கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

29.1.10

சுமைதாங்கிக்கல்லும்,திண்ணைகளும் - ஒரு ஃபாலோ அப்

மீன் துள்ளியான் அவர்களின் வலைப்பூவில் சுமைதாங்கிக்கற்களும் திண்ணைகளும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பார்த்தேன்.( அதானே! அடுத்தவுக சொன்னப்புறந்தான் ஞாபகம் வரும்.) எங்கள் செட்டிநாட்டு கிராமங்களிலும் சுமைதாங்கிக்கற்களும்,வீட்டுக்கு வீடு திண்ணைகளும் உண்டு.ஒரு குடும்பத்தில் கர்ப்பிணிப் பெண்கள் இறந்துவிட்டால் அந்தப் பெண்ணின் ஞாபகமாக சுமைதாங்கிக்கல் நடும் பழக்கம் இன்றும் உள்ளது.சுமையோடு சொர்க்கம் போன பெண்ணின் ஆன்மசாந்திக்காக நடப்படுகிறது. ஊரணிக்கரைகளில் சுற்றிலும் இந்தக்கல் நடப்பட்டு,இன்றும் தண்ணீர் எடுக்க வரும் பெண்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.கண்மாய்க்கரைகளில் கதிர்க்கட்டு சுமந்து வரும் மக்கள் உபயோகத்திற்கும் உள்ளது இன்றும்.


அந்தக்காலத்தில் அன்னக்காவடிகள்,ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாட்டு வண்டிகளில் பயணம் செய்பவர்களுக்கென உணவு கொள்ளவும்,மாலை நேரங்களில் அக்கம்,பக்கம் குடும்பத்துடன் அளவளாவவும் முகப்புத் திண்ணைகளும்,பின்பக்கம் கொல்லைத் திண்ணைகள் அம்மி,ஆட்டுக்கல் போட்டு மசாலா மாவு அரைக்க,துலக்கிய பாத்திரங்களைக் கழுவிகவிழ்த்து வைக்கவென உபயோகத்தில் இருந்து வந்தது.முகப்புத் திண்ணைகளின் மூலையில் பானை வைத்து தினமும் தண்ணீர் மாற்றி,ஒரு குவளையும் வைக்கப்படும்.இப்போது பொறியாளர் கொண்டு நவீனமாக வீடு கட்ட ஆரம்பித்து திண்ணைகளை மறந்து,சிங்க்,வாஷ் பேசின் என்று நமது பயணம் போய்க்கொண்டிருக்கிறது.திண்ணைகளில் அமர்ந்து நம் மக்களும் வம்பளக்கவே,நமது தலைமுறை திண்ணைகளைத் தவிர்க்கிறது.அதோடு காலம் இருக்கிற இருப்பில், இருக்கிற திண்ணைகளில் வெளியாட்களை அனுமதிப்பதும் உசிதமில்லை.


அன்னசத்திரங்கள்,தண்ணீர்ப்பந்தல்கள் ஒருகாலத்தில் நித்தமும் இருந்திருக்கிறது.இன்றும் எங்கள் கிராமங்களில் ஊர்ப்பொது இடத்தில் தண்ணீர்ப்பந்தல் வீடு ஒன்றும் உள்ளது. திருவிழாக்காலங்களில் பயன்படுத்தப்படுகிறது.அன்னசத்திரங்கள் கல்யாண மண்டபங்களாக மாறிவிட்டது.குன்றக்குடி,பழனி,ராமேஸ்வரம்,காசி போன்ற ஊர்களில் மொத்த ஊரும் சேர்ந்து நாட்டார் மடங்களை நிறுவி,நிர்வகித்துவருகிறார்கள்.எங்கள் ஊரிலிருந்து யார் போனாலும், எப்போது போனாலும் முன்னறிவிப்பு செய்துவிட்டு போய்த் தங்கிக்கொள்ளலாம்.வேக உலகில் அன்னசத்திரம்,தண்ணீர்ப்பந்தல் இவையெல்லாம் நிர்வகிக்க நேரமின்றியும்,பொருளாதாரப் பிரச்சினைகளாலும் பழையனக்கழிதலாய் கடந்து போய்விட்டது.இப்போதெல்லாம் திருவிழாக்காணவென அக்கம் பக்கம் ஊர்களில் இருந்துவரும் கூட்டமே குறைந்துவிட்டது.இரவு தெய்வத்திருவுருக்களை எழுந்தருளச்செய்து,ஊர் சுற்றி வரும்போது ஒவ்வொரு வீட்டிலும் காபி,பானகம்,சுண்டல் தருவது வழக்கம்.இப்போதும் தருகிறார்கள்.வாங்கி அருந்துவதற்கு சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு தவிர்த்துவிடுகிறார்கள்.அதனாலேயே என்னவோ எல்லோரிடமும் ஒரு இணக்கம்,சுமுகம் இல்லாது சுவர் எழுப்பிக்கொண்டு,உன்னைவிட நான் மட்டமா? என்ற ஒரு கேள்வி அனைத்துக்கண்களிலும் பிரதிபலிக்கிறது.முன்நாட்களில் திருமணம்,கல்யாணம் போன்றவை சொந்தபந்தங்களுக்கு ஊர்,ஊராய்ப் போய்ச்சொல்லப்போனால் அம்மாவுக்கு அம்மாவோட அண்ணன் மனைவியோட என்று நீளும் சொந்தம்.இப்போதெல்லாம் நெருங்கிய சொந்தங்கள்,நட்பு என்று சுருக்கமாகி விட்டதோடு,கல்யாணவீடு மாலையே வெறுமையாகிவிடுகிறது.எனது குழந்தைப்பருவத்தில் இதையெல்லாம் பார்த்ததால் இப்போது மனம் மருகுகிறது.ஆனால் நம்குழந்தைகள் இதையெல்லாம் அறியாததால் இவையெல்லாம் சரிதான் என்கின்றனர்.ஒரு கல்யாண வீட்டில் நான்கு நாட்கள் உட்கார்ந்திருப்பதாவது?முன் எப்போதும் இல்லாத காலமாற்றம் வெகு வேகமாக நமது தலைமுறையில் நடந்திருப்பதால் மனதளவில் ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாக இருக்கிறது.காலத்தின் போக்கில் போகிறவர்கள் தான் வாழத்தகுதியுள்ளவர்கள்.இந்த மாற்றங்களை மனதளவில் ஏற்று நாமும் வாழ்ந்து தானே ஆகவேண்டும்.உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் தானே நம் மரபு.

பால்ய நம்பிக்கைகள்

பிள்ளைப்பிராயத்தில்
ஓட்டப்பந்தயத்தின் இலக்குகள் எப்போதும்
ஒற்றைப்பனைமரமும்,தூரத்துத் தொடுவானும்.
ஒருநாளும் ஓடிக்கடந்ததில்லை
ஒற்றைப்பனையை.
கடந்த தூரம் திரும்பி வருவது,
காலில் தைக்கும் கருவேலமுள்ளோடு

கண்மாய்க்கரை அய்யனார் கோவில்
மண்குதிரைகளில் ரகசிய சவாரி
ராணி லட்சுமிக்கனவுகளில்.

கிராமத்து தேவதைகளின்
பூர்வீகக்கதைகள் சொல்லும்
அமானுஷ்யங்களை
விழிகள் விரியக்கேட்டு
விடிய விடிய தூங்காத திகிலிரவுகள்.

முட்டுச்சந்தில் முனியோட்டம்
ஆவிகள் உலவும் சலங்கைச்சத்தம்
கிழக்குச்சுவற்றில் பல்லியின் திருவுளம்
வாசலில் காக்கை கரைந்தால்
விருந்தாளிகள் வருகை
இன்னும் இன்னும் எத்தனை நம்பிக்கை.

தொடுவானத்தின் தூரம் வளர்வதை அறியா வயதில்
ஓட்டப்பந்தய இலக்காய் இருந்த
ஓற்றைப்பனையையும்
தூரத்துத்தொடுவானையும்
ஒருநாள் தொட்டே தீருவது,
அந்த நம்பிக்கை விருட்சத்தின் நிழலில் இன்று நாங்கள்.

இன்றும்
அந்த நம்பிக்கைகளின்
ஞாபகம் தரும் ஒற்றைப்புன்னகையை
தரவேமுடியவில்லை நான் கற்ற அறிவியலால்...

28.1.10

தமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


தமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,சனவரி,30,2010சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும், புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது
.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார். பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி),தமிழ்நிலவன்(கணிப்பொறி வல்லுநர், பெங்களூர்)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்),செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம், சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள்,ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில்  இதுவே முதல் முயற்சியாகும்.

செய்தி : மு.இளங்கோவன் muelangovan@gmail.com

25.1.10

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற அரசாங்கத்தின் வேண்டுகோளை,புதுக்கவிதை முதல் புதுப்புது நகைச்சுவையாக்கி நாம் கப்பல் விட்ட கதைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு,உண்மையான அக்கறையோடு அணுகலாம்.ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை.அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.அதோடு மரம் வளர்ப்பது மன இறுக்கத்தைத் தவிர்க்கும் என்பது சமீபக்கண்டுபிடிப்பு.ஆக மரம் வளர்ப்பதில் நிறைய அனுகூலம் நமக்குத்தான்.மரம்,செடி,கொடிகள் வளர்த்து,அதனுடன் உரையாடிப்பாருங்கள்.செல்லப்பிராணிகளிடம் அன்பு காட்டி தடவிக் கொஞ்சுவோமே அப்படி கொஞ்சிப்பாருங்கள்.அவை பசுமையாய்,செழிப்பாய் வளர்வதோடு இயல்பான ஆயுள் தாண்டி வளர்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

நாங்கள் இருக்கும் வீடு வாடகை வீடு.வீட்டைச்சுற்றிலும் இருக்கும் இடத்தில் எழுமிச்சை,சுண்டைக்காய்,கறிவேப்பிலை,கொய்யா,பலா,செம்பரத்தை,மஞ்சள்,இஞ்சி,பூச்செடிகள்,கீரை வளர்க்கிறோம். சிறிய இடம் தான்.ஆனால் அதை சரியாக உபயோகப்படுத்தினால் நிறைவான பலன் கிடைக்கும்.அது போக அத்திமரம் ஒன்று உள்ளது.அத்தி பூத்தாற்போல என்பார்களே அதற்கு அர்த்தம் அந்த மரத்தைப்பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்.இலைகளைக்கூட மொட்டையாக உதிர்த்துவிட்டு நிற்கும்."என்னடா! இப்படி ஆயிட்ட?" என்று அதன் சருக்குகளைக்கூட்டி அதன் வேரில் தள்ளிவிட்டு வந்து பத்து நாள் கழித்துப்பார்த்தால் பச்சைப்பசேல் என்று துளிரடித்து சிரிக்கும்.நமக்கே சந்தோசமாக இருக்கும்.இரண்டு நாள் கழித்துப்பார்த்தால் கிளைகளில் கொத்து கொத்தாக பச்சை நிறத்தில் காய்கள்.அப்புறம் பழுத்து ஆப்பிள் நிறத்தில் பழங்கள்.அந்தப்பழங்களை எ ப்படிப் பதப்படுத்துவது என்று தெரியாது.ஒரு பழம் முக்கிய பூமியில் ஆறு ரூபாயாம்.இங்கே அத்தனை பழங்களும் ஜலதாரையில் வீணாகிறது.அதன் சருகுகள் கொட்டுவதைப்பார்த்து வீட்டு உரிமையாளர் கிளைகளை வெட்டிவிடுவோம்.உங்களுக்கு சிரமமில்லை என்றார்கள்.நாங்கள் வேண்டாம் என்று தடுத்து விட்டோம். முக்கிய காரணம் அதன் கிளைகள் தகரம் வேயப்பட்ட கூரையில் தவழ்ந்து கிடப்பதால் கோடை வெயிலின் உக்கிரம் வீட்டுக்குள் சற்றும் இருக்காது.கோடையில் எங்கள் வீடு மட்டும் சொர்க்கம்.செம்பரத்தை மலர்கள் பூசைக்கு,இலைகள் நம் கேசத்திற்கு.இலைகளைப்பறித்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி தலையில் தடவிக்கொண்டு நமது வேலைகளைக்கவனித்துவிட்டுக் குளிக்க ஷாம்பூ போட்டது போல் முடி பளபளப்பாய் இருக்கும்.பூச்செடிகள் வளர்த்துப்பாருங்கள்.அதன் மலர்கள் நம் மனதை உற்சாகப்படுத்தும் ஊக்கமருந்து.அந்த மகிழ்ச்சி ஊற்றுக்கு எதுவும் ஈடு கிடையாது

ஒரு முறை பொங்கலுக்கு வாங்கிவந்த மஞ்சள் கொத்தில் ஒரு மஞ்சள் உதிர்ந்து விட்டது. அதை எடுத்து வைத்து மறந்து போய் பத்து நாள் கழித்துப்பார்த்ததில் அது முளைவிட்டிருந்தது.பதித்து வைத்து,மாட்டுச்சாணம் கொண்டு வந்து காய வைத்து,உதிர்த்து உரமிட அப்படியே தொடர்ந்து ஆறு வருடமாக மஞ்சள் கொத்து வாங்குவதில்லை என்பதோடு நண்பர்களுக்கும் பொங்கல் பரிசு.வருடத்திற்கு பத்துகிலோ மஞ்சள் எடுக்கிறோம்.ஆனால் அதை எப்படிப்பக்குவப்படுத்துவது என்பது தெரியாமல் விழிக்கிறோம்.மாவடு இஞ்சி,ரோஜா,கனகாம்பரம்,சம்பங்கி போன்ற ஆரஞ்சு வண்ணப்பூ வகை ஒன்று இப்படி சின்ன இடத்தில் நெருக்கியடித்து வளர்க்கிறோம்.கப்பல் போக்குவரத்துத் துறை பனிமனையில் பணிபுரியும் நண்பர் ஒருவர் சிறிய மண்வெட்டி ஒன்று செய்து தர தோட்ட வேலை இனிமையாய்ப்போகிறது.சுண்டைக்காயின் மகத்துவம் இங்குள்ளவர்களுக்குப்புரியாததால் சுண்ட மரம் இங்கு சில இடங்களில் வேலியாகப் பயன்படுகிறது.பாக்குமரம்,தென்னை மரம் இல்லாத வீடுகள் இல்லை.பாக்கு மரம் பூத்தால் மருதாணிப்பூவின் வாசனையாக இருக்கும்.பாக்குப்பழங்களைப் பொறுக்கி காயவைத்து சுத்திவைத்து உடைத்து உருண்டையான பாக்கை விற்பது வழக்கம்.சராசரியாக மாதம் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று கிலோ வரை பாக்கு கிடைக்கும்.பெரிய வருமானம் ஒன்றுமில்லை தான்.ஆனால் வீணாகவில்லை என்பது மனதுக்கு நிறைவு. இங்குள்ள லோக்கல் மக்கள் முருங்கை,மாங்காய் இவற்றைப்பறிக்க மாட்டார்கள்.வீணாய்ப்போகும்.ஆனாலும் தோட்டமிடுவது,செடிகள் வளர்த்து வீடுகளை அழகுறப்பேணுவதில் வல்லவர்கள்.ஆனால் தற்போது வீட்டு வாடகைக்கு ஆசைகொண்டு மரங்களை வெட்டி வீடுகளைப் பெருக்குகிறார்கள்.ஆனாலும் தொட்டியில் விதவிதமான செடிகள் வளர்க்கிறார்கள்.

செடிகள் வளர்ப்பதற்கு பெரிய இடம் தேவையில்லை.உபயோகமற்ற சின்னச்சின்ன பாத்திரங்களில் செடி வளர்க்க மன அழுத்தம் மறையும்.நம் மனது எப்போதும் ஈரமாக,கோபமற்று குளுமையாக இருக்கும்.அதோடு நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது.குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும்.அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத்தேவையான நிழல்,குளுமை கிடைப்பதோடு,ஆரோக்கியத்திற்கும் நல்லது.கொஞ்சம் நேசம்,கொஞ்சம் மெனக்கெடல்,கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம்.உடலுக்கும் பயிற்சி.அழகுக்கு அழகு.குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.(நமக்கும் தான்)மனமிருந்தால் மார்க்கமுண்டு.உபயோகித்துத் தூக்கி எறியும் பெரிய அளவு கோப்பைகளில்,குளிர்பானப்பாட்டில்களில்,எண்ணெய்க் கொள்கலன் களில் தற்போது செடி வளர்க்கிறார்கள்.உங்களின் சாளரங்களும் பசுமையால் நிறைய செடி வளருங்கள்.குருவிகள்,காக்கைகளையும் நண்பர்களாக்க வேண்டுமா? மரம் வளருங்கள்.

1990ம் வருடம் கிட்டத்தட்ட 80 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி, 20 வருடத்தில் 130 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியாகிவிட்டது.காடுகளை அழித்து வெற்று நிலங்களை அதிகமாக்கி விட்டோம்.காடுகளை அழித்தலாலும்,தங்கம்,கனிமம்,நிலக்கரிச்சுரங்கம் தோண்டுவதாலும்,மற்றும் முறையற்ற வேளாண்மையாலும் தான் வெற்று நிலம் பெருகிவிட்டது என்கிறார்கள்.நண்பர்களே! பூமியை அகழ்பவர்கள் அகழ்ந்து காயப்படுத்தட்டும். அவர்களைத் திருத்த நாம் யார்? ஆனால் நாம் மரம் வளர்ப்போம்.நமது ஆரோக்கியம் காப்போம்.

22.1.10

போன்சாய் மரங்கள்.

வீதியின் அகன்ற முச்சந்தி நாற்சந்திகளில்
உழுதுகிடக்கும் புழுதியின் படிமங்கள்
முழங்கால் வரையிலும்.

காயங்கள்,சிராய்ப்புகள்
காட்டாது மறைக்கப்பட்டு
வீதிச்சண்டையை வீதியில் தொலைத்து
காயும்,பழமும் நூறு முறை.

விருந்துகள் வரவறிந்தால்
கைவிரித்தோடி எதிர்கொண்டு
கைச்சுமை பகிர்ந்து
கண்களில் சிரிக்கும் பிரியமும் பாசமும்.

வறுமையும்,வெறுமையும் அறியா எனது
குழந்தைமையின் காலங்கள்
கடுகு போட்டிசைக்கும் ஒற்றை பலூனில்
எனக்கான உலகம்

ஒற்றை மகளுக்காய்
உலகின் நவீனங்கள்
ஒரு மொத்தமாய் வீட்டிற்குள்.

வாராத விருந்து வலிய வந்தாலும்
சாளரத் திரையகற்றி சின்னதாய்
உதடு விரிப்பாள்.

அல்ஜீப்ராவும்,அளவியலும்
அனிமேஷனும், ஜாவாவும்
வானவியலும்,வடிவியலும்
வசமான அளவு
வசமாகவில்லை வீதி விளையாட்டு

தனித்தனி தீவுகளாய்
சமுதாய சமுத்திரத்தில் குழந்தைகள்
அடித்து,அடிவாங்கி,
சண்டையிட்டு சமரசம் செய்து
இப்படி எதுவுமே இல்லாத பால்ய காலம்.

சூரிய ஒளியும்,சத்தான உணவும் அளந்து
கிளைகள் குறுக்கி,முடக்கி
போன்சாய்ச்செடியாய் மகள்
தொட்டிலில் இருந்து தொட்டியில் வளர்கிறாள்.

எனது கவலை எல்லாம்
இவளின் குழந்தை எப்படி வளரும்?

21.1.10

வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள்

பூமியின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலம். இதில் விளைநிலமாகப் பயன்படக்கூடிய மண் - பூமி - நிலம் என்று கணக்கில் கொண்டால் மூன்றில் ஒரு பங்கில் இரண்டு சதவிகிதம் தான்.அந்த இரண்டு சதவிகிதமும் வீட்டு மனைகளாக மாறி வருவதைப்பார்க்கும் போது, எப்படி ஒரு அழிவை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க வேண்டிய கட்டாய காலத்தில், கட்டாய நிமிடங்களில், நாமிருக்கிறோம்.கிராமங்கள் அதிகம் கொண்ட நாடு நமது நாடு.விவசாயம் தான் நமது அடிப்படையான,ஆதித்தொழில்.நம் மக்கள் ஏரை மறந்த அன்றே சீர் கெட்டுப் போனோம்.

விவசாய நண்பர்களைச்சொல்லிக் குற்றமில்லை.எங்கள் கிராமங்களில், சேற்றில் கால் வைத்தவன் பாடு கற்காலத்தை விட்டு நகராமல் இருக்கும் போது,கல்வி கற்று,"ஒயிட் காலர் ஜாப்" கலாச்சாரத்திற்கு மாறியவர்கள் பொற்காலத்தின் வசதி வாய்ப்புகளை அனுபவிப்பதைப்பார்த்து விவசாயத்தை கைவிட்டவர்கள் அதிகம்.விவசாயத்திலிருந்து, மாடுகள்,ஆடுகள்,கோழி வளர்ப்பு என்றிருந்தவர்கள் வெளிநாடுகளுக்குச்சென்று சுபிட்சம் கண்டதும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுத்தால் நம் பரம்பரையையே விவசாயத்திலிருந்து விட்டு விடுதலையாகிவிடலாம் என்று நம்ப ஆரம்பித்து,மனைவி,குழந்தைகளை வேற்று ஊர்களில் குடியமர்த்தி குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்து,இன்று கிராமங்களே வெறுமையாகிக் கிடக்கும் சூழ்நிலை. ஆக ஒரு பரம்பரை விவசாயி,விவசாயம் நம் கிராமங்களின் அடிமைத்தளை,அதிலிருந்து நம் பரம்பரையை மீட்டு விட்டோம் என்று ஆசுவாசப்படும் அளவு அவனை சிந்திக்கத் தள்ளியது நம் சமூகம். விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்தவர்களின் வாரிசுகள் பட்டம் பெற்று நல்ல வருவாயில் இருந்து கொண்டு, நாமும் மற்றவர்களைப் போல் வாங்கி சாப்பிடுவோம்,உடலை வருத்தி விவசாயம் வேண்டாம்,யாருக்காவது விற்று விடுங்கள் என்ற நிலைக்கு வந்து,விற்ற சாலையோர விளைநிலங்கள்,வீடுகளாயும்,கல்வி நிலையங்களாயும் மாறிப்போனது என்பது தான் இன்றைய நிலை.ஒரு விவசாயக்குடும்பம், தன் வாழ்நாளில் நல்ல அரிசியை குடும்பத்தேவைகளுக்கு விற்று விட்டு சூட்டடி நெல் என்ற இரண்டாம் தர நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியையும்,குருணை அரிசியில் சமைக்கப்பட்ட உணவையும் தான் உண்டு தன் வாழ்நாளைக் கழிக்கும். இன்று இந்த நிலை மாறியிருக்கிறது என்பதில் இன்றையப் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சி.(என்னையும் சேர்த்து) எங்கள் கிராமங்களில் சாலையோர கண்மாய்கள் கூடத் தூர்க்கப்பட்டு,மொத்த ஊரும் சேர்ந்து கண்மாயைப் பட்டாப்போட்டுக்கொண்ட கதைகள் உண்டு.

விவசாயம் இன்று ஒரு லாபமற்ற,நிச்சயமற்ற ஒரு தொழில்.நாட்டின் மற்ற தொழில் வளர்ச்சியடைந்து விட்டதால் விவசாய வேலைக்கு கூலியாட்கள் கிடைப்பதும் குதிரைக்கொம்பு.அரசாங்கம் கொள்முதல் விலையை அதிகரிக்கவும்,விவசாயிகளுக்கு சலுகைகளை அதிகரிக்கவும்,விவசாய நிலங்களை வீட்டு மனைகளாய் அங்கீகரிக்க மறுக்கவும் வேண்டும்.அந்தமானில் விளைநிலங்களை வீட்டு மனைகளாய் அங்கீகரிக்க நிறையக்காலம் பிடிக்கும்.அதோடு "High value agriculture" என்ற திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் அளவில் தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு 5600/ ரூபாய் மானியமும் 200 வாழை மரங்களுக்கு அதுவும் பச்சைநாடா ரகத்திற்கு மட்டும் 2600/ரூபாயும், தோட்டங்களுக்குத் தேவையான உரம்,விதை,கன்றுகள்,பூச்சிமருந்துகள்,விவசாய அதிகாரிகளின் தொடர்ந்த ஆலோசனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு விதை நெல்,உரங்கள்,பூச்சிமருந்துகள் இலவசம். ஆனால் அரசு கொள்முதல் செய்யுமளவு நெல் உற்பத்தி இல்லை.காய்கறித்தோட்டங்கள்,பூந்தோட்டம் ஆகியவற்றிற்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.தேங்காயில் இருந்து தயரிக்கப்படும் கொப்பரை வெளிச்சந்தையில் 25 - 30 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படும் நிலையில் இங்கு தீவுகளின் "விவசாயக்கூட்டமைப்பு" தீவின் தென்னை விவசாயிகளிடமிருந்து 44 ரூபாய்க்கு நேரடிக்கொள்முதல் செய்கிறது.இடைத்தரகரிடமோ,வியாபாரிகளிடமோ கொள்முதல் செய்வதில்லை.இதனால் தேங்காய்களைப்பறிக்காமல் வீணாவது தடுக்கப்பட்டதோடு,தென்னை விவசாயிகள் கொப்பரைத்தயாரிப்பில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகிறார்கள்.  Integrated Dairy Development Scheme என்ற திட்டத்தின் கீழ் பால் மாடுகள் வாங்குவதற்கும் ஐம்பது சதவிகித மானியத்தில் வங்கிக்கடனுதவி,கால்நடைகளுக்குத்தேவையான மருத்துவம்,மருந்துகள்,இனவிருத்திக்குத்தேவையான ஊசிகள், உயர் ரக ஆடுகள் கால ஒப்பந்த அடிப்படையில் இலவசமாகத்தருவது,இப்படி வசதிகளை தீவு நிர்வாகம் தருகிறது.தமிழ் நாட்டில் என்ன நிலை என்று எனக்குத் தெரியாது.ஆனால் முக்கிய பூமியில் விளைச்சல் அதிகமானால் தான்,
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அற்ற ஒன்றியப்பகுதியில் வசிக்கும்     நாங்கள் பயமின்றி,பட்டினியின்றி உணவு கொள்ளமுடியும்.


விழுப்புரம் மாவட்டம்,ஆகாசம்பட்டு விவசாயி சேஷாசலம் அவர்கள் தனது வெண்பாவில் வெளிப்படுத்துகிறார் தன் வலியை.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவரா?- அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சை எண்ணிப்பார்த் தாதெரியும்
ட்ராக்டருக்கு வள்ளுவனா ரே"

"நெத்து வெடிக்கையிலே பத்துகிலோ, தேன்தடவி
அத்தை உடைச்சாக்க ஆறுகிலோ - குத்தி
எடுத்துப் பொடைச்சாக்க அஞ்சுகிலோ ஆச்சே
அடச்சாமி இந்த உளுந்து"

இப்படித்தான் உழுதவன் கணக்குப்பார்த்து உழக்கு கூட மிஞ்சாது விவசாயத்தைக் கைவிட்டது விவசாயக்குடும்பங்கள்.எங்கள் கிராமங்களில் தோட்டம் போடவேண்டிய கட்டாயமின்றி,கால்நடைகள் வளர்க்க வேண்டிய கட்டாயமின்றி , பெண்களும்,ஆண்களும் நகர வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக்கொண்டனர்.நிலத்தையும்,மண்ணையும் நேசிப்பவர்கள் (என்னைய மாதிரி!) இப்படிக் கவிதையும் கட்டுரையும் எழுதிக்கொண்டு.இந்தத்தலைமுறையின் புத்தகங்களில் கூட இல்லை விவசாயத்தின் பெருமை சொல்லும் பழமொழிகள்.விதைக்கிற அன்னிக்கு ஊருக்குப்போயிட்டு அறுக்கிற அன்னிக்கு வந்து அழுதா முடியுமா?,ஆடிப்பட்டம் தேடி விதை,அகல உழுவதை விட ஆழ உழு,காற்றுள்ள போதே தூற்றிக்கொள் (எனக்கும் மறந்துவிட்டது)  இந்தப்பழமொழிகளுக்கும், வயல்,வரப்பு,நாற்று,நடவு,களையெடுப்பு,களம்,கதிர்,போரடித்தல்,நெற்பொலி இந்த வார்த்தைகளுக்கும் இன்றையத்தலைமுறைக்கு அர்த்தம் தெரியாது.அமெரிக்க நாட்டின் வேளாண் துறை விஞ்ஞானி ஒருவர்,"இந்தியாவின் நீர்ப்பாசன நிலப்பரப்பு கிட்டத்தட்ட அமெரிக்காவிற்கு இணையாக இருக்கிறது.ஆனால் உணவு உற்பத்தியில் இந்தியா அமெரிக்காவைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு பின் தங்கியிருக்கிறது.இதற்குக் காரணம் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா பின் தங்கியிருப்பதுவே. ஆனால்,இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் மற்ற பகுதிகளைவிட நான்கு மடங்கு உற்பத்தி பெருக்குகின்ற விஞ்ஞானம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் இது நமக்கெல்லாம் பெருமை.

20.1.10

பிரிவினைக்கோடுகள்

இன்று
ஒரே தாயிடம் சூல் கொள்கிறார்கள்
பாண்டவரும்,கௌரவரும்.

பாஞ்சாலிகள் வரும் வரை
பாண்டவர்கள் தான்.
பாசத்தையும்,பிரியத்தையும் மட்டுமே
பகிர்ந்து கொண்டவர்கள்
பாஞ்சாலிகளின் வருகைக்குப்பின்
பங்கீட்டை மட்டும் விவாதிக்கிறார்கள்.

தூது வரும் கண்ணபிரான்கள்
ஒரு வீட்டு நெருப்பெடுத்து
ஒரு வீட்டில் பற்ற வைத்து- அவர்களின்
ஒற்றுமைக்கு உலைவைத்து.

முகப்பு, வளவிலிருந்து அடுப்படி வரை
பாகம் பிரித்து கோடு போட்டு
அண்ணனும் தம்பியும் பங்காளிகளாய்..
ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட
வேற்றுமை விதைகளின் விஷம்
வேர்வழி ஊடோடி விழுதுகளுக்கும்.

குருஷேத்திர சீற்றம்
பிடரி சிலிர்த்த சிங்கமென மனங்களில் புரண்டு
சந்தர்ப்பங்களுக்காய் காத்திருக்க.

கோடுகள் அழியும்
நாட்களுக்காய்
நம்பிக்கையற்றுக்காத்துக்கிடக்கும்
நவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்...

18.1.10

பெண் பார்க்கும் படலம்

புன்னகையும்  பொன்னகையும்
கடன் வாங்க வேண்டியில்லாதிருந்ததால்
பொலிவாய்த்தான் இருந்தேன் நான்.

பெற்றோருக்கும்,உற்றோருக்கும்
மாப்பிள்ளைக்கு
என்னை பிடிக்க வேண்டுமே என்ற கவலை தான்
மாப்பிள்ளையை
எனக்குப்பிடிக்க வேண்டி
கவலை இல்லை யாருக்கும்

வந்தவர்கள் அளந்தார்கள்
உச்சி முதல் பாதம் வரை.
"கறுப்புதான் ஆனாலும் படிச்சிருக்கு"
"அஞ்சு பொண்ணாம் ஆனாலும் நல்லா செய்வாகளாம்"
குறைகளை நிறைகளோடு
சமரசம் செய்தார்கள்.

நாற்றங்காலில் நாற்றுப்பறிக்க வந்த விரல்கள்
நாற்றின்
உணர்வு  வேர்களை வலிக்கப்பறித்ததில்
வெறுப்பு தனியாய் வேர் கொண்டது.
நாற்று , நடவு வயலில் தன்னை நட்டுக்கொண்டு
வேர் பிடித்து,கதிர் விரித்து
செழித்த போது
விரல்கள் மீதான வெறுப்பு
தனியாய் விருட்சமாகி விட்டிருந்தது


இப்படித்தான்
சம்பிரதாயச்சடங்குகள்
உறவுகளின் அன்னியோன்யத்தை
அன்னியமாக்கி விடுகிறது.
இன்றும்.


இப்படித்தான்
கிராமங்களில்
மாமியாரும் நாத்தனாரும் பூச்சாண்டிகளாகின்றனர்
ஆண் மகனின் குழந்தைகளுக்கு.

உள்ளே உறங்கும் குழந்தை

திருவிழா முடிந்து
வெறுமையாகிக் கிடக்கும்
கிராமத்து வீதிகள் கண்டு
கண்கலங்கியழுத அறியாமை

உயர உயரப் பறந்த பட்டம்
நூலறுந்து
மின்சாரக்கம்பிகளில் குலைந்த வருத்தம்

மண் குடத்தில்
ஊரணி தண்ணீர் எடுத்து வந்து
தலையோடு குடமுடைந்து
தண்ணீர் வழிந்து நனைந்து நின்றது

கண்மாயில்
நீச்சலறியாது
கரையிலமர்ந்து நீச்சலில் திளைப்பவர்களை
பொறாமையில் வெறித்தது.

புதுப்பாவாடை,தாவணி
பிடித்த மாதிரி அமைந்துவிட்டால்
புதுபுதுக்கனவுகளில் தூக்கம் தொலைத்தது

பூ,நகை,புடவை
புதிதாய் கிடைத்துவிட்டால்
உலகமே கிடைத்ததாய்
உருகிக்கிடந்தது.

புதுப்புது சமையல்
முயன்று பார்த்து
அப்பா,அம்மா,உறவுகள் தட்டிக்கொடுக்க
ஒற்றைப்புன்னகையில் கர்வம் கொண்டது

கல்லூரி முடித்து
கனவுகள் கலைத்து
சிந்திக்கக் கற்றது.

இப்படி மலரும் நினைவுகளை
மனதில் அசைபோட
பெரிய மனுஷி உறங்கிப்போனாள்.
உள்ளே உறங்கும் குழந்தை விழித்துக்கொண்டது

17.1.10

நெல் குதிர்,கதிர்க்களம், பத்தாயம்

விளைச்சலின்றி
வெறுமையாகிப்போன வயல்களால்
கதிர்க்களமும்
நெற்குதிரும் அர்த்தமற்று...
கேள்வியில் துளைத்து
பதிலுக்குத் திணறும் நான்.
குட்டிக்குழந்தைகளுக்கு எக்காளம்.
எப்படிச்சொல்வது?

திண்ணைகளற்றுப்போனதால்
சிரிப்பும் பேச்சுமற்ற தெருக்கள்
சுவர்களில் வேலி எழுப்பி
பக்கத்து வீடு
பாகிஸ்தானைப்போல
நெற்குதிர்,
பத்தாயம் விடை தேடி
பாட்டி வீடு போனால்
பாட்டியோ
வெற்றிலை குதப்பி ஊடகத்தில் விழிகள் நாட்டி
"நெல்லுக்கொட்டறதுன்னு சொல்லு"

நெல் விளையும் மரம் எது?
எப்படிச்சொல்ல பதிலை?
எப்படிச்சொல்ல
எக்காளம் மறைய!
யோசித்துக்கடக்கையில்
கண்களில் பட்டது
சிட்டுக்குருவி அலகிலிருந்து
தவறிவிழுந்த நெல்மணி

16.1.10

ஒரு சமூகத்தின் எழுச்சி

அந்த நாட்களில் எங்களின் பாலைய நாட்டு கிராமங்களில் ஒருவர் இறந்து போனால் அதை மற்ற பதினைந்து கிராமங்களுக்கும் தெரியப்படுத்த ஒரு சமூக சகோதரர்களை அனுப்பி வைப்பார்கள்.அவர்களை ஊருக்குள் பார்த்ததுமே அறிமுகம் தேவையின்றி முகமே காட்டிக்கொடுக்க எதிர்ப்படுபவர்கள் விசாரித்து உரியவர்களிடம் சொல்லிவிடுவார்கள்.பேருந்து நிறுத்ததில் இறங்கி வீடு வரை ஒப்பாரி வைத்து அழுதுவரும் உறவுகளை கொட்டு கொட்டும் சகோதரர்கள் கொட்டு முழக்கி கூட்டிவருவார்கள்.

பிறகு கோட்டை கொண்டு வருபவர்களை அழைத்து வர,பிணம் குளிப்பாட்ட கண்மாயில் தண்ணீர் எடுத்து வர,இறுதி ஊர்வலத்தில் கொம்பு முழங்க,தாரை,தப்பட்டை முழங்க ஆடியபடி செல்வார்கள்.பிணத்தை புதைக்க வேண்டுமானால் குழிதோண்டுவதும், எரிக்க வேண்டுமாயின் அதற்குத்தக ஏற்பாடுகளைச்செய்வதும் அந்தச்சகோதரர்கள் தான்.அவர்கள் வீட்டுப்பெண்கள் நாற்றுப்பறிக்க,நடவு நட,களையெடுக்க,கதிர் அறுக்க, தோட்ட வேலை,வீட்டின் கட்டுத்தறி சுத்தம் செய்ய என்று வீடுகளுக்கு வருவார்கள்.இவர்களில் ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் என்று பேசிக்கொண்டு வேலை செய்வார்கள்.'எங்க ஐயா வீடு' என்ற உரிமையோடு தலைத்துண்டை இடுப்பில் கட்டி,காலணிகழற்றி,கைகட்டி படு மரியாதையாய் நிற்பார்கள்.பெண்களும் அப்படித்தான்.இது காலம் காலமாய் தொடர்ந்து வரும் ஒரு பழக்கம்.அடிமைத்தனமென்று அறியாமலே அடிமையாய்க்கிடந்த இந்தச்சமூகம் ஒரு நாள் விழித்துக்கொண்டது.

புலம் பெயர்ந்த மக்கள் வெளியுலகம் அறிந்து,விழிப்புணர்வு பெற்றதும்,அந்த விழிப்புணர்வை தம் இனம் எங்கும் பரப்பியதும், வெளிநாடுகளுக்கு பணிபுரியச்சென்று பொருளாதார மேம்பாடு பெற்றதும்,கல்வியின் அருமை உணர்ந்து தம் வழித்தோன்றல்களுக்கு கல்வியறிவு தந்ததும் அவர்களின் சுய மரியாதையும்,வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.எந்த இனம் ஊரின் தள்ளுப்பட்ட,கடைநிலை இனமாக இருந்ததோ இன்று அவர்களும் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக வாழ்கிறார்கள். இப்போது அவர்கள் யாரும் பிணம் எரிக்க,புதைக்க,கொட்டு கொட்ட,கொம்பூத வருவதில்லை.பெண்கள் வயல் வேலைக்கு வருவதில்லை.இளையதலைமுறை ஒன்று கூடி தம் இனத்திற்கு விழிப்புணர்வு ஊட்டி நல்வாழ்க்கை வாழ வழி செய்துள்ளனர்.இன்று அவர்கள் வாழும் பகுதிகள் குடிசைகளின்றி, தாரிசு வீடுகளும்,அடிப்படை வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.கோவில் திருவிழாக்களில், ஊர் மக்களுடன் ஒன்று கலந்து கொண்டாடிமகிழ்கிறார்கள்.

ஒற்றுமையும், உழைப்பும்,விடாமுயற்சியும் இருந்தால் ஒரு இனம் தன் நிலையை உயர்த்தி பெருமையுடன் வாழமுடியும் என்று நிரூபித்த அவர்கள் இனத்தின் பெயரால் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு ஒரு முன்மாதிரி.நான் குறிப்பிடும் அந்த இனத்தின் உயர்வைக்காண வேண்டுமாயின் எங்கள் ஊருக்கு வாருங்கள்.காலகாலமாய் ஊருக்குள் காலணி அணிந்து நடக்கக் கூட தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு இனம், தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஓர் இனம் எழுந்து நிற்பதில் பெருமையும்,நெகிழ்ச்சியும் தான்.உயரவேண்டுமென்று உறுதி கொண்டுவிட்டால் தடைக்கற்களும் படிக்கற்கள் தான்.இதை வாழும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்கள் இவர்கள்.

எந்தப்போராட்டங்களும் இல்லாமல்,மனச்சங்கடங்களும் இல்லாமல் அந்தச்சமூகம் சாதித்ததன் அடிப்படை கல்வி,பொருளாதார மேம்பாடு,ஒற்றுமை,இளைய சக்தியை முழுமொத்தமாக எந்த விமர்சனமும் இன்றி பயன்படுத்திக்கொண்ட அந்த சமூகத்தின் மூத்த தலை முறை.ஆக ஒரு சமூகத்தின் விடியல் அவர்கள் கையில் தான் இருக்கிறது.மொத்த சமூகமும் தனது முன்னேற்றத்தை ஒருவழியாக எண்ணம் குவித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அவர்களை வழிமறிக்கும் சக்தியும் இந்த உலகில் உள்ளதா என்ன?

தேவை ஒரு வழிகாட்டி

தமிழக கிராமங்களின் இயற்கையோடு கூடிய வாழ்க்கை- பனிநேரத்தில் சூரியக் கதிர்கள் பூமியைத் தொடும் ஆரம்பக்காலையின் அமைதியை ரசித்தபடி பருகும் சூடான தேநீரை சொட்டுசொட்டாக அருந்தி சுவைக்குமொரு உணர்வினைப்போல் வாழ்க்கையின் அத்தனை கோணங்களையும் வாழ்ந்து,சமூக மதிப்பீடுகளின் வகையறிந்து,நியாய,அநியாயங்கள் உணர்ந்து ஊருக்கு சொல்லும் உபதேசங்கள் தான் இல்லத்திலும் என்று இலக்கோடு வாழ்ந்து, இன்பதுன்பம் வாழ்வின் இயல்பென்று எதார்த்தங்களை ஏற்று வாழும் மனிதர்களை நகர் இயல்பு பயமுறுத்துகிறது.வாகன இரைச்சலும்,பேராசை மனிதர்களும்,யாரையும் வீழ்த்தி தான் மட்டும் மேலேறும் நண்டின் கூறுகளும் விதைக்கப்பட்ட பெரும்பான்மை மனிதர்களின் உலகமாக நகரங்கள் இருக்க அதன் ஆடம்பர சரிகை மின்னல்கள் இளையோரை வீழ்த்தி இகழ்ச்சியாய் பரிகசிக்க அவர்களும் தயாராகிவிடுகிறார்கள் நிலத்திற்கேற்ற திரிபுகளோடு.இவர்கள் பாடு குற்ற உணர்வற்று ஒன்றிப்போக நாம் எங்கே போகிறோம் என்ற கவலையோடு வருபவர்கள் பாடு நகரங்களில் ஒன்றவும் முடியாது,தொடரவும் முடியாது வெறும் பொருளாதார மேன்மைக்காக தன்னை மறந்த இயந்திர வாழ்க்கைக்கு அடிமையாகிப் போகின்றனர்.சொந்த இயல்புகள் மறந்து போய்,திணிக்கப்பட்ட உணர்வுகளோடு,சீக்குப்பிடித்த சிந்தனையும்,தெளிவற்ற எண்ணங்களுமாய் மனவளமற்று மறுகித் தவிக்கும் நிலை தான் இன்று நகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் பாடு.

நகரத்தின் கூறுகளை,ஊடகங்களின் உபயத்தால் மனதளவில் கொண்டுவந்துவிட்ட கிராமமக்கள் பாடு இன்னும் திண்டாட்டமாகப் போய்க்கொண்டிருக்கிறது.பேராசை,எதையாவது எதிர்பார்த்து உறவுகளைக்கொண்டாடும் மனோபாவம்,நான்,எனது என்ற சுயநலப்பார்வை,உடல் உழைப்பிற்கு சோம்பித்திரிவது,அடுத்தவர் உயர்வு கண்டு பொறாத குணம்,நியாமற்ற வம்புப்பேச்சுகள்,கடமை உணர்வற்று,பொறுப்புகளைத்தள்ளிவிடும் மனோபாவம் பெருகிவருகிறது.மேலைநாடுகள் நாகரீக உச்சியில் வெறுப்படைந்து நமது எளிமையை நாடி வாழ்க்கைமுறையை மொத்தமாக மாற்றி அமைக்கத்துடிக்க நாம் நமது இயல்பு மாறி நாகரீக உச்சியை நோக்கிப்பயணிக்கிறோம்.அந்தமான் போன்ற அமைதியான இயற்கைச்சூழலில் இயல்பான நீரோட்டம் போல் தெளிந்த வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் தாயகத்தில் நகரங்களையும் ஏற்க இயலாது,சொந்த கிராமங்களையும் ஏற்க இயலாது பொய்முகங்களுடன் புன்னகை புரிய வேண்டிய சூழல்.

வருடத்தின் சேமிப்புகளைக் கரைக்கவென்றே முக்கியபூமிப்பயணம் மேற்கொண்டும் எப்போது நம் ஊர் செல்வோம் என்று தவிக்கும் மனதோடு தான் சுற்றிவரவேண்டிய நிர்ப்பந்தம்.எல்லோர் முகத்திலும் ஒரு அந்நியத்தனம்.அவர்கள் மாறிவிட்டார்களா? இல்லை நமது பார்வை மாறிவிட்டதா? என்ற கேள்விகள் தாம் சுழல்கிறது மனதில்! எங்கள் ஊர்களில் கோவிலில் பிரார்த்தனை முடித்து ஊரணிக்கரைப்படிக்கட்டில் அமர்ந்து இளமை நாட்களை நினைவு கூர்வது வழக்கம்.இப்போது பாசிபிடித்து நாற்றம் எடுக்கும் ஊரணிகள்.வீட்டுக்குவீடு குழாய்த்தண்ணீர் வந்துவிட்டதால் ஊரணிகள் கவனிப்பாரற்று.ஊர்த்திருவிழாவின் போது தெய்வத்திருமஞ்சன நீராட்டிற்கு காலம் காலமாக ஊரணியில் தண்ணீர் எடுக்கப்படும் காலம் போய் இன்று கோவிலுக்குள்ளேயே கிணறு அமைத்து குழாய் வழி வரும் தண்ணீரில் திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஊரின் நில அடையாளமாகச்சொல்லப்பட்டு வந்த ஊரணி கேட்பாரற்று.பெண்கள் சிலர் மலரும் நினைவுகளில் வருத்தமடைந்தாலும் ஆணாதிக்க சமுதாயமான எங்கள் ஊரில் இந்தக்குரல் எடுபடாது.

மழைக்காலத்தில் மட்டும் நீரோடும் ஆறு எங்கள் ஊரில் உண்டு.தண்ணீர் வற்றியதும் அந்த ஈரமணல் பரப்பில் பசுமையான தாழம்புதர்கள் உண்டு.அந்தப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் இருப்பிடங்களின் எல்லைகளை நகர்த்தி ஆற்றைக் குறுக்கியதோடல்லாமல்,ஆற்றின் அமைப்பைக்கால்வாய் ஆக்கி,கழிவிடமாக்கி இன்று சப்பாத்திகள்ளியின் விளைவிடமாய் ஆகிப்போனது.இப்படி எங்கள் கிராமத்தின் அடையாளங்களை அழித்து, முன்னேற்றம் கண்டு விட்டதாய் பிதற்றும் ஊர்மக்களைப் பார்க்கும் போது கசப்பு ஊறுகிறது மனதில்.வீட்டு வேலை,வயல் வேலை,ஆடு,மாடுகள்,தோட்டமிடுதல்,ஊர்ச்சாலையில் கீரைகள்,காய்கறிகள் வியாபாரம் என்று சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்த பெண்கள் இப்போது படிப்பு,பக்கத்து நகரங்களுக்கு வேலை,ஊடகம் என்று முடங்கிப்போய், பருத்த உடலுடன் வியாதிகளின் கிடங்காய்,நொந்து வாழும் வாழ்க்கை. பலர் முகத்தில் உற்சாகம் இல்லை.சிலர் முகத்து உற்சாகமும் பலரின் வம்புகளால் திருடப்பட்டுவிடுகிறது.வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை நல்லெண்ணங்கள் களையப்பட்ட மனங்கள் எப்படி உற்சாகத்தை உருவாக்கும்.உழைப்பு இருந்தால்,செல்வம் வரும்.செல்வம் வந்தால்,தன்னம்பிக்கை வரும்.தன் மேல் நம்பிக்கை உள்ள ஒரு மனம் அடுத்தவரைப்பார்த்து பொறாமை கொள்ளாது.அதோடு தன் தேவைகளை தெளிவாய் அறிந்து அதைத்தேடும் மனது ஒரு நாளும் அமைதியை இழக்காது.அடுத்தவரின் உடமைகளைப்பர்த்து அது நமக்குத் தேவை இருக்கிறதோ,இல்லையோ அது வேண்டி தன் அமைதி இழக்கும் மொத்தக்குடும்பத்தின் அமைதி இழக்கும் குணம்,தன்னம்பிக்கை, உழைப்புமற்ற மக்களின் நோய் தீர என்ன செய்வது? யாராவது வழிகாட்டுங்கள்!

12.1.10

நிலாச்சோறு

      ஒவ்வொரு தாயும் கண்டிப்பாகத் தன் மக்களுக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டியிருப்பார்கள்.நான்நமதுஇளம்பிராயத்தைச்சொல்கிறேன்.இப்போதெல்லாம் தொலைக்காட்சி காட்டி பயமுறுத்தி,அலைபேசியில் அளவளாவி சோறு ஊட்டுகிறார்கள் இளம் தாய்மார்கள்.அது சரி. இதெல்லாம் காலத்தையும் வசதியையும் பொறுத்தது.நாங்கள் சிறுபிள்ளைகளாய் இருந்த போது ஞாயிற்றுக்கிழமைகளில் பௌர்ணமி வந்தால் நிலாச்சோறு கண்டிப்பாக உண்டு.சில நினைவுகள் தரும் சுகம் இருக்கிறதே அது அனுபவிப்பவர்களுக்குத்தான் புரியும்.நினைவுகள் சட்டென்று புன்முறுவலையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கும்.காலத்தையும்,நிகழ்வுகளையும் மீட்டெடுக்கும் சக்தி மனிதனுக்குத் தரப்பட்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் தரவேண்டும் என்று தான் இறைவன் நினைவுகளைத் தந்தாரோ?நினைவுகளை மீட்டெடுக்கும் போதுகளில் உடலின் பிராயம் மாறாது போனாலும் கூட மனதின் பிராயம் மாறித்தான் போகிறது.கடலை உருண்டையும்,இலந்தப்பழத்தையும் பார்த்ததும் பள்ளிநாட்கள்ஞாபகம் வருவதுபோல். மீண்டுவருவதைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சுவாரஸ்யம்,அதை எழுத்தில் வடிக்கும் ஒரு சுகம் இந்த நிலாச்சோறைப்பகிர்ந்து கொள்வதில் கிடைக்கிறது.   ஞாயிற்றுக்கிழமை எங்கள் அப்பாவிற்கு கடை விடுமுறை.அன்று நிலவு புறப்பட்டதுமே,'ம்ம்,இன்னிக்கு வாசல்ல சாப்புடலாமா? மணி என்ன சாந்தி பாரு',அப்பா சொல்லுமுன்னே சடக்கென ஓடி,'அப்பா ஏளு'. 'சரி இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும்' என்று வாசலில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து அப்பா அமர,என் அம்மா அருகில் திண்ணையில் அமர நாங்கள் என்ன வேலை செய்தாலும்,படித்தாலும் அப்படியே மூடிவிட்டு வாசலில் வரிசையாக,வசதியாக அமர்ந்து கொள்ள எங்கள் பெற்றொரின் பிறந்த கதை,வளர்ந்த கதைகள் மொழியப்படும்.சில கதைகள் சிரிப்பையும்,சிலகதைகள் சோகத்தையும் பிரதிபலிக்கும்.வறுமையின் நிறம் என்றும் சிவப்பு தானே.

        எட்டு மணி ஆனதும் பிரம்புப்பாய் எடுத்து வந்து சாணம் தெளித்த வாசலில் விரித்து,சாப்பாட்டு பாத்திரங்களைப்பரப்பி,தட்டுக்கழுவி அரைவட்டமாக உட்கார நடுவில் என் அம்மா அமர்ந்தபடி பரிமாறுவார்கள்.ஒவ்வொரு முகத்திலும் நிலா வெளிச்சம் ஒரு குளுமையை உண்டாக்கி சாந்தமான அழகை வெளிப்படுத்தும்.வாசல் விளக்கையும் எரியவிட்டு நிலவு வெளிச்சத்தில் சாப்பிடுவோம்.ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட நிலா வெளிச்சம் இருக்கிறதே என்று சாப்பிட எத்தனிக்க என் அப்பாவோ 'இருங்க. அம்மா விளக்கேத்திக்கிட்டு வரட்டும்' என்றார்கள்.என் அப்பா எப்போதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் விளக்கேற்றியதும் சாப்பிட்ட கையைக் கழுவி விட்டு பின் சாப்பாட்டைத் தொடர்வார்கள்.அன்றும் அது போல கை கழுவி சாப்பாட்டைத் தொடர எப்போதும் கேட்கத் தோணாது போன கேள்வி அன்று தோன்றியது.'ஏம்ப்பா கை கழுவிட்டு சாப்புடுறீங்க' என்றதும் 'அது சும்மா தான்.நீ சாப்புடு' என என் அம்மா கதை சொல்லத் தொடங்க என் அப்பா,'புள்ளைக பயப்படுங்க' என்று தடுக்க நாங்கள் வற்புறுத்த அம்மா சொல்லத் தொடங்கினார்.'இப்புடித்தான் எங்க ஊர்ல ஒரு வீட்டுல நிலாச்சோறு வாசல்ல சாப்புட்டாங்களாம்.அப்ப காத்துல வெளக்கு அணைஞ்சு போயிடுச்சாம்.அவுக மறுவடி வெளக்க ஏத்திட்டுப் பாத்தா அவுக தட்டுலருந்த மாங்கொட்டையக் காணுமாம்?நீ எடுத்தியா? நீ எடுத்தியான்னு ஒருத்தர ஒருத்தர் கேட்டு இல்லையின்னு சொல்லிக்கிட்டு இருக்கையில கொல்லச்சந்துல சீச்சீ கொசவ வீட்டு மாங்கொட்ட ஒரே புளிப்புனு சத்தம் கேட்டுச்சாம்.அது யாரு பேயி.அதுனால தான் கரண்டு இல்லாதப்ப காத்து கருப்பு சாப்புடும்னு கையக்கழுவிட்டு சாப்புடுறாக' என்று என் அம்மா கதை முடிக்க நான் தட்டோடு எழுந்து,'நெலாச்சோறும் வேண்டாம்.ஒண்ணும் வேண்டாம்.வாங்க உள்ள' என்று நடுங்க என் அப்பா தன்னருகில் அமர்த்திக்கொண்டு, 'நா இருக்கையில எம் புள்ளைக கிட்ட ஏதாச்சும் வருமா? சும்மா சாப்புடு' என்று தைரியம் கொடுத்தாலும் இன்றும் இருட்டு எனக்கு பயம்.இறந்த வீடுகளுக்குப்போய் வந்தால் பிணம் கட்டுகளுடன் தலை மாட்டில் நிற்பது போல் கனவு வரும்.மிகத்தைரியமான பெண் என்று யாராவது சொன்னால் என் கணவர்,'ம் வாங்க.கரண்ட் இல்லாத நேரம் வந்தீங்கன்னா நீங்க இன்னொரு சாந்தியப்பாக்கலாம்' என்று வாரினாலும் என் அம்மா,தங்கைகள்,என் கணவர் எல்லோரும்,' ஐயோ! இருட்டுன்னா அவ பயப்புடுவா' என்று அக்கறைப்படும் போது சில பலவீனங்கள் கூட இப்படித்தான் அழகாகிறது பேய்க்கதைகள் கேட்பதில்,பேய்ப்படங்கள் பார்ப்பதில் அலாதிப்பிரியம்.


         இன்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பௌர்ணமி வந்துவிட்டால் நிலாச்சோறு ஞாபகம் வந்து உற்சாக ஊற்றுகளை அடைக்கும்.யாருமறியாது கண்ணீரையும் நினைவுகளையும் பத்திரப்படுத்துவேன்.யார் கண்டார்கள்.வாழ்க்கையின் கடைசி தினங்களில் துணை வருவதற்கு இந்த நினைவுகள் பயன்படுமாயிருக்கலாம்.என் இதழ்களில் புன்னகை வரவழைக்கும் காரணிகளாக இவை இருக்கலாம்.அதனால் வலைப்பூவில் பகிர்ந்து கொண்டாலும் கூட பத்திரமாய் வைத்திருக்கிறேன் அந்த வண்ண நினைவுகளை!

பொங்கல் பாட்டு

கோவில் வீடுகளில் பங்காளிகள் ஒன்று கூடி பொங்கலிடும் போது பெண்கள் பாடும் குலவைப்பாட்டு இது.

பக பக சூரியரே! பகலெல்லாம் தற்காத்தவரே!
நருலப்படச்ச நல்ல பகவானே
மனுவப்படச்ச வருண பகவானே
நாக்குத்தவறாம நன் நாக்கும் குன்னாம
சேதி தவறாம சிந்தாம நீ காக்க
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

தெக்க தெக்க போகுமா வெத்திலக்கொழுந்து
சேமந்தடுக்குமாம் செங்கழனிப்பானை
முத்துக்குங்கீழே மொளிக்கரும்ப நட்டுவச்சு
மூவாயிரங்கோட்டைய கல்லாச்சமச்சு வச்சு
எட்டாட்டுக் கொம்பு வந்து இளங்காட்டு முள்ளு வந்து
மானு வந்தடையவே மயில் வந்து கூவவே
மனங்குளிரப் பாப்பாளாம் மகிழ்ச்சியுள்ள தையம்மா
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

மஞ்சலொரு மஞ்சள் மனக்காட்டு மஞ்ச
ஏழு பொதியில எடுத்துவிட்ட மஞ்ச
அஞ்சு பொதியில அள்ளிவிட்ட மஞ்ச
தும்பப்பூ போல துரத்திவிட்ட மஞ்ச
ஆவரம்பூ போல அள்ளிவிட்ட மஞ்ச
கொன்னப்பூப்போல கொட்டிவிட்ட மஞ்ச
ஆமணக்கந்தண்டு வெட்டி பூமணக்கம்போட்டு
அதுள நடப்பாளாம் அழகான தையம்மா
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

அடுப்பு மொழுகி அச்சாணிக் கோலமிட்டு
நச்சரகம் போல நாளி உமிப்பரப்பி
சீரகம் போல சிறுகத்தணற்பரப்பி
பான கழுவி பன்னீர் உலை வார்த்து
ஒத்த விறகு வச்சு ஓவியமாத்தீ மூட்டி
நாழி வரகரிசி தீட்டி உலையிலிட்டு
வரகரசி பதம் பாக்க வாராளாம் தையம்மா
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

பொங்கலோ பொங்கல்.பொங்கப்பொங்க பொங்கல்
பொங்கலோ பொங்கல்.பொங்கப்பொங்க பொங்கல்

( இப்படி நீளும் பெரியபாட்டு இது!)

11.1.10

மனித நேயம்

பஞ்சம் பிழைக்க வேண்டி
பரதேசம் போன போதும்
கூட வந்த உறவுகளும்
கூடாத போதுகளில்
கை கொடுக்கும்
ஆடுகளும், மாடுகளும்
வியாபாரச்சரக்குகளாய்...
உயிரைப்பொருளாக்கி
ஊரானுக்கு விற்றுவந்த
குடியானவன் மனது
குமையும் இயலாமையால்.

கொட்டகை வெறுமை கண்டு
கொண்டவள் முகம் கறுக்க
கொஞ்சி வளர்த்த பிள்ளை அழுது முகம் சிவக்க
விற்றவன் மனதோ விம்மி அழும்
காலத்தின் கொடுமை என்று.
ஐந்தறிவு ஜீவனையே
அணைத்து வளர்த்த மக்கள்
"அறியாமை கொண்ட பட்டிக்காட்டான்"
பகரும் நகர அகராதி.

அழுக்கு வேட்டி கிராமத்தான்
அறியாது கேட்கிறான்
பெரிய மனிதர்களே சொல்லுங்கள்.
"மனித நேயம்"சொல்லுக்கு
அர்த்தமுண்டா உங்கள் அகராதியில்.
சந்தி சிரிக்கிறது.
சாண் வயிறு எரிகிறது.
ஊடகப் படம் கண்டு
உலகே சிரிக்கிறது
போங்கய்யா! நீங்களும்,உங்கள் நாகரீகமும்.

லெட்சுமிப்பசு.

        பலாப்பட்டறை,கருவேல நிழல் இந்த இரண்டு வலைப்பூவிலும் 'லெட்சுமிப்பசு' குறித்த பதிவு பார்த்ததும் எங்கள் வீட்டு லெட்சுமிப்பசு ஞாபகம் வந்துவிட்டது.சிலநேரங்களில் சிலமனிதர்களால் தர இயலாத நெகிழ்ச்சியை, மனிதர்கள் தொடமுடியாத நமது மனதின் உயிர்ப்பான பக்கத்தைத் தொட்டுவிடும் வல்லமை நமது வளர்ப்பு பிராணிகளுக்குண்டு.இதை பிராணிகளை அன்போடு,தாய்மையோடு வளர்க்கும் அத்தனை உள்ளங்களும் அறியும்.முதன்முதலில் லெட்சுமி எங்கள் வீட்டிற்கு வந்தது ஒரு வெள்ளிக்கிழமை.என் அம்மா கற்பூரம் காட்டி குங்குமமிட்டு "ஐயோ! எவ்ள அழகு.எங்க புடிச்சீங்க இத" என்று கேட்க என் அப்பா," அத ஏன் கேட்கிற? தரகர் காமிச்ச மாடெல்லாம் எனக்குப்புடிக்கல.யோசனையா ஆத்தங்குடிப்புள்ளையார் கோவில்ல உக்கார்ந்திருந்தப்ப மாடுகள மேச்சு அந்த வழியா ஓட்டிக்கிட்டு போனாங்க.நான் தரகர் கிட்ட இந்த மாதிரி மாடா இருந்தாத் தேவல.பாருங்க மகாலக்ஷ்மி மாதிரி இருக்குன்னேன்.ஓட்டிக்கிட்டுப்போனவரு காதுல விழுந்து இது கூட விக்கறது தாங்க.வேணுமின்னா வீட்டுக்கு வாங்க வெல பேசுவோம்னாரு.போயி பேசி கன்னோட ஆயிரத்து ஐநூறு ரூபாய்னு வாங்கியாந்தாச்சு.சந்தோசமா?"மாட்டைத் தொட்டு தடவி ரசித்தும் அடங்கவில்லை எங்களுக்கு.அக்கம் பக்கம் விலை அதிகம் என்று சொன்னாலும் என் அம்மாவிற்கும்,எங்களுக்கும் பிடித்ததால் என் அப்பாவிற்கு நிரம்பப்பிடித்துவிட்டது.அதன் அடர் மையிட்டது போன்ற அகன்ற பிரகாசமான விழிகள்,சீரான அழகான கொம்புகள்,நல்ல வாளிப்பான உடல்,அதன் பால் நிறம் அனைத்தும் கவர்ந்துவிட்டது.விளையாட அழைத்த பிள்ளைகளிடம் நாங்கள் மாட்டைக்காண்பித்து வரமறுத்து துள்ளும் கன்றோடு விளையாட,திண்ணையில் உட்கார்ந்திருந்த என் அப்பாவும்,சித்தப்பாவும் புன்னகைகளைப் பரிமாறியபடி,"மாடு முட்டும்,பாத்து" என்றுவிட்டுப்போனார்கள்.அக்கம் பக்கம் பிள்ளைகளுடன் பெருமை அடித்து மாளவில்லை.நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி ஏக மனதாய் அதற்கு லெட்சுமி என்று பெயர் சூட்டினோம்.நாங்கள் எத்தனை முறை அழைத்தாலும் வாளாவிருக்கும் பசு என் அம்மா அழைத்தால் மட்டும் அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பும்.பால்,தயிர்,நெய்,பால் டிப்போவில் முதல் தேதி பாலுக்குப்பணம் கிடைக்கும் போது கூடவே கிடைக்கும் பால்கோவா இவற்றால் மனதும் வயிறும் நிரம்பிப்போனது.

      அதன் பிறகு சொந்த ஊரில் இருந்து என் அப்பா கடைவைத்திருந்த அறந்தாங்கிக்குப் போன போதும் மாட்டுவண்டியில் பின்னால் கட்டி கூட்டிவந்த அன்று இரவு லெட்சுமிக்கு என் அம்மா புளிய இலை,வேப்பிலை வேக வைத்த தண்ணிரால் குளிப்பாட்டி கொட்டகையில் கட்டிவைத்தார்.அறந்தாங்கியில் சுற்றிலும் கிராமங்கள் என்பதால் செவ்வாய்க்கிழமை சந்தையில் வைக்கோல்,தினம் பெண்கள் விற்கும் புல்கட்டு என்று லெட்சுமிக்கு ஏகப்பராமரிப்பு."நமக்கு சாண் வயிறு,அதுக்கு சதுரமெல்லாம் வயிறு" என்று என் அம்மா அவளையும் ஒரு குழந்தையாக கவனிக்க அவளோ எங்களுக்கு இன்னொரு தாயானாள்.வருடம் ஒன்று கன்று ஈனும்.காளைக்கன்றுகளை பால் குடி மறந்ததும் விற்று விட்டு,கிடேரிக்கன்றுகளை வீட்டில் வளர்க்க பசுக்கள் பண்ணையாகியது.லெட்சுமிக்கு வேற்று மனிதரை இனம் கண்டு விரட்டும் பழக்கம் இருந்ததால் வெளியூர்ப் பயணம் போகும் போது அதை அவிழ்த்துவிட்டு பெரிய கதவைப்பூட்டிவிட்டுப்போவோம்.என் அம்மாவும்,என் அப்பாவும் இல்லாத நேரத்தில் மற்ற மாடுகளிடம் சுலபமாக பால் கறந்து விடலாம்.லெட்சுமியை அண்டுவது சிரமம்.அதனால் தொரட்டிக்கம்பை எடுத்து அதன் கழுத்து,மூக்கணாங்கயிறோடு சேர்த்து கோர்த்துப் பிடித்து அது விரட்ட நான் ஓடி கல்தூண் மறைவில் நின்று கயிற்றால் பிணைத்து கன்றை அவிழ்த்துவிட்டதும் அதன் கோபம் அடங்கி கன்றை நாக்கால் துழாவ ஆரம்பிக்கும்.அப்போது நான் பால் கறப்பேன்.

     அது கன்று ஈனும் நாளில் என் அப்பாவும்,அம்மாவும் உறங்காமல் விழித்திருந்து,இளங்கொடி போட்டதும் அவளை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி சாக்கு விரித்து,கன்றை அதன் அருகில் விட்டுவிட்டு பிறகு தான் படுப்பார்கள்.அது என்னவோ அவள் எங்கள் வீட்டில் இருந்த பதினைந்து வருடங்களிலும் இரவு நேரத்தில் தான் ஈன்றது.காலை எழுந்து பார்த்தால் துள்ளும் கன்று பார்த்து ஒரே சந்தோசமாகிவிடும்."அம்மா! ராத்திரிப்பூரா நீங்களும் அப்பாவுந்தூங்கலையா?" என்றால் ,"ம்ம்.சரிதான்.மாடு வளக்குறதுன்னா சும்மாவா! உங்கள வளக்குற மாதிரி வளக்கனும்.அது வயித்துக்குள்ள நாம குடியிருந்தாத்தான் அது பலன் குடுக்கும்" என்பார் என் அம்மா.லெட்சுமிப்பசு வயதாகி தளர்வடைந்த போதில் என் அப்பாவின் தோழர் ஒருவர்,"இவ்ள நாளு நம்ம வீட்டுல வளத்த பசு நம்ம வீட்டுல செத்துச்சுன்னா வீட்டுக்கு நல்லத்தில்ல" என்று கூற என் அப்பாவும்,என் அம்மாவும் விற்று விட மற்ற பசுக்களும் ஒவ்வொன்றாக நோய்வாய்ப்பட்டு இறந்தது.என் அப்பா நன்றாக சாப்பிட்டுவிட்டு படுத்தவர்கள் இரவில் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதித்து மூன்றாம் நாள் திடீரென தனது 52ம் வயதில் இறக்க,குருவிக்கூடு போன்ற குதூகலமான எங்கள் இல்லம் சோகத்தில் மூழ்கியது.சிலர் நீண்ட நாள் வளர்த்த பசுவை விற்றதுதான் காரணம் என்றனர்.என் அம்மாவும் ராமேஸ்வரம்,காசி இங்கெல்லாம் கோதானம் செய்தார்கள்.பால்பானையைக்கழுவிக் கவிழ்த்தறியாத நாங்கள் இன்று பதப்படுத்திய பால் வாங்குகிறோம்.என் அப்பாவின் இறப்புக்குப்பிறகு சொந்த ஊர் திரும்பியதும் சொந்தங்கள் எல்லோரும் பசு வளர்க்கப் பரிந்துரைத்தனர்.ஆனால் என் அம்மா மறுத்துவிட்டார்.மீண்டும் பசு வளர்ப்பு தவிர்க்கப்பட்டது என் அப்பாவின் நினைவாலா? லெட்சுமியின் நினைவாலா? என் அம்மாவிடம் கேட்க எங்கள் யாருக்கும் தைரியமில்லை.

9.1.10

பொங்கலோ பொங்கல்

            பொங்கல் தமிழர் திருநாள்.தை ஒன்றாம் தேதியை தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டாகவும் அறிவித்தது முதல் வருடப்பிறப்பு என இரு பெரும் விழா.பொங்கல் கிராமங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.அதுவும் எங்கள் ஊர்களில் நன்றாக விளைந்துவிட்டால் மக்களின் முகத்தில் ஒரு சந்தோசம் களைகட்டும். பளபளப்பும்,புன்னகையும் கொஞ்சும்.தை பிறந்தால் வழி பிறக்கும்.புலம் பெயர் மக்கள் தங்கள் குல தெய்வங்களுக்குப் பொங்கலிட்டு படையலிட சொந்த கிராமங்கள் வரும் நன்னாள்.எங்கள் ஊரில் பொங்கல் என்றால் மார்கழி மாதம் கடைசி பத்து நாட்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம்.வீடு முன்வாசல் முதல் கொல்லை வாசல் வரை சுத்தம் செய்து,வீட்டிற்கு வண்ணமடித்து,அத்தனை பொருட்களையும் கழுவி,காயவைத்து அடுக்கி வீடே தை மகளை வரவேற்கப் பொலிவாக இருக்கும்.போகி அன்று பாய்,போர்வை,தலையணை உறைகள் எல்லாவற்றையும் துவைத்து,தலைக்குக் குளித்து,வீடு வாசல் கழுவி சுத்தம் செய்வோம்.பொங்கல் சந்தையில் பொங்கலுக்கென்று பிரத்யேகப் பொருட்கள்,கோவிலுக்குப் பொங்கல் வைக்க மண் பானை,அடுப்பு வாங்கி வந்து விடுவார்கள்.கரும்பு கட்டு வீடு வந்து விட்டால் குதூகலமும்,கூடவே வந்து விடும். போகி அன்று மாலையே அரிசி ஊறவைத்து அரைத்து கோல மாவு தயார் செய்து மண்பானையில் கோலமிடுவார்கள் என் அம்மா.ஒரு குச்சியில் வெள்ளைத்துணியைச்சுற்றி மாவில் நனைத்துக் கோலமிடுவார்கள்.மெல்லிய கம்பிகளாக வரும்.வண்ணம் வேண்டி சிறிது மாவில் மஞ்சளையும்,சிறிது மாவில் குங்குமமும் கலந்து பானையில் இடுவார்கள்.பானை சிறிது நேரத்தில் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ள கோலம் நன்றாக நிறக்கும்.வெண்கலப்பானையில் மாக்கோலம் எடுபடாது.பின் அடுப்பிலும் கோலமிட்டு அனைவரும் உறங்கியதும் படைக்கும் இடத்தில் மனைக்கோலம்,பொங்கலிடும் இடத்தில் இழைக்கோலமிட்டு,மாவிலை, தோரணம் தயார் செய்து பின்னிரவாகிவிடும் தூங்குவதற்கு. காலை,குளித்து புத்தாடை நகை அணிந்துவிட்டால் கால் தரையில் பாவாது. குலதெய்வக் கோவில்களில் பொங்கலிட்டு வீடு வந்து மாலை தான் நல்ல நேரம் பார்த்து பொங்கலிடுவோம்.பொங்கலுக்கென்று இரும்பு அடுப்பு இரண்டு,வெங்கல உருளி இரண்டு கோலமிட்டு விறகு வைத்து எரித்து பொங்கல் வைப்போம்.ஒரு உருளி சர்க்கரைப்பொங்கல்,ஒரு உருளி பால் பொங்கல் பிறகுஅவரைக்காய்,          சர்க்கரைவள்ளிக்கிழங்கு,    வள்ளிக்கிழங்கு,            மாங்காய்,கீரைத்தண்டு,பலாக்காய்,பறங்கிக்காய்,கத்திரி,கருணைக்கிழங்கு இப்படி எல்லாக்காயும் போட்டு,மிளகாய்,மல்லி வறுத்து இடித்த பொடி போட்டு தாளிதம் செய்யாமல் கூட்டுக்காய் குழம்பு வைத்து படையல் செய்வோம்.கரும்பு தின்று வாய் புண்ணாகி பொங்கல் சாப்பிட முடியாது.

          மறுநாள் மாட்டுப்பொங்கல்.மாவிலை,கூழைப்பூ தோரணம் மாட்டுக்கூடத்தின் நுழைவு வாயிலில் கட்டி,மாட்டுக்கூடத்தின் நடுவே சாணத்தால் மெழுகி,காவிப்பட்டை தீட்டி நடுவில் கோலமிடுவோம்.அதற்குள் என் அப்பாவும்,தம்பியும் மாடுகளைக் குளிப்பாட்டி,குங்குமமிட்டு,கழுத்தில் கரும்பு மாலையும் பூமாலையும் கட்டி கோமாதாக்கள் எல்லாம் மஹாலக்ஷ்மிகளாக ஜொலிக்கும்.என் அம்மா மாட்டுக்கூடத்தில் பொங்கலிட்டு இறக்கி வைத்துவிட்டு வாழைக்காய் பொடிமாஸ், பலாக்காய் சொதி (குருமா),பறங்கிக்காய் புளிக்கறி,முளைக்கீரை மசியல்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல்,வள்ளிக்கிழங்கு கூட்டு,கருணைக்கிழங்கு மசியல்,கூட்டுக்காய் குழம்பு,பருப்பு மசித்து நெய் கூட்டி சமையல் செய்வோம்.மாட்டுக்கூடத்தில் கடகாப்பொட்டியை (பனையோலையால் செய்த பெரிய அளவு பெட்டி) தலை கீழாகக் கவிழ்த்து அதன் மீது இலை விரித்து பொங்கலை வைத்து,எல்லாப்பதார்த்தங்களையும் பரப்பி,கற்பூரம் காட்டி ஆராதனை செய்து,சூரிய பகவானையும்,கோமாதாக்களையும் வணங்குவோம்.என் அப்பா,செம்பு நீரை கையில் எடுத்துக் கொண்டு அரிவாளால் மாட்டுக்கூடத்தில் ஏழு இடங்களில் கொத்தி அந்த இடத்தில் செம்பு நீரை ஊற்றி அதன் மீது ஒரு மாவிலையை வைத்து,படைத்த பதார்த்தங்களை ஒன்றாகக் கலந்து அதை அந்த மாவிலை மீது வைத்து தயாராக இருப்போம்.ஊரார் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து ,"பொங்கலோ பொங்கல்.நாடு செழிக்க நல்ல மழை பெய்ய,ஊரு செழிக்க உத்தம மழை பெய்ய
பொங்கலோ பொங்கல்,நாலு காட்டுல ஒரு காடு பாங்காடு கிடக்க பொங்கலோ பொங்கல்" என்று பெரியவர் ஒருவர் கூற மற்றவர் பொங்கலோ பொங்கல் என்று கூவியபடி மாட்டுக்கொட்டகையையும்,மாடுகளையும் சுற்றிவருவோம்.பிறகு அந்த மாவிலையில் உள்ள பொங்கல் கலவையை மாடுகளுக்கு ஊட்டி மாடுகளின் விரதம் முடித்து மாடுகளை அவிழ்த்துவிடுவோம்.மாடுகள் வீடு திரும்பும் போது உலக்கையை வாசலில் கிடத்தி மாடுகளை வரவேற்று மாடுகளுக்குத் தண்ணீர் வைத்து,வைக்கோல் போடுவோம்.பிறகு விருந்து சாப்பாடு நடக்கும்.

             மாட்டுப்பொங்கல் அன்று மாலை பெண் குழந்தைகள் அனைவரும் கண்மாய் படித்துறைக்கு கொப்பி கொண்டு செல்வோம்.ஒரு தட்டில் கொப்பிக்கட்டைகள் பரப்பி,வெற்றிலை,பாக்கு வைத்து,சுட்ட பனங்கிழங்கு வைத்து,படைத்த உணவுக்கலவை வைத்த தட்டை தலையில் வைத்து ஊர்வலமாகச்சென்று சலவைத்தொழிலாளச்சகோதரர்கள் படித்துறையில் விரித்திருக்கும் வேட்டியில் கொட்டிவிட்டு,கொப்பிக்கட்டைகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து பிள்ளையார் கூடத்தில் தட்டுகளை வைத்து சாமிகும்பிட்டு விளையாடுவோம்.வீட்டிற்குத் திரும்பி வரும்போது மனம் நிறைவாக,பொங்கல் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்துடனும் வருவோம்.அன்று எல்லா வீடுகளிலும் மாடுகள் இருந்தது. இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு வீடுகளில் தான் மாடுகள் உள்ளது.இருந்தாலும் பொங்கல் அதே உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.எங்கள் ஊரில் பொங்கல் கொண்டாடி எனக்கு 18 வருடம் கடந்துவிட்டது.இப்போது அந்தப் பசுமை நினைவுகள் கண்களில் இருக்கிறது.

             அந்தமானில் நாங்கள் பொங்கல் விழாவை,தமிழர் திருநாளை தமிழ்நாட்டின் அதே குதூகலத்தோடு கொண்டாடுகிறோம்.மஞ்சள் கொத்து,கருணைக்கிழங்கு,இஞ்சி இதெல்லாம் எல்லோரும் வீட்டில் வளர்ப்பதுண்டு.கரும்பு தீவுகளில் வளர்கிறது.பொங்கலுக்குப் புத்தரிசி கிடைத்துவிடும்.அடுப்பு,பானை(வெங்கலம் தான்) வைத்து பொங்கலிட்டு படைக்கிறோம்.

           உறவுகள் அருகில் இல்லாத குறையொன்றைத்தவிர வேறொரு குறையில்லை.நாடு செழிக்க,நல்ல மழை பெய்ய,ஊரு செழிக்க உத்தம மழை பெய்ய,நல்லோர் வாழ,நல் அமைதி நிலவ பொங்கட்டும் பொங்கல்.பொங்கலோ பொங்கல்

7.1.10

பாலை நிலத்தின் பசுமை மனிதர்கள்

        உலகின் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு இயல்பு,வரையறையை மனிதன் கூறுகிறான்.மனிதனுக்குள்ள இயல்பு, வரையறைகளைக் கூறமுடியுமா? முடியும். ஆனால் அது ஏட்டளவிலும்,பாட்டளவிலும் தான் இருக்க முடியும்.மனிதர்கள் தங்கள் இயல்பு தாண்டி,வரையறை தாண்டி பயணித்து நாட்கள்,வருடங்களாகிக் கால வரையறை கடந்து விட்டது.எங்காவது மனிதம் விழித்து ஒரு நற்செயல் நடந்தேறிவிட்டால் மனம் சட்டென்று கரைந்து விழிகள் சிந்தும், மனம் நனையும் வரை.அப்படி ஒரு உண்மைக்கதை இது.ஒரு பெண்ணுக்கு இறைவன் இப்படி ஒரு வாழ்க்கை தரலாமா? என்ற அனைவரின் கேள்விக்கும் அப்படி கிடைத்த வாழ்க்கையை அலுக்காமல் சலிக்காமல் இப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய,நீரில் நடந்து,நெருப்பில் குளித்த ஒரு கிராமத்துப் பெண்ணின் கதை இது. 84 வருடம் இந்தப்பூவுலகில் வசித்து, போராட்டங்களே வாழ்க்கையாய் வாழ்ந்து,கடந்த நவம்பர் மாதம் 7 ம் தேதி தன் உலக பந்தத்தை முடித்து விடைபெற்ற ஒரு நெருப்பின் கதை.

           என் ஆயா திருமதி.சோலைச்சி அவர்கள் (என் அம்மாவின் தாயார்) சிவகங்கை மாவட்டம் பலவாங்குடி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர்.இவருக்கு ஒரு இளைய சகோதரர் உண்டு.(பரவாயில்லையே! உங்க அப்பாவும் அம்மாவும் குடும்பக் கட்டுப்பாட்ட தெரிஞ்சு வச்சிருக்காங்க! என்று கேலி செய்வோம்) தந்தை பர்மாவிலும்,ரங்கூனிலும் இருந்தவர்.ஓரளவு செல்வச்செழிப்பில் வளர்ந்தனர்.அவரை அருகில் உள்ள மணச்சை என்னும் கிராமத்தில் தெய்வத் திரு.பெரிய கருப்பன் அம்பலம் அவர்களுக்கு (என் ஐயா) மணமுடித்தனர்.அந்தக்காலத்தில் நிறைய நகை போடுவது,சீர் தரும் பழக்கம் இல்லை .மாற்றாக மாப்பிள்ளை வீட்டார் பரிசப்பணம்,தாலிச்சங்கிலி தந்து மணமுடிப்பது எங்களில் வழக்கம்.என் ஐயா ஊரின் அம்பலகாரர். ஓரளவு சொத்தும்,நல்ல செல்வாக்கும் கொண்டவர்.உழைப்பாளி.அன்பும் முரட்டுத்தனமும் கலந்த கலவை.மணமுடித்து அமைதியாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை பெரியோர்களின் சச்சரவில்,"உம்மக எங்க வீட்டுல வாழனும் ஞாபகம் வைச்சுப் பேசு" என்று என் ஐயாவின் தந்தை சொல்ல,"அப்புடி ஒண்ணும் எம்மக உன் வீட்டுல வாழனுங்கற அவசியமில்ல,இப்பவே தீத்துக்க (விவாகரத்து)" என்று என் ஆயாவின் தந்தை  தன் வீட்டுக்கு அழைத்துப்போகும் போது என் அம்மாவிற்கு ஒரு வயது.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மூன்று வருடங்கள். அதுவும் அப்போதைய கால கட்டத்தில் இருவரும் பார்த்துகொண்ட நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.தம்பதியருக்குள் சச்சரவு ஏதுமின்றி பெரியோர்களின் வெற்று கௌரவத்தால் என் ஆயாவின் வாழ்க்கை பாழானதோடு என் அம்மாவிற்கும் தந்தையின் அன்பு அருகிருந்து கிடைக்காது போனது.என் ஐயாவும் என் ஆயாவை ஆள் விட்டு கூப்பிட்டும்,நேரடியாக வந்து கூப்பிட்டும் ஒரு முறை வந்தபின் அந்த வீட்டில் எப்படி நுழைவது என்ற அச்சத்தில் மறுத்துவிட்டார்.அதன் பிறகு என் ஐயா விவாகரத்து பரிசப்பணம் 300/ ரூபாயும்,3 பவுன் நகையும் தந்த போது என் ஆயா வாங்க மறுத்து என் மகளுக்கு என்றைக்கு இருந்தாலும் பிறந்த வீடு வேண்டும் என்று கூற என் அம்மா இங்கும் அங்குமாக இருந்தார்கள்.அதனால் என் அம்மா ஐந்தாம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. இதற்கிடையில் என் ஐயா இரண்டாவதாக மணமுடித்து அந்த ஆயாவிற்கு நான்கு ஆண்கள்,நான்கு பெண்கள்.என் அம்மா இவர்களுடன் உறவை பலப்படுத்திக்கொண்டார்.ஆனாலும் என் அம்மாவின் சிறிய தாயாருக்கு என் அம்மாவின் மேல் வெறுப்பு அதிகம்.என் ஆயா பிறந்த வீடு வந்து,சிலநாட்களில் அன்னை,பின் தந்தை இருவரும் இயற்கை எய்த, தம்பி மனைவிக்கும் இவருக்கும் ஆகாது போக சொத்து எதிலும் பங்கு வாங்காமல் ஒரு நகரத்தார் குடும்பத்தின் விதவை ஆச்சியின் வீட்டில் குடியேறி,அந்த ஆச்சி கொடுத்த ஒரு மண்பானை,மண் அடுப்பு,மண்சட்டி ஒன்றைவைத்து தனிக்குடித்தனம் தொடங்கி நகரத்தார் குடும்பங்களில் வேலை செய்து,ஒத்திக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து, அதில் சேமித்து அந்த நிலத்தை விலைக்கு வாங்கி,வீட்டு மனை ஒன்று வாங்கி,கொஞ்சம் நகைகள் செய்து தன் தம்பியை விட மேலான நிலைக்கு வந்துவிட்டார்.இதற்கிடையில் இவரை இரண்டாம் தாரமாக மணமுடிக்கக் கேட்டு வந்த மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து ஓடி ஒளிவாராம்.வயலுக்கோ,குடிதண்ணீர் ஊரணிக்கோ தனியாகப்போனால் யாரும் பேச்சுக்கொடுத்து நாம் அசிங்கப்பட்டுவிடுவோமோ என்று போவோர் பின்னால் போய் வருவாராம்.வயலில் ஆண்களைப்போல வரப்பு வெட்டி,நாற்று பறிக்க ,நடவு நட கூலிக்கு ஆள் பிடிக்காமல்,உறவுகளுக்கு இவர் வேலை செய்ய அவர்கள் இவருக்கு பிரதி உபகாரம் செய்ய நாட்கள் கடந்தது. உழைப்பு,தன்னம்பிக்கை இவற்றால் உயர்ந்தார்.நகரத்தார் மக்களும் இவரது உண்மை, உழைப்பு கண்டு அசந்து போனார்கள்.கல்வியறிவே சிறிதும் அற்ற ஒரு பெண்ணின் துன்பங்களை சொல்ல வார்த்தைகளுக்கு வலிமை இல்லை.

                என் அம்மாவிற்கு என் ஐயா திருமணம் செய்ய என் அப்பாவைப் பேசி என் ஆயாவிடம் சம்மதம் கேட்டு,நகை,சீர் செய்து திருமணம் முடிக்க என் ஆயாவும் தனியே நகை, சீர் செய்தார்.என் அப்பா வீட்டு உறவுகள் அட ரெண்டு சீரு என்று மலைத்துப்போனார்கள்.என் ஐயா தனது 46 வயதில் இறைவனடி சேர என் ஆயா அன்றுதான் என் ஐயா வீட்டிற்கு என் ஐயாவின் முகம் பார்க்க வந்து விழுந்து ஒப்பாரி வைத்து அழ,ஊரே அழுதது.அப்போது என் ஐயா வீட்டு சொத்தில் ஆயாவிற்குப் பங்கு தர பங்காளிகள் முடிவு செய்ய, மாப்பிள்ளையிடம் கேட்கச்சொல்லி என் ஆயா சொல்ல என் அப்பாவோ பிறந்த வீடு வேண்டும் என்பதற்காக என் மாமியார் பரிசப்பணம் வாங்க மறுத்தார்.எனக்கு மச்சினர்கள் வேண்டும் அதனால் சொத்து வேண்டாம் என்று மறுக்க எல்லோர் மனதிலும் என் அப்பாவின் மதிப்பு கூடிப்போனது.அன்றிலிருந்து என் அம்மாவின் மாற்றாந்தாய் என் ஆயாவிடம் பேசுவது மட்டுமல்ல,வீட்டிற்கு வரச்சொல்லியும் உபசரிப்பார்.என் மாமாக்களோ,"எங்க அப்பாவ நினச்சுக்கிட்டு வேற கல்யாணம் பண்ணாம இருந்ததால இந்த ஆத்தாவுக்கும் நாங்க தான் கொள்ளி வைப்போம்" என்பார்கள்.இதற்கிடையில் என் அப்பா தனது 52 வது வயதில் இறைவனடி சேர தன் ஒரே மகள் விதவையானதும் மிகவும் ஒடிந்துபோனார் என் ஆயா.

        ஆயிற்று! அந்த இறுதிகாலம் வந்தேவிட்டது.என் ஆயா எங்களுக்காக உழைத்ததாலும் என் ஆயாவின் சொத்து சம்பாத்தியம் என் அம்மாவிற்குத் தரப்பட்டதாலும் என் ஆயாவை வயதான காலத்தில் என் அம்மாவே பராமரித்து வந்தார்.அவ்வப்போது என் ஆயாவை மாமா வீடுகள் கொண்டாடவும் செய்தன.கால் ஒடிந்து படுத்த படுக்கையான பின்னும் கூட இங்கும் அங்குமாக இருப்பார்.நவம்பர் மாதம் 7ம் தேதி திடீரென தூக்கத்திலேயே உயிர் பிரிய, என் மாமாக்கள் என் ஆயாவைத் தங்கள் வீட்டிற்குத் தூக்கிச்சென்று இறுதிக்கடன் செய்ய விழைய, என் அம்மாவும் என் தம்பியும் மறுக்கஒரு பனியுத்தம். பங்காளிகள் தலையிட்டு என் அம்மாவையும்,தம்பியையும் சமாதானப்படுத்தி என் ஆயாவின் இறந்த உடலை ஆம்புலன்ஸில் என் மாமாக்களின் பூர்வீக வீட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிக்கடன் செலுத்தினர்.இவர்களைப் பார்த்து ஊர் சிலிர்த்தது. இந்தக்கதையை ஏன் வலையில் எழுதுகிறேன் என்றால் தனது தாய் தந்தையரைப்பராமரிக்க முடியாது முதியோர் இல்லங்களில் விடும் இந்தக்கால மனிதர்கள் முன் இப்படி ஒரு மனிதர்களும் வசிக்கிறார்கள் என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காக.பாலை நிலத்தின் மனிதர்கள் மனதில் உள்ள ஈரத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட.இவரைப்போல தியாகமே உருவான பெண்கள் எங்கள் ஊரில் அதிகம்.ஆனால் அந்தப்பெண்களே வியக்கும் ஒரு அற்புதம் எங்கள் ஆயா.  ஒரு பெண் எப்படி வாழ்ந்தால் சிறப்புகளை இறக்கும் நேரத்தில் பெற முடியும் என்பதற்குச்சான்றாய் வாழ்ந்து மறைந்த என் ஆயாவின் வாழ்க்கை எங்களுக்கு ஒரு பாடம்.

5.1.10

13.தேன் குழல்

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 4 உழக்கு
2.உளுந்து - 1 3/4 உழக்கு
3.எண்ணெய்
4.உப்பு - ருசிக்கேற்ப

           பச்சரிசியை நன்றாகக் களைந்து நன்றாகக் காயவைக்கவும்.ஈரமிருந்தால் தேன் குழல் மொறுமொறுப்பாக இராது.உளுந்தை நன்றாக வாசம் வரும் வரை பொன்நிறமாக வறுத்து காயவைத்த அரிசியுடன் கலந்து சன்னப்பொடியாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்தமாவில் தேவையான அளவு எடுத்து உப்புக்கரைத்த நீர் கலந்து வெண்ணெய் போல் கெட்டியாக பிசைந்து தேன் குழல் அச்சில் போட்டு பெரிய முறுக்குகளாகப் பிழிந்து எடுக்கவும். தேன் குழல் சிவக்கக்கூடாது.வெண்ணெய் நிறத்தில் இருக்க வேண்டும். இந்தத் தேங்குழல் திருமணத்தில் மறுவழிப்பலகாரம்,ஆடிப்பலகாரம் போன்ற சீர்களுக்குக் கொடுப்பதுண்டு.

12.கருப்பட்டி பணியாரம்

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 4 உழக்கு
2.கருப்பட்டி- 600 கிராம்
3.எண்ணெய் 

              பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து இடித்து அதிரசத்திற்கு போல் மாவாக்கிக்கொள்ளவும். கருப்பட்டியை தூளாக்கி 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு,தண்ணீரில் விட்டால் கரையாத அளவு பாகாகக் காய்ச்சி அதில் மாவைப்போட்டு கலந்து கொள்ளவும்.கலந்த மாவை மறு நாள் தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.கரைத்த மாவில் தேவையானால் சிறிது பாசிப்பருப்பை வேகவைத்து கலந்தும் பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.

            இந்தப் பணியாரம் படைப்பு பணியாரம் என்போம். கருப்பர் மற்றும் எங்கள் ஊர் பெண்தெய்வங்களுக்கு படையல் போடுவதற்கு சுத்தமான நெய்யில் பெரிய பணியாரங்களாகச்சுட்டுப் படைப்பது வழக்கம்.நல்ல ருசியுடன் இருக்கும் இந்தப்பணியாரம் சத்தானதும் கூட..

11.மணகோலம்

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 1 உழக்கு
2.பாசிப்பருப்பு -1 உழக்கு
3.உளுந்து - 1 உழக்கு
4.தேங்காய் - 1
5.பொட்டுக்கடலை - சிறிது
6.எண்ணெய்
7.வெல்லம் - 3/4 கிலோ


                  பாசிப்பருப்பு,உளுந்து,பச்சரிசி மூன்றையும் கருகாமல்வறுத்து கலந்து சன்னப்பொடியாக அரைத்து சலித்து தண்ணீர்,சிறிது (அரை உப்பு ருசிக்கு) உப்பு சேர்த்து முறுக்கு மாவு போல் கெட்டியாக பிசைந்து உருட்டி வைத்து ஒரு ஈரத்துணி போட்டு மூடிக்கொள்ளவும்.மாவு காயக்கூடாது.இப்போது மணகோல க்கட்டையில் (மிக்சரை விட கொஞ்சம் துளை பெரிதாக இருக்கும்) மாவைப் போட்டு காயும் எண்ணெயில் நேரடியாகை பிழிந்து கருகாது எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை நிறம் மாறாது வறுத்துக்கொள்ளவும். தேங்காயைக் கீறி பல்லுப்பல்லாக நறுக்கி நன்றாக ஈரமில்லாமல் வறுத்துக் கொள்ளவும்.வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒரு கை தண்ணீரைத் தெளித்து முற்றின பாகாக எடுத்துக்கொள்ளவும்.இந்தப்பாகில் பிழிந்து உதிர்த்த மணகோலம்,பொட்டுக்கடலை,தேங்காய் ஆகியவற்றைக் கலந்து சற்று நேரம் வைத்தால் வெல்லம் பூத்து உதிரியாகிவிடும்.நல்ல ருசியுடன்,பொறு,பொறுவென இருக்கும் இந்தப்பலகாரமும் ஒரு சீர்ப்பலகாரம்.

10.சீப்புச்சீடை

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 4 உழக்கு
2.பாசிப்பருப்பு -1 3/4 உழக்கு
3.பொட்டுக்கடலை அல்லது உளுந்து - 1 3/4 உழக்கு
4.தேங்காய் - 1
5.எண்ணெய்
6.உப்பு - தேவையான அளவு

பச்சரிசியை நன்றாகக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து இடித்து சலித்து மணல் போல வறுத்துக்கொள்ளவும்.பாசிப்பருப்பு,உளுந்து இரண்டையும் கருகாமல் வறுத்து சன்னப்பொடியாக அரைத்து சலித்து அரிசி மாவோடு கலந்து கொள்ளவும்.தேங்காயைத் துருவி அரைத்து மூன்று பால் வரை தனிதனியே எடுத்துக் கொள்ளவும்.முதல் பாலை சுடவைத்து (கொதிக்கக்கூடாது) உப்பை அதில் கரைத்து மாவில் ஊற்றிக் கலக்கவும்.பால் போதாத போது இரண்டாவது பாலை சுடவைத்து கலந்து முறுக்கு மாவு போல் கெட்டிய பிசைந்து உருட்டி வைத்து ஒரு ஈரத்துணி போட்டு மூடிக்கொள்ளவும்.மாவு காயக்கூடாது.இப்போது சீப்புச்சீடைக் கட்டையில் (பட்டையாக மேலே வரி விழுவதற்கான முட்களுடன் இருக்கும் சில்) பழைய செய்தித்தாளை விரித்து அதில் நீளமாகப் பிழிந்து விடவும்.பிறகு கத்தி கொண்டு நான்கு இஞ்சி நீளத்தில் வெட்டி இரு முனைகளையும் ஒட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.இது மோதிரம் போன்ற வடிவத்துடன் இருக்கும்.நல்ல ருசியுடன்,பொறு,பொறுவென இருக்கும் இந்தப்பலகாரமும் ஒரு சீர்ப்பலகாரம்.

பாலைய நாட்டுப் பெண்களின் முந்தையத்தலைமுறைகள்

 என் பாட்டி காலத்தில் அதாவது அறுபது,எழுபது வருடங்களுக்கு முன் எங்கள் சமூகப்பெண்கள் வீட்டு முகப்பிற்கு வரக்கூட அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.அடுப்படியும்,வயலும்,மாட்டுக்கொட்டகையும் தான் கதி.மிஞ்சினால் வீட்டின் இரண்டாம் கட்டு வரை வரலாம்.அந்த கால கட்டத்தில் எங்கள் கிராமங்களில் எங்கள் சமூக ஆண்கள் பர்மா,சிங்கப்பூர்,மலேயா,ரங்கூன் என்று வெளிநாடுகளில் கொண்டு விற்கப்போன நகரத்தார் சமூக மக்களின் காசுக்கடைகளில் கணக்குப் பிள்ளையாக,சமையற்காரர்களாக,சிப்பந்திகளாக அவரவர் கல்வித் தகுதிகளுக்கேற்ப பதவிகள்.அவர்களுடன் வெளிநாடு வாசம் அந்த கால கட்டத்தில் பெண்கள் மாமனார்,மாமியாரின் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு,குழந்தைகளை வளர்த்துக்கொண்டு,வயல் வரப்புகளைக் கவனித்துக்கொண்டு,ஆடுமாடு,கோழிகளை வளர்த்துக்கொண்டு குடும்ப மேன்மையே தங்களது குறிக்கோளாய் இருந்தார்களாம்.நகரத்தார் பெண்கள் சிறந்த பழக்க வழக்கமுடையவர்கள் என்பதால் எங்கள் சமூகத்தின் பெரும்பாலான பெண்குழந்தைகளுக்கு நகரத்தார் வீடுகளே பள்ளிக்கூடமாக,அந்தப் பெண்களே ஆசிரியப்பெருமக்களாக இருந்திருக்கிறார்கள்.ஆண்கள் விருந்தாளிகளைப்போல வருவதும் இரண்டு மாதம் தங்குவதும்,திரும்பிப் போவதும் வழக்கமாகிப்போனது.பணம் அனுப்புவதும் வீட்டின் மூத்தவர்களுக்குத் தான் வரும்.அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட அவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கவேண்டும். குழந்தைகளின் விருப்பத்திற்குக்கூட தாயானவர்கள் எதுவும் வாங்கித்தரமுடியாத நிர்ப்பந்தம்.கணவனின் சம்பாத்தியத்தில் உரிமை கோரக்கூட தைரியமற்று வெறும் வேலைக்காரிகளைப்போல இளம் பெண்கள்.ஆண்களில் நிறையப்பேர் அன்னிய பூமியில் வேற்றுப் பெண்களை சட்டத்திற்குப் புறம்பாக மணந்து அங்கேயே தங்கி மாண்டவர்களும் உண்டு.அன்றி அந்த அந்தப்புரப்  பெண்களை அங்கேயே விட்டுவிட்டு வயதான காலத்தில் திரும்பிவரும் தன் கணவருக்குத் தாதிகளாய் மட்டும் வாழ்ந்த பெண்களும் உண்டு.அந்த அந்தப்புரப் பெண்களை குழந்தை குட்டிகளுடன் கூட்டிவந்து சொத்துப் பிரித்த கதைகளும் எங்கள் சமூகத்தில் நிறைய உண்டு.ஐம்பது வருடங்களுக்கு முன் எங்கள் பெண்களின் நிலையை என் அப்பத்தா கூறும் போது அழுகை வரும்.நீங்க இப்புடி கத சொல்றீங்களே? உங்களுக்கு அழுக வரல, என்றால் கண்மாய்க் கரை,வய வரப்புன்னு கண்ணீர சிந்திச்சிந்தி கண்ணீரே வத்திப்போச்சு என்பார்.

        எப்போதாவது வரும் கடிதங்களில் மட்டுமே தங்கள் அன்பைப்பரிமாறி வாழ்ந்த அவர்களது வாழ்க்கை எனக்கு வியப்பளிக்கும்.என் அப்பத்தா, என் மாமியார் இப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.அந்தக்கடிதத்திலும் அன்பே,ஆருயிரே என்று உருகியிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்.உடல் நிலையைக்கவனித்துக்கொள்ளவும்.குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளவும்.என் தாய், தந்தையிடம் அவர்கள் மனம் கோணாமல் நடந்துக்கொள்ளவும் என்றுதான் எழுதியிருப்பார்களாம்.வெறும் கனவுகளில் குடும்பம் நடத்தி,கற்பனையில் கொஞ்சிக் குலவி வாழ்ந்த அந்தப்பெண்களுக்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்.அவர்களுக்கு வாழ்க்கை குறித்த மதிப்பீடு
என்னவாக இருந்திருக்கும்.நெல் அவிப்பது முதல்,மசாலா அரைத்து குழம்பு வைப்பது என வீட்டு வேலைகள் சுலபமாகாத காலகட்டம்.வீட்டின் கடைக்குட்டி வரை அத்தனை பேருக்கும் வேலைகள் காத்திருக்கும்.அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் இரவு எட்டு மணி வரை வேலை தான். இதற்கிடையில் நாத்தனார்,மாமியாரின் குத்தல் குசும்பல் வேறு.தலை சீவி பூச்சூட மாட்டார்களாம்.வெளிநாட்டிலிருந்து கணவன்மார் வந்திருக்கும் போது தான் நல்ல சேலை உடுத்தி நகை அணிவது,பூச்சூடுவது எல்லாம்.ஆண்கள் வரும்போது கப்பல் நிறையக் கொண்டு வந்தாலும் மாமனார்,மாமியார் பார்த்து எது கொடுக்கிறார்களோ அதுதான். மனைவிக்கு.ஒளித்து மறைத்து ஏதாவது கொடுத்து விட்டால் கண்ணீரும் கம்பலையும் வீடே மிதக்கும் படி ஆகுமாம்.அவர்கள் பதவிக்கு வந்த போது பாவம் காலம் மாறிவிட்டது.அவர்கள் அந்திமக்காலம் வரை அடிமைகளாவே இருந்து போன தலைமுறை கடந்த மூன்றாம் தலைமுறை.எந்தச்சமூகத்திலும் இனி ஒரு தலை முறை அப்படி ஒரு வாழ்க்கை வாழும் விதி வரவே கூடாது.

4.1.10

சிவகங்கை மாவட்ட கிராம சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள்

         பெண்கள் சுய உதவிக்குழுக்கள் இப்போது நாடெங்கிலும் பெருகி வருகிறது. ஒரு மக்கள் நலத்திட்டம் எந்த குறிக்கோளுக்காக உருவாக்கப் பட்டதோ அந்த குறிக்கோளை அது அடைந்து விட்டால் அது அந்தத் திட்டத்தின் வெற்றி! சுய உதவிக்குழுக்களின் மூலம் பயனடைந்த பெண்களைப் பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது.திக்கற்ற நிறைய மகளீரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றி வைத்திருக்கிறது இந்தத் திட்டம்.ஆனால் எங்கள் கிராமங்களில் மகளீர் மன்றங்கள் என்ற பெயரால் ஆரம்பிக்கப்படும் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் வங்கிக்கடனுதவிகளை வைத்துத் தொழில் தொடங்குவதில்லை.சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற தொழில் பயிற்சியளித்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.பொம்மைகள் செய்வது,தையல் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்வது போன்றவற்றில் பயிற்சியளித்தனர்.ஆனால் உற்பத்திப் பொருட்களைச்சந்தைப்படுத்தத் தெரியாது,முடியாது தொழிலகளை கைவிட்டனர்.எங்கள் கிராமச்சகோதரிகளின் கைவினைப்பொருட்கள் அனைத்தும் காசாக்க முடியாமல் பரிசுகளாய்ப் போனது.

           சென்னை போன்ற மாநகரங்களில் சுய உதவிக்குழுப்பெண்கள் பலர் சாதனையாளர்களாய் இருப்பதை பல மகளீர் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்.கிராம சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் நகர உறுப்பினர்களைப்போல வாய்ப்புகளை தமிழ் நாடு அரசு ஏற்படுத்தித்தரவேண்டும்.கிராமங்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த சொல்லித்தர வேண்டும்.அது போல அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப்பொருள் உற்பத்திகளைக் கிராம சுய உதவிக்குழுக்களுக்கு சொல்லித்தந்து அவர்கள் லாபம் ஈட்ட வழி வகை செய்தால் தான் ஒரு பரவலான் வளர்ச்சியை நாடு காண முடியும்.எங்கள் கிராமத்தில் என் உறவினர்கள் அனைவரும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்.ஆனால் சுய உதவிக்குழுக்களின் மூலம் வரும் கடனுதவியைக்கொண்டு குழந்தைகளின் கல்விச்செலவு,மற்ற அத்தியாவசியச்செலவுகளை செய்கின்றனர்.அரசு திட்டங்களை வகுத்தும் அந்தத் திட்டத்தின் பயனை அனுபவிக்க முடியாத மக்கள்.ஏழ்மையில் இருந்து விலக முடியாது நிரந்தரமாகத் துன்பத்தில் உழலுகிறார்கள்.உற்பத்தி என்பது லாபத்தைத் தரமுடியாத போது அதை மேற்கொள்வது மதியீனம்.தங்கள் சுற்று வட்டாரத்தில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்யச்சொல்லிக்கொடுத்தால் நன்மை.அதோடு ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகிற துறையின் தொழில் நுட்பம் சொல்லிக்கொடுத்தால் போட்டிகள் குறையும். லாபம் ஈட்டுவது சுலபம். உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள்,எல்லாத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்திகளைக் கற்றுத்தந்தால் நலம். இப்போது எங்கள் மக்கள் கூலி வேலைகளுக்கும்,அடிமை வேலைகளுக்கும் போகிறார்கள். கடின உழைப்பிருந்தும்,அறிவுத்திறம் இருந்தும் வாய்ப்புகளின்றி சுருங்கிப்போகும் இவர்களை யார் விடுவிப்பது? இதைப்படிக்கும் நல்ல உள்ளங்கள் யாராவது வழிமுறைகளைத் தெரிவித்தால் பல வீடுகளில் விளக்கேற்றி வைத்த புண்ணியம் கிட்டும்.

          வயல் விளைச்சல் பொய்த்து, கால்நடைகள் வளர்ப்பும் கைகொடுக்காத எங்கள் மக்கள் உற்பத்தியாளர்களாக உயர வேண்டும் என்றால் அவர்களுக்குத் தனிப்பட்ட கவனம் அவசியம்.அரசு கவனிக்குமா? இல்லை ஓட்டுக் கேட்க வரும்போது கோரிக்கை வைக்க வேண்டுமா? தெரியவில்லை.பார்ப்போம் எப்போதுதான் விடியும் என்று!

வாழ்க்கை வரம்

         நம் தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும்,ஒவ்வொரு சமூக மக்களுக்கும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடு வெவ்வேறாக இருக்கிறது.இப்படித்தான் வாழ வேண்டுமென சிலர்.எப்படியும் வாழலாம் என்று சிலர்.யாரைப்பற்றியும்,எதைப்பற்றியும் கவலை இல்லாது தன் இலக்குகளே குறியாய் வெறித்தனமான வாழ்க்கை வாழும் சிலர்.இருக்கும் போது எல்லோருக்கும் உதவி பின் அடுத்தவரை எதிர்பார்த்து சிலர்.எந்தக்குறிக்கோளும் இல்லாது வாழ்க்கை நீரோட்டத்தோடு இயைந்து வாழும் சிலர்.இப்படி ஒவ்வொரு வித மனிதருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதமான முகம் காட்டி, வெவ்வேறான அனுபவங்களைக் கொடுக்கிறது.ஒருவரின் வாழ்க்கை பற்றிய பார்வை இன்னொருவரின் பார்வையினின்று வேறுபடுகிறது.என்வரை சுமையற்ற வாழ்க்கை தான் சிறப்பு.எளிமையான வாழ்க்கை.தேடல் இருக்க வேண்டும்.ஆனால் அது நம் அமைதியைக் குலைப்பதாக இருந்தால் தேவையில்லை.ஓடுபவர்களைப்பார்த்து ஓடுபவர்கள் தான் இன்று பெருகிவிட்டனரே தவிர தனக்கு என்ன தேவை என்ற தெளிவில்லாத ஓட்டம் தான் ஓடுகின்றனரோ என்றும், அல்லது நாம் தாம் நம் தேவைகளைச்சுருக்கி ஓடத்தெரியாது, ஓடுபவர்களை விமர்சிக்கிறோமோ என்று குழம்பும்.ஆனால் ஓடிக்களைத்தவர்கள் சலிப்பாய் நொந்து மயங்கும் போது நாம் சரி என்று பெருமை கொள்ளும் மனது.இது என் பார்வை.வாழ்க்கையின் பொருளீட்டும் பக்கத்தோடு,நம் மனதின் ரசனைப்பக்கம்,பிடித்ததை அனுபவிக்கும் பக்கம் இப்படிப் பக்கங்களையும் புரட்டி வாழ்க்கையைப் படிப்பவர்கள் நிறைவாய் வாழ்கிறார்கள். ஏதாவது ஒரு பக்கத்தோடு நின்று விடுபவர்கள் ஒரு குறையோடு, மற்றவர்கள் தான் நமது இந்த வாழ்க்கைக்குக் காரணம் என்ற வெறுப்போடும் கடந்து போய்விட, பூமி மட்டும் எல்லாவற்றையும் தனக்குள் செரித்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது.

           நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் அனுமதி கேட்டு எங்கள் ஊர் ஊரணிக்கரையைச்சுற்றி கூடாரம் போட்டுத் தங்கும் ஒரு கூட்டம்.கூடைகள்,வடிதட்டுகள்,அழுக்குத்துணிபோடும் ஆளுயரக்கூடைகள்,மூங்கில் தட்டிகள் முடையும் ஆந்திரப் பிரதேசத்து மக்கள். பாமரர்கள்.ஆனால் மிக அழகானவர்கள்.சிறு குழந்தைகளை தோளில் தூளி கட்டி தூக்கிக்கொண்டு பெண்களும்,பெரிய சுமைகளோடு ஆண்களும் வந்திறங்குவர்.வந்த சற்று நேரத்தில் கூடாரங்கள் தயாராகி பெண்கள் கல் கூட்டி அடுப்பு மூட்ட குழந்தைகள் புரியாத மொழியில் சிட்டுக்குருவிகள் போல் கீச்கீச் என்று கத்திய படி ஊரணிக்கரை மர நிழலில் சுற்றிச்சுற்றி விளையாட ஊரணிகரை முழுதும் அவர்கள் ராஜாங்கம் தொடங்கும்.அழுகை,கண்ணீர்,சண்டை பார்க்க முடியாது. அவர்களின் பலம் ஒற்றுமை என்பதை உணர்ந்த படிக்காத அந்தப் பாமர மக்களின் முகம் எப்போதும் புன்னகை மலர்ந்து ஒரு இணக்கம் விகசித்தபடி இருக்கும்.வே டிக்கை பார்க்கும் எங்களிடம் அவர்கள் மொழியில் பேசுவார்கள்.புரியாமல் நாங்கள் சிரித்த படி ஓடி விடுவோம்.கூடை முடைவதற்கு தேவையான மூலப்பொருட்களை ஆண்கள் சேகரித்துவர பெண்கள் அவர்களின் கூடைகள் முதலியவற்றை விற்பதற்கு வீதிவீதியாகக் கொண்டு செல்வர்.அரிசிக்கு,பணத்திற்கு கூடைகளை விற்றுத் திரும்பி சமையல் முடித்து ஊரணிக்கரையில் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து உணவு உண்டு,மறுபடி பேசியபடி,பாடியபடி கூடை முடைய ஆரம்பிக்க குழந்தைகள் சிட்டுக்குருவிகளாய் விளையாடும். மாலை நேரங்களில் அந்தப் பக்கம் நடக்கும் போதே முகப்பூச்சு வாசனை மூக்கைத் துளைக்கும்.எங்கள் ஊர் திரையரங்கில் காட்சி ஆரம்பிக்கும் முன் பாட்டுப் போடுவார்கள்.அந்தப்பாட்டு சத்தம் கேட்டு சிறிது நேரத்தில் கூட்டமாக திரைப்படம் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். எதிர்ப்படும் மக்கள் இவர்களை வேடிக்கை பார்த்தபடி போவார்கள்.இந்த மக்கள் இருக்கும் வரை ஊரணிக்கரையில் இரவில் நடமாடப் பயமின்றிப் போகும்.இவர்களை வேடிக்கை பார்ப்பது,ஏங்குவது என் வேலை.என் அம்மா எப்போதும் வேலை வேலை என்றிருக்கும் பெண்மணி.எங்கள் ஊர்ப் பெண்கள் அனைவரும் அப்படித்தான்.பத்தடி தூரத்தில் திரை அரங்கு இருந்தும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட படம் பார்க்க முடியாது."அவுங்க நாடோடிங்க.நம்ம குடியானவுக.கூத்தாடிக மாதிரி படம் படம்னு திரியாத!" என்று என் ஆயா திட்டுவார்கள்.சிரிக்க மறந்த,அக்கம் பக்கம் பேச மறந்த எங்கள் மக்கள் முன் அவர்கள் தான் சிறப்பான வாழ்க்கை வாழ்வது போல் தோன்றும்.என் அம்மாவிடம் என் எண்ணங்களைச்சொல்லும் போது என் அம்மா அழகாகச்சொல்வார்கள்."அவங்க நாளைக்குச்சேர்க்கனும்,பண்ணனும்னு நெனக்கிறதில்ல.புள்ளைகளப் படிக்க வைக்கனும்,கட்டிக்குடுக்கனும்,அதுகளுக்கு சீர் செய்யனும் இப்புடி பொறுப்புக கெடையாது.வீடு வாங்கு,இடம் வாங்குனு தேவைக கிடையாது.நா இப்புடி வீதிவீதியாத் திரிஞ்சு கூட வித்து அத சாயங்காலமே கொண்டேயி தியேட்டர்ல குடுக்க மனசு வருமா? ஆத்தி! அந்தக்காச சேத்து வச்சா நம்ம பொம்பளப்புள்ளைகளுக்கு ஏதாவது வாங்கலாம்னு தோணும்.அது தான் நம்ம.அதுனால தான் நம்ம ஓடிக்கிட்டே இருக்கோம்.நமக்கு ஆசைக,தேவைக அதிகம்." இப்படிப் பேசும் போது கூட என் அம்மாவின் கை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்.

       இவர்களைப்போல் ஆட்டுக்கிடை போடும் மக்கள். இவர்கள் ஊருக்கு வெளியே தோட்டங்களில் கிடை போடுவார்கள்.கூடாரங்கள் ஆங்காங்கே கவிழ்த்து வைத்திருப்பார்கள்.யாருடனும் பழக மாட்டார்கள்.கூட்டம்,கூட்டமான ஆடுகள்,அழகான சின்னச்சின்னக்குட்டிகள் எங்களைக்கவரும்.ஒவ்வொரு நேரம் நள்ளிரவில் மழை வரும்போது நாங்கள் ஆடு, மாடுகளைக் கொட்டகைகளில் பிடித்துக் கட்டும்போது திடீரென அந்த மக்கள் ஞாபகம் வரும்.இந்த மழையில் எப்படித் தூங்குவார்கள்? என் அம்மா சொல்வார்கள்," எல்லாமே பளக்கந்தான்.வசதிகளப் பளகாட்டா பிரச்சினையே இல்ல." வாழ்க்கையை சுலபமாக வாழும் அந்த மக்கள் தங்களின் சுமைகளை சாபங்களாக எண்ணாது, உள்ளதை வைத்து நல்லது செய்து கொள்ளப் பழகிய அந்த மக்களின் வாழ்க்கை முறை எளிமையானது.இறையிடம் கூட எதையும் எதிர்பார்த்து வாழாது, வருவதை ஏற்று வாழும் அவர்களின் வாழ்க்கை அழகானது. இன்றும் கூட எங்கள் ஊருக்குப்போகும் போது இந்த மக்களைப் பார்த்துவிட்டால் பழைய நினைவுகளில் மூழ்கி விடுவேன்.என் அம்மா எல்லோரிடமும் சொல்வார்கள்,"இவளுக்கு அவுகள மாதிரி இருக்கனும்னு ஆச" என்று.இப்போதும் அந்த மக்களின் சிறுவர்கள் வ ருவார்கள். கூடைகளை ஏந்தி தெலுங்கில் பேசி,கைகளால் சாடை காட்டி புரியவைக்க முயன்றபடி வரும் அவர்களைப் பார்த்து சில தெலுங்கு நண்பர்களின் உபயத்தால் கற்றுக்கொண்ட சிற்சில வார்த்தைகளைப் பேசினால் போதும்.ஐ! என்று பொங்கிச்சிரிப்பார்கள்."ம்ம்.இப்ப உங்க பாஷையும் கத்துக்கிட்டா! கூட்டிக்கிட்டுப் போங்கடா!" என்று சிரிப்பார்கள் என் அம்மா.என் குழந்தைகள் ,"ம்க்கும்..அஸ்க்கு,புஸ்க்கு" என்று என்னைக்கட்டிக் கொள்ள நமக்கு இருப்பு மறந்து போகும்.

             நமது மக்கள் வாழ்க்கையை முறையாக்குகிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட சட்ட திட்டங்களை வகுத்து,உறவுகளைப்பெருக்கி,விருந்து,சீர்,ஆடம்பரம் ஆகியவற்றைப்பழக்கி வாழ்க்கையை சிக்கலாக்கிவிட்டார்கள்.சிக்கலான வாழ்க்கையை தலைமுறை தலைமுறையாக இன்னும் சிக்கலாக்கி சிடுக்கெடுக்க முடியாத சீக்குப்பிடித்த வாழ்க்கை ஆகிப்போனது.பிடிக்கிறதோ இல்லையோ எல்லோரும் வாழும் வாழ்க்கையை வழிமொழிந்து தொடர வேண்டிய கட்டாயத்தில் நாம்.எங்கள் கிராமங்களில் எங்களுக்கு முந்தியத் தலைமுறையின் (அம்மாக்கள்) பாடு பெரும் பாடு.அதற்கு முந்தியத் தலை முறையின் (பாட்டிகள்) பாடு பெரும்,பெரும்...பாடு. ஏதோ நாங்கள் கற்ற கல்வி எங்களின் சுயம் விளங்க  விளக்க  உதவுகிறது.

2.1.10

9.உளுந்து களி

தேவையான பொருட்கள்
1.உளுந்து - 2 உழக்கு
2.வெல்லம் அல்லது கருப்பட்டி - ருசிக்கேற்ற அளவு
3.நல்ல எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

              உளுந்தை நன்றாக வறுத்து சன்னமான மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்தப்பொடியில் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை அல்லது கருப்பட்டியை பொடித்துப் போட்டு,சிறிது தண்ணீர் ஊற்றி வாசம் வருமளவு பாகாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி அந்த மாவில் கட்டியில்லாது கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.இடையிடையில் நல்ல எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கிளறி நல்ல பளபளப்பாக வரும் போது தண்ணீரில் கைகளை நனைத்து தொட்டுப் பார்த்தால் கைகளில் ஒட்டாத போது இறக்கவும்.சூடாக தேவைப்பட்டால் சிறிது நல்ல எண்ணெய் அல்லது நெய் கலந்து சாப்பிட சுவை,சத்தும் அதிகம்.முதுகு,இடுப்பு வலிகளுக்கும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது.

8.கல்கண்டு வடை

தேவையான பொருட்கள்
1.உளுந்து - 2 உழக்கு
2.வெல்லம் அல்லது கல்கண்டு - ருசிக்கேற்ற அளவு
3.ஏலக்காய்- சிறிது
4.எண்ணெய் - தேவையான அளவு

          உளுந்தை நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.தண்ணீருக்குப் பதில் வெல்லத்தை அல்லது கல்கண்டை பொடித்துப் போட்டு,ஏலக்காயையும் போட்டு அரைத்து வழிக்கவும்.இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை வடையாகத் தட்டிப் போட்டு நன்றாக வெந்ததும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும் அடுப்பு நிதானமாக எரிய வேண்டும்.எண்ணெய் புகைந்தால் வடை உள்ளே மாவாக வெளியில் கருப்பாக இருக்கும்.இந்த வடை கணிசமாக,சுவையாக இருக்கும்.மாவு தளர்வாக இருந்தால் மைதா கலந்து கொள்ளவும்.

7.கந்தரப்பம்.

தேவையான பொருட்கள்
1.பச்சரிசி - 2 உழக்கு
2.உளுந்து - 1/2 உழக்கு
3.வெல்லம் - 600 கிராம்
4.தேங்காய் - ஒரு மூடி
5.ஏலக்காய்- சிறிது
6.எண்ணெய் - தேவையான அளவு

              அரிசி,உளுந்து இரண்டையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.நன்றாக அரைபட்டதும் வெல்லத்தையும் பொடித்துப் போட்டு,ஏலக்காயையும் போட்டு அரைத்து வழிக்கவும்.தேங்காயைத் துருவி மாவோடு கலந்து கொள்ளவும்.இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை நன்றாகக் கலந்து குழிகரண்டியில் எடுத்து ஊற்றவும்.பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.கணிசமாக,சுவையாக இருக்கும்.