வெகு நாட்களுக்கு முன்
வாசலில் கிளைகள் விரித்து
பரந்து கிடந்த
அந்த வேப்பமரத்தின் கிளைகளில்
விதவிதமான பறவைகளின் கூடுகள்.
பொழுதடையும் ஒவ்வொரு நாளும்
விதவிதமான கீச்சிடல்கள்
ஒரு நாளும் கூடு மாறி,
குருவிகள் சண்டையிட்டதில்லை
கூடுகளின் அளவு குறித்து
போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வும்
இருந்ததில்லை.
அதனதன் எல்லையில் அமைதியான
வாழ்க்கை.
இன்று
பூக்கள் உதிரும் பருவத்தில்
பழந்துணி விரித்து
சேகரிக்க யாருமில்லை.
சேகரிக்க யாருமில்லை.
வேம்பின் பழம் சேகரிக்க,
சருகுகள் பெருக்கி சுத்தம் செய்ய,
யாருக்கும் பொறுமையில்லை.
தளத்தில் உரசும் வேம்பின்
கிளைகளை
தரித்துக் குறுக்கியதில்
கிளைகளற்று ஒற்றைத்தண்டாய்
நீண்ட மரத்தில்
எந்தப்பறவையும் கூடு கட்டுவதுமில்லை.
ஊஞ்சல் கட்ட உற்சாகமான குழந்தைகளுமில்லை.
யாருமற்ற தனிமையில் வெம்பும்
வேம்பின் காற்றிலும் கசப்பு
வாடை..