வயல் வேலை பார்த்ததுண்டா? நண்பர்களே! "ஆடு மேய்த்திருக்கிறீர்களா? அது ஒரு தவம்" என்பார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.வயல் வேலை ஒரு யோகம்.நான் பிறந்த போது என் அப்பாவிற்கு சென்னை அம்பத்தூரில் T.I.சைக்கிள் தொழிற்சாலையில் வேலை. சில காலம் சென்னை வாசி.என் அப்பா சொந்தத் தொழில் செய்ய முடிவு செய்து, பிறகு சென்னையை விட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு குடி பெயர்ந்தோம்.அறந்தாங்கி ஒரு ரெண்டுங்கெட்டான் நகரம். எங்கள் அம்மா,அப்பா இருவருமே விவசாயக் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் பசுக்கள்,கோழிகள் வளர்த்தோம்.எனக்கு 12 வயதிருக்கும்.அப்போது என் ஆயா (என் அம்மாவின் தாயார்) கால் பரீட்சை விடுமுறைக்கு என்னை அவர்களின் கிராமத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.அதுவரை முழுப்பரீட்சை விடுமுறைக்கு,திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் மட்டுமே சென்றிருந்த நான் முதல் முறையாக ஆவணி மாதத்தில் செல்கிறேன்.குன்றக்குடி அருகில் உள்ள பலவாங்குடி - வயல்,கண்மாய்,நகரத்தார்களின் அரண்மனைவீடுகளைக்கொண்ட அழகான சிற்றூர்.ஆனால் திருவிழா நாட்களில் ஜே!ஜே! என்று ஊரைப்பார்த்துவிட்டு அமைதியாக இருந்த ஊர் எனக்குப் பிடிக்கவில்லை. மறு நாள் என் ஆயா,' ஏத்தா? வயலுக்கு வர்றியா? தொலிக்கு (உழுத நடவு செய்யப் போகிற வயல்) கொல (பசுந்தாள்) வெட்டிப்போட்டுட்டு வருவோம்' என்றார்கள்.சரியென்று சோறு வடித்து,வெந்தைய மாங்காய் ஊறுகாயுடன்,கருணைக்கிழங்கு புளிக்குழம்பு (காரக்குழம்பு) வைத்து சோறு தூக்குச்சட்டியில் வைத்து எல்லாவற்றையும் ஒரு கோட்டப்பொட்டி என்பார்கள் (பனையோலையில் செய்தது) அதில் அடுக்கி எடுத்துக்கொண்டு துணி,கயிறு எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டோம்.இதெல்லாம் எதற்கு?என்ன,ஏது ஒன்றூம் புரியவில்லை.
ஒரு சிறிய தோட்டம் போனதும் ஆயா இது தான் உங்க தோட்டமா? என்றேன். "'ஆமா! இது தான் மக புள்ளைக்கும்,மகன்முட்டுப் புள்ளைக்கும் உள்ள வித்தியாசம்.நம்மவுட்டான்னு கேப்பியா,உங்கவுட்டா? போடி மருக்கோலி' என்று சொல்லிவிட்டுஅங்கிருந்த மரங்களை ஒரு முறை பார்வையிட்டார்.புங்க மரம்,பூவரசமரம்,வாகை மரங்கள் இருந்தன.நீண்ட தொரட்டியை(அலக்கு?) வைத்து கிளைகளை ஒடித்து கொப்புக்கொப்பாக ஒடித்துக்கட்டி என் தலையில் தூக்கிவிட்டு தானும் தூக்கிக்கொண்டு 'ஆத்தா! நான் முன்னால போறேன். நீ பின்னாடியே வா!! கனமாத்தெரிஞ்சா அங்குனயே போட்டுட்டு நில்லு.நா அப்பறம் வந்து தூக்கிக்கிட்டுப் போறேன்' எங்கள் வீட்டில் வேலை செய்வது பழக்கமென்பதால் எனக்கு கனம் தெரியவில்லை.கண்மாய் தாண்டி,வயல்களுக்கு ஊடே நடந்து ஆயாவின் செய்யில் கொண்டு போய்தான் போட்டேன்.என் ஆயா அதை எங்கும் பிரித்துப்போட நான் சேற்றில் கால்களால் அழுத்திவிட 'அடி விடு அது தன்னால இறங்கிரும்' என்பதைக் கண்டுகொள்ளாமல் குதித்து மிதித்தேன்.உடையெல்லாம் செம்மையான சகதி.மறுபடி அதே போல் அத்தனை இலை தழைகளையும் கொண்டு வந்து போட்டுவிட்டு காலை உணவு தோட்டத்தில்,மதிய உணவு கண்மாய்க்கரையில்.புது அனுபவம்.மாலை போகும் போது கண்மாயில் குளித்து வீடு திரும்பினோம்.மறுனாள் மாட்டுச்சாணம் சேர்த்து வைத்ததை வயலுக்கு கொண்டு போய் முதல் நாள் போலவே. எனக்கு சுற்றுலா வந்தது போல் இருந்தது.இதை என் தம்பி தங்கைகளிடம் சொன்னதும் அரைப் பரீட்சை விடுமுறைக்கு நான்,நீ என்று போட்டாப்போட்டி.நீங்கள்லாம் இன்னும் கொஞ்சம் பெருசானவொன்ன கூட்டிக்கினு போறேன் என்று சொல்லி மறுபடி நான் மட்டும். இந்த முறை களையெடுக்க. என் ஆயாவிற்கு நான்கு செய்தான். அதனால் ஆள் தேவையில்லை.இந்த முறை நாற்றங்காலில் இருந்தது போல நாற்று கிளிப்பச்சை நிறத்தில் இல்லாமல் அடர்ந்த பச்சை நிறம்.அப்போது நாற்றங்கால்களில் மட்டும் இருந்த நாற்று இப்போது வயல் முழுதும்.ஒரே பச்சைப்பாய் விரித்தது போல.பரவசம்.தாய் வரப்பு என்பார்கள்.அந்தவரப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். இரு கைகளையும்விரித்து பாட்டுப்பாடிக் கொண்டே ஓடுகிறேன். உங்களுக்குதெரியுமா? இந்த இடத்திற்கெல்லாம் இளையராஜா அவர்களின் பாடல் தான் பொருத்த ம். களையெடுத்துவிட்டு மதிய உணவிற்கு வாய்க்காலில் கால் கழுவும் போது வழுக்கிவிட சேற்றுக்குள் விழ எல்லோரும் என்னாத்தா?மொசப்புடுச்சியா? என ஆமா! உங்க வய என்ன வளுக்குது என்று நான் சொல்ல எங்க வய,உங்க வய இல்லடி.எல்லா வயலுந்தான் வழுக்கும் என்று ஒரு உறவு கிண்டலாகச்சொல்ல மற்றவர்கள் சிரிக்க விழுந்ததை விட அவர்கள் சிரித்தது வெட்கமாகிவிட்டது.
அதற்குப்பிறகு நான் +2 முடித்து கல்லூரி படிப்பிற்கு காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் சீத்தா லெக்ஷ்மி ஆச்சி மகளீர் கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் வந்து சேர்ந்தேன். என் ஆயா வீடு இல்லாவிட்டால் நான் அஞ்சல் வழிக்கல்வி தான் பயின்றிருப்பேன்.என் ஆயா வீட்டில் இருந்து கல்லூரி செல்லும் போது பசுந்தாள் உரமிடுவது,களையெடுப்பது இதெல்லாம் முன்னால் செய்திருப்பதால் விடுமுறை நாட்களில் அந்த வேலைகளை வைத்துக்கொள்வோம்.கதிரறுப்பு அது எப்படியும் ஒரு வாரம் இழுக்கும்.அப்போது கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு முதல் நாள் சமையல் செய்து எடுத்துக்கொண்டு,வேலையாட்கள் மூவர் மொத்தம் ஐந்து பேர்.'ஆத்தா! இப்புடிப் புடிச்சு இப்புடி அறுக்கனும்' வகுப்பு எடுக்கப்பட்டது.சிறிது நேரம் ஒழுங்காக போய்க்கொண்டிருக்க அந்தக்கதிர்த்தாள்களில் ரத்தம். வலி தெரியவில்லை.ஆழமான காயம்.உடனே என் ஆயா பதறி ஒரு கதிர் அறுக்கும் அரிவாளில் என் எச்சிலைத் துப்பச்சொல்லி இன்னொரு அரிவாளை வைத்து உரசி அந்தக்காயத்திலிட ரத்தம் நின்றது. சத்த உக்காரு.நல்லாத்தேன் போ! என்றார்கள். ஆனால் பொருட்படுத்தாது நான் வேலை செய்தேன்.அறுத்த கதிர்களை கட்டிஎடுத்து களம் கொண்டு சேர்க்கவேண்டும்.கதிர்க்கட்டை என் தலையில் தூக்கி வைத்துக் கொஞ்ச நேரம் சரியாக இருக்க கொஞ்ச தூரம் நடந்ததும் தலை கதிர்க் கட்டுக்குள் போக, வழி தெரியவில்லை. முன்னால் போகும் பெண்ணின் கொலுசணிந்த கனுக்காலைப்பார்த்துக்கொண்டே,வயிறளவு கண்மாய்த்தண்ணீரில் நடந்து களம் கொண்டு சேர்த்தாயிற்று.அப்போது தான் என்னோடு கதிரறுக்க வந்த அக்கா சொன்னார்கள் 'கருதுக்கட்ட தலைக்கு வக்கிற எடத்துல கருத மடிச்சு வைப்பாகள்ல அங்குன தலைய வச்சா தல உள்ள போகாது'. அது சரி ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் நுட்பம்.
கதிர் அடிப்பது அடுத்த வேலை.கதிரடிப்பது ஆண்களின் வேலை.கதிரடிப்பவர்களுக்கு பெண்கள் கதிரை அடுக்காக, லாவகமாகப் போட அவர்கள் தங்கள் கைக்கயிற்றால் அதைச்சுற்றிப்பிடித்து கட்டையில் அடிப்பார்கள்.'ஒனக்கு வராது,தள்ளு',என்பார்கள். வராதாவது. அடிப்பவர் சாப்பாட்டுக்குப் போனதும் மற்றவரை 'அண்ணே! வாங்க நான் போடுறேன். அடிங்க' என்று அதையும் செய்வேன்.அடித்த நெல்லைத் தூற்றி பொலி போட்டு சாக்குகளில் கட்டிவிட்டு அடித்த கதிர்த்தாளை போர் வைத்துவிட்டு தலையடி நெல்லோடு வீடு திரும்புவோம்.மறுநாள் போரடிப்பது.அந்தத்தாள்களைப் பிரித்து போட்டு மாடுகளைப் பூட்டி அந்தத் தாள்களின் மீது சுற்றி வரவேண்டும். உண்மையில் இது போரடிக்கும் வேலை.துவைந்த தாள்களை திருப்பி,திருப்பி விட்டு இருந்த ஒன்றிரண்டு நெல் மணிகளும் உதிர்ந்ததும் வைக்கோலைப் பிரித்து எடுத்து நெல்லை ஒன்று சேர்த்து, தூற்றி வீடு கொண்டு சேர்க்க வேண்டும்.இந்த நெல்லை சூட்டடி நெல் என்பார்கள். இந்த நெல்லைத் தான் முதலில் உபயோகிப்பார்கள்.வைக்கோலை உழுதவர்கள் வீட்டில் கட்டிகொண்டு போய் போட்டுவிட்டு வேலை முடியும். களத்து வேலை செய்யும் போது கதிர்த்தாள்களில் உள்ள 'சொனை' பட்டு முகமெல்லாம் கருப்பு கருப்பு தடிப்பாய் ஆகிவிடும்.கிராமத்தில் பழகியவர்கள் அந்த வேலையை லாவகமாக செய்ய அடுத்தடுத்து நானும் கற்றுகொண்டுவிட்டேன்.கதிரறுக்கும் போது அனைவர் முகத்திலும் சந்தோசம் வெளிச்சம் போடும்.அதுவே மழையில்லாது சாவியாகிப்(ஒரு கதிர் நெல் மணி விளைந்து ஒரு கதிர் விளையாது பட்டுபோய் இருப்பது) போய் விட்டால் அழுது கொண்டே அறுப்பார்கள்.அந்த வேதனை காணப்பொறாது.
அந்த கிராமத்து மக்கள் காலை நான்கு மணிக்கு விழித்து மாடுகளை ஓட்டி வந்து பால் டிப்போவில் அவர்கள் முன் பால் கறந்து அவர்களிடம் கொடுத்துவிட்டு,மிச்சப்பாலை வீட்டுக்குக்கொண்டு வந்து காபி போட்டுக் குடித்ததும் வேலை,வேலை தான்.மாட்டுக்குத் தண்ணீர் இறைப்பது,சாணத்தை அள்ளிக் குப்பைக்குக் கொண்டு செல்வது,வைக்கோல் பிடுங்கி எடுப்பது,மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவது,பிறகு மாடுகள் மேய்ந்து வீடு திரும்புவதைத் தண்ணீர் காட்டி,கட்டி கொட்டிலில் வைக்கோல் போடுவது...ஓய்வாவது,ஒழிச்சலாவது.இப்படி சதா வேலை இருக்கும்போது மனஉளைச்சலுக்கு அர்த்தமாவது தெரியுமா?எந்த உறவுகளின் வீடுகள் போனாலும் மாலை வீடு திரும்பி விடுவார்கள்.
தாழம்பூ புதர் மண்டிய கண்மாய்க் கரையும்,செங்கழுநீர் நிறைந்த கண்மாயும்,கண்மாய்க்கரை ஐயனார் கோவிலும், கண்மாய்க்கரையில் படர்ந்து கிடக்கும் பொன்னாங்கண்ணிக்கீரையை கிள்ளி எடுத்து தாவணி முந்தானையில் நிரப்பி வருவதும் நினைவை விட்டு நீங்காதவை.இப்போது அந்த கிராமத்தின் இளைஞர்கள் எல்லோரும் பிழைப்பு தேடி புலம் பெயர பெண்கள் குழந்தைகள் படிப்பைக் காரணம் காட்டி பக்கத்து சிறுநகரங்களுக்கு குடிபெயர அந்த ஊர் இன்னும் அமைதியாகிவிட்டது. வீடுகள் எல்லாம் பூட்டிகிடக்க சாலைகள் வெறுமையாய்...
தாழம்பூ புதர் மண்டிய கண்மாய்க் கரையும்,செங்கழுநீர் நிறைந்த கண்மாயும்,கண்மாய்க்கரை ஐயனார் கோவிலும், கண்மாய்க்கரையில் படர்ந்து கிடக்கும் பொன்னாங்கண்ணிக்கீரையை கிள்ளி எடுத்து தாவணி முந்தானையில் நிரப்பி வருவதும் நினைவை விட்டு நீங்காதவை.இப்போது அந்த கிராமத்தின் இளைஞர்கள் எல்லோரும் பிழைப்பு தேடி புலம் பெயர பெண்கள் குழந்தைகள் படிப்பைக் காரணம் காட்டி பக்கத்து சிறுநகரங்களுக்கு குடிபெயர அந்த ஊர் இன்னும் அமைதியாகிவிட்டது. வீடுகள் எல்லாம் பூட்டிகிடக்க சாலைகள் வெறுமையாய்...
பூட்டிய அந்தக் கதவுகள் திறக்கத் திருவிழா வரவேண்டும்.அந்த நினைவுகள் வந்துவிட்டால் நான் இறையிடம் வேண்டுவது ஒன்று தான்.இந்த பூமியை சேதமில்லாது பழமைக்கு மாற்றிவிடு.எங்களின் சொர்க்கத்தை திருப்பிக்கொடுத்துவிடு.
மிக அழகான நாட்கள் அவற்றை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.நிலங்களெல்லாம் வீடுகளாகும் வேகம் பார்த்து முடிவில் மிகவும் பயமாக இருக்கிறது.
பதிலளிநீக்குபுதுக்கோட்டை, அறந்தாங்கி என்று ஆரம்பித்தவுடன் வேகம் பிடித்த எனது வாசிப்பு அப்படியே வயக்காட்டில் கொஞ்சம், கொஞ்சம் எனக்குக் கிடைத்த அனுபவத்தையும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியதால், இன்னும் வேகமெடுத்தது. எப்படிங்க கல்லூரியில் படிச்சிக்கிட்டே இந்த மாதிரி வேலையெல்லாம் கூட செய்யலாங்கிற பக்குவம் உங்களுக்கு வாய்க்க கிடைச்சிச்சு. சூப்பர்ப்.
பதிலளிநீக்கு//எங்களின் சொர்க்கத்தை திருப்பிக்கொடுத்துவிடு.//
இப்ப உள்ள தலைமுறைகிட்ட கேட்டா அது இப்போ அனுபவிச்சிட்டு இருக்கிறதுதான் சொர்க்கமின்னு சொல்லுங்க அதோட 'நம்ம' வயசில. அன்னிக்கு இன்னும் மாற்றங்கள் நடந்தேறியிருக்கும்.
அருமையான விவரிப்பு.
பதிலளிநீக்கு//இந்த பூமியை சேதமில்லாது பழமைக்கு மாற்றிவிடு.எங்களின் சொர்க்கத்தை திருப்பிக்கொடுத்துவிடு.//
:( கிடைக்குமா?