கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

17.2.10

பாலையநாட்டு கிராமங்களின் நிலாவாண்டை (நிலா விழா)

விழா எடுப்பதிலும்,மரபுகளை மாறாமல் வழிமொழிவதிலும் தமிழனுக்கு,அதிலும் நம் கிராம மக்களுக்கு இணை யாருமில்லை என்றே தோன்றுகிறது.எங்களது பாலைய நாட்டுகிராமங்கள் (காரைக்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 16 கிராமங்கள்) பதினாறு ஊர்களிலும் அறுவடை முடிந்து,மாசி மாதம் வளர்பிறை நாளில் ஆரம்பித்து பௌர்னமி வரை நிலவை வணங்கிக் கொண்டாடும் பொருட்டு நிலாவாண்டை என்னும் ஒரு கலாச்சார வழிபாட்டு மரபு தொன்று தொட்டு இருந்து வருகிறது.மாசி மாதம் வளர்பிறையில் ஊருக்குப் பொதுவான,மையாமான இடத்தில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து,செங்கற்களும்,செம்மண்ணும் கொண்டு வந்து சதுரமாய் கட்டி,நடுவில் மனை போட்டு,தினமும் இரவு ஊர்மக்கள் ஒன்று கூடி வழிபடுவார்கள்.அப்போது ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருந்து விதவிதமான பலகாரங்கள் கொண்டு வந்து,செங்கல்லால் கட்டப்பட்ட சதுரத்துக்குள் வைப்பார்கள் நிவேதனமாய்.அதோடு வாவரச மரத்தின் இலைகளையும்,பூக்களையும் கொண்டு வந்து வைப்பார்கள்.பிறகு அனைத்துப் பெண்களும்,பெண் குழந்தைகளும் இரு வரிசையாக நின்று நிலவை வாழ்த்துவார்கள்.இதற்கென தனியாக ஒரு நீண்ட பாடல் உள்ளது.அந்தப்பாடலை ஒரு பெண் பாட,மற்றவர்கள் தங்களின் வலது கரத்தில் வாவரச இலையை வைத்துக்கொண்டு நீட்டி மடக்கி,அந்தப்பாடலை திரும்பச்சொல்லி வாழ்த்துவார்கள்.வாழ்த்தி முடிந்ததும்,தீபம் காட்டி,நிவேதனப் பலகாரங்கள் அனைத்தயும் ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி,கலக்கி அதை எல்லோருக்கும் தொன்னையில் (வாழை இலைக் கப்) வைத்துத் தருவார்கள்.இப்படி பௌர்ணமி வரை கொண்டாடி,பௌர்ணமியன்று அங்கு ஊரே ஒன்று கூடி பொங்கல்,மாவிளக்கு வைத்து நிலவை வணங்கிப்படைத்து,வாழ்த்தி,ஊர் கூடி முளைக்கொட்டி (கும்மி கொட்டுதல்),போட்டு வைத்திருக்கும் மனையில் சிறு குழந்தைகள் இருவரை மாப்பிள்ளை,மணப்பெண்ணாக அமரவைத்து அவர்களுக்கு மாலையிட்டு பின்,கட்டிய அந்த செங்கல் சதுரத்தைப்பெயர்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு செங்கல்லை சுமந்து சென்று நீர் நிலைகளில் விட்டு வருவார்கள்.எங்கள் ஊர்களில் அந்த இடம் நிலாவாண்டைப்பொட்டல் என்று அழைக்கப்படுகிறது.எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடினாலும்,ஊர் ஒன்று கூடி கொண்டாடும் இது போன்ற விழாக்கள் தரும் நினைவுகள் நினைத்தாலே சுகம் தான்.அந்தப்பத்துப் பன்னிரண்டு நாட்களும் ஊரின் இர்வு நேரம் கலகலப்பாய் இருக்கும்.இரவு ஏழு மணிக்கே பாய் விரித்துவிடும் சிறார்களுக்கு நள்ளிரவு வரை விழித்திருப்பதே பெரிய சந்தோசம்.எங்கள் ஊரில் இன்று நிலாவாண்டை போடுகிறார்கள்.எங்கள் ஊர் பாலையூர் - கண்டனூர் (நடுவண் அமைச்சர் உயர்திரு ப.சிதம்பரம் அவர்களின் ஊர்)

நிலாவாண்டைப்பாடல்.(நிலவினை வாழ்த்திப்பாடும் பாடல்)

மாசிப்பிறையிலயும் வட்டங்கொண்ட லாவிலயும்
போட்டாப்பொழியுமின்னு பெரியோர்க சம்மதிச்சு
இட்டாப்பெருமையின்னு இளவட்டங்க சம்மதிச்சு
சின்னங்க கூடி சேர்ந்து மணக்கொண்டுவந்து
மட்டங்க கூடி வரிக்கல்லு கொண்டு வந்து
கொத்தனழைச்சு குறிப்பான இடம் பாத்து
தச்சனழைச்சு சரியான இடம் பாத்து
சித்திரமா வீடு கட்டி சிறுமச்சு ஒண்ணு போட்டு
எட்டடிக்குள்ளாக எதவா மனை போட்டு
கூட்டி மொழுகியவர்க்கு கோலங்கள் இட்டார்க்கு
குழந்த வரம் கொடுப்பா கோப்பான லாவாத்தா!
மாவரைச்சுக்கோலமிட்டு,மகிழ்ந்து விளையாண்டவர்க்கு
மஞ்சன் வரம் கொடுப்பா மகிமையுள்ள லாவாத்தா!
போடுங்க பொண்டுகளா,பொன்னாதிருக்குலவை.

லாவாத்தா, லாவாத்த எங்க எங்க நீ போன
கல்லாதிருக்குடிக்கு கல்யாணம் சொல்லப்போனேன்
கல்லத்துளைச்சு கடற்கரையில் முட்டையிட்டு
இட்டது மூனு முட்டை பொறிச்சது ரெண்டு குஞ்சு
இளைய குஞ்சுக்கிரை தேடி இரு காதம் போய்விழுந்து
மூத்த குஞ்சுக்கிரை தேடி முக்காதம் போய் விழுந்து
மாயக்குறத்தி மகன் வழிமறிச்சான் கண்ணி கட்டி
காலு ரெண்டும் கண்ணியில இறகு ரெண்டும் பந்தடிக்க
அன்னழுத கண்ணீரு ஆறு பெருகி ஆனை குளிப்பாட்டி
குண்டு பெருகி குதிர குளிப்பாடி
ஏரி பெருகி எருது குளிப்பாட்டி

இஞ்சிக்குப்பாய்ஞ்சு எழுமிச்சைக்கு வேரோடி
நஞ்சைக்கு பாய்ஞ்சு நார்த்தைக்கு வேரோடி
மஞ்சளுக்குப்பாய்ஞ்சு மாதுளைக்கு வேரோடி
இஞ்சிக்குக்கீழே இருக்கிறா லாவாத்தா
மஞ்சளுக்குக் கீழே மறையுறா லாவாத்தா
நஞ்சைக்குக் கீழே நடக்குறா லாவாத்தா
சேங்கை பெருகி செம்பன் விளையாண்டு
வாய்க்கா பெருகி மஞ்சன் விளையாண்டு
பள்லம் பெருகி பாலர் விளையாண்டு
ஐந்நூறு பாப்பசுவ அவுத்து விட்டே நீராடி
தொண்ணூறு பாப்பசுவ தொறந்து விட்டே நீராடி
அஞ்சு விரளி மஞ்ச அரைச்ச உருண்டை சேர்த்து
மூனு விரளி மஞ்ச முணுக்கி உருண்டை சேர்த்து
பூசிக்குளிப்பாளாம் பூப்படர்ந்த பொய்கையில
முழுகிக்குளிப்பாளாம் முத்துக்கரைகளில

அல்லியும் தாமரையும் அழகழகா பூத்திருக்க
வெங்காயத் தாமரையும் விதவிதமா பூத்திருக்க
கொட்டியும் தாமரையும் கொடிக்கொடியாய் பூத்திருக்க
அள்ளி ஒதுக்கி அழகாத் தலை முழுகி
பாசி ஒதுக்கி பாங்காத் தலை முழுகி
நாக்காலி மேலிருந்து நல்ல மயிருணத்தி (கூந்தலைக் காய வைப்பது)
கோக்காலி மேலிருந்து கோரை மயிருணத்தி
முக்காலி மேலிருந்து முத்து மயிருணத்தி
நாக்காலிக்காலொடிஞ்சு நல்ல மயிர் அறுந்ததென்ன?

அறந்தாங்கி நந்தவனம் அரும்பா சொரிந்தாலும்
அருமையுள்ள லாவுக்கு அரும்பெடுப்பார் எத்தனையோ
புதுக்கோட்டை நந்தவனம் பூவா சொரிந்தாலும்
பொறுமையுள்ள லாவுக்கு பூவெடுப்பார் எத்தனையோ
மதுரை நந்தவனம் மலராஸ் சொரிந்தாலும்
மகிழ்ச்சியுள்ள லாவுக்கு மலரெடுப்பார் எத்தனையோ
போதுமாடி லாவாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கி
போதாடி என் செய்வேன் பொலுப்பி முடிக்கலாம்
பத்துமாடி லாவாத்தா பத்தினியார் கொண்டைக்கி
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
காணுமாடி லாவாத்தா கணிசமுள்ள கொண்டைக்கி
காணாட்டி என் செய்வேன் கலந்து முடிக்கலாம்

பாசித்துறைகளிலே பதுங்குறா லாவாத்தா
பவளமல்லிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
முத்துத் துறைகளிலே முகம் பாக்குறா லாவாத்தா
முத்தரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
தண்ணீர்த் துறைகளிலே தவக்கிறா லாவாத்தா
தங்கரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா

வாங்கருவா போல வட்டஞ்சேர்ந்த லாவாத்தா
கருக்கருவா போல கண் தொறந்த லாவாத்தா
வெட்டருவா போல வெளிச்சரிச்ச லாவாத்தா
சித்தருவா போல சிரிக்கிறா லாவாத்தா

ஆலஞ்சருகினிலே அன்னங்க மேய்ஞ்சாப்போல்
ஆராய்ந்தெளிஞ்சுருச்சு வாராளே லாவாத்தா
வாழை இலைகளிலே வனத்துளிய மேய்ஞ்சாபோல்
வாலுருவி அம்பு கொண்டு வாராளே லாவாத்தா
புங்கஞ்சருகினிலே பொய்க்கோழி மேஞ்சாப்போல்
பூரிச்செழுந்திருச்சு வாராளே லாவாத்தா
தென்ன இலைகளிலே சிறுதுளிய மேய்ஞ்சாப்போல்
சிங்காரக் கொட்டோட வாராளே லாவாத்தா
போடுங்கடி பொண்டுகளா பொன்னாதிருக்குலவை

1 கருத்து: