கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

20.12.09

பாலையநாட்டு திருவிழா - மாரியம்மன் பொங்கல்

                 எங்கள் கிராமங்களில் 'மாரியம்மன் பொங்கல்' என்று பங்குனி மாதத்தில் எட்டு நாள் காப்புக்கட்டி,எட்டாவது நாள் ஊரே ஒன்று கூடி மாரியம்மன் கோவில் முன்பாக ஆடு,கோழி வெட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடுவது வழக்கம். அந்த திருவிழாக்காலத்தில் ஊரே களையாக இருக்கும்.பிழைப்பிற்காக புலம் பெயர்ந்து சென்ற மக்கள் ஒன்று கூடி எங்களின் உறவுகளும் வருகை தரும் அந்த நாட்கள் அடுத்த முறை ஊருக்குப் போகும் வரை சக்தி தரும், நினைவை விட்டு நீங்கா நாட்கள்.இந்த திருவிழாவிற்கு முளைப்பாரி போடும் வழக்கம் உண்டு.வீட்டுக்குவீடு முளைப்பாரி போட்டு தூக்கி வந்து பிள்ளையார் கூடம் என்றழைக்கப்படும் ஊர்ப்பொது இடத்தில் வைத்து அதோடு ஊர்ப் பொதுவில் கரகம் போட்டு அதில் மஞ்சளால் மாரியம்மனின் முகம் வரைந்து சாமியாடி தூக்கி வந்து முளைப்பாரிகளின் நடுவில் வைப்பது வழக்கம்.அந்தக்கரகத்தில் மாரி அம்மன் குடியிருப்பதாய் ஐதீகம்.இரவு முழுவதும் அந்தக்கரகத்திற்கு தீபாராதனை நடை பெறும்.இரவெல்லாம் பிள்ளையார் கூடத்தின் முன்னால் உள்ள பொட்டல் வெளியில் முளை கொட்டுவது(கும்மி கொட்டுவது),விடியலில் வீடு சென்று குளித்து,அலங்காரம் செய்து முளைப்பாரிகளை தலையில் வைத்து மாரியின் பெருமை கூறும் பாடல்களை ஒருவர் பாட மற்றவர்கள் குலவையிட்ட படி கொண்டு சென்று நீர் நிலைகளில் கொட்டி விட்டு வருவோம்.

       காவடிகள்,பால் குடங்கள்,அக்னிச்சட்டி எடுத்து ஊரை வலம் வந்து கோவிலில் கொண்டு போய் சேர்ப்பது எல்லாம் திரு விழாவின் ஒரு அங்கம்.ஒவ்வொரு மண்டகப்படியின் போதும் உபயதாரர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு.வள்ளி திருமணம், பவளக்கொடி,அரிச்சந்திரன் நாடகங்கள் இருந்த இடத்தை இப்போது ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் என்ற குத்தாட்ட நிகழ்ச்சிகள் பிடித்துகொண்டன.முளைக்கொட்டும் எங்கள் ஊர்களில் அருகி விட்டன.
        
        காவடிகள் , பால் குடங்கள் ஊர்வலம் வருகையில் காவடிச்சிந்து பாடுவார்கள்.காவடி தூக்கி வரும் அன்பர்கள் அருள் வந்து ஆடும் போது காவடிச்சிந்துக்கு ஒரு நடனமிடுவார்கள் பாருங்கள்,"அப்பன் அம்பலத்தில் இப்படித் தான் ஆடியிருப்பாரோ" என்று நினைத்துக் கொள்வதுண்டு.இப்பொது காவடி தூக்கி வரும் போது 'வேல் வேல்,அரோகரா' என்ற சப்தங்களுடன் காவடி ஊர்வலம் முடிந்து விடுகிறது.இப்போதெல்லாம் திரு விழாவிற்கு ஊருக்குப் போகும் போதெல்லாம் முளைப்பாரி கொண்டு போய் பிள்ளையார் கூடத்தில் வைத்துவிட்டு வருவதோடு சரி. வீட்டில் வந்து தூங்கி விடுகிறோம்.என் ஆயா (என் அம்மாவின் தாயார்) தன் மலரும் நினைவுகளுக்குப் போய்விடுவார். "ஒங்க ஐயா இருக்குங் காலத்துல திருவிளாக்குன்னே ஆடு,கோளி வளக்குறது. அது போக காட்டுல மொசக்குட்டி(முயல்) புடிச்சாந்து பஞ்சாரத்துல அடச்சு வைக்கிறது, விறா மீனு கொண்டாந்து பறங்கி (வட்டத்தாழி போல் பெரிய அண்டா) அண்டாவில போட்டு வச்சு ஊரெல்லாம் திருவிழாச்சொல்லி சனம் வந்துச்சுன்னா அந்தத் தெருவே கூட்டு வண்டியாத்தான் இருக்கும்.விருந்து முடிச்சு ஒங்க ஐயா சருக வேட்டி,துண்டு தோள்ல போட்டு நெத்தியில சந்தனப் பொட்டுவச்சு பொட்டலுக்கு வந்தாருன்னா சந்தனத் தேரே வந்த மாதிரி இருக்கும்.கரகத்தக் கும்பிட்டுட்டு தோளுத் துண்ட எடுத்து தலைப்பாக் கட்டி முளைக்கொட்டுப் பாட்டு பாட ஆரம்பிச்சாருன்னா, அந்த மாரியாத்தாளே தச்சுருவா கரகத்துலர்ந்து தலையாட்டுவா.ஹும் அது ஒரு காலம்" என்பார்.இதையெல்லாம் நானும் அறிவேன் என்பதால் அதே நினைவுகளில் கண்ணீர் கரை கட்டிவிடும்.இப்போது சரிகை வேட்டியா? ராம ராஜன் மாதிரி என்று எங்கள் வீட்டில் ஆண்கள் வெள்ளை வேட்டி உடுத்துகிறார்கள். அதுவரை பரவாயில்லை.

         காலம் மாற,மாற நமது கலாச்சாரங்கள் மாறினால் நமது அடையாளம் மறைந்து போகாதோ? எட்டுத் திக்கும் செல்வோம்.கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.நமது பாரம்பர்யங்களை மறவாதிருக்கவும் வேண்டுமல்லவா? என்று நமது பழக்க வழக்கங்கள்,மரபுகள் நமது அடையாளமாகிவிட்டதோ, நமது அடையாளங்களைநாம் காப்பாற்றிக்கொள்வதால் நமது தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்கூறுமல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக