கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

7.1.10

பாலை நிலத்தின் பசுமை மனிதர்கள்

        உலகின் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு இயல்பு,வரையறையை மனிதன் கூறுகிறான்.மனிதனுக்குள்ள இயல்பு, வரையறைகளைக் கூறமுடியுமா? முடியும். ஆனால் அது ஏட்டளவிலும்,பாட்டளவிலும் தான் இருக்க முடியும்.மனிதர்கள் தங்கள் இயல்பு தாண்டி,வரையறை தாண்டி பயணித்து நாட்கள்,வருடங்களாகிக் கால வரையறை கடந்து விட்டது.எங்காவது மனிதம் விழித்து ஒரு நற்செயல் நடந்தேறிவிட்டால் மனம் சட்டென்று கரைந்து விழிகள் சிந்தும், மனம் நனையும் வரை.அப்படி ஒரு உண்மைக்கதை இது.ஒரு பெண்ணுக்கு இறைவன் இப்படி ஒரு வாழ்க்கை தரலாமா? என்ற அனைவரின் கேள்விக்கும் அப்படி கிடைத்த வாழ்க்கையை அலுக்காமல் சலிக்காமல் இப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய,நீரில் நடந்து,நெருப்பில் குளித்த ஒரு கிராமத்துப் பெண்ணின் கதை இது. 84 வருடம் இந்தப்பூவுலகில் வசித்து, போராட்டங்களே வாழ்க்கையாய் வாழ்ந்து,கடந்த நவம்பர் மாதம் 7 ம் தேதி தன் உலக பந்தத்தை முடித்து விடைபெற்ற ஒரு நெருப்பின் கதை.

           என் ஆயா திருமதி.சோலைச்சி அவர்கள் (என் அம்மாவின் தாயார்) சிவகங்கை மாவட்டம் பலவாங்குடி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர்.இவருக்கு ஒரு இளைய சகோதரர் உண்டு.(பரவாயில்லையே! உங்க அப்பாவும் அம்மாவும் குடும்பக் கட்டுப்பாட்ட தெரிஞ்சு வச்சிருக்காங்க! என்று கேலி செய்வோம்) தந்தை பர்மாவிலும்,ரங்கூனிலும் இருந்தவர்.ஓரளவு செல்வச்செழிப்பில் வளர்ந்தனர்.அவரை அருகில் உள்ள மணச்சை என்னும் கிராமத்தில் தெய்வத் திரு.பெரிய கருப்பன் அம்பலம் அவர்களுக்கு (என் ஐயா) மணமுடித்தனர்.அந்தக்காலத்தில் நிறைய நகை போடுவது,சீர் தரும் பழக்கம் இல்லை .மாற்றாக மாப்பிள்ளை வீட்டார் பரிசப்பணம்,தாலிச்சங்கிலி தந்து மணமுடிப்பது எங்களில் வழக்கம்.என் ஐயா ஊரின் அம்பலகாரர். ஓரளவு சொத்தும்,நல்ல செல்வாக்கும் கொண்டவர்.உழைப்பாளி.அன்பும் முரட்டுத்தனமும் கலந்த கலவை.மணமுடித்து அமைதியாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை பெரியோர்களின் சச்சரவில்,"உம்மக எங்க வீட்டுல வாழனும் ஞாபகம் வைச்சுப் பேசு" என்று என் ஐயாவின் தந்தை சொல்ல,"அப்புடி ஒண்ணும் எம்மக உன் வீட்டுல வாழனுங்கற அவசியமில்ல,இப்பவே தீத்துக்க (விவாகரத்து)" என்று என் ஆயாவின் தந்தை  தன் வீட்டுக்கு அழைத்துப்போகும் போது என் அம்மாவிற்கு ஒரு வயது.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மூன்று வருடங்கள். அதுவும் அப்போதைய கால கட்டத்தில் இருவரும் பார்த்துகொண்ட நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.தம்பதியருக்குள் சச்சரவு ஏதுமின்றி பெரியோர்களின் வெற்று கௌரவத்தால் என் ஆயாவின் வாழ்க்கை பாழானதோடு என் அம்மாவிற்கும் தந்தையின் அன்பு அருகிருந்து கிடைக்காது போனது.என் ஐயாவும் என் ஆயாவை ஆள் விட்டு கூப்பிட்டும்,நேரடியாக வந்து கூப்பிட்டும் ஒரு முறை வந்தபின் அந்த வீட்டில் எப்படி நுழைவது என்ற அச்சத்தில் மறுத்துவிட்டார்.அதன் பிறகு என் ஐயா விவாகரத்து பரிசப்பணம் 300/ ரூபாயும்,3 பவுன் நகையும் தந்த போது என் ஆயா வாங்க மறுத்து என் மகளுக்கு என்றைக்கு இருந்தாலும் பிறந்த வீடு வேண்டும் என்று கூற என் அம்மா இங்கும் அங்குமாக இருந்தார்கள்.அதனால் என் அம்மா ஐந்தாம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. இதற்கிடையில் என் ஐயா இரண்டாவதாக மணமுடித்து அந்த ஆயாவிற்கு நான்கு ஆண்கள்,நான்கு பெண்கள்.என் அம்மா இவர்களுடன் உறவை பலப்படுத்திக்கொண்டார்.ஆனாலும் என் அம்மாவின் சிறிய தாயாருக்கு என் அம்மாவின் மேல் வெறுப்பு அதிகம்.என் ஆயா பிறந்த வீடு வந்து,சிலநாட்களில் அன்னை,பின் தந்தை இருவரும் இயற்கை எய்த, தம்பி மனைவிக்கும் இவருக்கும் ஆகாது போக சொத்து எதிலும் பங்கு வாங்காமல் ஒரு நகரத்தார் குடும்பத்தின் விதவை ஆச்சியின் வீட்டில் குடியேறி,அந்த ஆச்சி கொடுத்த ஒரு மண்பானை,மண் அடுப்பு,மண்சட்டி ஒன்றைவைத்து தனிக்குடித்தனம் தொடங்கி நகரத்தார் குடும்பங்களில் வேலை செய்து,ஒத்திக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து, அதில் சேமித்து அந்த நிலத்தை விலைக்கு வாங்கி,வீட்டு மனை ஒன்று வாங்கி,கொஞ்சம் நகைகள் செய்து தன் தம்பியை விட மேலான நிலைக்கு வந்துவிட்டார்.இதற்கிடையில் இவரை இரண்டாம் தாரமாக மணமுடிக்கக் கேட்டு வந்த மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து ஓடி ஒளிவாராம்.வயலுக்கோ,குடிதண்ணீர் ஊரணிக்கோ தனியாகப்போனால் யாரும் பேச்சுக்கொடுத்து நாம் அசிங்கப்பட்டுவிடுவோமோ என்று போவோர் பின்னால் போய் வருவாராம்.வயலில் ஆண்களைப்போல வரப்பு வெட்டி,நாற்று பறிக்க ,நடவு நட கூலிக்கு ஆள் பிடிக்காமல்,உறவுகளுக்கு இவர் வேலை செய்ய அவர்கள் இவருக்கு பிரதி உபகாரம் செய்ய நாட்கள் கடந்தது. உழைப்பு,தன்னம்பிக்கை இவற்றால் உயர்ந்தார்.நகரத்தார் மக்களும் இவரது உண்மை, உழைப்பு கண்டு அசந்து போனார்கள்.கல்வியறிவே சிறிதும் அற்ற ஒரு பெண்ணின் துன்பங்களை சொல்ல வார்த்தைகளுக்கு வலிமை இல்லை.

                என் அம்மாவிற்கு என் ஐயா திருமணம் செய்ய என் அப்பாவைப் பேசி என் ஆயாவிடம் சம்மதம் கேட்டு,நகை,சீர் செய்து திருமணம் முடிக்க என் ஆயாவும் தனியே நகை, சீர் செய்தார்.என் அப்பா வீட்டு உறவுகள் அட ரெண்டு சீரு என்று மலைத்துப்போனார்கள்.என் ஐயா தனது 46 வயதில் இறைவனடி சேர என் ஆயா அன்றுதான் என் ஐயா வீட்டிற்கு என் ஐயாவின் முகம் பார்க்க வந்து விழுந்து ஒப்பாரி வைத்து அழ,ஊரே அழுதது.அப்போது என் ஐயா வீட்டு சொத்தில் ஆயாவிற்குப் பங்கு தர பங்காளிகள் முடிவு செய்ய, மாப்பிள்ளையிடம் கேட்கச்சொல்லி என் ஆயா சொல்ல என் அப்பாவோ பிறந்த வீடு வேண்டும் என்பதற்காக என் மாமியார் பரிசப்பணம் வாங்க மறுத்தார்.எனக்கு மச்சினர்கள் வேண்டும் அதனால் சொத்து வேண்டாம் என்று மறுக்க எல்லோர் மனதிலும் என் அப்பாவின் மதிப்பு கூடிப்போனது.அன்றிலிருந்து என் அம்மாவின் மாற்றாந்தாய் என் ஆயாவிடம் பேசுவது மட்டுமல்ல,வீட்டிற்கு வரச்சொல்லியும் உபசரிப்பார்.என் மாமாக்களோ,"எங்க அப்பாவ நினச்சுக்கிட்டு வேற கல்யாணம் பண்ணாம இருந்ததால இந்த ஆத்தாவுக்கும் நாங்க தான் கொள்ளி வைப்போம்" என்பார்கள்.இதற்கிடையில் என் அப்பா தனது 52 வது வயதில் இறைவனடி சேர தன் ஒரே மகள் விதவையானதும் மிகவும் ஒடிந்துபோனார் என் ஆயா.

        ஆயிற்று! அந்த இறுதிகாலம் வந்தேவிட்டது.என் ஆயா எங்களுக்காக உழைத்ததாலும் என் ஆயாவின் சொத்து சம்பாத்தியம் என் அம்மாவிற்குத் தரப்பட்டதாலும் என் ஆயாவை வயதான காலத்தில் என் அம்மாவே பராமரித்து வந்தார்.அவ்வப்போது என் ஆயாவை மாமா வீடுகள் கொண்டாடவும் செய்தன.கால் ஒடிந்து படுத்த படுக்கையான பின்னும் கூட இங்கும் அங்குமாக இருப்பார்.நவம்பர் மாதம் 7ம் தேதி திடீரென தூக்கத்திலேயே உயிர் பிரிய, என் மாமாக்கள் என் ஆயாவைத் தங்கள் வீட்டிற்குத் தூக்கிச்சென்று இறுதிக்கடன் செய்ய விழைய, என் அம்மாவும் என் தம்பியும் மறுக்கஒரு பனியுத்தம். பங்காளிகள் தலையிட்டு என் அம்மாவையும்,தம்பியையும் சமாதானப்படுத்தி என் ஆயாவின் இறந்த உடலை ஆம்புலன்ஸில் என் மாமாக்களின் பூர்வீக வீட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிக்கடன் செலுத்தினர்.இவர்களைப் பார்த்து ஊர் சிலிர்த்தது. இந்தக்கதையை ஏன் வலையில் எழுதுகிறேன் என்றால் தனது தாய் தந்தையரைப்பராமரிக்க முடியாது முதியோர் இல்லங்களில் விடும் இந்தக்கால மனிதர்கள் முன் இப்படி ஒரு மனிதர்களும் வசிக்கிறார்கள் என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காக.பாலை நிலத்தின் மனிதர்கள் மனதில் உள்ள ஈரத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட.இவரைப்போல தியாகமே உருவான பெண்கள் எங்கள் ஊரில் அதிகம்.ஆனால் அந்தப்பெண்களே வியக்கும் ஒரு அற்புதம் எங்கள் ஆயா.  ஒரு பெண் எப்படி வாழ்ந்தால் சிறப்புகளை இறக்கும் நேரத்தில் பெற முடியும் என்பதற்குச்சான்றாய் வாழ்ந்து மறைந்த என் ஆயாவின் வாழ்க்கை எங்களுக்கு ஒரு பாடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக