கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

9.1.10

பொங்கலோ பொங்கல்

            பொங்கல் தமிழர் திருநாள்.தை ஒன்றாம் தேதியை தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டாகவும் அறிவித்தது முதல் வருடப்பிறப்பு என இரு பெரும் விழா.பொங்கல் கிராமங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.அதுவும் எங்கள் ஊர்களில் நன்றாக விளைந்துவிட்டால் மக்களின் முகத்தில் ஒரு சந்தோசம் களைகட்டும். பளபளப்பும்,புன்னகையும் கொஞ்சும்.தை பிறந்தால் வழி பிறக்கும்.புலம் பெயர் மக்கள் தங்கள் குல தெய்வங்களுக்குப் பொங்கலிட்டு படையலிட சொந்த கிராமங்கள் வரும் நன்னாள்.எங்கள் ஊரில் பொங்கல் என்றால் மார்கழி மாதம் கடைசி பத்து நாட்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம்.வீடு முன்வாசல் முதல் கொல்லை வாசல் வரை சுத்தம் செய்து,வீட்டிற்கு வண்ணமடித்து,அத்தனை பொருட்களையும் கழுவி,காயவைத்து அடுக்கி வீடே தை மகளை வரவேற்கப் பொலிவாக இருக்கும்.போகி அன்று பாய்,போர்வை,தலையணை உறைகள் எல்லாவற்றையும் துவைத்து,தலைக்குக் குளித்து,வீடு வாசல் கழுவி சுத்தம் செய்வோம்.பொங்கல் சந்தையில் பொங்கலுக்கென்று பிரத்யேகப் பொருட்கள்,கோவிலுக்குப் பொங்கல் வைக்க மண் பானை,அடுப்பு வாங்கி வந்து விடுவார்கள்.கரும்பு கட்டு வீடு வந்து விட்டால் குதூகலமும்,கூடவே வந்து விடும். போகி அன்று மாலையே அரிசி ஊறவைத்து அரைத்து கோல மாவு தயார் செய்து மண்பானையில் கோலமிடுவார்கள் என் அம்மா.ஒரு குச்சியில் வெள்ளைத்துணியைச்சுற்றி மாவில் நனைத்துக் கோலமிடுவார்கள்.மெல்லிய கம்பிகளாக வரும்.வண்ணம் வேண்டி சிறிது மாவில் மஞ்சளையும்,சிறிது மாவில் குங்குமமும் கலந்து பானையில் இடுவார்கள்.பானை சிறிது நேரத்தில் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ள கோலம் நன்றாக நிறக்கும்.வெண்கலப்பானையில் மாக்கோலம் எடுபடாது.பின் அடுப்பிலும் கோலமிட்டு அனைவரும் உறங்கியதும் படைக்கும் இடத்தில் மனைக்கோலம்,பொங்கலிடும் இடத்தில் இழைக்கோலமிட்டு,மாவிலை, தோரணம் தயார் செய்து பின்னிரவாகிவிடும் தூங்குவதற்கு. காலை,குளித்து புத்தாடை நகை அணிந்துவிட்டால் கால் தரையில் பாவாது. குலதெய்வக் கோவில்களில் பொங்கலிட்டு வீடு வந்து மாலை தான் நல்ல நேரம் பார்த்து பொங்கலிடுவோம்.பொங்கலுக்கென்று இரும்பு அடுப்பு இரண்டு,வெங்கல உருளி இரண்டு கோலமிட்டு விறகு வைத்து எரித்து பொங்கல் வைப்போம்.ஒரு உருளி சர்க்கரைப்பொங்கல்,ஒரு உருளி பால் பொங்கல் பிறகுஅவரைக்காய்,          சர்க்கரைவள்ளிக்கிழங்கு,    வள்ளிக்கிழங்கு,            மாங்காய்,கீரைத்தண்டு,பலாக்காய்,பறங்கிக்காய்,கத்திரி,கருணைக்கிழங்கு இப்படி எல்லாக்காயும் போட்டு,மிளகாய்,மல்லி வறுத்து இடித்த பொடி போட்டு தாளிதம் செய்யாமல் கூட்டுக்காய் குழம்பு வைத்து படையல் செய்வோம்.கரும்பு தின்று வாய் புண்ணாகி பொங்கல் சாப்பிட முடியாது.

          மறுநாள் மாட்டுப்பொங்கல்.மாவிலை,கூழைப்பூ தோரணம் மாட்டுக்கூடத்தின் நுழைவு வாயிலில் கட்டி,மாட்டுக்கூடத்தின் நடுவே சாணத்தால் மெழுகி,காவிப்பட்டை தீட்டி நடுவில் கோலமிடுவோம்.அதற்குள் என் அப்பாவும்,தம்பியும் மாடுகளைக் குளிப்பாட்டி,குங்குமமிட்டு,கழுத்தில் கரும்பு மாலையும் பூமாலையும் கட்டி கோமாதாக்கள் எல்லாம் மஹாலக்ஷ்மிகளாக ஜொலிக்கும்.என் அம்மா மாட்டுக்கூடத்தில் பொங்கலிட்டு இறக்கி வைத்துவிட்டு வாழைக்காய் பொடிமாஸ், பலாக்காய் சொதி (குருமா),பறங்கிக்காய் புளிக்கறி,முளைக்கீரை மசியல்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல்,வள்ளிக்கிழங்கு கூட்டு,கருணைக்கிழங்கு மசியல்,கூட்டுக்காய் குழம்பு,பருப்பு மசித்து நெய் கூட்டி சமையல் செய்வோம்.மாட்டுக்கூடத்தில் கடகாப்பொட்டியை (பனையோலையால் செய்த பெரிய அளவு பெட்டி) தலை கீழாகக் கவிழ்த்து அதன் மீது இலை விரித்து பொங்கலை வைத்து,எல்லாப்பதார்த்தங்களையும் பரப்பி,கற்பூரம் காட்டி ஆராதனை செய்து,சூரிய பகவானையும்,கோமாதாக்களையும் வணங்குவோம்.என் அப்பா,செம்பு நீரை கையில் எடுத்துக் கொண்டு அரிவாளால் மாட்டுக்கூடத்தில் ஏழு இடங்களில் கொத்தி அந்த இடத்தில் செம்பு நீரை ஊற்றி அதன் மீது ஒரு மாவிலையை வைத்து,படைத்த பதார்த்தங்களை ஒன்றாகக் கலந்து அதை அந்த மாவிலை மீது வைத்து தயாராக இருப்போம்.ஊரார் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து ,"பொங்கலோ பொங்கல்.நாடு செழிக்க நல்ல மழை பெய்ய,ஊரு செழிக்க உத்தம மழை பெய்ய
பொங்கலோ பொங்கல்,நாலு காட்டுல ஒரு காடு பாங்காடு கிடக்க பொங்கலோ பொங்கல்" என்று பெரியவர் ஒருவர் கூற மற்றவர் பொங்கலோ பொங்கல் என்று கூவியபடி மாட்டுக்கொட்டகையையும்,மாடுகளையும் சுற்றிவருவோம்.பிறகு அந்த மாவிலையில் உள்ள பொங்கல் கலவையை மாடுகளுக்கு ஊட்டி மாடுகளின் விரதம் முடித்து மாடுகளை அவிழ்த்துவிடுவோம்.மாடுகள் வீடு திரும்பும் போது உலக்கையை வாசலில் கிடத்தி மாடுகளை வரவேற்று மாடுகளுக்குத் தண்ணீர் வைத்து,வைக்கோல் போடுவோம்.பிறகு விருந்து சாப்பாடு நடக்கும்.

             மாட்டுப்பொங்கல் அன்று மாலை பெண் குழந்தைகள் அனைவரும் கண்மாய் படித்துறைக்கு கொப்பி கொண்டு செல்வோம்.ஒரு தட்டில் கொப்பிக்கட்டைகள் பரப்பி,வெற்றிலை,பாக்கு வைத்து,சுட்ட பனங்கிழங்கு வைத்து,படைத்த உணவுக்கலவை வைத்த தட்டை தலையில் வைத்து ஊர்வலமாகச்சென்று சலவைத்தொழிலாளச்சகோதரர்கள் படித்துறையில் விரித்திருக்கும் வேட்டியில் கொட்டிவிட்டு,கொப்பிக்கட்டைகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து பிள்ளையார் கூடத்தில் தட்டுகளை வைத்து சாமிகும்பிட்டு விளையாடுவோம்.வீட்டிற்குத் திரும்பி வரும்போது மனம் நிறைவாக,பொங்கல் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்துடனும் வருவோம்.அன்று எல்லா வீடுகளிலும் மாடுகள் இருந்தது. இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு வீடுகளில் தான் மாடுகள் உள்ளது.இருந்தாலும் பொங்கல் அதே உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.எங்கள் ஊரில் பொங்கல் கொண்டாடி எனக்கு 18 வருடம் கடந்துவிட்டது.இப்போது அந்தப் பசுமை நினைவுகள் கண்களில் இருக்கிறது.

             அந்தமானில் நாங்கள் பொங்கல் விழாவை,தமிழர் திருநாளை தமிழ்நாட்டின் அதே குதூகலத்தோடு கொண்டாடுகிறோம்.மஞ்சள் கொத்து,கருணைக்கிழங்கு,இஞ்சி இதெல்லாம் எல்லோரும் வீட்டில் வளர்ப்பதுண்டு.கரும்பு தீவுகளில் வளர்கிறது.பொங்கலுக்குப் புத்தரிசி கிடைத்துவிடும்.அடுப்பு,பானை(வெங்கலம் தான்) வைத்து பொங்கலிட்டு படைக்கிறோம்.

           உறவுகள் அருகில் இல்லாத குறையொன்றைத்தவிர வேறொரு குறையில்லை.நாடு செழிக்க,நல்ல மழை பெய்ய,ஊரு செழிக்க உத்தம மழை பெய்ய,நல்லோர் வாழ,நல் அமைதி நிலவ பொங்கட்டும் பொங்கல்.பொங்கலோ பொங்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக