கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

17.2.10

கல்வியின் நிமித்தம் பிரிந்த மகளை நினைத்து

உனக்கான
பிரியத்தைப்பொத்தி வைத்ததில்
அவை
மனக்கிளையில்
மொக்குகளாய் முகிழ்த்திருக்கிறது
மலரும் நாட்களுக்காய் காத்திருக்கிறது
உன் சூரிய முகம் பார்க்க.

எனக்கான உலகம் நீ!
உன் கொலுசின் சத்தமும்
செல்லச்சிணுங்கலும் பிரமையாய் ஒலிக்க
ஓடி,ஓடித்தேடுகிறேன்.
நீ
விட்டுச்சென்ற உன் பழம் துணியும்
வெளுத்துப்போன உன் பிளாஸ்டிக் பூக்களும்
எனக்கான நினைவுச்சின்னங்கள்

தொலைபேசுகையில்
உனக்கான
உலகை நீ உருவாக்க
ஊக்க உரைகளை அள்ளிவிடுகிறேன்.
உறக்கம் தொலைக்கிறேன்
ஏக்கம் மறைத்து
ரகசியமாய் அழுது
என் உலகம் இப்போது கறுப்பு வெள்ளையாய்.

உனக்கு
சிறகுகள் முளைத்ததற்காய் துள்ளும் மனது
நீ
பறக்க,பிரிவிற்கு வருந்தி அழுகிறது.
உன் உயர்வு வேண்டி பிரார்த்தித்த உதடுகள் தாம்
உன் பிரிவை நினைத்தும் துடிக்கிறது.
உன் எச்சிலில் நனைந்த முதல் ஈர முத்தம் முதல்
உன் மழலை மிழற்றல்களை அசை போட்டு
ஏக்கம் மறக்கிறது
தூக்கம் பிடிக்கிறது மனது.

மகளே!
உன் பிரிவுத்துயரில்
பனிக்கும் விழிகளின் ஈரத்தில்
மினுங்குகிறது என் தாயின் பிரிவுத்துயர்.

4 கருத்துகள்:

  1. ஆத்தா படிச்சிடு தாயி.. நல்ல படியா படிச்சி சீக்கிரம் அம்மாவை போய் பாரும்மா ..:))

    பதிலளிநீக்கு
  2. ஒரு தாயின் பிரிவின் வலி கவிதை எங்கும் கொட்டி கிடக்கிறது...நல்ல கவிதை வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கவிதையைப் படிக்கும் பொழுது அதில் உள்ள வலிகளின் ரேகைகளை எனது அப்பா என்னை திருச்சி கல்லூரி ஒன்றில் முதல் நாள் கொண்டு வந்து விட்டு விட்டு அழுதுகொண்டே வீடு வந்து சேர்ந்தாக கூறுவதுடன் - படிந்து போனதாக கருதுகிறேன். இவ்வளவு கஷ்டமா இருக்குமா?

    பதிலளிநீக்கு