கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

31.8.12

வெம்பும் வேப்பமரம்


வெகு நாட்களுக்கு முன்
வாசலில் கிளைகள் விரித்து பரந்து கிடந்த
அந்த வேப்பமரத்தின் கிளைகளில்
விதவிதமான பறவைகளின் கூடுகள்.
பொழுதடையும் ஒவ்வொரு நாளும்
விதவிதமான கீச்சிடல்கள்
ஒரு நாளும் கூடு மாறி,
குருவிகள் சண்டையிட்டதில்லை
கூடுகளின் அளவு குறித்து
போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வும்
இருந்ததில்லை.
அதனதன் எல்லையில் அமைதியான வாழ்க்கை.

இன்று
பூக்கள் உதிரும் பருவத்தில் பழந்துணி விரித்து
சேகரிக்க யாருமில்லை.
வேம்பின் பழம் சேகரிக்க,
சருகுகள் பெருக்கி சுத்தம் செய்ய,
யாருக்கும் பொறுமையில்லை.
தளத்தில் உரசும் வேம்பின் கிளைகளை
தரித்துக் குறுக்கியதில்
கிளைகளற்று ஒற்றைத்தண்டாய் நீண்ட மரத்தில்
எந்தப்பறவையும் கூடு கட்டுவதுமில்லை.
ஊஞ்சல் கட்ட உற்சாகமான குழந்தைகளுமில்லை.

யாருமற்ற தனிமையில் வெம்பும்
வேம்பின் காற்றிலும் கசப்பு வாடை..

தாலாட்டுப்பாடல்




ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ
மதலை சிறு குழந்தை என் கண்ணே!
உன் மாமன்மார் வீடு எங்கே!
அந்தோ தெரியுது பார் நல்ல கண்ணே!
ஆயிரம் கால் கல் தூணு

வெள்ளி விளக்கெரியும் கண்ணே – உன்
வெண் கொலுசு ஓசையிடும்
தங்க விளக்கெரியும் என் கண்ணே
உன் தாய் மாமன் வாசலுல

தங்கத்தால் கால் நிறுத்தி கண்ணே!
நீ தாமரையால் பந்தலிடு
வெள்ளியில் கால் நிறுத்தி கண்ணே
நீ வெற்றிலையால் பந்தலிடு
உன் பந்தலுக்கே வந்தாராம் என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்

குளிக்கக் கிணறு கட்டி, என் கண்ணே!
நீ கும்பிடவோ சிலையெழுதி
படிக்க மடமோ கட்டி வச்சார்! என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்.

மஞ்ச மணக்குது பார் என் கண்ணே!
உன் மாமன் வயலோரம்
இஞ்சி வச்சா பிஞ்சிறங்கும் என் கண்ணே!
உன் இளைய மாமன் போற வழி.

ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ

18.8.12

புதுயுகப்பெண்மை




புல்லின் நுனி பனித்துளி ஒன்று
மகுடமானதாய் கர்வப்பட்டது.
பூவின் இதழ் பனித்துளி ஒன்று
பூவை அலங்கரிப்பதாய் அகந்தை கொண்டது.
கதிர் வந்ததும் அவை காணாமல் போனது.

சிப்பியில் விழுந்த பனித்துளி
உலகம் அறியாமலே முத்தானது.
மூடி வைத்த பனித்துளி முத்தானதும்
அழிப்பதென்பதும் கதிரால் ஆகாது.

 தன்
புற அழகில் கர்வம் கொண்டு
அக வளர்ச்சி மறந்து
தானே பொறியாகி
தானே விட்டிலாகி
யாரும் பயணிக்காத புதுப்பாதையில்
நடையிடுகிறது புதுயுகப் பெண்மை.

 நாபியில் தோடு போட்டு
நயனங்களில் கல் பொட்டு வைத்து
மழித்து, வளர்த்து, கூட்டிக்கழித்து
நாளொரு புது பாணி.
கவர்வதும்,கவரப்படுவதுமே முனைப்பாய்
நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் இங்கே மறந்தே போனது…..

24.1.12

தாயன்பு


சாரல், தூறலாகி
தூறல், பெரு மழையாகி
மழையின் பிரவாகம்
சிற்றாறாய்ப் பயணிக்கிறது.

பயணிக்கும் பாதையெங்கும்
கழிவுகளைக் கழுவி
சுழித்து ஓடுகிறது.
கப்பல் விட்டும்
கால்களை நனைத்து விளையாடியும்
குதூகலிக்கிறது குழந்தை மனது

வெயிலின் தாக்கம் குறைத்து
பூமியின் வன்மம் உடைத்து  
முளைக்கவும், பூக்கவும், குடை பிடிக்கவும்
வீழும் நீர்த்தாரையில் கைகள் விரித்து
தட்டாமாலை சுற்றி சிலிர்க்கவும், பெய்கிறது மழை
காற்றில் பரவுகிறது ஈரம்
கன்னங்களில் ஊடுருவுகிறது குளிர்

சோரப்பெய்த மழையில்
குளிர நனைந்த பூமி
இதழ் விரித்துக் காத்திருக்கிறது
இலைகள் சொட்டும் அன்பின் துளிகளுக்காய்….
அவை சொட்டும் சிறு துளியில் நனைவதான
இலைகளின் பெருமிதத்தை எண்ணி
தாய்மையின் பூரிப்பில் குளிர்கிறது பூமி!

24.9.11

கடிதங்கள்



இப்போதெல்லாம்
 யாருமே எனக்கு கடிதம் எழுதுவதில்லை

தேரோட்டமா? திருவிழாவா?
நாற்றுப்பறிப்பா? நடவா?
களையெடுத்தலா? கதிர் அறுப்பா?
செய்தி கொண்டு வரும் அந்த மஞ்சள் நிற அஞ்சலட்டை.

நலம் நலமறிய எழுதவும்
உப்புக்கண்டம் போடவும்
ஓடுடைத்து புளி வாங்கவும்
தூதாகப் போகும் இன்லண்ட் கடிதம்

படித்த கடிதங்களை,
பொத்திப் பாதுகாத்து
காலம் கடந்து குப்பையான ஒரு பொழுதில்
கிழித்தெறிய களைந்த போது
ஒவ்வொரு வார்த்தையிலும்
உறைந்து கிடந்தது கடந்த காலம்

23.9.11

தும்பைப்பூக்கள்


கடைசிக்கால
நிம்மதிக்கனவுகளுடன்,
வானம் தொடும் ஆவலும்,
ஏணி வைக்கும் முயற்சிகளுமாய்,
பெரு நகரச் சமுத்திரத்தில் அமுதம் தேடி
மூழ்கி, எழுந்து, நீந்தி, திளைத்து……

கனவுகளில் வலம் வருகிறது
தட்டான் பிடித்த பொழுதுகளும்
தவளை கத்தும் மழை இரவுகளும்

நட்ட செடிகளில்
முதல் பூவும் முதல் பிஞ்சும்,.
திருவிழாக்கடைகளில் பஞ்சுமிட்டாயும், ரப்பர் கடிகாரமும்,
வயல் வரப்புகளில்,
கண்மாய்க்கரைகளில்
கதிர்க்களங்களில் உண்ட கஞ்சியும், ஊறுகாயும்,
நல்ல நாள் பார்த்து சமைத்த
புது அரிசிச்சோறும், கறிக்குழம்பும்,
தும்பைப்பூக்களில் தேனருந்தும் பட்டாம்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்,
ஊரணிப்படிக்கட்டுகளில்
அந்தி நேரங்களில் ஒலிக்கும் துணி தப்பும் ஒலியும்,
கலவைக்குரல்களையும் திரித்து, திரித்து,
விரியும் நினைவில் சொன்ன கதைகளில்
மெல்ல இளகும் மனவெளி..
உறங்கிப்போன குழந்தைகள் கனவில்
தும்பைப்பூக்களும், தாமரைகளும்..
.
அரவமற்ற ஊரணிக்கரைகளில் பூத்துக்கிடக்கிறது
பறிக்க ஆளில்லாத தாமரைகள்

13.9.11

எங்கள் கொற்றவை




ஒரு நெடுங்கனவின் நீட்சியாய்
துரத்திக்கொண்டே இருக்கிறது அவள் குறித்த காட்சிகள்.
மறக்க நினைத்தாலும் உள்ளத்தில்
தைத்துக்கொள்கிறது அவளின் துயரங்கள்

வாழ்க்கை வஞ்சித்த வனதேவதை அவள்.
நாகரீகத்தின் சாயல் அறியாத கிராமத்துக்கொற்றவை.
அன்பும், கற்பும் மட்டுமே அவளின் ஆயுதங்கள்
கஞ்சிக்கலயத்தில் கதிரவனையும் சுமந்து
கழனி, காடெல்லாம் பண்படுத்தி
கதிர் வளர்த்தாள்
வனம் பெருக்கினாள்
மாலை சூரியனை மலை முகட்டில் விட்டு
நிலவைக்கூட்டி வீடு வருவாள்.
காலம் அவளின் முந்தானையில்.
பொறுக்கிவந்த சுள்ளியில் சுடர் வளர்த்து
வயிற்றின் பசித்தீ போக்கி,
மீத உணவில்
காலை காக்கைக்கு ஒரு பிடி அன்னம்
இரவு பைரவருக்கு ஒரு பிடி என்று ஒதுக்கிவைப்பாள்.
ஆலை அரிசி உண்டதுமில்லை.
ஆகாத உணவை தின்றதுமில்லை.
மருந்தும், விருந்தும் அறிந்ததுமில்லை.
.உதவி என்போருக்கு உயிர் தருவாள்.
அன்பைக்கூட அதட்டலாய்க்காட்டுவாள்.
சுற்றத்தின் துயர் தீர்ப்பாள்
முந்தையத் தலைமுறைப்பெண்களின்
பிறவிக்கலி தீர்க்கும் சுமைதாங்கியாய் அவள்.

அவள் உடலின் உயிர்க்கடிகாரம்
அவளை உட்கார ஒட்டாமல் விரட்டிக்கொண்டேயிருக்க
எப்போதும் இயற்கையோடு உறவாடியபடி இருந்தாள்.
மனிதர்களிடம் மட்டும் விலகியே இருந்தாள்.
தேவைகளை அவசியத்தேவைகளாக மட்டுறுத்தி
ஆசைகளைப்பொசுக்கி அறம் வளர்த்தாள்.
யுகம் யுகமாய் வாழ்ந்த பெண்களின்
துயர் படிந்த குறியீடாய் அவள்.

அவளது இல்லில்
அவளின் தனிமைக்குத் துணையாய்
தெய்வங்கள் குடியிருந்தன.
கழனிகளிலும் காடுகளிலும்
மைனாக்களும், மயில்களும்.
காற்றின் திசை பார்த்து மழையின் வரவு சொல்வாள்.
தவளையின் மொழி, முட்டையுடன் எறும்புகள்
பல்லியின் ஒலி, பசுவின் கதறல்
அத்தனைக்கும் அர்த்தம் சொல்லும்
இயற்கையின் அகராதி அவள்.
மண் பயனுற வாழ்ந்த மகளீரின்
மங்காத அடையாளமாய் அவள்

முந்தையத் தலைமுறைப்பெண்கள்
இறக்கித்தந்த தோள் சுமை விட்டு, விடுதலையாகி
பூட்டுகள் விலக்கி புதிதாய்ப்பிறந்த எங்களுக்கு
வியப்பின் வடிவம் அவள்.
பொல்லாப்பொழுதாய் விடிந்த
பனிமூடிய காலைப்பொழுதொன்றில்
நெட்டுயிர்த்துப் பிரிந்தது
எங்கள் குலக்கொற்றவையின் உயிர்க்காற்று.
கண்ணீர்த் துளிகளைத்தவிர கொடுப்பதற்கு எதுவுமில்லாத
யாசகர்களாய் நானும், இந்த பூமியும்.

12.9.11

என் இரவு



இரவின் மடியில்
சூரியன் உறங்க
பூமியின் வெளியில் பாடித்திரிகிறது மௌனம்

இருள் சூழ் வெளியில்
காலத்தின் விரல் பிடித்து நான்.
என் வானத்து நிலா
பால் நிற ஒளியூற்றி இருளை அழிக்க
இருட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

வனாந்தரத்தின் ஒற்றையடிப்பாதையாய்
வானில் நீண்டு கிடக்கிறது ராக்கெட் புகை.
நட்சத்திரம் மின்னும் வானில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காற்றாய்ப்போன என் உறவுகளை.

நித்திரையற்ற இரவினில்
தூங்காத கண்களின் கருப்பு வெள்ளைக்கனவாய்
விரிந்து கிடக்கிறது இரவு.
சலனமற்ற நிசப்தத்தில் உலவுகிறது
என் முன்னோரின் தாலாட்டுகள்.

இலையுதிரும் சப்தத்தில்
நடுங்கும் குருவிகளின் சிறகசைப்பு.
எல்லோரும் உறங்கும் இந்த நடு நிசியின்
ஏகாந்தம்.
தூரத்து ஊர்களின் சந்தைகளுக்கு
ஒற்றை மணி அசைய
ஊர்வலம் போகும் மாட்டு வண்டிகளில்
அசையும் லாந்தர் வெளிச்சம்.

ஏவலாய், எடுபிடியாய்,
காத்துக்கிடந்து, காக்க வைத்து
நிர்ப்பந்தங்களைச் சுமக்கும் கட்டிடக்காடுகளில்
மூச்சடைக்கும் பகலை விடவும் இனிமையானது இரவு.
அதுவும் விடுமுறைக்கு முதல் நாள் இரவு.


எனக்குப்பிடித்திருக்கிறது இந்த இரவு.
வாழ்க்கையை நகர்த்தும் பகலை விட
நான்
வாழும் இந்த இரவு.

9.9.11

ஆண் மனம்





ஓயாத வாயும்
ஊமையான மனதுமாய் அவள்.
ஒரு நாளும் விரித்ததில்லை
அவளின் மனதின் பக்கங்களை அவனிடம்.

எத்தனையோ கதைகள் சொல்வாள்
அவளின் நினைவு தெரிந்த நாள் முதலான நடப்புகளை,
பிடித்த உணவு, பிடித்த உடை,
பிடித்த நிறம், பிடித்த பறவை,
பிடித்த, பிடித்த இன்னும் பிடித்தவெல்லாம் சொன்ன அவள்
சொன்னதே இல்லை பிடித்தவன் பெயரை.

புதிரிலும் புதிரானது அவள் புன்னகை
அவளின் அகன்ற விழியின் பாவைக்குள் புகுந்து
மனவெளிகளை ஆராய எத்தனிக்கும் அவன் பார்வையை
எதார்த்தமாய் இமைத்து
மென்மையாய் நிராகரித்தாள்
அவனின் தூண்டில் இரைகளை அவனுக்கும் பகிர்ந்து
புன்னகை மட்டும் பதிலாய்…

அவள் மனதின் அந்தரங்கப்பக்கங்களின்
அவலமோ, ஆனந்தமோ
அறிவதில் அவன் பிரியம் காட்ட
கடந்த காலம் நான் வாழ்ந்த காலம்
நிகழ் காலம் நமக்கான காலம் என்றாள்.

அவளுக்குத்தெரியும்
ஆயிரம் கதைகள் சொன்னாலும்
ஆண் மனது என்னவென்று……

23.1.11

சிலை அள்ளும் திருவிழா


எங்கள் ஊர் பதினாறு பாலைய நாட்டு கிராமங்களிலும் ஊருக்கு வெளியில் வயல், கண்மாய்க்கரை,கண்மாய் இப்படி அமைந்திருக்கும். கண்மாய்க்கரையில் வரிசையாக நிழல் பரப்பும் பெரிய மரங்கள். வயல் வெளியில் வேலை செய்பவர்களும், ஆடு, மாடு மேய்ப்பவர்களும் உணவு உண்ண, மதிய வேளையில் கண்ணயர இந்த கண்மாய்க்கரை உதவும்.வயலுக்கு சற்று முன்னரே அவரவர்க்கு உரிய, சாணி தெளித்து மெழுகிய களத்துமேடுகள், அருகில் குப்பை சேர்த்து வைக்கும் குப்பைக்குழிகள் இருக்கும். வருடம் பூராவும் சேரும் கட்டுத்தரைக் கழிவுகள், இலை, தழைகள் மற்றும் மக்கும் குப்பைகளை அவரவர்க்கான குப்பைக்குழியில் சேர்த்து வருவார்கள். வயல் உழும் போது குப்பையைக் கொட்டி உழுது நாற்று நடுவார்கள். 

எங்கள் ஊரின் ஒவ்வொரு கிராமங்களின் கண்மாய்க்கரையிலும் காவல் தெய்வம் அய்யனாருக்கு கோவில் உண்டு. இந்தக்கோவிலில் அய்யனாரோடு, பரிவார தேவதைகளாய் கருப்பர், காளி, முனி ஐயா, சன்னியாசி ஆகியோரும் இருப்பார்கள். ஊருக்கு ஊர் இருக்கும் கருப்பர், அய்யனார் ஆகியோருக்கு நாமங்களும் வேறுபடும். பதினெட்டாம் படிக்கருப்பர், நொண்டிக்கருப்பர், ஜோடிக்கருப்பர், சின்னக்கருப்பர் இப்படி கருப்பருக்கும், மேற்கே பார்த்த அய்யனார், மெய்ய அய்யனார், பால விளத்த அய்யனார், குறும்ப அய்யனார், நெல்லி அய்யனார் என்று அய்யனாருக்கும், கரும்பூரணிக்காளி, கருவேப்பிலைக்காளி, ஓசை மணிகாளி, பாம்புக்காளி இப்படி காளிக்கும் ஊருக்கு ஊர் ஒரு நாமம் உண்டு.

வருடத்திற்கொரு முறை குதிரை எடுப்பு, கிடாய் வெட்டுதல் நடக்கும். கிடாய் வெட்டுமன்று, எறிசோறு வீசுதல் நடைபெறும். அய்யனார் கோவில் கிடாய் வெட்டினாலும் அய்யனாருக்கு படைப்பதில்லை. கருப்பருக்குத்தான் படைப்பார்கள். இந்த பூசை இரவில் தான் இருக்கும்.வெட்டிய கிடாய் ரத்தத்தை புது மண் சட்டியில் ஊற்றி சோறு சேர்த்து பிசைந்து, மூன்று உருண்டைகளாக்கி பூசாரி கொண்டு வர, சாமியாடி ஊருக்கு வெளியில் உள்ள வயல் வெளியில் நடு வயலில் வந்து வயலில் வட்டமிட்டு அதற்குள் பூசாரியை நிற்க வைத்து, சாமியாடி மட்டும் அந்த சோற்று உருண்டைகளை வான் வெளியில் வீச ஒரு சோறு கூட சிந்தாமல் துஷ்ட தேவதைகள் பெற்றுக்கொள்ளுமாம். இப்படிச்செய்வதால் ஊருக்குள் துஷ்ட தேவதை வராது என்பது நம்பிக்கை. இன்றும் எங்கள் ஊரில் சாப்பிடும் போது வாய்க்குள் சோறை வீசி உண்ணும் குழந்தைகளை எறிசோறா வீசுற? என்று கண்டிப்பார்கள். திட்டும் போது எறி சோறு பொறக்கி என்பதும் உண்டு. இதற்கு பேய் என்று அர்த்தம்.

எங்கள் பாலைய நாடு பதினாறு ஊரில் எங்கள் பாலையூர் கிராமத்திலும் அதற்கு அருகில் உள்ள கரியப்பட்டி கிராமத்திலும் சிலை அள்ளும் திருவிழா என்ற ஒரு திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. இந்தத்திருவிழாவில் அய்யனார் கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஐம்பொன் சிலைகளை, சாமியாடி அருள் வந்து, தன்னோடு ஒருவரை கண்களைக்கட்டி கூட்டிச்சென்று புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தோண்டி எடுத்து அள்ளி வந்து கோவில் வாசலில் பெரிய தென்னை ஓலைக் கொட்டகையில் வாழை மரம் கட்டி அலங்கரித்து இந்த சிலைகளை கொலுவில் வைப்பது போல் அடுக்கி வைத்து, ஏழு நாட்கள் பூசை செய்வார்கள். அந்தச்சிலைகளோடு அருளாடிகளும் அமர்ந்து, வரும் பக்தர்களுக்கு விபூதி வழங்குவார்கள். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் சிலைகளைக்காண வருவார்கள். ஏழு நாள் திருவிழா முடிந்து அதே போல் கண்களைக் கட்டி கூட்டிச்சென்று சாமியாடி புதைத்து விட்டு வருவார். மறுநாள் காலை தோண்டிய இடத்தை தேடினாலும் கண்டு பிடிக்க முடியாத அளவு புல் ஒன்று போல் முளைத்து இருக்குமாம். இந்த ஐம்பொன் சிலைகளில் ஊர் சுத்திப் பிள்ளையார் என்னும் சிறிய கணபதி சிலை ஒன்று உண்டு. தெருவில் கிடைக்குமாம். ஐ! பிள்ளையார் என்று எடுத்துக் கொண்டு போய் மாடத்தில் வைத்தால் அடுத்த நாள் இன்னொருவர் வீட்டு மாடத்தில் இருப்பாராம். இப்படி ஏழு நாளும் ஊர் சுற்றிவிட்டு ஏழாம் நாள் கொலுவிருக்கச்செல்வாராம். 1970 களில் நடந்த இந்தத் திருவிழா இப்போது நடப்பதில்லை. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அருளாடிகளின் இறப்பு இந்தத் திருவிழாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கரியப்பட்டி கிராமத்தில் இந்த சிலைகளை பல மந்திர பூசைகள் செய்து, கவர்ந்து சென்ற குடும்பம் இன்று இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது என்கிறார்கள். ஆக இரு ஊரிலும் இந்தத்திருவிழா நடப்பதில்லை. இப்படி கால ஓட்டத்தில் காணாமல் போன அதிசயத்திருவிழாக்கள் எத்தனையோ?

இப்போதும் வயலுக்கு காவலுக்குச்செல்லும் ஆண்கள் அய்யனார் கோவில் கண்மாய்க்கரையில் படுத்திருப்பதுண்டு. அப்போதெல்லாம் நடு இரவில் பல்லாக்கு பரிவாரங்ககளோடு , விளக்குகள் ஜொலிக்க சாமி ஊர்வலம் போவது போன்று இருக்குமாம். பெரியவர்கள் சொல்லி அனுப்புவார்கள்,"பார்த்து இருங்கப்பா! ஓட்டம் இருக்க பக்கத்துகள்ல, சாமி போற பாதைகள்ல  படுக்காதீகப்பா" என்று. அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு வேளை புதைக்கப்பட்ட அந்தத் திருவுருக்கள் தான் இரவில் ஊர்வலம் வருகிறதோ என்று!

18.1.11

வரம்

பறவைகள் கூடு திரும்பும்
பொன் மாலைப் பொழுதொன்றில்
தேவதை ஆகும் வரம் கிடைத்தது.

தென்றலில் ஆடும் விரிந்த ஆடை
சிறகுகள் முளைத்தது
தலையைச்சுற்றி ஓளிவட்டம்
மின்னும் கற்களில் சின்ன கிரீடம்

கண்கள் மின்ன
நினைத்துக் குதூகலித்து
உயரப் பறக்கிறேன்.
நிலா, அழைக்கிறது.
நட்சத்திரங்கள் புறம் பேசுகிறது

மழை பொழியத்தொடங்கியது.
வானவில் குடை பிடித்து
வண்ணங்களை குழைத்து
மழைச்சரத்தின் ஊடாய்
பூக்களை அனுப்பியது என் பூமியெங்கும்

புதிதாய் முடிசூடிய அரசியாய்
நகர்வலம் வர
என் ராஜபாட்டை எங்கும் ஒலிக்கும் வாழ்த்தொலிகள்.

காற்றில் கைகளை அசைத்து
எனக்கான உலகை நானே சிருஷ்டித்து
ஆவலும் ஏவலுமாய் நான்
தேவைகள் அற்றுப்போனது.
ஒளிவட்டம் கண்டு மிரண்டனர் மனிதர்கள்

எனது அந்தப்புரத்தோட்டத்தில்
பூக்களுடன், பட்டாம்பூச்சிகளுடன் உறவாடி...
பிரியங்கள் கிடைக்காத வெற்றுவரத்தின் மீதான
வெறுப்பு வளர்ந்த நொடியில்
தூரத்தில் விளையாடும் குழந்தைகளை நோக்கி ஓட..
வழியெங்கும் சிதறின
சிறகில் இருந்த இறகுகளும், கிரீடத்தில் மின்னிய கற்களும்.

16.1.11

வறண்ட நிலத்தின் விளிம்பில்...

வாழ்க்கை ஒரு வறண்ட நிலமாய்
விரிந்து கிடக்கிறது....

நேயம் வறண்டு போன வானிலிருந்து
எப்போதாவது விழும் அன்பின் துளி

துளிர்த்து இலை விட்டு
கிளைத்து வளர்கிறது சுயம்

விதைப்பது நெல்லா? நெருஞ்சியா?
அறியாது விதைத்து விட்டு
விளைந்ததும் அற்றுப்போனது பிடிப்பு

பூக்கும் நம்பிக்கையற்று
வளர்கிறது விரக்தி

ஆருடங்களில் லயித்து
பேராசையில் சிக்கி தோற்று
வளர்கிறது வன்மம்

சூதும் வாதும் ததும்பி வழிய
காலம் குறித்த வேட்கையில்
உறிஞ்சிக் குடிக்கிறது வறண்ட நிலம்

ஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....
கிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்
திரும்பி வரப்பாதையில்லா விளிம்பில்....

21.9.10

15. அதிரசம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலம், சுக்குப்பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

முதலில் பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து, இடித்து சலித்துக் கொள்ளவும். சலிக்கும் போது பாதி அரிசிக்கு சிறுகண் சல்லடையும், பாதி அரிசிக்கு பெருங்கண் சல்லடையும் உபயோகித்து சலித்தெடுக்கவும். வெல்லத்தை பொடித்து, 150 மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். பாகு கம்பிப் பதம் வந்ததும் அதாவது தண்ணீரில் போட்டு, சிறிது நேரத்தில் உருட்ட வரவேண்டும். அந்தப்பதத்தில், மாவை சிறிது, சிறிதாகப் போட்டு, கட்டியின்றிக் கிளறி விடவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து, கையில் ஒட்டாத பதம் வந்ததும், அல்லது மாவை எடுத்து கை முறுக்கிற்கு சுற்றுவது போல் சுற்றினால் அறுந்து விடாமல் வர வேண்டும். அந்தப் பதத்தில் இறக்கி வைத்து. ஏலம் சுக்குப்பொடி கலந்து, பருத்தித் துணியால் வேடு கட்டி, மூடி வைக்கவும். மறுநாள், அல்லது இரண்டு நாட்களில் இந்த மாவில் அதிரசம் செய்யலாம். சிறு உருண்டை மாவை எடுத்து, மெல்லியதாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இந்த அதிரசம் கைகளால் பிய்க்கும் போதே உதிரும். சீர்ப்பலகாரங்களில் ஒன்று.

எங்கே போகிறோம்?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, ஒரு லட்சியம், ஒரு இலக்கு நிச்சயம் இருக்கும். அது நிறைவேறியதும் இன்னொன்று. இப்படித்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் காலம் காலமாக. இப்படித்தான் நமது வாழ்க்கைப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக நமது பயணங்களில் போகும் வழியில் இடரென்றால் புறப்பட்ட இடத்திற்கே, அதே புள்ளிக்கே திரும்பி வர இயலும். ஆனால் வாழ்க்கைப்பயணத்தில், நாம் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை, தடைகளை, தடங்கல்களைக்கண்டு பயந்து புறப்பட்ட இடத்தில், அதாவது தாயின் கர்ப்பத்தில் தங்கிவிட முடியாது. வந்து பிறந்து விட்டோம். வாழ்ந்து பார்க்க வேண்டும். வாழ்வதையும் ஆனந்தமாக வாழ வேண்டும். நமது வாழ்க்கையை வென்றெடுக்க வேண்டும்.இப்படியான ஆசைகள் எல்லோருக்கும் உண்டு. எல்லோருக்கும் இலக்குகள் வெவ்வேறு. ஆனால் வாழ்க்கை நிலைப்பாடு ஒன்று தான். பாதைகள் வேறு. ஆனால் பயணம் ஒன்று தான்.இந்தியாவில் காதல் தோல்வியிலும், தேர்வுத் தோல்வியிலும் அதிகமான இளைஞர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் எனில், இளம்பெண்கள் பேராசையாலும், கலாச்சாரப் புரிதலின்றியும், அவசர முடிவுகளாலும் நம்பிக்கை இழக்கிறார்கள். வெற்றியின் அளவுகோல் இன்று, பணமாக உடமையாக இருக்கிறது. யாருக்கும் அமைதியான, நேயம் நிறைந்த வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.அமைதியான வாழ்க்கையை விரும்பும் இளைஞன் சோம்பேறி என்று இகழப்படுவது தான் உண்மை. டாலர் கனவுகள், வெளிநாட்டு மோகம் இளைஞர்களை மட்டுமல்ல, நடுத்தர வயதினரையும் பிடித்தாட்டுகிறது.போதுமென்ற மனம் இல்லாத காரணத்தால் எப்படியாவது, எதை அடகு வைத்தாவது, எதை இழந்தாவது வெளிநாடு சென்று, பொருளீட்டி குவித்து விடத்துடிக்கிறார்கள். எல்லா வெற்றிடத்தையும், எல்லா வெறுமையையும் பணம் ஒன்றே இட்டு நிரப்பி விடுமென்று எண்ணும் மனோபாவம் பெருகி வருகிறது.வெளிநாட்டு வேலையில் பொருளீட்டுபவர்களும், அவர்கள் குடும்பத்தினரின் அலட்டல் மிகுந்த நடவடிக்கைகளும் ஏனையோரையும் அந்தப் பாதையில் பயணிக்க நிர்ப்பந்திக்கின்றனர்.

போர்க்காலங்களில் வீட்டுக்கொரு ஆண் படையில் சேர வேன்டுமென்பார்கள். எங்கள் ஊரில் வீட்டுக்கொரு இளைஞர் வெளிநாட்டு வேலைக்கு உருவாகித் தயாராவது இன்றைய நிலை. நிறைய வீடுகளில், வீட்டுக்கொருவர் வெளிநாடு சென்று வறுமை துடைத்து, தாரிசு வீடும், வீட்டுப்பெண்களுக்கு நகை, வசதியான வாழ்க்கை என்று வருவதைப் பார்த்து, உள்ளூரில் நிரந்தர வேலை, வசதி என்று இருப்பவர்களும் அதை விட்டு, வெளிநாடு செல்லும் கனவுகளில் இருப்பதை விட்டுப் பறந்து சிறகொடிந்து, வீடு திரும்ப வெட்கப்பட்டு காடோ, கதியோ என்று போகும் அவலத்தை நினைத்தால் மனம் வெதும்புகிறது. வெளிநாட்டு வீதிகளில் தங்கமும், வைரமும் கொட்டிக்கிடக்கிறதா என்ன? நம்மவர்களைத் தவறாக வழி நடத்தும் சக்தி எது? குடும்பத்தின் அண்மை, பாசம், நல்ல உணவு இதெல்லாம் இல்லாவிட்டாலும் கூட பணமிருந்தால் போதும் என்ற மனநிலைக்கு, இவர்கள் தள்ளப்படும் காரணம் என்ன? இந்தக்கேள்விகளுக்கு வெளிநாடு வாழ் சகோதரர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

என் மாமா ஒரு நூற்பாலையில் நிரந்தர வேலை. வசதியான வீடு, தோட்டம், நிச்சயம் வருடம் தோறும் விளையும் வயல் இப்படி அனைத்தும் இருந்தும் வெளிநாட்டு மோகம் எப்படி அவர் மனதில் நுழைந்ததோ தெரியாது. முதலில் அமெரிக்காவிற்கு ஆள் எடுக்கும் பேர்வழியிடம் பணம் கொடுத்து, பாதி போய், பாதி மீண்டது. அப்போதே நாங்கள் எச்சரித்தோம். சிறிது காலம் அடங்கி இருந்து, பின் மலேசியாவிற்கு ஆள் எடுப்பவரிடம் பணம் கட்டி, மலேசியா சென்றும் விட்டார். அங்கு போனதும் தான் தெரிந்தது விசாவில் மோசடி என்று.கையிருப்பெல்லாம் ஏஜண்டிடம் கட்டியாயிற்று. வெறும் கையோடு ஊருக்குத் திரும்ப சங்கடப்பட்டு,அங்கிருந்த ஒரு நண்பர் ஒளிந்து வாழ்ந்து சம்பாதிக்கலாம் என்று கூற, அதற்கு உடன்பட்டு, கொஞ்ச நாளில் பிடிபட்டார். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் துக்கம் என்றால் அப்படி ஒரு துக்கம். இந்த அவமானத்தில் இருந்து எப்படி மீண்டு வருவார் என்ற கேள்வி எங்களை அரித்தெடுக்க, தெரிந்தவரைத் தொடர்பு கொண்டால், அவர், "வழக்கு முடிந்ததும் ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் பயப்படவேண்டாம்" என்று ஆறுதல் கூறினார்.வழக்கு முடிந்து ஊர் திரும்பியவரை அழைத்து வரப்போனவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. ராஜா போல் இருந்தவர் அழுக்குச்சட்டையும், பரிதாபமான கோலமும். அவர் தங்கி இருந்த அறை நண்பர்கள் அவரது உடைமைகளைப் பங்கு வைத்துக் கொண்டார்களாம். மாற்றுத் துணி வாங்கிக்கொடுத்து அழைத்து வந்து ஒரு மாதம் வீடு வராமல், உடலும், மனமும் தேறி வந்ததும் பிறகு சொந்த வீடு திரும்பினார். இப்போது வெளிநாடு குறித்து எதுவும் பேசுவதில்லை. அவர் முகத்தில் களை மறைந்து, புன்னகை மறைந்து, துக்கம் நடந்த வீட்டின் மனிதர் போல் நடமாடும் அவர் பழைய மாதிரி எப்போது மீண்டு வருவார் என்ற எதிபார்ப்பில் எங்கள் குடும்பம் மொத்தமும்.

24.8.10

குடியினால் கெட்ட குடிகள்.

சொந்த ஊர் போகும் போது, உறவினர் வீட்டுத்திருமணங்கள், இறப்பு,பிறப்பு, சடங்கு ஆகியவற்றை முறை கேட்டு வருவது வழக்கம். அதிலும் துக்கம் கேட்கப் போகும் நாளில் சந்தோசமான முறை கேட்கப் போகும் பழக்கமில்லை. துக்கம் கேட்க ஒரு நாள் குறித்துக்கொண்டோம். அப்படி நேமத்தான் பட்டியில் உறவினர் வீட்டில் முறை கேட்டுவிட்டு, திரும்பி வரும் போது பேருந்து நடத்துநர், இந்தப்பேருந்து கோட்டையூர் வழியாகப்போகாது என்றும், எங்களை பள்ளத்தூரில் இறங்கிக்கொள்ளும்படியும் கூற நாங்களும் பள்ளத்தூரில் இறங்கினோம். பள்ளத்தூரில் இறங்கியதும் நகரப்பேருந்து வர தாமதமாகும் என்றார்கள்." ரொம்ப நாளாச்சு நடந்து. நடப்போமா! என்று நடக்கத்தொடங்கினோம். வழியில் மணச்சை. மணச்சையில் முறை கேட்டு வேலங்குடி. வேலங்குடியில் முறை கேட்டு கோட்டையூர் செல்ல வேண்டும். கண்மாய் ஒரு புறமும், வயல்வெளிகள் ஒரு புறமும், உச்சியில் அக்னி நட்சத்திர வெயிலும் எங்களைக் கடந்து போவோரின் ஏளனப்பார்வையும் சுகம் தான். வழியில் நுங்கு சுளை விற்றுக்கொண்டிருக்க அதையும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம்.எங்களின் குழந்தைப்பருவம் திரும்பக் கிடைத்தது போல் இருந்தது.

வேலங்குடி கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த போது எனது கணவரின் பெயர் சொல்லி அழைப்பு. திரும்பிப் பார்த்தால் அந்தமானில் நெடுநாள் வசித்த நண்பர். அவர் தந்த குளிர்பானத்தை பருகியபடி அவரை நலம் விசாரித்துப்பேசிக்கொண்டிருக்க, ஒரு பெண் வந்து பணத்தை நீட்டினார். வட்டியொன்றும் வேண்டாம். எடுத்துக்கொண்டு போ!. என்று வட்டிப்பணத்தை திருப்பிக் கொடுத்து, அவர் அடமானம் வைத்த பொருளைத் திருப்பிகொடுத்தார். அந்தப்பொருள் அடுப்பு, கேஸ் சிலிண்டர். குடிப்பழக்கம் உள்ள அந்தப்பெண்ணின் கணவர், குடிப்பதற்கு பணமில்லை என்றதும், அடுப்பை விட்டு சிலிண்டரைக் கழற்றத் தெரியாது, இரண்டையும் கொண்டு வந்து 1500/ ரூபாய்க்கு அடகு வைத்து குடித்துக் கும்மாளம். நான் அவரிடம் இனிமேல் வாங்காதீர்கள் இது தரித்திரம் என்று கூற அந்தப் பெண் ஐயோ! இந்த அண்ணன் வாங்காவிட்டால் எங்காவது கொண்டு போய் விற்று விடுவார் என்றழுதார்.

அரை மணி நேரம் அந்தம்மா சொந்தக்கதை, சோகக்கதை கூற ஏற்கனவே துக்கம் கேட்டு வந்த சோகம்.கண்கள் ஈரமாகின. இப்படி நிறைய வீடுகளில் நித்தம் இதே கதை. குடிப்பதற்குப் பணமில்லை என்றால் வடித்த சோற்றைத் தூக்கி கொட்டிவிட்டு, சோற்றுப் பானையை விற்றுக் குடிப்பார்களாம். தரவில்லை என்றால் மனைவி, மக்களை அடிப்பது, பானை சோற்றில் சிறுநீர் கழித்து வைப்பது போன்ற கொடூரங்கள். இதனால் தான் ஏழைகள் ஏழைகளாகவே! எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. குடித்து சீரழியும் மாக்கள் குடியை விட மட்டும் மருந்தே இல்லையா?����

15.7.10

ஆசைகள்

காயசண்டிகையின்
தீராப்பசி
ஒவ்வொரு மனதிலும்
தீராத ஆசைகளாய்....
அட்சய பாத்திரத்தில் சுரக்கிறது,
அன்னத்திற்கு பதிலாக செல்வங்கள்.
 மணிமேகலைகளோ
அட்சய பாத்திரத்தில் சுரக்கும்
செல்வங்களை அள்ளி
இன்று, நாளை,வருங்காலம்,
தலைமுறைகள் தாண்டி தாமே சேமிக்க
நசுங்கி,நலியும்
அட்சயபாத்திரங்கள்.

ஆசை ஒழி என்ற புத்தனின் சிலைகளைக் காட்சிப்பொருளாக்கி
வழிபாட்டறையில் குபேரர்கள்.
போதிமரங்கள் எல்லாம்
விறகுக்குப்போன ஒரு பொழுதில்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.
கீதையின் வாசகங்கள் உதட்டுச்சாயமாய்
குரானும், விவிலியமும் சரிகை ஆடைகளாய்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.


போதுமென்ற மனதுகள் பரிகசிக்கப்பட,
பசிய மனதுகள் காழ்ப்பை உமிழ,
காழ்ப்பு நெருப்பாகி, பூமி சிதிலமாகி,
கந்தர்வர்களும் அரக்கர்களாய்...
யுகத்துக்கொரு அவதாரம் என்றது போய்
நூறு அவதாரங்கள் ஒரு யுகத்தில்
சம்ஹாரங்கள் முடிந்தபாடில்லை.
கனவுகளுடன் உறங்கியது போய்
கவலைகளுடன் உறங்க வைக்கும் 
ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........

11.7.10

இரவல் நகை

சமீபத்தில் என் குழந்தையின் பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கதை. ஒரு பெண் பார்ட்டிக்குச் செல்ல தன் தோழியின் வைர நெக்லஸை இரவல் பெற்றுச்சென்று திரும்பி வரும் வழியில் தொலைத்து விடுகிறாள்.எங்கும் தேடிக்கிடைக்காமல், காவல் துறையில் மனுக்கொடுத்து விட்டு அழுகிறாள். அவளின் கணவனோ திட்டித்தீர்க்கிறான். கணவன் தன் வேலையை விருப்ப ஓய்வில் எழுதிக்கொடுத்து பணம் பெற்று அந்தப்பணத்தில் தோழிக்கு வைர நெக்லஸ் புதிதாக வாங்கிக்கொடுத்து பிரச்சினையை முடித்து, தோழியும் வேற்றிடம் போய்விடுகிறாள்.

இவர்களின் அன்றாட வாழ்வு மிகச்சிரமமாகிவிட, ராணி மாதிரி இருந்தவள் தானும் வேலைக்குச்செல்கிறாள். குடும்பத்தில் பால், பழம், குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்கிறார்கள். தினமும் கணவர், குழந்தைகளின் குத்தல் பேச்சு வேறு. அழகு பிம்பமாக இருந்தவளைக் குலைத்துப்போடுகிறது வறுமை.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சோர்ந்த நடையுடன் வீடு திரும்பும் இவளை எதேச்சையாகப்பார்க்கும் தோழி பிரமிக்கிறாள்."நீதானா இது? எப்படி இப்படி ஆளே மாறிப்போனாய்? என்ன நோய் உனக்கு" என்று பரிவுடன் கேட்கும் தோழியிடம் உண்மை சொல்ல, அவளோ "அது தானா அது இன்னும் அதே பளபளப்புடன் இருக்கிறது. அது என் கணவர் வாங்கி வந்த கவரிங் நகை. முதன்முதலில் அணிந்து வந்த போது நீங்கள் எல்லாம் புகழ்ந்ததும் நானும் ஒரு பெருமைக்காக ஆமாம் வைரம் என்றேன். நல்லவேளை இன்னும் அது என்னிடம் தான் இருக்கிறது" என்று சொல்லித் திரும்பத்தந்தாலும் திரும்பாதவை எத்தனை? என்று கதை முடிந்தது. 

இன்னும் பெண்களுக்குள் இந்த இரவல் நகைப்பழக்கம் உள்ளது.ஒருவரின் உடமைகளா அவருக்குப்பெருமை சேர்க்கிறது?சிலர் பண உதவி கேட்கும் போது பணம் இல்லாவிடில் நகையைத்தர வேண்டி பெற்று, திருப்பித்தர முடியாது நட்பை இழக்கிறார்கள்.


எங்கள் கிராமங்களில் ஒரு இருபது வருடங்களுக்கு முன் வறுமை தன் கோரக்கரங்களால் எங்கள் மக்களின் வாழ்வாதாரங்களோடு விளையாண்டு கொண்டிருந்தது. கை ரேகைகள் அழிய உழைத்த போதிலும் அவர்களின் வறுமை ரேகைகள் அழிந்த பாடில்லை.
 
பிள்ளைகளின் படிப்பு, அதன் வழி முன்னேற்றம் பெரிதாகக் கருதப்படாது, நம் வீடு, மாடு, கன்று, வயல், தோட்டம் இப்படி குறுகிய கண்ணோட்டத்தில் வாழ்ந்து, விழிப்புணர்வற்று, உயரும் தந்திரமற்று, குறிக்கோளற்று, வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் எங்கு கொண்டு செல்கிறதோ அந்த வழி சென்று காலம் கொண்டு சென்றபடி வாழ்ந்தவர்கள்.படிப்பு என்பதை அவசியமாய் உணராதவர்கள். அன்றாட வாழ்க்கை கூட சிலருக்கு மாமியார் வீட்டு சீதனப்பொருட்களை விற்று நடந்திருக்கிறது. இப்படியொரு நடப்பில் நகை சேமிப்பு என்பது பெரும்பாலும் வெளியூர்,வெளிநாடுகளில் தொழில் முனைந்தவர்களால் மட்டுமே சாத்தியமாயிருந்தது எனலாம்.

என் ஆயாவிடம் இரட்டை வடம் ஒரு சங்கிலியும், ஒற்றை வடம் ஒரு சங்கிலியும் இருந்தது. உறவினர் பெரும்பாலும் இறந்தவர் வீடுகள், கல்யாண வீடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில், என் ஆயாவிடம் இரவல் வாங்கி அணிந்து செல்வார்கள்.அந்த இரட்டை வடம் சங்கிலியோ அந்த கால கட்டத்தில் அனைத்து மணமகளின் கழுத்தையும் அலங்கரித்தது எனலாம். 

ஒரு முறை எங்கள் உற்வுப்பெண்மணி ஒருவர் வேறு ஒருவரிடம் நகையை இரவல் வாங்கி வந்து, அணிந்து சென்று விட்டு, அந்த சங்கிலியில் இரண்டு கண்ணிகளைக் கழற்றி விட்டு பின் நகையை திருப்பித் தந்து, அதை சங்கிலி இரவல் கொடுத்தவர் கண்டுபிடித்து, பெரிய ரகளை. அது முதல் நாங்கள் எங்கள் ஆயாவிடம் இரவல் தருவதைத் தடுப்பதுண்டு. என் ஆயா படிக்காதவர். அதனால் அந்தச்சங்கிலியின் நீளத்தை தன் கைப்பிடியில் அளந்து சுவற்றில் கோடு போட்டு வைத்திருப்பார். சங்கிலி திரும்ப வந்ததும் பிடிகளை எண்ணி சரிபார்ப்பார். இத்தனைக்கும் என் ஆயா அந்தச்சங்கிலி தேய்ந்து விடுமென்று எங்கும் போனால் வந்தால் தான் அணிவார். கைம்பெண்ணுக்கு எதுக்கு வீட்டில் சங்கிலி என்பார். நல்ல வேளையாக இப்படி எந்த சம்பவங்களும் அவரது வாழ்வில் நடைபெறவில்லை.நகைகள் பெரும்பாலும் பெண்களின் மனதோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 

இன்றும் கூட எங்கள் மக்கள் வங்கி சேமிப்பு, பணச்சேமிப்பு என்று இருப்பதில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்ததும், சொத்து சேர்ப்பதிலும், தங்கம் சேர்ப்பதிலும் குறியாய் இருப்பார்கள். தேவையென்றால் அவற்றை விற்று தேவைகளை சமாளிப்பார்கள். அவசிய செலவுகளுக்கென சேமிப்பு, காப்பீடுகளில், பங்குகளில் முதலீடு இப்படி எல்லாம் சேமிக்க இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.





9.7.10

கூடுகள் தேடி....

சாளரவெளியினில் தெரியும்
மரக்கிளையில் கூடு கட்டி
சிறகு சிலுப்பி
தலை கவிழ்த்துப் பார்க்கும்
தேன் சிட்டு ஜோடியொன்று.

அதிகாலை எழுப்பும் அலாரம் எனக்கு
அதன் கீசென்னும் குரல்
கதிர்கள் சீறும் காலையில்
திசைகள் கிழித்து
சின்னச்சிறகால் வானளந்து
உண்டி தேடி கூடு திரும்பி
சுபமானது அதன் வாழ்க்கை

மழைக்கும், வெயிலுக்கும்
காற்றுக்கும், புயலுக்கும் தாங்குமா கூடு?
கேள்விகளோடு தூக்கம் தொலைத்தாலும்
விடியலில்
விசனங்களற்ற அதன் குரல்.
எதற்கும் பொருந்திப்போகப் பாடம் சொல்லும்.

நகர்ந்தன நாட்கள்...
தந்திரங்களற்ற தேன்சிட்டுகள்
எங்கோ வேற்றிடம் தேடி.
புதிய மரம், புதிய கூடு
ஒரு நாளும் திரும்பவில்லை
பழைய கூட்டின் உரிமை தேடி
பழைய மரக்கிளைக்கு.

கட்டுகள் எதுவுமின்றி
சுதந்திர வெளியில்
திசைகளற்ற வானில் சிறகசைக்கும்
எங்கோ வனத்தில்
ஏதோ மரத்தில் அதெற்கென ஒரு கூடு.

கூடுகளும், உடைமைகளுமே
தேடலாகிப்போன எமக்கோ
விலக்க முடியா விலங்குகளுடன்
தேன் சிட்டாகும் கனவுகள் மட்டும்

8.7.10

மாற்றங்கள்









மாற்றம் ஒன்று மட்டும் தான் மாற்றமே இல்லாதது என்றான் ஒரு புதுக்கவிஞன்.மாற்றங்கள் நல்லதாக இருக்கும் போது மகிழும் மனம், கெடுதல்களைக் கண்டு சலனப்படும்.ஒவ்வொரு இரு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குப்போகும் போதும் ஊருக்குள் சில மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்கள், வெற்றுநிலங்களில் புது வீடுகள், இளையோர் சிலரின் வயோதிகத்தோற்றம், குழந்தைகள் சிலரின் வியத்தகு வளர்ச்சி, போனமுறை போனபோது இருந்த சிலரின் மறைவு இப்படி நிறைய. சில ஆச்சர்யம், சில சந்தோசம், சில வருத்தம். இந்த முறை என்னை வளர்த்த என் ஆயா இல்லாத வெறுமை தவிர மற்ற படி எல்லாம் சுகமே! நலமே!

எங்களின் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டம். ஆற்றுப்பாசனம், இயற்கை நீரோடைகள், கால்வாய்கள் எதுவுமே எங்கள் ஊர்களில் கிடையாது. ஊரணி, கண்மாய்கள் உண்டு. அவை மழைக்காலத்தில் மட்டும் நிரம்பிக்கிடக்கும்.இப்போது, அவைகள் மழைக்காலத்தில் கூட நிரம்பி வழிவதெல்லாம் கிடையாது. காரணம், வெற்று நிலங்களில் வீடுகள், சுற்றுச்சுவர்கள் என்று எழுப்பியபடியால், மழை நீர் வரத்து திசை மாறி, நீர் நிலைகளுக்கு, போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே எங்கும், கரிசல் பூமி போல், பாரதி ராஜாவின் "கருத்தம்மா" படத்தில் காட்டப்படும் பொட்டல் காடுகளாகக் கிடந்தன. இந்த வருட விடுமுறைக்குப் போன போது, ஊருக்குள் பசுமையை தரிசிக்க முடிந்தது. எல்லா வீடுகளிலும் ஒரு குளுமையை உணர முடிந்தது. மக்கள் மரம் நடுதலின் முக்கியத்துவத்தையும், பசுமையின் பயனையும் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பது குறித்து சந்தோசம். பேருந்துப்பயணத்தின் போது, கவனித்த போதும் சாலைகள், வீடுகளின் வெற்றிடங்களை மரங்களும் செடிகொடிகளும் நிரப்பி இருந்தது. தமிழ்நாட்டின் மின் வெட்டில், மின்சார விசிறி இல்லாத போதும், கோடை தகிக்காமல் சமாளிக்க முடிந்தது.


ஒவ்வொரு வீடுகளிலும் உரக்குழிகள் உண்டாக்கி, இயற்கை உரத்தயாரிப்பில் பெரும்பாலான பெண்கள் ஈடுபட்டிருந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. வீட்டின் காய்கறிக்கழிவுகள், மாட்டுச்சாணம், ஆட்டுக்கழிவுகள், இலை, தழைகள் கொண்டு உரம் தயாரித்து, வீட்டுக்கும் உபயோகித்து, வேண்டுபவர்களுக்கும் விற்பனை செய்கிறார்கள்.ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபாடு அதிகரித்திருந்த போதிலும் பாக்கெட் பால் விற்பனை அமோகம் தான்.ஆனால் பாலித்தீன் பைகளின் உபயோகம் மட்டும் குறைந்தபாடில்லை.கிராமப்புற மக்களுக்கு அதன் தாக்கமும், சுற்றுச்சூழலைக் கெடுப்பதில் அதன் வீர்யமும், வீச்சும் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். தோட்டங்கள், வயல்வெளிகள், வீட்டின் சுற்றுப்புறம் அனைத்தையும் நீக்கமற நிறைத்திருந்தது.வேலிக்கருவை மரங்களில் கிழிந்த தோரணங்களாய் தொங்கிக்கொண்டிருந்தது விகாரமாய். அந்தமானில் நெகிழும் பைகளுக்குத் தடை விதித்துள்ளது போல் தமிழக அரசும் தடை விதித்தால் குப்பைகள் குறையும். பைகளை உபயோகித்த பின் பறக்கவிடாமல், ஒரே இடத்தில் சேகரித்து வைக்கும் விழிப்புணர்வு கூட அற்றுப்போய் இருக்கின்றனர் நம்மவர்.
அந்தமானில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மீள் சுழற்சிக்காக முக்கிய பூமி அனுப்பும் வியாபாரிகளுக்கு கப்பல் சத்தம் (fright) கிடையாது. 


ஊருக்குள் காங்கிரீட் வீடுகள் அதிகமாகி, குடிசைகள் அற்றுப்போயிருந்தது. சுபிட்சம் கூடியிருந்தது. மகளீர், சுய உதவிக்குழுக்கள் மூலமும், அவரவர் கல்வித் தகுதிக்கேற்றார் போல் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்க, பெரும்பாலான ஆண்கள் வெளி நாடுகளில் அல்லது வெளி நகரங்களில் சம்பாதிப்பதின் நிமித்தம்.பெண்களும் கணவனின் அருகாமையை விட, வசதியான வாழ்விற்கு தம்மைத் தயார் படுத்திக்கொண்ட தைரியம், மன உறுதியைக் கண்டு, இது தியாகமா? அன்றி சுயநலமா? என்று கேள்வி மனதைக்குடைந்தது. இருக்கும் அவர்கள் மனதிலும் யாருமறியாத ஆசாபாசங்களும், கண்ணீரும். அவர்கள் எதார்த்தங்களை அனுசரித்து குடும்பம் நடத்தும் பொறுப்பு பிடித்திருந்தது.அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து, செல்வம் சேர்த்து, "எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல சம்பாதிக்கிறார்" என்று பெருமை பொங்கக் கூறும் அவர்களின் அறியாமை பிடித்திருந்தது.குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற அவர்களின் நியாயமான குறிக்கோள் பிடித்திருந்தது.மொத்தத்தில் எங்கள் ஊர்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது சந்தோசம் தான். ஆனாலும் நம் நாட்டின் மனித வளம் மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது நல்லதா? புரியவில்லை.


பேருந்துகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும் அதிகம் கேட்க நேர்ந்த வார்த்தைகள் - "அவன் நல்லா இருப்பானா? பெத்த வயிறு பத்தி எரியுது!" - தாயாராய் இருக்க வேண்டும். "எந்தம்பி நல்லவன் தான். வந்தவ சரியில்ல. மேல ஒருத்தன் எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கான் - சகோதரி. இப்படியான வசனங்கள். நமது பெண்களின் பெருந்தன்மை குறைந்து அனைவரும் குறுகிய வட்டங்களுக்குள் தம்மைப் பூட்டிகொண்டார்களா? நமது ஆண்களின் நியாய உணர்வு அற்று விட்டதா? கேள்விக்கு விடை கிடைக்காமல் நாம். மொத்தத்தில் இன்று பெண்களில் பெரும்பாலானோருக்கு பேராசை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது வருத்தந்தான். காலம் அனைவைரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்.

2.5.10

விடுமுறை.

நண்பர்களே! நாளை முதல் (03.05.2010) என் வலைப்பூக்களுக்கு விடுமுறை. ஜூன் மாதம் 16ம் தேதி வரை, பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.