ஒரு நெடுங்கனவின் நீட்சியாய்
துரத்திக்கொண்டே இருக்கிறது அவள் குறித்த காட்சிகள்.
மறக்க நினைத்தாலும் உள்ளத்தில்
தைத்துக்கொள்கிறது அவளின் துயரங்கள்
வாழ்க்கை வஞ்சித்த வனதேவதை அவள்.
நாகரீகத்தின் சாயல் அறியாத கிராமத்துக்கொற்றவை.
அன்பும், கற்பும் மட்டுமே அவளின் ஆயுதங்கள்
கஞ்சிக்கலயத்தில் கதிரவனையும் சுமந்து
கழனி, காடெல்லாம் பண்படுத்தி
கதிர் வளர்த்தாள்
வனம் பெருக்கினாள்
மாலை சூரியனை மலை முகட்டில் விட்டு
நிலவைக்கூட்டி வீடு வருவாள்.
காலம் அவளின் முந்தானையில்.
பொறுக்கிவந்த சுள்ளியில் சுடர் வளர்த்து
வயிற்றின் பசித்தீ போக்கி,
மீத உணவில்
காலை காக்கைக்கு ஒரு பிடி அன்னம்
இரவு பைரவருக்கு ஒரு பிடி என்று ஒதுக்கிவைப்பாள்.
ஆலை அரிசி உண்டதுமில்லை.
ஆகாத உணவை தின்றதுமில்லை.
மருந்தும், விருந்தும் அறிந்ததுமில்லை.
.உதவி என்போருக்கு உயிர் தருவாள்.
அன்பைக்கூட அதட்டலாய்க்காட்டுவாள்.
சுற்றத்தின் துயர் தீர்ப்பாள்
முந்தையத் தலைமுறைப்பெண்களின்
பிறவிக்கலி தீர்க்கும் சுமைதாங்கியாய் அவள்.
அவள் உடலின் உயிர்க்கடிகாரம்
அவளை உட்கார ஒட்டாமல் விரட்டிக்கொண்டேயிருக்க
எப்போதும் இயற்கையோடு உறவாடியபடி இருந்தாள்.
மனிதர்களிடம் மட்டும் விலகியே இருந்தாள்.
தேவைகளை அவசியத்தேவைகளாக மட்டுறுத்தி
ஆசைகளைப்பொசுக்கி அறம் வளர்த்தாள்.
யுகம் யுகமாய் வாழ்ந்த பெண்களின்
துயர் படிந்த குறியீடாய் அவள்.
அவளது இல்லில்
அவளின் தனிமைக்குத் துணையாய்
தெய்வங்கள் குடியிருந்தன.
கழனிகளிலும் காடுகளிலும்
மைனாக்களும், மயில்களும்.
காற்றின் திசை பார்த்து மழையின் வரவு சொல்வாள்.
தவளையின் மொழி, முட்டையுடன் எறும்புகள்
பல்லியின் ஒலி, பசுவின் கதறல்
அத்தனைக்கும் அர்த்தம் சொல்லும்
இயற்கையின் அகராதி அவள்.
மண் பயனுற வாழ்ந்த மகளீரின்
மங்காத அடையாளமாய் அவள்
முந்தையத் தலைமுறைப்பெண்கள்
இறக்கித்தந்த தோள் சுமை விட்டு, விடுதலையாகி
பூட்டுகள் விலக்கி புதிதாய்ப்பிறந்த எங்களுக்கு
வியப்பின் வடிவம் அவள்.
பொல்லாப்பொழுதாய் விடிந்த
பனிமூடிய காலைப்பொழுதொன்றில்
நெட்டுயிர்த்துப் பிரிந்தது
எங்கள் குலக்கொற்றவையின் உயிர்க்காற்று.
கண்ணீர்த் துளிகளைத்தவிர கொடுப்பதற்கு எதுவுமில்லாத
யாசகர்களாய் நானும், இந்த பூமியும்.