எங்கள் ஊர் பதினாறு பாலைய நாட்டு கிராமங்களிலும் ஊருக்கு வெளியில் வயல், கண்மாய்க்கரை,கண்மாய் இப்படி அமைந்திருக்கும். கண்மாய்க்கரையில் வரிசையாக நிழல் பரப்பும் பெரிய மரங்கள். வயல் வெளியில் வேலை செய்பவர்களும், ஆடு, மாடு மேய்ப்பவர்களும் உணவு உண்ண, மதிய வேளையில் கண்ணயர இந்த கண்மாய்க்கரை உதவும்.வயலுக்கு சற்று முன்னரே அவரவர்க்கு உரிய, சாணி தெளித்து மெழுகிய களத்துமேடுகள், அருகில் குப்பை சேர்த்து வைக்கும் குப்பைக்குழிகள் இருக்கும். வருடம் பூராவும் சேரும் கட்டுத்தரைக் கழிவுகள், இலை, தழைகள் மற்றும் மக்கும் குப்பைகளை அவரவர்க்கான குப்பைக்குழியில் சேர்த்து வருவார்கள். வயல் உழும் போது குப்பையைக் கொட்டி உழுது நாற்று நடுவார்கள்.
எங்கள் ஊரின் ஒவ்வொரு கிராமங்களின் கண்மாய்க்கரையிலும் காவல் தெய்வம் அய்யனாருக்கு கோவில் உண்டு. இந்தக்கோவிலில் அய்யனாரோடு, பரிவார தேவதைகளாய் கருப்பர், காளி, முனி ஐயா, சன்னியாசி ஆகியோரும் இருப்பார்கள். ஊருக்கு ஊர் இருக்கும் கருப்பர், அய்யனார் ஆகியோருக்கு நாமங்களும் வேறுபடும். பதினெட்டாம் படிக்கருப்பர், நொண்டிக்கருப்பர், ஜோடிக்கருப்பர், சின்னக்கருப்பர் இப்படி கருப்பருக்கும், மேற்கே பார்த்த அய்யனார், மெய்ய அய்யனார், பால விளத்த அய்யனார், குறும்ப அய்யனார், நெல்லி அய்யனார் என்று அய்யனாருக்கும், கரும்பூரணிக்காளி, கருவேப்பிலைக்காளி, ஓசை மணிகாளி, பாம்புக்காளி இப்படி காளிக்கும் ஊருக்கு ஊர் ஒரு நாமம் உண்டு.
வருடத்திற்கொரு முறை குதிரை எடுப்பு, கிடாய் வெட்டுதல் நடக்கும். கிடாய் வெட்டுமன்று, எறிசோறு வீசுதல் நடைபெறும். அய்யனார் கோவில் கிடாய் வெட்டினாலும் அய்யனாருக்கு படைப்பதில்லை. கருப்பருக்குத்தான் படைப்பார்கள். இந்த பூசை இரவில் தான் இருக்கும்.வெட்டிய கிடாய் ரத்தத்தை புது மண் சட்டியில் ஊற்றி சோறு சேர்த்து பிசைந்து, மூன்று உருண்டைகளாக்கி பூசாரி கொண்டு வர, சாமியாடி ஊருக்கு வெளியில் உள்ள வயல் வெளியில் நடு வயலில் வந்து வயலில் வட்டமிட்டு அதற்குள் பூசாரியை நிற்க வைத்து, சாமியாடி மட்டும் அந்த சோற்று உருண்டைகளை வான் வெளியில் வீச ஒரு சோறு கூட சிந்தாமல் துஷ்ட தேவதைகள் பெற்றுக்கொள்ளுமாம். இப்படிச்செய்வதால் ஊருக்குள் துஷ்ட தேவதை வராது என்பது நம்பிக்கை. இன்றும் எங்கள் ஊரில் சாப்பிடும் போது வாய்க்குள் சோறை வீசி உண்ணும் குழந்தைகளை எறிசோறா வீசுற? என்று கண்டிப்பார்கள். திட்டும் போது எறி சோறு பொறக்கி என்பதும் உண்டு. இதற்கு பேய் என்று அர்த்தம்.
எங்கள் பாலைய நாடு பதினாறு ஊரில் எங்கள் பாலையூர் கிராமத்திலும் அதற்கு அருகில் உள்ள கரியப்பட்டி கிராமத்திலும் சிலை அள்ளும் திருவிழா என்ற ஒரு திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. இந்தத்திருவிழாவில் அய்யனார் கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஐம்பொன் சிலைகளை, சாமியாடி அருள் வந்து, தன்னோடு ஒருவரை கண்களைக்கட்டி கூட்டிச்சென்று புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தோண்டி எடுத்து அள்ளி வந்து கோவில் வாசலில் பெரிய தென்னை ஓலைக் கொட்டகையில் வாழை மரம் கட்டி அலங்கரித்து இந்த சிலைகளை கொலுவில் வைப்பது போல் அடுக்கி வைத்து, ஏழு நாட்கள் பூசை செய்வார்கள். அந்தச்சிலைகளோடு அருளாடிகளும் அமர்ந்து, வரும் பக்தர்களுக்கு விபூதி வழங்குவார்கள். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் சிலைகளைக்காண வருவார்கள். ஏழு நாள் திருவிழா முடிந்து அதே போல் கண்களைக் கட்டி கூட்டிச்சென்று சாமியாடி புதைத்து விட்டு வருவார். மறுநாள் காலை தோண்டிய இடத்தை தேடினாலும் கண்டு பிடிக்க முடியாத அளவு புல் ஒன்று போல் முளைத்து இருக்குமாம். இந்த ஐம்பொன் சிலைகளில் ஊர் சுத்திப் பிள்ளையார் என்னும் சிறிய கணபதி சிலை ஒன்று உண்டு. தெருவில் கிடைக்குமாம். ஐ! பிள்ளையார் என்று எடுத்துக் கொண்டு போய் மாடத்தில் வைத்தால் அடுத்த நாள் இன்னொருவர் வீட்டு மாடத்தில் இருப்பாராம். இப்படி ஏழு நாளும் ஊர் சுற்றிவிட்டு ஏழாம் நாள் கொலுவிருக்கச்செல்வாராம். 1970 களில் நடந்த இந்தத் திருவிழா இப்போது நடப்பதில்லை. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அருளாடிகளின் இறப்பு இந்தத் திருவிழாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கரியப்பட்டி கிராமத்தில் இந்த சிலைகளை பல மந்திர பூசைகள் செய்து, கவர்ந்து சென்ற குடும்பம் இன்று இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது என்கிறார்கள். ஆக இரு ஊரிலும் இந்தத்திருவிழா நடப்பதில்லை. இப்படி கால ஓட்டத்தில் காணாமல் போன அதிசயத்திருவிழாக்கள் எத்தனையோ?
இப்போதும் வயலுக்கு காவலுக்குச்செல்லும் ஆண்கள் அய்யனார் கோவில் கண்மாய்க்கரையில் படுத்திருப்பதுண்டு. அப்போதெல்லாம் நடு இரவில் பல்லாக்கு பரிவாரங்ககளோடு , விளக்குகள் ஜொலிக்க சாமி ஊர்வலம் போவது போன்று இருக்குமாம். பெரியவர்கள் சொல்லி அனுப்புவார்கள்,"பார்த்து இருங்கப்பா! ஓட்டம் இருக்க பக்கத்துகள்ல, சாமி போற பாதைகள்ல படுக்காதீகப்பா" என்று. அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு வேளை புதைக்கப்பட்ட அந்தத் திருவுருக்கள் தான் இரவில் ஊர்வலம் வருகிறதோ என்று!
இப்போதும் வயலுக்கு காவலுக்குச்செல்லும் ஆண்கள் அய்யனார் கோவில் கண்மாய்க்கரையில் படுத்திருப்பதுண்டு. அப்போதெல்லாம் ///நடு இரவில் பல்லாக்கு பரிவாரங்ககளோடு , விளக்குகள் ஜொலிக்க சாமி ஊர்வலம் போவது போன்று இருக்குமாம். பெரியவர்கள் சொல்லி அனுப்புவார்கள்,"பார்த்து இருங்கப்பா! ஓட்டம் இருக்க பக்கத்துகள்ல, சாமி போற பாதைகள்ல படுக்காதீகப்பா" என்று. அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு வேளை புதைக்கப்பட்ட அந்தத் திருவுருக்கள் தான் இரவில் ஊர்வலம் வருகிறதோ என்று!////
பதிலளிநீக்கு.......நல்லா கிளப்புறீங்க, பீதியை! ஆஆஆ.....
Nalla pakirvu...
பதிலளிநீக்குnalla varnanaiyudan ezhuthi irukkireergal.
ரொம்ப அருமையாக உள்ளது , வாழ்த்த வயதில்லை என்றாலும் வணகுகிறேன் , இதை போல் இன்னும் அதிக பதிவுகளை எதிர்பார்கிறேன் ஒரு சிறிய வருத்தம் என்ன வென்றால் எபபோளுதும் என்னய்யா தொடர்பில் இருக்கும் நான் கூட ஒரு வருடம் சென்றுதான் இந்த் பதிவை பர்கிரியன் இன்னும் இதை படிக்காத என் சகோதரர்களை நினைக்கிரே ....
பதிலளிநீக்கு