ஒரு சமூக உயர்வு, அந்தச்சமூகம் அவர்களது பெண்களை மதித்து நடத்துவதில் தான் இருக்கிறது.நகரத்தார்களின் உயர்விற்கு நகரத்தார் பெண்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது. நகரத்தார் சமூகப் பெண்களை ஆச்சி என்று அழைப்பார்கள்.இவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள்.கொடையுள்ளம் கொண்டவர்கள். இவர்கள் வீடுகளுக்குச்சென்று யாரும் உணவு உண்ணாது திரும்ப முடியாது.இவர்களும் நகரத்தார் ஆண்களைப்போல மந்திர உப்தேசம் பெற்று சிவ பூசை எடுப்பார்கள்.சிவபூசை எடுத்து விட்டால் புலால் உண்ண மாட்டார்கள்.முற்காலத்தில் நகரத்தார் ஆண்கள் வெளிதேசங்களுக்கு வணிக நோக்கில் செல்லும் போது பெண்களை அழைத்துச்செல்லும் வழக்கம் அவர்களிடமில்லை.ஆகவே வீட்டு நிர்வாகம்,செல்வ நிர்வாகம் அ முதல் ஃ வரை ஆச்சிகள் தான். இன்சொல்,சிரித்த முகம், எல்லோரையும் அப்பச்சி என்று அழைக்கும் நேயம்,செல்வத்தில் வளர்ந்ததால் எளிமை,வீட்டு வேலைகளில்,உடை உடுத்துவதில்,பொருத்தமான நகைகள் அணிவதில் ஒரு நறுவிசு,பண்ட பாத்திரங்களைப் பேணுவதில் ஒரு அக்கறை,சுத்தம்,நாகரீகப்பாங்கு,சமையல்,பொருட்களை அழகுற அடுக்கி வைத்தல் (ஒதுங்க வைப்பது - ஒரு வீட்டு சாமான் களையும் ஒரு சுவற்றலமாரியில் அடுக்கிவிடுவார்கள்.அடுக்கி வைத்துவிட்டு ஞாபகமாய்ச்சொல்வார்கள்) விருந்தோம்பல் கைவேலைகள் ஆகியன இவர்களது பண்பு. மளிகைபொருடகளை அந்தந்தப் பருவத்தில் வருடத்திற்கு மொத்தமாக வாங்கி துப்புரவு செய்து வெயிலில் காயவைத்து டப்பாக்களில் கொட்டிவைத்து சரியான இடை வெளிகளில் காயப்போட்டு பூச்சி,புழுப்பிடிக்காமல் கவனமாக சேமித்து வைப்பார்கள். (ஏதாவது விட்டுப்போயிருக்கலாம்)
ஆண்கள் வெளிதேசங்களில் வருடக்கணக்கில் இருந்தாலும் வீடு,சொத்து, உறவு,குழந்தைகள் பராமரிப்பை கைதேர்ந்த நிர்வாகத்திறமையுடன் செய்வார்கள்.அந்தக்காலத்தில் மற்ற சமூகப் பெண்களைப்போல இவர்களும் பள்ளி செல்ல அனுமதியில்லை என்றாலும் தமிழ்ப்பற்றுடன் புலவர்களின் பாடல்கள்,தாலாட்டுப்பாடல்கள், தேவாரம்,திருவாசகம்,அபிராமி அந்தாதி,திருப்புகழ்,திருமகள் துதி,சரஸ்வதி துதி,சுப்ரமண்ய புஜங்கம் இவற்றை எல்லாம் வாய் மொழியாகக் கேட்டு உச்சரிப்பு பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் பாடுவார்கள்.இப்போது அவர்கள் படிப்பில் சிகரம் தொட்டு எல்லா நிலைகளிலும் பணிபுரிகிறார்கள்.கோலம் அதிலும் மணவறையில் போட மனைக்கோலம், நடுவீட்டில் போட நடுமனைக்கோலம்,அடுப்பு,பொங்கல் பானைகளில் அதற்கான கோலம் என்று விதம் விதமாகப்போடுவார்கள்.அந்தக்கோலங்களிலும் ஒரு திருத்தம் அழகு இருக்கும். எங்கள் பெண்கள் கோவிலுக்குப் போனால் நகரத்தார் பெண்களின் கைவண்ணத்தைத் தனியாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.நகரத்தார் பெண்கள் கண்ணாடிக்கல் நகைகளை அணிவதில்லை.ரத்தின மணிகள் தான் பெரும்பாலும் வைர நகைகள் தான் அணிவார்கள்.இவர்களில் விதவைகள் ,விவாக ரத்தான பெண்கள் மறுமணம் செய்வதில்லை.ஆண்கள் செய்து கொள்வதை அனுமதிக்கும் இவர்கள் சமூகம், பெண்கள் செய்தால் சமூகப்பிரஷ்டம் செய்யும் பழக்கம் இவர்கள் சமூகத்தில் இருந்து வந்திருக்கிறது.விதவைகள் வெள்ளைப்புடவை, வெள்ளை ரவிக்கை தான் அணிவார்கள்.நெற்றியில் பொட்டு வைக்காமல் திருநீற்றை பட்டையாகப்பூசுவார்கள்.இப்போதும் அப்படித்தான். விதவைகள் தங்களுக்குக் குழந்தை இல்லாத பட்சத்தில் பிற பங்காளி குடும்பப் பிள்ளைகளை சுவீகாரம் எடுத்து வாரிசுரிமை தருவார்கள்.வீடு வெறும் வீடாகப்போடக்கூடாது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.இப்போது குழந்தை இல்லாத இளம் விதவைகள்,விவாக ரத்தானவர்கள் மறுமணம் புரிகிறார்கள்.
நகரத்தார் பெண்கள் தீட்சை எடுக்கும் வழக்கமுள்ளவர்கள் என்பதால் ஆச்சார அனுஷ்டானங்களுடன் பூசை நியதிகளைக்கடைப்பிடிப்பவர்கள்.காலை குளித்து மஞ்சள் பூசி,குங்குமமிட்டு இறைவனை வணங்கி பிறகு தான் மற்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.கோவில்கள்,திருத்தலம்செல்வது,விரதங்களைக்
கடைபிடிப்பது ஆகியவற்றை ஒரு நியதியுடன் செய்யும் பழக்கமுள்ளவர்கள்.ஒரு குடும்பத்தில் பெண்குழந்தை பிறந்து விட்டால் இவர்கள் அந்தக்குழந்தை பிறந்த நாளிலிருந்து சாமான் சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.நகை,சீதனப் பணம் சேர்த்து வங்கிகளில் கணக்கிலும் லாக்கரிலும் வைத்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதைத் தொடுவதில்லை.நுண்மாண் நுழை புலம் கொண்ட இப்பெண்கள் நற்பண்புகள்,நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டு தம் கணவர்கட்கு நன் மந்திரியாகவும்,குடும்பத்தை சிக்கனமாக நடத்துவதில் பொருளாதார நிபுணர்களாகவும்,ஆயகலைகளில் சிறந்தவர்களாகவும்,அறவாழ்வும்,பக்திசிரத்தையும் கொண்டு விளங்குபவர்கள்.அழகும் அறிவும் இவர்களின் மரபு வழி வருவது.தைரியம் மிகுந்த இந்தப்பெண்கள் மற்ற சமுதாயப்பெண்களுக்கு வழிகாட்டிகள்.அது எப்படி என்று அடுத்த கட்டுரையில் இடுகையிடுவோம்.
//நகரத்தார்களின் உயர்விற்கு நகரத்தார் பெண்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது.//\
பதிலளிநீக்குசத்தியமான வார்த்தைகள்...
நானும் காரைக்குடி தான்
நன்றி சாந்தி!அப்பப்பா எவ்வளவு விபரங்கள்!
பதிலளிநீக்கு