ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
கரும்போ சிறு தேனோ, கற்கண்டோ சர்க்கரையோ
தேனோ திரவியமோ, தெவிட்டாத தெள்ளமுதோ
மாசி வடுவோ, வைகாசி மாம்பழமோ
கோடைப் பலாச்சுளையோ, குலை சேர்ந்த வாழையோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ, குறையாத என் செல்வமோ
சங்கரா உன் காவல், சாத்தையா உன் அடிமை
வீரப்பா உன் காவல், வேறு வினை வாராமல்
சொக்கலிங்கம் உன் காவல், சொப்பனங்கள் தட்டாமல்
கருப்பையா உன் காவல் என்னையாவுக்குக் கண்ணேறு வாராமல்
கண்ணேறு வந்தால் வெண்ணீறு இடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி (திருஷ்டி) சுத்த, வீரனார் பேரனுக்கே!
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் என்னைய்யாவுக்குச்சுற்றுங்கள் சூரியர்க்கே!
காலை ரயிலேறி கல்கத்தா போயிறங்கி
கடைக்குக்கடை பார்த்துக் கல்லிழைத்த சங்கெடுத்து,
சுற்றிச்சிவப்பு (மாணிக்கம்) இழைத்து, தூரில் ஒரு பச்சை (மரகதம்) வைத்து
வாய்க்கு வைரம் வைத்து வாங்கி வந்து காண்பார்கள்.
கொண்டுவந்து காண்பார்கள் கோலப்பசுங்கிளியை கொம்பனையர் (ஆண் யானைக்கொத்தவர்) ஐயாக்கள்
வாங்கிவந்து காண்பார்கள் வண்ணப்பசுங்கிளிக்கு மயிலனையாள் ஐயாக்கள்.
ஐயாக்கள் செய்களிலே, அவலுக்கொரு நெல்லெடுத்து
பள்ளிகளைக்கூட்டி விட்டு பவன் போல் அவல் இடித்து
பொன் போல் அவல் இடித்து பொரிப்பொரித்து பாகு ஊற்றி
அவல் வாசம் கண்டொடனே என் ஐயா நீ அழுகை அமர்ந்தாயோ!
தின்று ருசி பார்த்தொடனே நீ சிரித்து மகிழ்ந்தாயோ!
பூப்பூத்த கோயிலிலே பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான் மாலைக்கழுதாயோ
அச்சடிக்கப்பொன் விளைய ஆதிச்சார் (கடவுள்) உன் தேசம்
வைத்திருக்கத்தந்த மகன் நீ ஆளுவாய் நூறு குடி
ஆறாரும் அந்தணரும் அப்போ வருங்கிளையும்
தாயாரும் தன் சேனை என் ஐயா தழைக்கவென்று வந்தாயோ!
பெத்தாரும் சேனைகளும் என் ஐயா நீ பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும் மகிரவென்று (நிறைந்து வழிதல்) வந்தாயோ!
செம்பொன் நல்ல தேரேறி சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில் வருவார் மருமகனோ!
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ... ஆரிரரோ...
பதிலளிநீக்குஎன் கண்ணே நீ ஆராரோ ஆரிரரோ...
.....
.....
யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு...
மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டால....
என்று என் அம்மா நான் படிக்கும் காலத்தில் எங்க அக்கா குழந்தைகளை தாலாட்டும் போது அந்த கலப்பில்லா ராகமும் அவர்களின் கணீர்க்குரலும் மீண்டும் மீண்டும் கேட்கச்சொல்லும்.
உங்கள் தாலாட்டை படித்ததும் எனக்கு அந்த நாட்கள் ஞாபகச் சேற்றில்...
அருமையான வரிகள்.
அருமையான தாலாட்டு பாடல். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகலக்கல்! அந்த நாளுக்கே அழைத்து செல்கிறது!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் சாந்தி :)
பதிலளிநீக்குதாலாட்டு படிக்க படிக்க சுகமாக இருக்கிறது!
ரொம்ப நாளா எழுதக்காணோம். வேலைப்பளு அதிகமா?
பதிலளிநீக்கு