக்கும் நம்பிக்கையற்று
வளர்கிறது விரக்தி

ஆருடங்களில் லயித்து
பேராசையில் சிக்கி தோற்று
வளர்கிறது வன்மம்

சூதும் வாதும் ததும்பி வழிய
காலம் குறித்த வேட்கையில்
உறிஞ்சிக் குடிக்கிறது வறண்ட நிலம்

ஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....
கிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்
திரும்பி வரப்பாதையில்லா விளிம்பில்....