எங்கள் பாலைய நாட்டு கிராமங்களில் குழந்தைகள் தூங்குவதற்கு தாலாட்டுப் பாடுவார்கள். அந்தத் தாலாட்டு பெரியவர்களையும் தூங்கவைத்து விடும்.அந்தப் பாட்டுகள் புலவர்களின் கவிதைகளுக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை. பொருட்செறிவு மிக்க அந்த பாடல்கள் பெரும்பாலும் வீரத்தாலாட்டுகளாகவே இருக்கும்.அப்படி ஒரு தாலாட்டு
ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!
கண்ணுக்குக் கண்ணெழுதி
கடைக்கண்ணுக்கே மையெழுதி,
தூங்காத கண்ணுக்குத்
துரும்பு கொண்டு மையெழுதி,
அயராத கண்ணுக்கு
அரும்பு கொண்டு மையெழுதி
உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
எங்கள் குறை தீர்க்க வந்த
இந்திரனும் நீ தானோ?
மனக்கவலை தீர்க்க வந்த
மாமணியும் நீதானோ?
கலி தீர்க்க வந்த
கண்மணியும் நீ தானோ?
சங்கு முழங்க
சமுத்திரத்தில் மீன் முழங்க
எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தாயோ?
சரியாய் முழங்கவென்று
தாயிடத்தில் வந்தாயோ?
செம்பொன் வெட்டி தூண் நிறுத்தி
சீனி கொண்டு கால் நாட்டி
கம்ப மகள் சேனையர்க்கு- என் ஐயா நீ
கைக்குதவியாய் வந்தவனோ?
ராராட்டத் தூணசைய ராமர் கையில் அம்பசைய
அம்பு முழுதசைய ஆளப்பிறந்தாயோ?
வில்லு முருகசைய விளங்கப்பிறந்தாயோ?
காடு வெட்டி நாடாக்கி, கழனியெல்லாம் கதிராக்கி
கள்ளரெல்லாம் உள்ளமர்த்தி
நாடு பெற்று வருவார்கள் ராஜாவோ? உங்களய்யா!
வெற்றி பெற்று வருவார்கள் வீமரோ உங்களய்யா!
வெற்றி பெற்று வருவார்கள் வீமரோ உங்களய்யா!
ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!
நல்லது பாடல்களை த்தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
பதிலளிநீக்குநானும் இது போன்ற பாடல்களைப் பதிவு செய்துள்ளேன் பார்க்க
http://rathinapugazhendi.blogspot.com
உங்களின் பதிவுகள் அருமை அதிலும் இந்த கிராமிய தாலாட்டுபாடல் அருமையிலும் அருமை.
பதிலளிநீக்குதொடர்ந்து பதிவு செய்க...
அதுவும் முனைவர்.இரத்தின.புகழேந்தியே பாராட்டுகிறார் என்பதைவிட ஊக்கம் வேறென்ன...
மிக மிக அருமை
பதிலளிநீக்கு