இன்று தமது மழலைச்செல்வங்களை தாலாட்டுப்பாடி தூங்க வைக்கும் தாய்மார்கள் இருக்கிறார்களா? தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் கடந்த காலத்தின் மிச்சங்களாய் இருக்கும் பெரியவர்கள் தாலாட்டுப்பாடினால் உண்டு. அவர்கள் பாடிய தாலாட்டின் மிச்சங்களை திரைத்துறை பயன் படுத்திக்கொள்கிறது. அதைக்கேட்டதும் அடடா! என்ன மெலொடி என்று சிலிர்க்கும் நாம் அது நம் தாய் பாடிய தாலாட்டு என்பதை நமது நினைவடுக்கில் தேடி நினைவு கூர்வதற்குள் நேரமாகி விடுகிறது.
நாட்டுப்புறப் பாடல் ஆய்வு செய்பவர்களும், தமிழ்த்துறை ஆசிரியர், மாணவர் பெருமக்களும் தாலாட்டுப்பாடல்களை அறிந்து வைத்திருப்பதோடு, அழகாகப் பாடவும் செய்கிறார்கள்.புதுச்சேரி பாரதி தாசன் அரசுக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தனது தமிழ்த்துறை மாணவர்களுக்கு தாலாட்டு மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை ஓய்வு நேரத்தில் பாடிக்காட்டுவார்களாம். இப்படி சிலரின் முயற்சியால் தான் நமது பழமை பொக்கிஷங்கள் காப்பாற்றப்படுகின்றன.
இன்று அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை இருக்கையில் அமரவைத்து அல்லது படுக்க வைத்து தொலைக்காட்சியையோ அல்லது குறுந்தகட்டில் பாடல்களையோ சுழல விட்டு தமது வேலைகளைத் தொடர்கிறார்கள்.தாலாட்டுப்பாடுவதால் குழந்தைகள் சீக்கிரம் வளரும் என்றொரு கருத்து எங்களின் செட்டிநாட்டு கிராம மக்களிடம் உண்டு.அவர்கள் பாடும் போது அந்தப்பாட்டின் இனிமை, அதில் கூறப்படும் தமது வம்சப்பெருமை, சொற்கட்டு, அன்பு, பாசம் இவையெல்லாம் நம்மை நெகிழ வைத்துவிடும்.இதோ அப்படி ஒரு தாலாட்டு.
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
கரும்போ சிறு தேனோ, கற்கண்டோ சர்க்கரையோ
தேனோ திரவியமோ, தெவிட்டாத தெள்ளமுதோ
மாசி வடுவோ, வைகாசி மாம்பழமோ
கோடைப் பலாச்சுளையோ, குலை சேர்ந்த வாழையோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ, குறையாத என் செல்வமோ
சங்கரா உன் காவல், சாத்தையா உன் அடிமை
வீரப்பா உன் காவல், வேறு வினை வாராமல்
சொக்கலிங்கம் உன் காவல், சொப்பனங்கள் தட்டாமல்
கருப்பையா உன் காவல் என்னையாவுக்குக் கண்ணேறு வாராமல்
கண்ணேறு வந்தால் வெண்ணீறு இடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி (திருஷ்டி) சுத்த, வீரனார் பேரனுக்கே!
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் என்னைய்யாவுக்குச்சுற்றுங்கள் சூரியர்க்கே!
காலை ரயிலேறி கல்கத்தா போயிறங்கி
கடைக்குக்கடை பார்த்துக் கல்லிழைத்த சங்கெடுத்து,
சுற்றிச்சிவப்பு (மாணிக்கம்) இழைத்து, தூரில் ஒரு பச்சை (மரகதம்) வைத்து
வாய்க்கு வைரம் வைத்து வாங்கி வந்து காண்பார்கள்.
கொண்டுவந்து காண்பார்கள் கோலப்பசுங்கிளியை கொம்பனையர் (ஆண் யானைக்கொத்தவர்) ஐயாக்கள்
வாங்கிவந்து காண்பார்கள் வண்ணப்பசுங்கிளிக்கு மயிலனையாள் ஐயாக்கள்.
ஐயாக்கள் செய்களிலே, அவலுக்கொரு நெல்லெடுத்து
பள்ளிகளைக்கூட்டி விட்டு பவன் போல் அவல் இடித்து
பொன் போல் அவல் இடித்து பொரிப்பொரித்து பாகு ஊற்றி
அவல் வாசம் கண்டொடனே என் ஐயா நீ அழுகை அமர்ந்தாயோ!
தின்று ருசி பார்த்தொடனே நீ சிரித்து மகிழ்ந்தாயோ!
பூப்பூத்த கோயிலிலே பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான் மாலைக்கழுதாயோ
அச்சடிக்கப்பொன் விளைய ஆதிச்சார் (கடவுள்) உன் தேசம்
வைத்திருக்கத்தந்த மகன் நீ ஆளுவாய் நூறு குடி
ஆறாரும் அந்தணரும் அப்போ வருங்கிளையும்
தாயாரும் தன் சேனை என் ஐயா தழைக்கவென்று வந்தாயோ!
பெத்தாரும் சேனைகளும் என் ஐயா நீ பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும் மகிரவென்று (நிறைந்து வழிதல்) வந்தாயோ!
செம்பொன் நல்ல தேரேறி சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில் வருவார் மருமகனோ!
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
அன்பின் சாந்தி,
பதிலளிநீக்குஅருமையான தாலாட்டு
மானே ! மரகதமே ! மாமயிலே ! மாதரசே !
தேனே ! திரவியமே ! தீந்தமிழே ! தெள்ளமுதே !
ஆசை தவிர்க்க வந்த ஆணழகே ! சித்திரமே !
ஓசை அளித்து மணி உண்ணுகின்ற ஓவியமே !
என்றெல்லாம் கசிந்துருகி காவியத்தைக் கண் பார்த்து காலங்கள் வளர்வது தானே !
கனி மழலை ஓவியத்தின் சிறப்பு !
அதில் கிடைக்குமல்லவா ஓர் உன்னத உணர்வு !
நல்வாழ்த்துகள் சாந்தி
தாலாட்டை படிக்கும்போதே சொக்குதுங்க. வெட்கத்துடன் சொல்கிறேன்..என் குழந்தைகள் கேட்கும்போது நானும் தாலாட்டு பாடியதில்லை, என்ற பதிலையே அவர்களுக்கு கொடுக்க முடிந்திருக்கிறது.
பதிலளிநீக்குஅருமை.. அருமை! சாந்தி இதெல்லாம் என் தாயார் தாலாட்டியது! நிறைய தாலாட்டுகள் அவர்களுக்குத் தெரியும்.அவர்களிடம் நான் இருந்து கற்றுக்கொண்டது கொஞ்சம்தான்,மீதமெல்லாம் கேட்க இன்று என் தாயார் இல்லையே என தினமும் வருந்துவேன்.
பதிலளிநீக்குஎன் தாயாரே அனுப்பியதுபோல இங்கே அவைகளை தந்திருக்கிறீர்கள்! மனம் நெகிழ்கிறது! தயவு செய்து இதை என்னுடைய ”தாலாட்டு” வலைப்பூவில் (தங்கள் பெயரிலேயே)போட அனுமதி வேண்டும் சாந்தி.பதிலுக்கு காத்திருக்கிறேன்.நன்றி.
மீனா அம்மா! தாங்கள் நன்றாகப்பயன் படுத்திக்கொள்ளுங்கள். தங்கள் தாலாட்டு வலையில் உள்ள தாலாட்டுகளும் என் அம்மாவும்,ஆயாவும் பாடிய போது பதிவு செய்தது உள்ளது.
பதிலளிநீக்குமிக்க நன்றி!