கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

7.12.09

நலம் தரும் கிராம வாழ்க்கை             இன்று பெரிய நகரங்களில் கலக்கிகொண்டிருக்கும் பெரும் புள்ளிகளை ஒரு கணக்கெடுப்போமா? இசை ஞானி இளையராஜா அவர்கள், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முதல் திருமதி பரவை முனியம்மா அவர்கள் வரை ஒரு பட்டியல் தாயரித்தால் பெரும்பான்மையானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்.உரமான உடல், திடமான மனது,எதற்கும் அஞ்சாத, எதையும் சமாளிக்கும் ஆற்றல் சளைக்காத உழைப்பு, இவை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ரத்தத்தில் கலந்தது.கிராமங்களில் வயல் வேலை, தோட்ட வேலை,கால் நடை வளர்ப்பு,வீட்டு வேலை,என்று ஓய்வே இன்றி வேலைகள் இருக்கும்.வேலைகளை முடித்துவிட்டு பள்ளி சென்று வருவதே பெரிய ப்ரயத்தனம்.பள்ளிகளும் தொலை தூரம் நடந்து செல்லுமாறு இருக்கும்.இந்த மாதிரியான வாழ்க்கைச்சூழல் அவர்களுக்குள் விடாமுயற்சியை, எதிர்காலம் பற்றிய கனவுகளை, கற்பனைகளை,கடும் உழைப்பை,எதையும் தாங்கும் இதயத்தை, சாதிக்கும் மனப்பான்மையை, விதைக்கிறது.இதோடு கூட கல்வியும், அனுபவமும் சேரும் போது அவர்களால் சிகரம் தொட முடிகிறது.

           இன்று நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு அரிசி எங்கிருந்து வருகிறது? தெரியாது.வயல், வரப்பு,நாற்று,நடவு,களையெடுத்தல், கதிர் அறுத்தல்,இது பற்றி ஏதும் தெரியாது.பிறந்த மண்ணுக்கு அழைத்து வர பெற்றோர் ஆசை கொண்டாலும் 'போரடிக்கும்' என்கிறார்கள். வாசலில் சாணம் தெளிப்பதைப்பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.நமது பாரம்பர்யத்தை அறிவியல் கண்ணொட்டத்துடன் ஆராய்ந்து பின்பற்றத் துடிக்கிறார்கள் மேல் நாட்டவர்கள். நாமோ நாகரீகம் என்ற பெயரில் நமது பொக்கிஷங்களின் அருமை புரியாது வழித் தடங்களை மாற்றிக்கொள்கிறோம்.இதன் விளைவுகள் விபரீதமாய்ப் பயணிக்கிறது.செட்டிநாட்டுப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பள்ளிகள், கல்லூரிகள்.எங்கள் கிராமங்களில் ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் கல்வி கற்கிறார்கள்.அவர்களால் கழனிகளிலும் வேலை செய்யமுடியும்.கணிப்பொறியிலும் வேலை பார்க்க இயலும்.

             எல்லோரையும் நகரத்தை விட்டு கிராமத்திற்கு அனுப்பி விடுவோமா? என்று கேலி செய்கிறீர்களா நண்பர்களே! நான் சொல்ல வருவது கிராமத்தின் உணவுப்பழக்கம், வேலைப்பழக்கம்,நவநாகரீகங்களைக் கடைபிடிக்கும்போது ஒரு சுயகட்டுப்பாடு, ஆரோக்கியம் பேணுவது போன்ற கருத்துக்களை. சில தாய்மார்கள் கூறுவார்கள் அட! நம்ம தான் அப்படி வளந்தோம்னா, அதுகளையுமா? என்று குழந்தைகளை நோஞ்சாண்களாக, வேக உணவு விரும்பிகளாக, சோம்பேறிகளாக, படிப்பை மட்டுமே வலியுறுத்தி குணங்களைக் கோட்டைவிட்டு வளர்க்கும் நகர நாகரீகத்தைத்தான் சொல்கிறோம்.சேணம் பூட்டிய குதிரைகளாய் குழந்தைகளை வளர்த்து பணம் பண்ணும் வித்தை கற்றுக்கொடுத்தோம்.பண்பாடு,கலாச்சாரம் இவற்றின் அருமை தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற வேதனை தான். பழமைக்கு திரும்பும் மனோபாவம் எல்லோருக்கும் வராதா? எங்களின் இளமைக்காலம் நம் சந்ததியர்க்கும் கிடைக்காதா? என்ற ஆதங்கம். வேறொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக