கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.3.10

கிராமங்கள் ஒளிர்கிறது

பிரம்மாண்டமாய் முன்மொழிந்து
பிதற்றி,பிதற்றி வழிமொழிந்து
ஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்
மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கி
சட்டமும்,சமத்துவமும் பேசும் ஆட்சியாளர்கள்.
எல்லாத்திட்டமும்
எங்களூர் கோவில் பிரதிமைகளின்
உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்...

கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
மொட்டை மரங்களின் நிழல்களில்
சூரிய வெம்மை.
தோல் சுருங்கி
நாவின் ஈரம் காய்ந்து
மடைகளின் குழிகளில்
தண்ணீர் தேடும் கால்நடைகள்.

நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
முப்போகம் விளைத்து
பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.

காணிக்கை விதைப்பு நெல்லில்
நிறைந்து கிடக்கும்
அய்யனார் கோவில் குதிர்களும்
மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
வெறுமையாய்க்கிடக்க,
சம்பிரதாயச்சடங்குகளாய்
தேரோட்டமும்,திருவிழாவும்.

வள்ளிதிருமணமும்,பவளக்கொடியும்
அரிச்சந்திரனும்,அல்லி தர்பாரும்
அரசாண்ட கூத்து மேடைகளில்
முளைப்பாரி மிச்சங்கள்.
தாரிசு வீடுகளும், கேபிள் டிஷ்களும்
சுடிதார்,ஜீன்ஸ்கள் உலரும் கொடிகளும்...
அம்மிகளும்,ஆட்டுரல்களும்
கொல்லையில் குப்பையாய்...
அடுப்படிகள் நிறைந்து கிடக்கிறது நவீனங்களால்...

அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
சந்திரபிம்பங்களாய் முகங்கள்
அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
எல்லாமும் இருக்கிறது!
ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
சதா அழும் மனதை
சமாதானப்படுத்தும் அறிவு!
அட! எங்கள் கிராமங்கள் ஒளிர்கிறது!.

10 கருத்துகள்:

 1. அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
  வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
  எல்லாமும் இருக்கிறது!
  ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
  சதா அழும் மனதை
  சமாதானப்படுத்தும் அறிவு!

  ........... ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகள். அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அர்த்தமுள்ள கருத்துக்கள்.. நிச்சயம் தொலைத்ததை நினைத்து ஏங்கவைக்கிறது.. எல்லாம் போய்விட்டது, மிச்சமொன்றும் இல்லை.

  பதிலளிநீக்கு
 3. //கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
  மொட்டை மரங்களின் நிழல்களில்
  சூரிய வெம்மை.//

  //வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
  உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்

  வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.//

  வரிக்கு வரி அப்படியே ஊரின் வெப்பத்தை உணர வைக்கிறது இங்கு குளிரின் சிலிர்ப்பிற்கும் இடையே கூட... அருமையா உணர்ந்து எழுதப் பட்டிருக்கிறது - amazing அவதானிப்பு...

  //அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
  சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
  சந்திரபிம்பங்களாய் முகங்கள்...//

  நிலையானதா இல்லை கடன் வாங்கப்பட்ட சந்தோஷமா??!!

  பதிலளிநீக்கு
 4. //எல்லாமும் இருக்கிறது!
  ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
  சதா அழும் மனதை
  சமாதானப்படுத்தும் அறிவு!//

  மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சாந்தி.

  பதிலளிநீக்கு
 5. ///எல்லாத்திட்டமும்
  எங்களூர் கோவில் பிரதிமைகளின்
  உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்...///

  ஆழமான வரி.

  பதிலளிநீக்கு
 6. அருமை . வரிகள் சூடுகிறது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
  வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
  உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
  முப்போகம் விளைத்து
  பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
  வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.

  காணிக்கை விதைப்பு நெல்லில்
  நிறைந்து கிடக்கும்
  அய்யனார் கோவில் குதிர்களும்
  மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
  வெறுமையாய்க்கிடக்க,
  சம்பிரதாயச்சடங்குகளாய்
  தேரோட்டமும்,திருவிழாவும்.

  ஆழமான கருத்து...
  நல்ல கவிதை......
  அழகா சொல்லியிருக்கிறீங்க........

  பதிலளிநீக்கு
 8. //காணிக்கை விதைப்பு நெல்லில்
  நிறைந்து கிடக்கும்
  அய்யனார் கோவில் குதிர்களும்
  மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
  வெறுமையாய்க்கிடக்க,
  சம்பிரதாயச்சடங்குகளாய்
  தேரோட்டமும்,திருவிழாவும்.//

  அழகான கவிதை வரிகளை ஆழமாகச் சொல்லியிருக்கிறீர்கள். கிராம வாழ்க்கையை தொலைத்துவிட்டுத்தான் இப்ப நாம் நகரத்தில். இருந்தும் இன்னும் எனக்குள் எங்கள் கிராமத்தின் வாசம்தான்.

  பதிலளிநீக்கு