கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

28.2.10

தாய்

நீ தந்த
நேசத்தின் மிச்சத்தை
அடைகாத்ததில்
உயிர் பெற்று நிற்கிறது என் இல்லம்.

பேருந்துப் பயணங்களில்
சன்னல் இருக்கையில் அமர்ந்து
ஓடும் மரங்களை
சாலை கடக்கும் மயில்களை
வானில் இறக்கை அசைக்காது மிதக்கும் ஒற்றை கருடனை
விரல் நீட்டி குதூகலிக்கையில்
முந்தானைப்போர்வையில் மூடி
மூக்குச்சிந்தி
நீயும் குதூகலிப்பதாய் போக்குக்காட்டி...
என்னை உன்னோடு அணைத்துக்கொண்டு,
உன் உடல் சூட்டின் வெம்மையில் குளிர் காய்ந்து
உறக்கம் தழுவ மடியில் கிடத்தி
என் நாசியுணரும் உனது மஞ்சள் மணம்.
பயண அனுபவத்தை நினைவடுக்கில் சேமித்தாய்.
பயணிக்கும் போதுகளில் மலர வைத்தாய்

எந்த வயதில் எந்த உடை
என் முகத்திற்கு ஏற்ற அலங்காரம்
எனக்குப்பிடித்த பலகாரம்
எனக்குத்தெரியாத என் தேவைகள்
மயக்கங்கள்,தயக்கங்கள் உடைத்து
மனதின் வக்கிரங்கள் இயல்பெனத் தேற்றி
அறியாமை துடைத்து
ஆளுமை வளர்த்து
திட்டி,குட்டி,தட்டிக்கொடுத்து,
சன்னல்கள் திறந்து
கதவுகள் திறந்து
வெளிச்சம் புகுந்ததும்
அதன் வழி இன்னும்
பல அடைத்த கதவுகள் புலப்பட
திறக்கும் முயற்சி தொடர.....
என்னை மனிதனாக்கும் முயற்சியில் இன்னும் நீ

எனது கேள்வி இது தான் தாயே உன்னிடம்.
என்னைச்செதுக்க இத்தனை நாள் உனக்கு!
இன்னும் நான் முழுமை பெறாமல்...
உனக்குள்
இத்தனை வித்தைகளை விதைத்து
எங்களுக்காய் அனுப்பிய இறை யார்?

பெண்ணின் பெருமை

பெண்கள் நாட்டின் கண்கள்!,மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,பட்டங்கள் ஆள்வதும்,சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்! இப்படி எத்தனை கவிஞர்கள் எப்படிப் பாடி என்ன?பெண் குழந்தைகள் என்றால் இன்னும் நம் சமூகத்தில் ஒரு கசப்பு இருக்கத்தான் இருக்கிறது.என் தாயும்,தந்தையும் ஒரு ஆண் மகவிற்கென ஐந்து பெண் குழந்தைகளை பெற்றுக்கொண்ட போது உறவுகளின் மத்தியில் ஏளனப் புன்னகை,நட்பு வட்டாரத்திலோ பரிதாப நோக்கு,கேள்விப்படுபவர்களோ ஐந்து பெண்ணா அரசனே ஆண்டி,நீங்கள் எம்மாத்திரம் இப்படியான மொழிகளைக்கேட்டுக்கேட்டு என் பெற்றோர் பயந்து,பின் துணிந்து தெளிவு பெற்றது தனிக்கதை.எங்கள் வீட்டில் தான் ஐந்து பெண்கள் என்றால் அந்த காலகட்டத்தில் நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து பெண்குழந்தைகள்.பெண்குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது வீட்டில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் கொலுசுச்சத்தம்,சலங்கைச்சிரிப்பொலி,வாசலில் விரியும் வண்ணக்கோலங்கள்,கைவேலைகள்,பின்னல்கள்,சித்திர வேலைகள்,புதுப்புது சமையல் மணக்கும் அடுப்படி இப்படி வீடே நிறைந்து கிடக்கும்.இதை அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் அருமை புரியும்.எங்கள் ஊரில் ஒரு பொன் மொழி கூறுவார்கள்."பெண் கிளைதான் பெரும் கிளை" அதாவது பென் குழந்தையால் வரும் சொந்தம்,சுற்றம் பெரிது.பெண்களுக்குள்ள பாசமும்,பரிவும்,அன்பும்,நேசமும் அலாதியானது.ஆனால் சீருக்கும்,வரதட்சணைக்கும் பயந்து பெண்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததும் இந்த பூமியில் தான்.

நாங்கள் சிறுவயதில் விளையாடப்போகும் இடங்களில் சிறுசண்டைகள் வந்துவிட்டால் வந்து விழும் முதல் வார்த்தை,"சீ போ! அது தான் உங்க அம்மா வெறும் பொட்டக்குட்டியா போட்டுவச்சிருக்கா" எனக்குள் ஆத்திரம் பொங்க என் அம்மாவிடம் கூறினால் என் அம்மாவும் அப்பாவும் சாதரணமாக,"போகுதுக விடு! பெரியவுக அப்புடிப்பேசிக்குவாக போலருக்கு.அதக்கேட்டு இதுகளும் பேசுதுக" என்பார்கள்.ஒரு குழந்தை பெற்றவர்கள் சந்தடிச்சாக்கில் ,"ம். நா சிங்கம் குட்டிப்போட்ட மாதிரி ஒண்ணு பெத்து வச்சிருக்கேன்.பன்னி குட்டிபோட்ட மாதிரியா பெத்துப் போட்டிருக்கேன்" என்று சம்பந்தமின்றி சாடை பேசுவார்கள்.ஒரு பெண் குழந்தை வைத்திருப்பவர்களோ," நா என்ன ஒண்ணு வச்சிருக்கேன்.உங்கள மாதிரியா அஞ்சு வச்சிருக்கேன். அதுனால நீங்க கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.அப்பத்தான் இதுகள கரை சேக்க முடியும்" போகிற போக்கில் வெடியை வீசிவிட்டுப்போவார்கள்.என் அத்தைக்கு ஒரு பெண்,என் சித்தப்பாவிற்கு ஒரு பெண்,என் அம்மா,என் பாட்டி ஒரு பெண் இப்படியான பரம்பரையில் ஐந்து பெண்களாய் நாங்கள்.ஆனால் இதே என் தந்தைக்கும்,தாய்க்கும் உழைக்கும்,சேமிக்கும் தன்முனைப்பையும்,எங்களை அருமையாக உருவாக்குவதிலும் முனைந்தார்கள்.இன்று எங்கள் வீடுகளில் ஒரு விழா,பண்டிகை என்றால் மகள்கள்,மருமகன் கள்,பேரக்குழந்தைகள் என்று வீடும் மனதும் நிறைந்து போகிறது.பெண்குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக அம்மா,அப்பா,தம்பிகுடும்பம் என்று கொண்டாடி இருக்க,நான்கு ஆண்குழந்தைகள் உள்ள வீட்டில் மருமக்கள் தனித்தனியே உலை வைக்க ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாரமாக பங்கில் கழிகிறது ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் பாடு.இன்று என் அம்மாவிற்கு ஒரு நோய்,ஒரு நலிவு என்றாலோ,வீட்டில் அதிக வேலை என்றாலோ ஒருவர் மாற்றி ஒருவர் கவனித்துக்கொள்கிறோம்.சிங்கங்களும்,ஒண்ணு வச்சிருந்தவுகளும் அனாதைகளைப்போல.ஒண்ணு வச்சிருந்த மிதப்பில் இருந்தவர்கள் ஒரு குழந்தையைக்கரை ஏற்ற வீட்டின் நாதாங்கியைக் கூட விற்றாக வேண்டிய நிலை.இன்னும் சொன்னால் சோகக்கதை இன்னும் நீளும்.

இன்று ஒரு தோழிக்கு ஏற்கனவே இரு பெண்கள்.மூன்றாவதாய் கர்ப்பம் தரித்ததும் அவரின் கணவர் அவரை கருக்கலைப்பு செய்யும் படி வற்புறுத்த அவரோ இது கண்டிப்பாக ஆண்குழந்தை தான் அதனால் கருக்கலைப்பு செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்க,உடனே கணவர் அப்படி இது ஆண்குழந்தையாக இல்லாத பட்சத்தில் அந்தக்குழந்தையோடு நீயும் போய்விட வேண்டும் என்று மிரட்ட,அவர் தினம்தினம் கவலையோடும்,கண்ணீரோடும் காலம் கடத்தி அவரது பிரசவ நாளனறு இதே நினைவில் ரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிற மருத்துவர்களோ செய்வதறியாது திகைக்க,நாங்களனைவரும் வேண்டாத தெய்வமெல்லாம் வேண்டி கடைசியாய் அவருக்குப்பிறந்தது,"ஆண் குழந்தை" அவரது கணவர் விசயமறிந்து இனிப்போடு வர நாங்கள் ஒருவரும் இனிப்பு எடுத்துக்கொள்ளவுமில்லை,அவரோடு இன்று வரை முகம் கொடுத்துப்பேசுவதுமில்லை.நாம் தான் இப்படியென்றால் வங்காளத்தவரும் அப்படியே! இரு வங்காளத்தோழியருக்கு இரண்டாவது பெண்குழந்தை பிறந்து இருவரும் வேலைக்கு வந்த அன்று வாழ்த்துச்சொன்ன போது இருவரும் தலைகுனிந்து வடித்த கண்ணீரில் ஒலிபரப்புக்கூடமே ஈரமாகிப்போனது.அவர்களின் மாமியார் ஏதாவது வாக்குவாதம் வந்தால்,"ஒரு ஆண்பிள்ளை பெற்றுக்கொடுக்க வழியில்லை,பேசுகிறாயா" என்பார்களாம்.இவர்களுக்கெல்லாம் நான் எங்கள் வீட்டுக்கதையைச்சொல்லித்தான் தேற்றுவது.வேறென்ன செய்வது? நான் சந்திக்கும் நபர்கள்,என் நட்பு வட்டம் எல்லோரும் அனைவரிடமும் சந்தோசத்தை மட்டும் பகிர்ந்து,என்னிடம் மட்டும் சந்தோசம்,துக்கம் இரண்டையும் பகிரும் போது இப்படியெல்லாம் சொல்லித்தான் தேற்ற வேண்டியிருக்கிறது.

குடும்ப நண்பர் ஒருவரின் மகனுக்கு மூன்று வருடமாகப் பெண் பார்க்கிறார்கள். நினைத்தமாதிரி பெண் அமையவில்லை.இன்று எல்லா சமூகத்திலும் பெண் குழந்தைகள் குறைந்து விட்டதால் மாப்பிள்ளைகள் நிறைந்து பெண் பற்றாக்குறை.இந்த நிலை நீடித்தால் வரும் நாட்களில் ஆண்,பெண் விகிதாச்சாரம் மாறுபட்டு,சமூகக்குற்றங்கள் பெருகும் அபாயம் உண்டு.இப்போதே எங்கள் சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு நகை போடுவதும்,நல்ல பெண்ணாக இருந்தால் போதும்,"போடுறதப்போடுங்க" என்ற நிலைக்கு இறங்கிவந்துவிட்டார்கள்.பெண்குழந்தைகள் பிறக்கும் போது வெறும் கையோடா பிறக்கிறார்கள்.கையில் பத்துவிரலோடு பிறக்கிறார்கள்.அவர்களை வளர்த்து ஆளாக்கிவிட்டுவிட்டால் போதும்.அவர்களும் சம்பாதிப்பார்கள்.அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக்கொள்வதோடு நம்மையும் பொறுமையோடு பராமரிக்கும் அன்பும் நேசமும் அவர்களுக்குண்டு.பெண் குழந்தைகள் வீட்டிற்கு அழகு.ஆகவே பெண்களே ஆணென்ன?,பெண்ணென்ன? நாமிருவர்,நமக்கிருவர்! ஆரோக்கியமான,அறிவான,அழகான குழந்தைகளாய் இருந்தால் போதும். "பொண்ணைப்பெத்த அப்பா வந்தார் ஓட்ட வண்டியிலே" இது பழைய பாட்டு.பெண்ணுக்கும் கல்வியையும்,தைரியத்தையும்,தன்னம்பிக்கையும் கொடுத்து வளர்த்தால் கண்டிப்பாக சாதிப்பார்கள்.ஆன்ம பலமும்,புத்திசாலித்தனமும்,சிறந்த உள்ளுணர்வும் இயற்கையிலேயே கொண்டவர்கள் பெண்கள்.கொஞ்சம் தூண்டினால் போதும் துலங்குவார்கள்.நல்ல மக்களாக வெற்றிக்கொடி நாட்டி விளங்குவார்கள்.

20.2.10

உப்புக்கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி அல்லது குருணை - 2 உழக்கு
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
தேங்காய் - ஒரு மூடி
சின்ன வெங்காயம் - சிறிது
தாளிக்க - எண்ணெய்,கடுகு,உளுந்து,வர மிளகாய் -4

அரிசி அல்லது குருணையை ஊற வைத்து ரவையை விட சற்று பெரிதாக அரைத்து எடுத்து,அதோடு பாசிப்பருப்பை ஊறவைத்துக்கலந்து,தேவையான உப்பும் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.தேங்காயைத்துருவி வைத்துக்கொண்டு,சின்ன வெங்காயத்தை உரித்து,சன்னமாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து,காய்ந்ததும் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து,மிளகாயைக்கிள்ளிப் போடவும்.கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப்போட்டு,வாசம் வரும் வரை வதக்கி,பின் தேங்காய்த்துருவல் போட்டு வதக்கி,மாவையும் சேர்த்து,பின் கொழுக்கட்டைகளாய் பிடிக்கும் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.தேவைப்பட்டால்,சிறிது சீனி சேர்க்கலாம்.பிறகு,இட்லிச்சட்டியின் குழித்தட்டில் எண்ணெய் தடவி,கிளறிய மாவை விருப்பமான வடிவில் பிடித்து வேக வைக்கவும்.இந்தக்கொழுக்கட்டை சூடாக,தக்காளிச்சட்டினியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

18.2.10

இப்படித்தான் சிலரின் பால்ய காலம்

சொப்புவைத்து விளையாடும்
சின்னஞ்சிறு வயதிலும்
இடுப்பில் பாப்பாவோடு
வீதிக்குழந்தைகளின்
விளையாடல்களின் பார்வையாளராய் நான்

கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தில்
மண் பாத்தியில்
ஒளிக்கப்படும் ஈர்க்குச்சி தேடி எடுப்பதற்குள்
அடுப்படி உதவிக்கு
ஆயிரம் முறை அழைக்கும் அம்மா!

நொண்டி,காசிக்குப்போறேன் - நானும் வாரேன்
ஐஸ் பாய்,பூப்பறிக்க வருகிறோம்,
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்
இப்படி
எத்தனை விளையாட்டு என் பால்யத்தில்.
எதுவும் வாய்க்கவில்லை எனக்கு முழுதாய்.
தவணை முறையில் விளையாடும் என்னால்
தப்பிப் போகிறது அவர்களின் விளையாட்டு என்று
பார்வையாளனாய் மட்டும் அங்கீகரித்த பால்ய சினேகிதர்கள்.

மூத்தபிள்ளையாய்ப்பிறந்து
இளையோரைச்சுமந்து என்
இடுப்பே வளைந்ததாய்
என் தாயைப்புறம் பேசும் சொந்தங்கள்.
எதுவும் புரியாத வயதில்
என் தாயின் கண்ணீரும் புரியாது போனது.
புரிந்த போது
காலம் என்னை வேறிடத்தில் நட்டுப்போக,
உடன்பிறப்பை சுமப்பதற்கும்
உதவியாய் இருப்பதற்கும்
இன்னொரு பால்யம் வேண்டும் மனது

இன்று
எனக்காய் என் உடன்பிறப்புகள்
என் பாரங்களைப்பகிர்ந்து கொள்கையில்
வெட்கமாய் இருக்கிறது.
நான் அடித்தது வலிக்கிறதா?
அன்பு நிறை உடன்பிறப்புகளே!

17.2.10

நிலாவாண்டைப்பாடல்.(நிலவினை வாழ்த்திப்பாடும் பாடல்)

மாசிப்பிறையிலயும் வட்டங்கொண்ட லாவிலயும்
போட்டாப்பொழியுமின்னு பெரியோர்க சம்மதிச்சு
இட்டாப்பெருமையின்னு இளவட்டங்க சம்மதிச்சு
சின்னங்க கூடி சேர்ந்து மணக்கொண்டுவந்து
மட்டங்க கூடி வரிக்கல்லு கொண்டு வந்து
கொத்தனழைச்சு குறிப்பான இடம் பாத்து
தச்சனழைச்சு சரியான இடம் பாத்து
சித்திரமா வீடு கட்டி சிறுமச்சு ஒண்ணு போட்டு
எட்டடிக்குள்ளாக எதவா மனை போட்டு
கூட்டி மொழுகியவர்க்கு கோலங்கள் இட்டார்க்கு
குழந்த வரம் கொடுப்பா கோப்பான லாவாத்தா!
மாவரைச்சுக்கோலமிட்டு,மகிழ்ந்து விளையாண்டவர்க்கு
மஞ்சன் வரம் கொடுப்பா மகிமையுள்ள லாவாத்தா!
போடுங்க பொண்டுகளா,பொன்னாதிருக்குலவை.

லாவாத்தா, லாவாத்த எங்க எங்க நீ போன
கல்லாதிருக்குடிக்கு கல்யாணம் சொல்லப்போனேன்
கல்லத்துளைச்சு கடற்கரையில் முட்டையிட்டு
இட்டது மூனு முட்டை பொறிச்சது ரெண்டு குஞ்சு
இளைய குஞ்சுக்கிரை தேடி இரு காதம் போய்விழுந்து
மூத்த குஞ்சுக்கிரை தேடி முக்காதம் போய் விழுந்து
மாயக்குறத்தி மகன் வழிமறிச்சான் கண்ணி கட்டி
காலு ரெண்டும் கண்ணியில இறகு ரெண்டும் பந்தடிக்க
அன்னழுத கண்ணீரு ஆறு பெருகி ஆனை குளிப்பாட்டி
குண்டு பெருகி குதிர குளிப்பாடி
ஏரி பெருகி எருது குளிப்பாட்டி

இஞ்சிக்குப்பாய்ஞ்சு எழுமிச்சைக்கு வேரோடி
நஞ்சைக்கு பாய்ஞ்சு நார்த்தைக்கு வேரோடி
மஞ்சளுக்குப்பாய்ஞ்சு மாதுளைக்கு வேரோடி
இஞ்சிக்குக்கீழே இருக்கிறா லாவாத்தா
மஞ்சளுக்குக் கீழே மறையுறா லாவாத்தா
நஞ்சைக்குக் கீழே நடக்குறா லாவாத்தா
சேங்கை பெருகி செம்பன் விளையாண்டு
வாய்க்கா பெருகி மஞ்சன் விளையாண்டு
பள்லம் பெருகி பாலர் விளையாண்டு
ஐந்நூறு பாப்பசுவ அவுத்து விட்டே நீராடி
தொண்ணூறு பாப்பசுவ தொறந்து விட்டே நீராடி
அஞ்சு விரளி மஞ்ச அரைச்ச உருண்டை சேர்த்து
மூனு விரளி மஞ்ச முணுக்கி உருண்டை சேர்த்து
பூசிக்குளிப்பாளாம் பூப்படர்ந்த பொய்கையில
முழுகிக்குளிப்பாளாம் முத்துக்கரைகளில

அல்லியும் தாமரையும் அழகழகா பூத்திருக்க
வெங்காயத் தாமரையும் விதவிதமா பூத்திருக்க
கொட்டியும் தாமரையும் கொடிக்கொடியாய் பூத்திருக்க
அள்ளி ஒதுக்கி அழகாத் தலை முழுகி
பாசி ஒதுக்கி பாங்காத் தலை முழுகி
நாக்காலி மேலிருந்து நல்ல மயிருணத்தி (கூந்தலைக் காய வைப்பது)
கோக்காலி மேலிருந்து கோரை மயிருணத்தி
முக்காலி மேலிருந்து முத்து மயிருணத்தி
நாக்காலிக்காலொடிஞ்சு நல்ல மயிர் அறுந்ததென்ன?

அறந்தாங்கி நந்தவனம் அரும்பா சொரிந்தாலும்
அருமையுள்ள லாவுக்கு அரும்பெடுப்பார் எத்தனையோ
புதுக்கோட்டை நந்தவனம் பூவா சொரிந்தாலும்
பொறுமையுள்ள லாவுக்கு பூவெடுப்பார் எத்தனையோ
மதுரை நந்தவனம் மலராஸ் சொரிந்தாலும்
மகிழ்ச்சியுள்ள லாவுக்கு மலரெடுப்பார் எத்தனையோ
போதுமாடி லாவாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கி
போதாடி என் செய்வேன் பொலுப்பி முடிக்கலாம்
பத்துமாடி லாவாத்தா பத்தினியார் கொண்டைக்கி
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
காணுமாடி லாவாத்தா கணிசமுள்ள கொண்டைக்கி
காணாட்டி என் செய்வேன் கலந்து முடிக்கலாம்

பாசித்துறைகளிலே பதுங்குறா லாவாத்தா
பவளமல்லிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
முத்துத் துறைகளிலே முகம் பாக்குறா லாவாத்தா
முத்தரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
தண்ணீர்த் துறைகளிலே தவக்கிறா லாவாத்தா
தங்கரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா

வாங்கருவா போல வட்டஞ்சேர்ந்த லாவாத்தா
கருக்கருவா போல கண் துறந்த லாவாத்தா
வெட்டருவா போல வெளிச்சரிச்ச லாவாத்தா
சித்தருவா போல சிரிக்கிறா லாவாத்தா

ஆலஞ்சருகினிலே அன்னங்க மேய்ஞ்சாப்போல்
ஆராய்ந்தெளிஞ்சுருச்சு வாராளே லாவாத்தா
வாழை இலைகளிலே வனத்துளிய மேய்ஞ்சாபோல்
வாலுருவி அம்பு கொண்டு வாராளே லாவாத்தா
புங்கஞ்சருகினிலே பொய்க்கோழி மேஞ்சாப்போல்
பூரிச்செழுந்திருச்சு வாராளே லாவாத்தா
தென்ன இலைகளிலே சிறுதுளிய மேய்ஞ்சாப்போல்
சிங்காரக் கொட்டோட வாராளே லாவாத்தா
போடுங்கடி பொண்டுகளா பொன்னாதிருக்குலவை

பாலையநாட்டு கிராமங்களின் நிலாவாண்டை (நிலா விழா)

விழா எடுப்பதிலும்,மரபுகளை மாறாமல் வழிமொழிவதிலும் தமிழனுக்கு,அதிலும் நம் கிராம மக்களுக்கு இணை யாருமில்லை என்றே தோன்றுகிறது.எங்களது பாலைய நாட்டுகிராமங்கள் (காரைக்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 16 கிராமங்கள்) பதினாறு ஊர்களிலும் அறுவடை முடிந்து,மாசி மாதம் வளர்பிறை நாளில் ஆரம்பித்து பௌர்னமி வரை நிலவை வணங்கிக் கொண்டாடும் பொருட்டு நிலாவாண்டை என்னும் ஒரு கலாச்சார வழிபாட்டு மரபு தொன்று தொட்டு இருந்து வருகிறது.மாசி மாதம் வளர்பிறையில் ஊருக்குப் பொதுவான,மையாமான இடத்தில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து,செங்கற்களும்,செம்மண்ணும் கொண்டு வந்து சதுரமாய் கட்டி,நடுவில் மனை போட்டு,தினமும் இரவு ஊர்மக்கள் ஒன்று கூடி வழிபடுவார்கள்.அப்போது ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருந்து விதவிதமான பலகாரங்கள் கொண்டு வந்து,செங்கல்லால் கட்டப்பட்ட சதுரத்துக்குள் வைப்பார்கள் நிவேதனமாய்.அதோடு வாவரச மரத்தின் இலைகளையும்,பூக்களையும் கொண்டு வந்து வைப்பார்கள்.பிறகு அனைத்துப் பெண்களும்,பெண் குழந்தைகளும் இரு வரிசையாக நின்று நிலவை வாழ்த்துவார்கள்.இதற்கென தனியாக ஒரு நீண்ட பாடல் உள்ளது.அந்தப்பாடலை ஒரு பெண் பாட,மற்றவர்கள் தங்களின் வலது கரத்தில் வாவரச இலையை வைத்துக்கொண்டு நீட்டி மடக்கி,அந்தப்பாடலை திரும்பச்சொல்லி வாழ்த்துவார்கள்.வாழ்த்தி முடிந்ததும்,தீபம் காட்டி,நிவேதனப் பலகாரங்கள் அனைத்தயும் ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி,கலக்கி அதை எல்லோருக்கும் தொன்னையில் (வாழை இலைக் கப்) வைத்துத் தருவார்கள்.இப்படி பௌர்ணமி வரை கொண்டாடி,பௌர்ணமியன்று அங்கு ஊரே ஒன்று கூடி பொங்கல்,மாவிளக்கு வைத்து நிலவை வணங்கிப்படைத்து,வாழ்த்தி,ஊர் கூடி முளைக்கொட்டி (கும்மி கொட்டுதல்),போட்டு வைத்திருக்கும் மனையில் சிறு குழந்தைகள் இருவரை மாப்பிள்ளை,மணப்பெண்ணாக அமரவைத்து அவர்களுக்கு மாலையிட்டு பின்,கட்டிய அந்த செங்கல் சதுரத்தைப்பெயர்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு செங்கல்லை சுமந்து சென்று நீர் நிலைகளில் விட்டு வருவார்கள்.எங்கள் ஊர்களில் அந்த இடம் நிலாவாண்டைப்பொட்டல் என்று அழைக்கப்படுகிறது.எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடினாலும்,ஊர் ஒன்று கூடி கொண்டாடும் இது போன்ற விழாக்கள் தரும் நினைவுகள் நினைத்தாலே சுகம் தான்.அந்தப்பத்துப் பன்னிரண்டு நாட்களும் ஊரின் இர்வு நேரம் கலகலப்பாய் இருக்கும்.இரவு ஏழு மணிக்கே பாய் விரித்துவிடும் சிறார்களுக்கு நள்ளிரவு வரை விழித்திருப்பதே பெரிய சந்தோசம்.எங்கள் ஊரில் இன்று நிலாவாண்டை போடுகிறார்கள்.எங்கள் ஊர் பாலையூர் - கண்டனூர் (நடுவண் அமைச்சர் உயர்திரு ப.சிதம்பரம் அவர்களின் ஊர்)

நிலாவாண்டைப்பாடல்.(நிலவினை வாழ்த்திப்பாடும் பாடல்)

மாசிப்பிறையிலயும் வட்டங்கொண்ட லாவிலயும்
போட்டாப்பொழியுமின்னு பெரியோர்க சம்மதிச்சு
இட்டாப்பெருமையின்னு இளவட்டங்க சம்மதிச்சு
சின்னங்க கூடி சேர்ந்து மணக்கொண்டுவந்து
மட்டங்க கூடி வரிக்கல்லு கொண்டு வந்து
கொத்தனழைச்சு குறிப்பான இடம் பாத்து
தச்சனழைச்சு சரியான இடம் பாத்து
சித்திரமா வீடு கட்டி சிறுமச்சு ஒண்ணு போட்டு
எட்டடிக்குள்ளாக எதவா மனை போட்டு
கூட்டி மொழுகியவர்க்கு கோலங்கள் இட்டார்க்கு
குழந்த வரம் கொடுப்பா கோப்பான லாவாத்தா!
மாவரைச்சுக்கோலமிட்டு,மகிழ்ந்து விளையாண்டவர்க்கு
மஞ்சன் வரம் கொடுப்பா மகிமையுள்ள லாவாத்தா!
போடுங்க பொண்டுகளா,பொன்னாதிருக்குலவை.

லாவாத்தா, லாவாத்த எங்க எங்க நீ போன
கல்லாதிருக்குடிக்கு கல்யாணம் சொல்லப்போனேன்
கல்லத்துளைச்சு கடற்கரையில் முட்டையிட்டு
இட்டது மூனு முட்டை பொறிச்சது ரெண்டு குஞ்சு
இளைய குஞ்சுக்கிரை தேடி இரு காதம் போய்விழுந்து
மூத்த குஞ்சுக்கிரை தேடி முக்காதம் போய் விழுந்து
மாயக்குறத்தி மகன் வழிமறிச்சான் கண்ணி கட்டி
காலு ரெண்டும் கண்ணியில இறகு ரெண்டும் பந்தடிக்க
அன்னழுத கண்ணீரு ஆறு பெருகி ஆனை குளிப்பாட்டி
குண்டு பெருகி குதிர குளிப்பாடி
ஏரி பெருகி எருது குளிப்பாட்டி

இஞ்சிக்குப்பாய்ஞ்சு எழுமிச்சைக்கு வேரோடி
நஞ்சைக்கு பாய்ஞ்சு நார்த்தைக்கு வேரோடி
மஞ்சளுக்குப்பாய்ஞ்சு மாதுளைக்கு வேரோடி
இஞ்சிக்குக்கீழே இருக்கிறா லாவாத்தா
மஞ்சளுக்குக் கீழே மறையுறா லாவாத்தா
நஞ்சைக்குக் கீழே நடக்குறா லாவாத்தா
சேங்கை பெருகி செம்பன் விளையாண்டு
வாய்க்கா பெருகி மஞ்சன் விளையாண்டு
பள்லம் பெருகி பாலர் விளையாண்டு
ஐந்நூறு பாப்பசுவ அவுத்து விட்டே நீராடி
தொண்ணூறு பாப்பசுவ தொறந்து விட்டே நீராடி
அஞ்சு விரளி மஞ்ச அரைச்ச உருண்டை சேர்த்து
மூனு விரளி மஞ்ச முணுக்கி உருண்டை சேர்த்து
பூசிக்குளிப்பாளாம் பூப்படர்ந்த பொய்கையில
முழுகிக்குளிப்பாளாம் முத்துக்கரைகளில

அல்லியும் தாமரையும் அழகழகா பூத்திருக்க
வெங்காயத் தாமரையும் விதவிதமா பூத்திருக்க
கொட்டியும் தாமரையும் கொடிக்கொடியாய் பூத்திருக்க
அள்ளி ஒதுக்கி அழகாத் தலை முழுகி
பாசி ஒதுக்கி பாங்காத் தலை முழுகி
நாக்காலி மேலிருந்து நல்ல மயிருணத்தி (கூந்தலைக் காய வைப்பது)
கோக்காலி மேலிருந்து கோரை மயிருணத்தி
முக்காலி மேலிருந்து முத்து மயிருணத்தி
நாக்காலிக்காலொடிஞ்சு நல்ல மயிர் அறுந்ததென்ன?

அறந்தாங்கி நந்தவனம் அரும்பா சொரிந்தாலும்
அருமையுள்ள லாவுக்கு அரும்பெடுப்பார் எத்தனையோ
புதுக்கோட்டை நந்தவனம் பூவா சொரிந்தாலும்
பொறுமையுள்ள லாவுக்கு பூவெடுப்பார் எத்தனையோ
மதுரை நந்தவனம் மலராஸ் சொரிந்தாலும்
மகிழ்ச்சியுள்ள லாவுக்கு மலரெடுப்பார் எத்தனையோ
போதுமாடி லாவாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கி
போதாடி என் செய்வேன் பொலுப்பி முடிக்கலாம்
பத்துமாடி லாவாத்தா பத்தினியார் கொண்டைக்கி
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
காணுமாடி லாவாத்தா கணிசமுள்ள கொண்டைக்கி
காணாட்டி என் செய்வேன் கலந்து முடிக்கலாம்

பாசித்துறைகளிலே பதுங்குறா லாவாத்தா
பவளமல்லிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
முத்துத் துறைகளிலே முகம் பாக்குறா லாவாத்தா
முத்தரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
தண்ணீர்த் துறைகளிலே தவக்கிறா லாவாத்தா
தங்கரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா

வாங்கருவா போல வட்டஞ்சேர்ந்த லாவாத்தா
கருக்கருவா போல கண் தொறந்த லாவாத்தா
வெட்டருவா போல வெளிச்சரிச்ச லாவாத்தா
சித்தருவா போல சிரிக்கிறா லாவாத்தா

ஆலஞ்சருகினிலே அன்னங்க மேய்ஞ்சாப்போல்
ஆராய்ந்தெளிஞ்சுருச்சு வாராளே லாவாத்தா
வாழை இலைகளிலே வனத்துளிய மேய்ஞ்சாபோல்
வாலுருவி அம்பு கொண்டு வாராளே லாவாத்தா
புங்கஞ்சருகினிலே பொய்க்கோழி மேஞ்சாப்போல்
பூரிச்செழுந்திருச்சு வாராளே லாவாத்தா
தென்ன இலைகளிலே சிறுதுளிய மேய்ஞ்சாப்போல்
சிங்காரக் கொட்டோட வாராளே லாவாத்தா
போடுங்கடி பொண்டுகளா பொன்னாதிருக்குலவை

கல்வியின் நிமித்தம் பிரிந்த மகளை நினைத்து

உனக்கான
பிரியத்தைப்பொத்தி வைத்ததில்
அவை
மனக்கிளையில்
மொக்குகளாய் முகிழ்த்திருக்கிறது
மலரும் நாட்களுக்காய் காத்திருக்கிறது
உன் சூரிய முகம் பார்க்க.

எனக்கான உலகம் நீ!
உன் கொலுசின் சத்தமும்
செல்லச்சிணுங்கலும் பிரமையாய் ஒலிக்க
ஓடி,ஓடித்தேடுகிறேன்.
நீ
விட்டுச்சென்ற உன் பழம் துணியும்
வெளுத்துப்போன உன் பிளாஸ்டிக் பூக்களும்
எனக்கான நினைவுச்சின்னங்கள்

தொலைபேசுகையில்
உனக்கான
உலகை நீ உருவாக்க
ஊக்க உரைகளை அள்ளிவிடுகிறேன்.
உறக்கம் தொலைக்கிறேன்
ஏக்கம் மறைத்து
ரகசியமாய் அழுது
என் உலகம் இப்போது கறுப்பு வெள்ளையாய்.

உனக்கு
சிறகுகள் முளைத்ததற்காய் துள்ளும் மனது
நீ
பறக்க,பிரிவிற்கு வருந்தி அழுகிறது.
உன் உயர்வு வேண்டி பிரார்த்தித்த உதடுகள் தாம்
உன் பிரிவை நினைத்தும் துடிக்கிறது.
உன் எச்சிலில் நனைந்த முதல் ஈர முத்தம் முதல்
உன் மழலை மிழற்றல்களை அசை போட்டு
ஏக்கம் மறக்கிறது
தூக்கம் பிடிக்கிறது மனது.

மகளே!
உன் பிரிவுத்துயரில்
பனிக்கும் விழிகளின் ஈரத்தில்
மினுங்குகிறது என் தாயின் பிரிவுத்துயர்.

13.2.10

கனவுகளின் தொடர்ச்சி

சில நாட்கள்
நிலவில் பசியாறி
நீலவானில் நட்சத்திரம் பொறுக்கி
சூரியனின் ரதத்தில் பயணித்து
கதிர்களின் வழி பூமிக்கு வந்த
புனைவுகளில்
மூழ்கும் குழந்தைமையின் மிச்சம்

சில நாட்கள்
அடர் கானகத்தில்
இரவின் இருளில்
மூழ்கிக்கிடக்கும்
பாழடைந்த அரண்மனை மிச்சத்தில்
பயத்தில் ஒளிந்து கிடக்க
புரவிகளின் அரவத்தில் பரவும் ஒளியில்
இருள் விலக,மீட்டுவரும் ராஜகுமாரன்
இது இளமையின் மிச்சம்

உறக்கத்திற்கும்
விழிப்பிற்குமிடையிலான நேரங்களில்
கனவுகளிலிருந்து விடுபடாது
நனவு வெளியில் பிரவேசிக்கும் கணங்களில்
நெற்றி தேய்த்து
மீட்டெடுக்க நினைக்கிறேன்
மீண்டும் அந்தக்கனவுகளை

திருவிழாத்திடலில் காட்டப்படும்
திரைப்படத்தின் அறுந்த படச்சுருளாய்
இணைய மறுக்கிறது கனவுகளின் தொடர்.
இனியேனும் என்னை எழுப்புபவர்கள்
கொஞ்சம் காத்திருங்கள்
கனவுகள் முடியும் வரை.

பிராயச்சித்தம்

பூக்களில் தேனருந்தும்
வண்ணத்துப்பூச்சிகளை
தும்பைச்செடி பறித்து
ஓங்கியடித்து அழுத்திப்பிடித்து
சிறகுகள் திருகி
வெற்றியின் விகசிப்பு முகத்தில் பரவ
அதன் வண்ணங்கள் கைகளில் ஒட்ட
வாலில் நூல் கட்டி
தும்பி பிடித்து
சிறகுகளைப்பிய்த்தெறிந்து
அதன் வாலிலும் நூல்கட்டி
விளையாடிய வயதில்
விளங்கவில்லை அதன் வலிகள்.

கூட்டுப்புழுக்களாய்
கழிந்த காலம் போய்
வளர்சிதை மாற்றங்களில்
வண்ணத்துப்பூச்சியாய்
பரிணமித்த கதை அறிந்த நாள் முதலாய்
வலிகளைச்சிந்தித்து
வருத்தங்கள் மேலிடும் வயதில் வரும்
கனவுகளில் வலம் வருகிறது
சிறகு இழந்து துடித்த சதைக்கோளங்கள்

கொடுத்தது கிடைக்குமென்றால்
நான் வண்ணத்துப்பூச்சியாய்...
நீ
என் சிறகுகள் பிய்க்கும் சிறுபிள்ளையாய்...

6.2.10

முதுமை - ஒரு பருவம்

முதுமை - பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் சந்திக்கவேண்டிய ஒரு பருவம்.பாவத்தின் சம்பளம் மரணமென்றால்,முதுமை சம்பளம் பெற வேண்டியதற்கான ஒரு உழைப்பு,இலக்கையடைய வேண்டியதற்கான ஒரு பயணம்.குழந்தைப்பருவம்,பெற்றொரின் கரங்களிலும்,அவர்களின் வழிகாட்டலிலும்,இளமைப்பருவம் சமூகத்தின் வழிகாட்டலிலும்,நண்பர்களின் தாக்கத்தாலும்,நடுத்தரவயது வாழ்க்கைத்துணையின் ஆளுமையிலும்,குடும்பத்தின் பாரம் சுமப்பதிலும் கழிய,முதுமையில் ஓய்ந்து மீண்டும் யாருடைய கரங்களிலாவது தஞ்சம் அடையவேண்டிய ஒரு கட்டாயம்.நாடி நரம்புகள் தளர்ந்து,தமது கரங்களில் இருந்த அதிகாரத்தையும்,பொறுப்பையும், நமக்கு அடுத்து பதவிக்கு வரும் யாராவது கவர்ந்து கொள்ள குடும்பம் என்ற அரசாங்கத்தில் அரசன்,அரசி- தலைவன்,தலைவி பட்டம் பறிபோக மனதளவில் முதல் வருத்தம்.அரசாண்ட இடத்தில் தமது அதிகாரங்கள் பறிபோக,அவர்களை ஒரு பொருட்டாக மதியாத மக்களும்,வேகமான வாழ்க்கையினாலும்,முதியவர்கள் இன்று நமது சமுதாயத்தில் ஒரு பெரும் சுமையாக மாறி வருவதுடன்,முதியோர் இல்லங்களும் வெகு வேகமாக அதிகமான 
எண்ணிக்கையில் பெருகி வருகின்றன.இது காலத்தின் கட்டாயம்.இரு பாலரும் பணிக்குச்செல்லத் தொடங்கியதுமே,நமது குடும்பங்கள் புதிய பாதையில் நடையிடத் தொடங்கியுள்ளது.பொறுமையற்ற மனங்கள் யாரையும் குறை நிறையோடு ஏற்றுப் பழக இயலாது, சகிப்புத்தன்மையற்று குடும்பங்களுக்குள் யுத்தம் பெருகத் தலைப்பட சுயமரியாதையை இழக்க விரும்பாதவர்கள் வீட்டை விட்டு வெளியேறத்தீமானிக்கின்றனர்.அவர்கள் இளைய தலைமுறையினராக இருந்தாலும் சரி, முதுமையின் பிடியிலிருப்பவர்களாயிருந்தாலும் சரி! இளைய தலைமுறை வெளியில் சென்றால் அது தனிக்குடித்தனம்.முதியோர் சென்றால் "இல்லங்கள்". எப்படியானாலும் ஆதரவற்றவர்களாவது,அனாதையாக்கப்ப்டுவது முதியவர்கள் தான்.அமெரிக்கா அழைத்துச்செல்வதாய்ச்சொல்லி விமான நிலையத்தில் தாயை விட்டுச்சென்ற மகன்,சாலையில் தந்தையை அனாதரவாக விட்டுச்சென்ற மக்களும் பெருகிவரும் காரணம்,இந்த இளமையும்,வசதிகளும் நிரந்தரம் என்று நினைக்கும் குணங்களால்.வாழ்க்கையின் தாத்பரியங்களை விதைத்து வளர்த்தாலும் கூட சமூகத்தின் பாதிப்பால்,சொந்த குணம் மறந்து,எப்படியோ விட்டு விடுதலையாகிவிடும் மனோபாவம் இன்று இளையோரிடம் வளர்வது தான் காரணம்.எது எப்படியோ,கொஞ்சம் முந்தி,பிந்தி என்றாலும் அந்தி எல்லோருக்கும் நிச்சயம்.யார் எதை விதைக்கிறோமோ,அதைத்தான் அறுவடை செய்வோம்.காலம் எப்படி மாறினாலும் அடிப்படை வாழ்க்கை உண்மைகள்,பிரபஞ்சக் கோட்பாடுகள் மாறுவதில்லை.

ஆனால் முதியோரும் மாறிவரும் காலகட்டங்களுக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்வது நலம்.பணிக்காலத்திலேயே தங்களுக்கென ஒரு தொகையை சேமிப்பது முதுமையில் கைகொடுக்கும்.பணமென்பது இன்றைய உலகில் பெரும் பலம்.அது போல் வீடுகளில் நமக்கு கவனிப்பு இல்லையெனில்,மனக்கசப்புகளை வளர்ப்பதைவிட்டு இல்லங்களுக்குச்செல்வது என்வரை சரி.வீட்டுக்குள் மகன்,மருமகள்,பேரக்குழந்தைகள் தங்களுக்கெனத் தனியுலகை சிருஷ்டித்துக் கொண்டு வாழத்தலைப்பட்ட பின்,அவர்களது அன்பிற்கு ஏங்குவதை விட,நமக்கு பேச்சுத்துணைக்குக் கூட யாருமற்ற சூழலில் இருப்பதைவிட,நமக்கான உலகை நாம் சமைத்துக்கொள்வதுதான் சரி.நமக்குப்பிடித்த மாதிரி,நமது கொள்கைகளை யாருடனும் சமரசம் செய்யாது முதுமையில் வாழவேண்டுமெனில்,இல்லங்களோ அல்லது முதியோர் தனியே பணத்திற்கு சேவை செய்வோர் துணையுடன் வாழ்வதிலோ ஒரு தவறுமில்லை.மனிதனைத் தவிர வேறெந்த உயிரும் தமது சந்ததியரை நம்பி இல்லை.மனிதனுக்கு எத்தனை அறிவு வளர்ச்சி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காக அவன் பலவீனமான இறைப்படைப்பே!.ஆகவே,சிறகுகள் முளைத்ததும் பறக்கத் துடிக்கும் இளையோரை,சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள்.அவர்களை சுயமாக வாழ விடுங்கள்.நான் சமீபத்தில் ஒரு இல்லத்திற்குச்சென்றிருந்தேன்.அங்கு முதியோர் அவரவர் வயதிற்கேற்றபடி சின்னச்சின்ன வேலைகள்,பஜனைகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,தமது மலரும் நினைவுகளைப்பகிர்ந்து கொள்ளுதல் என்று சுதந்திரமாக இருக்க,அவர்களுக்கு உணவும் எளிமையாகத் தரப்படுகிறது.அன்பு என்பது விசாலமானது.அதைத்தம் குடும்பத்துக்குள் சிறைப்படுத்தி விடாது எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளும் போது எங்கும் சுபிட்சமாகிறது.காலத்தின் மாறுதல்களை மனதளவில் ஏற்றுக்கொள்பவர்களுக்கும், எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளாது,கால ஓட்டத்திற்கேற்ப ஓடத் தலைப்படுபவர்களுக்கும் வாழ்க்கை என்றுமே சுமையில்லை.சில முதியோர்- தங்கள் கடமை முடிந்த பின்னும் தமது சந்ததியர் கடமைகளைச்சுமந்து கொண்டு வாழ்க்கை முழுதும் சுமைதாங்கிகளாகவே இருப்பார்கள்.அந்த மாதிரியானவர்கள் தான் பெரும் வலிகளை அனுபவிக்க நேர்கிறது.முதுமையிலாவது தனக்காக வாழப்பழகுவோம்.யாருக்கும் சுமையாக இல்லாது நம்மால் முடிந்த உதவிகளைப்பிறர்க்கு செய்தால்,நமக்கென உதவிக்கரங்கள் தானே நீளும்.அடுத்தவர் உதவி தேவைப்படாத ஒருவரை இறைவன் இன்னும் படைக்கவில்லை.முன் கை நீண்டால்தான் முழங்கை நீளூம்.நமது கடமைகளை முடித்துவிட்டால், நமக்கு சந்தோசம் தரும் வாழ்வில் ஈடுபட்டு,புதிய பாதையில் நடையிடப்பழகுவோம்.நமது உடலில் கடைசி பலம் உள்ளவரை நம்மால் காரியமாற்ற இயலும்.ஆன்மீகம்,எழுத்து,சமூகசேவை இப்படிப்பயனுள்ள முறையில் முதுமையைக்கழிப்பது சிறப்பு.

அன்பு என்பது எப்போதும் இறங்கு முகத்தில் தான் இருக்குமாம். குழந்தைகள் மீது நாம் செலுத்தும் அந்த அன்பை,அவர்கள் சேமித்துத் தன் குழந்தைகளுக்குத் தருவார்களாம்.எங்கள் செட்டிநாட்டு கிராமங்களில், இளையோர் அனைவரும் பிழைப்பிற்காக வேற்று ஊர்களில்,நாடுகளில் வாழ,பிரம்மாண்ட வீடுகளில் முதியோர் மட்டுமே.அவர்கள் தங்களுக்குள் பேச்சு,உணவுகளைப்பரிமாறிக்கொள்ளல்,ஊடகம்,அதுகுறித்த விவாதம்,மலரும் நினைவுகள்,கோவில்,பக்தி என்று பொழுது கழிய,திருவிழா,திருமணங்கள் என்றால் வீடு நிறையும் போது,அவர்களின் மனமும் நிறைகிறது.அது கடந்ததும் அடுத்த நிகழ்வுகளுக்கும்,சந்திப்புகளுக்கும் காத்திருக்க...காத்திருப்புகள் தொடர்கிறது.வாழ்க்கை வளமாகத் தேடல் அவசியமாகிறது.தேடல்களைத்தொடர இப்படியான சூழ்நிலைகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.இந்தப்பிரிவுகளை அறிவு ஏற்றுக்கொள்ளுமளவு,மனம் ஏற்க மறுப்பதுதான் முதுமையின் துன்பங்களுக்குக் காரணம்.இளையோர் அவர்களது குடும்பம்,நட்பு,வேலை என்று வாழத்தலைப்படும் போது நாமும் நமது வழியில் போக முயல்வது புத்திசாலித்தனம்.நடப்பை ஏற்று அதற்கேற்ப சரிசெய்து வாழ்வது ஒன்றே சரியானது.வாழ்க்கையின் அத்தனை பருவங்களையும் எப்படிக்கடந்து வந்தோமோ,அப்படி முதுமையைக்கடந்து முக்தியடைவோம்.முதுமையில் உடல் தளரும்.உள்ளம் தளர வேண்டியதன் அவசியமென்ன?.யோசிப்போம்.