கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.3.10

கிராமங்கள் ஒளிர்கிறது

பிரம்மாண்டமாய் முன்மொழிந்து
பிதற்றி,பிதற்றி வழிமொழிந்து
ஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்
மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கி
சட்டமும்,சமத்துவமும் பேசும் ஆட்சியாளர்கள்.
எல்லாத்திட்டமும்
எங்களூர் கோவில் பிரதிமைகளின்
உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்...

கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
மொட்டை மரங்களின் நிழல்களில்
சூரிய வெம்மை.
தோல் சுருங்கி
நாவின் ஈரம் காய்ந்து
மடைகளின் குழிகளில்
தண்ணீர் தேடும் கால்நடைகள்.

நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
முப்போகம் விளைத்து
பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.

காணிக்கை விதைப்பு நெல்லில்
நிறைந்து கிடக்கும்
அய்யனார் கோவில் குதிர்களும்
மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
வெறுமையாய்க்கிடக்க,
சம்பிரதாயச்சடங்குகளாய்
தேரோட்டமும்,திருவிழாவும்.

வள்ளிதிருமணமும்,பவளக்கொடியும்
அரிச்சந்திரனும்,அல்லி தர்பாரும்
அரசாண்ட கூத்து மேடைகளில்
முளைப்பாரி மிச்சங்கள்.
தாரிசு வீடுகளும், கேபிள் டிஷ்களும்
சுடிதார்,ஜீன்ஸ்கள் உலரும் கொடிகளும்...
அம்மிகளும்,ஆட்டுரல்களும்
கொல்லையில் குப்பையாய்...
அடுப்படிகள் நிறைந்து கிடக்கிறது நவீனங்களால்...

அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
சந்திரபிம்பங்களாய் முகங்கள்
அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
எல்லாமும் இருக்கிறது!
ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
சதா அழும் மனதை
சமாதானப்படுத்தும் அறிவு!
அட! எங்கள் கிராமங்கள் ஒளிர்கிறது!.

12.3.10

எனக்குப்பிடித்த பத்துப் பெண்கள்


அன்பு நிறை சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் அழைப்புக்கிணங்க இந்த இடுகை ..அழைப்பிற்கு நன்றி!



நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்துநபர்கள்...சரியா..? சரிங்க!

எகிப்தியப்பேரழகி கிளியோபாட் ரா (அழகு,வீரம்,தைரியம்,சாமர்த்தியம்)
மேனாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் (தெளிவு)
விடுதலைப்போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமி பாய் (வீரம்)
பி.சுசீலா அம்மா (இசை)
அன்னை தெரசா (பொறுமை,தியாகம்,சேவை)
பாண்டிச்சேரி அன்னை (தெய்வீகம்)
அன்னை சாரதா (தூய்மை)
கிரண் பேடி (துணிவு)
மேனாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா (தன்னம்பிக்கை)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா(விடா முயற்சி)


நமக்கு உறவா இருக்கக்கூடாது என்ற நிபந்தனையால் இவர்கள் இடம் பெற்றனர்.

10.3.10

ஒப்பாரிப்பாடல்

(ஒரு ஆண் இறந்தால் வைக்கப்படும் ஒப்பாரி)

யாரைச்சரியிடலாம்,யார்யாரை ஒப்பிடலாம்
வெள்ளி சரியிடலாம் விடிமீனை ஒப்பிடலாம்
தங்கம் சரியிடலாம் சர்ச்சிமாரை ஒப்பிடலாம்
பொன்னைச்சரியிடலாம் பிள்ளையாரை ஒப்பிடலாம்
அலைகடலில் பள்ளிகொள்ளும் அச்சுதரை ஒப்பிடலாம்
நிலைகடலில் பள்ளிகொள்ளும் நீலவண்ணரை ஒப்பிடலாம்
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பச்சைவண்ணரை ஒப்பிடலாம்

அக்கம் கதவும் எங்கள் அரண்மனைக்குக் காவல்
பூட்டுங்கதவும் புதுமனைக்குக்காவல்
ஆனைப்பலம் போச்சே அதிகாரச்சொல் போச்சே
குதிரைப்பலம் போச்சே கூசாத சொல் போச்சே
ஆனையான் வந்தாலும் அஞ்சுவான் வாய் திறக்க
ஆனைவிட்டுக்கீழிறங்கி ஐயா சரணமென்பார்
குதிரையான் வந்தாலும் கூசுவான் வாய் திறக்க
குதிரை விட்டுக்கீழிறங்கி ஐயா கோடி சரண்மென்பார்
வீரர் சமத்து வெல்ல முடியாது
கர்ணர் சமத்து காண முடியாது

கடையாம்,கடைத்தெருவாம் காணவருவோமின்னா
கைலாசப் பூநாடு காணவர ஏலாது
தேராம்,திருவிழாவாம் தேடிவருவோமின்னா
சிவலோகப் பூநாடு தேடி வர ஏலாது
கப்பல் விட்டுக்கீழிறங்கி கடைக் கணக்கப் பாக்கலையே
தோணிவிட்டுக் கீழிறங்கி தொலைக்கணக்கப் பாக்கலையே
பூமி வந்து சேரையில பெரிய கிடை வந்ததே
வளவு வந்து சேரையில மிகுந்த கிடை வந்ததே

மகுந்த கிடை பாக்க மச்சமில்லா நேரமின்னு
மனசோ திகைச்சழுதா வாங்க வந்தான் கேக்கலையே
வார்த்த சொல்லப்போகலையே
பெரிய கிடை பாக்க பொன்னில்லா நேரமின்னு
புத்தி திகைச்சழுதா புடிக்க வந்தான் கேக்கலையே
கொடுக்கா முறையின்னு கூவினால் கூற்றுவனும் போகலையே
தேற வழியுமில்ல,தேற்றுவார் யாருமில்ல.

(ஒரு பெண் இறந்தால் வைக்கப்படும் ஒப்பாரி)

எக்கோடி சேனை தளம் இறந்த இடம் கண்டாயா!
மட்டற்ற கோடி சனம் மடிந்த இடம் கண்டாயா!
சேர மடிந்த தீ வெளிச்சம் கண்டாயா!
ஐவர் மடிந்த அனல் வெளிச்சம் கண்டாயா!
மக்களை அழுவைத்து,மன்னரையும் சோம்ப வைத்து
வாவரசி ஆனாயோ,வளவு வரக் காண்போமோ!
புள்ளைய அழுகவைத்து,பெருமாளச்சோம்ப வைத்து
பேரழகி ஆனாயோ,பொழுது வரக் காண்போமோ!

கஞ்சிக்கு மஞ்சன் களைக்க வைத்துப்போனாயா
சோத்துக்கு மஞ்சன் சோம்ப விட்டுப்போனாயா
அமுதுக்கு மஞ்சன் அழுக வைத்துப்போனாயா
பாலுக்கு மஞ்சன் பறக்க வைத்துப்போனாயா
காடு மண மணங்க கண்டாங்கி தீப்பறக்க
மஞ்ச,மணமணங்க மங்கிலியந்தீப்பறக்க

மையோட பொட்டோட கயிலாயம் போன செல்வி
பொட்டோட பூவோட பரலோகம் போன செல்வி
வைகையில நீர் மோந்து வாசலிலே நீராடி
மரவையில பொன் கழட்டி மட்ட மன்னர் கை கொடுத்து
மலரோட தீக்கலக்க மாதவத்தைச்செய்தாயோ
பொய்கையில நீர் மோந்து பூமியில நீராடி
பொட்டியில பொன் கழட்டி பிஞ்சு மன்னர் கைகொடுக்க
பூவோடு தீக்கலக்க புண்ணியத்தச்செய்தாயோ

மச்சம் வெட்டி மாத்துரைக்கும் மந்திரிக்கி வாழ்ந்திருந்தாள்
தங்கம் வெட்டி தரமுரைக்கும் சமர்த்தருக்கு வாழ்ந்திருந்தாள்
சானகியும் ராமருமா நெடுங்காலம் வாழ்ந்திருந்தாள்
பார்வதியும்,பரமனுமா பலகாலம் வாழ்ந்திருந்தாள்
பெருமாளும் தேவியுமா பிரியாமல் வாழ்ந்திருந்தாள்
கூடாத நேரம் வந்து கூட்டி போன துயரமென்ன?
போதாத நேரம் வந்து பிரிச்சு போன துயரமென்ன?

9.3.10

ஒப்பாரி

மரணம் பூமியில் பிறந்த அத்தனை உயிருக்கும் உண்டு.ஏன் பூமிக்கே கூட உண்டு.என்றாலும் அறிவிற்குத் தெரிந்த இந்த உண்மையை மனம் ஏற்றுக்கொள்ளாது.சிலரின் மரணம் சிலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறது.அதிலும் அகால மரணங்கள் தருகிற வலி,அந்த இழப்பு சொல்லில் வடிக்கக்கூடியதன்று. எங்கள் ஊர்களில் இறந்தவர்களின் வீடுகளில்,இறந்தவரின் உறவுகளைக் கட்டியழும் சம்பிரதாயம் உண்டு.இறந்தவர்கள் மிகவும் வயதானவர்களாக இருந்தாலும்,எப்பப்போவார் இடமொழியும் என்ற நிலையில் இருந்து விடைபெற்றுப்போனவராக இருந்தாலும் கூட கட்டியழும் சம்பிரதாயம் உண்டு.முறைப்பாடு,சண்டை என்று இருப்பவர்கள் இறப்புக்கு வருவார்கள்.ஆனால் கட்டியழ மாட்டார்கள்.சம்பந்தப்பட்டவர்கள் இதை ஒரு குறையாகச்சொல்லி வருந்துவதும் உண்டு.இப்போதெல்லாம் ஒப்பாரிப்பாடல்கள் அருகிவருவதோடு இளையோர் கட்டியழ சங்கடப்பட்டு,ஏதோ சம்பிரதாயத்திற்கு தொட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதுண்டு.முன் நாட்களில் இறந்தவரின் உறவுகள் பேருந்து நிலையத்திலிருந்து ஒப்பாரியுடன் அழுதபடி வருவார்கள்.

திருமணம் ஆகும் வரை அம்மாவின் அப்பா,அப்பாவின் அப்பா,அத்தையின் கணவர் இறந்த அந்த மூன்று இறப்பு வீடுகளின் அனுபவம் மட்டுமே.திருமணம் ஆகிவிட்டால் ஒரே நாளில் பெரியோராகிவிடும் நம் சமுதாய சம்பிரதாயத்தில் திருமணமாகி முப்பதாம் நாளுக்குள் என் கணவரின் மூத்த பெரியப்பாக்கள் இருவர் அடுத்தடுத்த நாளில் இறந்து விட,நான் யாரையும் கட்டியழாது இருக்க பெரிய குற்றச்சாட்டு,விசாரணைகள்.எனக்கு ஒரே வியப்பு.காரணம் அவர்கள் இருவரும் 90 வயதிற்கு மேற்பட்டு,போனால் போதும் என்று இருந்தவர்கள்.சோறு ஊட்டிவிட்டு,நீராட்டி,துணி மாற்றி,மல,ஜலமெடுத்து அத்தனையும் செய்ய வேண்டி இருந்ததால் "நீ பாரு,நா பாரு,நா ஒரு மாசம் பாத்தேன்,நீ எத்தன நா பாத்தே!" இப்படியான சர்ச்சைகள் மகள்கள்,மருமக்களிடையே! ஜீவன் போனதும் அவர்கள் அழுத அழுகையிலும்,வைத்த ஒப்பாரியிலும்,"ஆத்தா! அவுகள யாராச்சும் அமத்துங்க! (அமத்துங்க என்றால் தீவிரமாக,வெகுநேரமாக ஒப்பாரியுடன் அழும் உறவுகளின் தாவாங்கொட்டை(chin)யைப்பிடித்து விடுங்க,விடுங்க என்று தேற்றுவது,இதுவும் ஒரு முறையாம்)" என்ற சப்தங்களும் எனது சப்த நாடியையும் ஒடுக்க நான் எங்கே கட்டியழ!

அதன் பிறகு ஒரு நாத்தனாரின் மாமனார் இறந்துவிட துக்கம் விசாரிக்கப் போனபோது அவரின் உடலருகே அந்த மூதாட்டி அழுது கொண்டிருக்கிறார்.கட்டியழப் போய் உட்கார்ந்ததும் அவரின் ஒப்பாரி,"ஐயா நா வாழ்ந்த ராசா! நீங்க நண்டு புடுச்சாருவீகளே! அப்புடி வப்ப,வப்பையா! இன்னி யாரு புடிச்சாருவா? நீங்க தோட்டத்துல பறங்கி வெதச்சி பறிச்சாருவீகளே,அப்புடி தொப்ப,தொப்பையா! இன்னி யாரு பறிச்சாருவா?கம்மாயழிச்சு கனக்கெண்டை புடிச்சாருவீகளே! அப்புடி புள்ள,புள்ளையா! இன்னி யாருய்யா! புடிச்சாருவாக? நா வாழ்ந்த ராசா!" இப்படியாக இன்னும் நீள நான் வாயில் சேலையை வைத்து அடைத்தாலும் சிரிப்பு சப்தம் வெளியில் வந்துவிட என் அம்மா ,"எந்திரிடீ,அடி,எந்திரிச்சு அங்கிட்டுப்போ" என்று அதட்ட,"ஐயோ! மாட்டிக்கிட்டோமா?" என்று நிமிர்ந்தால் என் அம்மா,மற்றும் என் உறவினர் கண்கள் சிரிக்க,சிரிப்பு சப்தம் வெளியில் வராமலிருக்க முந்தானையை வாயில் வைத்து இருகப் பொத்தி அமர்ந்திருந்தார்கள்.இப்படி சில நேரங்களில் மரணங்களில் வைக்கப்படும் ஒப்பாரி கூட நகைச்சுவையாகிவிடும் போலும்.இப்படி அடுத்தவரின் மரணங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத அந்த நாட்களில் என்னை பாதித்த,இன்றும் எங்களை உருக்கும் திடீர் மரணம் என் தந்தையின் மரணம்.அப்போது என் தாயின் தாய் வைத்த ஒப்பாரி,இன்னும் என் ஞாபக அடுக்கில் சுழல்கிறது.

மண்ணில் பொறந்தவுக மாளுறது நிச்சயந்தான்
என் மஞ்சன் மக சானகையா மையழிய சம்மதமா?
பூமிப்பொறந்தவுக போகுறது நிச்சயந்தான்
என் பொன்னான சின்ன மக பொட்டழிய சம்மதமா?

தங்கத்த உருக்கி தரையில் வார்த்து தரித்தரராப் போனோமே!
வெள்ளிய உருக்கி வீதியில வார்த்து நாங்க வீணராப்போனோமே!
மஞ்சனப்பொட்டி நா மாளுமட்டும் வேணுமின்னேன்.
சந்தனப்பொட்டி நா சாகுமட்டும் வேணுமின்னேன்.

கும்பிட்ட தெய்வமெல்லாம் கூட்டிக்கொடுத்திருச்சே!
கையெடுத்த தெய்வமெல்லாம் காட்டிக்கொடுத்திருச்சே!
சம்மதமா,சம்மதமா,சாமிக்கெல்லாம் சம்மதமா!
அசராமக் கும்பிட்ட அம்மனுக்கும் சம்மதமா!

என் சின்ன மக கொஞ்சுடுத்த சீரான கண்டாங்கி
என் கட்டி மக கொஞ்சுடுத்த காஞ்சிபுரக் கண்டாங்கி
வீட்டுக்குடுத்த விதவிதமா கண்டாங்கி
வெளிய உடுத்த விலை உசந்த கண்டாங்கி

நித்தியமும் சத்தியமா நிறைவாக வாழ்ந்த மகன்
வரன் பொரும் சத்தியமும் வழியாக பிழைச்ச மகன்
இன்னொருவர் சொத்துக்கு இச்சையும் வச்சதில்ல!
மற்றொருவர் சொத்துக்கு மனசும் வச்சதில்ல!

காணுவமா,காணுவமா இன்னிக்கண்ணாரக் காணுவமா!
அணைய சனத்தோட அருக வரக்காணுவமா!
மக்க,சனத்தோட மன்றம் வரக்காணுவமா!
ராஜாக்களோடு நடுவிருக்கக்காணுவமா!

போதும்.இதற்கு மேல் எழுத முடியாமல் கண்ணீர் திரையிடுகிறது.துக்கம் விசாரிக்க வந்த அத்தனை ஆட்களும் இந்த ஒப்பாரிகளைக்கேட்டு குலுங்கிக்குலுங்கி அழுதனர்.ஒரு படிக்காத பெண்ணிற்கு இப்படிப்பாடும் திறமை எப்படி வந்தது என்பது பெரும் வியப்பு.ஒவ்வொரு நாளும் துக்கம் கேட்டு வரும் ஒவ்வொருவரிடமும் ஒரு நாள் பாடிய ஒப்பாரியை என் ஆயா பாடமாட்டார்.இன்றும் எந்த இறந்த வீடு போனாலும் இந்த ஒப்பாரிகள் நினைவில் வந்து, அழுகை வந்துவிடும்.என் தந்தை இறந்து 19 வருடங்கள் ஆகிறது.இருந்தாலும் அந்த இறப்பின் வலி இன்னும் அப்படியே தான் இருக்கிறது.அதனால் என் தாய் வைத்த ஒப்பாரியை எழுத இன்னும் கொஞ்ச நாள் போகவேண்டும்.

6.3.10

விகடனின் "சக்தி,2010",சர்வ தேச மகளீர் தின ஸ்பெஷலில் வெளிவந்த கட்டுரை. வெளியிட்டுச்சிறப்பித்த விகடனுக்கு நன்றி!


எது அர்ப்பணிப்பு? : அனுபவம்
- கே.என். சாந்தி லக்ஷமணன்
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! என்றான் மகாக்கவி. ஒரு பெண்ணின் உழைப்பால்,தியாகத்தால்,பொறுப்புணர்வால்,சிறந்த அறிவால் சிறக்கிறது அவளின் குடும்பம்,பரம்பரை,சமூகம்.இதை வழி வழியாகக்கண்டும்,அனுபவித்தும் வந்திருக்கிறது நம்நாடு. சிந்தனை,எண்ணங்கள்,அறிவுவளர்ச்சி,பெண் சுதந்திரம்,சுயம் உணர்த்தும் - இருப்பை உணர்த்தும் ஆங்காரமற்ற,கேள்விகள் அற்ற,குடும்பம் ஒன்றையே தன் அடையாளமாக,கணவரைத் தன் உயிராக,குழந்தைகளைத் தன் அங்கமாக,அதுவே தனது நிலைப்பாடாக,பெருமையாக,தன்னைத் தனியே அடையாளமாக்கிக்கொள்ள விழையாத, பாரம்பர்ய பண்பாடாகக் கொள்ளும் பெண்களால்,தியாகத்தின் பிம்பங்களால் ஒளிர்கிறது நமது குடும்பங்கள்.அறியாமையால் கிடந்தவர்களென பெண்ணுரிமை வாதிகள் இவர்களை விமர்சித்தாலும் பொறுப்புகளை ஏற்று,கடமைகளைச்செய்து, அளவுகடந்த குடும்பப்பற்றுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தெய்வத்தாய்களுக்கு நாம் பெரிதாக என்ன கைம்மாறு செய்துவிடமுடியும்.ஒவ்வொருவருக்கும் தாய் என்பவள் உறவுகளில் முதல்வி. அவளை எண்ணிய மாத்திரத்தில் மனக்கண் கசியும். இதயத்தில் ஈரம் சுரந்து,கர்வம் வடியும்.அப்படி ஒரு ஈரம் கசிய வைக்கும் பெண் என் தாய்.

போராட்டங்களே வாழ்க்கையாய்க்கொண்ட என் தாய் போர்களைக்கண்டு அஞ்சியதுமில்லை.தன்னை நொந்துகொண்டதுமில்லை.அலுப்பு,சலிப்பு எதுவும் இருந்ததில்லை.என்ன அனுபவித்தோம் என்று கடந்த கசப்புகளை நினையாது,இனிப்புகளை மட்டுமே பரிமாறத்தெரிந்த பெண்.தன் வீட்டுப்பெண்களை மறந்து விட்டு கற்புக்கரசிகளின் பட்டியல் போடும் பண்டிதர்கள் நிறைந்த நம் நாட்டில் சர்வதேச மகளீர் தினத்தில் என் தாயைப்பற்றி எழுதுவதில் பெருமை எனக்கு.அதிகம் படிக்காத,ஆனால் வாழ்க்கையைப் படித்த அனுபவசாலி.ஐந்து பெண்குழந்தைகள்,ஒரு ஆணைப்பெற்றும் சற்றும் தாழ்வு மனப்பான்மையோ, குறுகிய எண்ணங்களோ அற்று எங்களுக்கு வாழ்க்கையில் போராடி வெல்லும் வாழ்க்கையே சிறப்பு என்று கற்றுக்கொடுத்தவர்.கல்வியோடு,வீட்டு வேலை,கைவேலை,எந்த வேலையையும் பார்த்து மலைக்காது,'செஞ்சுட்டாப்போச்சு' என்ற மனப்பான்மை என்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்து இன்று கழனி வேலையானாலும்,கணிப்பொறி வேலையானாலும் நாங்கள் பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல,அதில் முத்திரை பதிக்கும் அளவு எங்களை வளர்த்து விட்டதும் எங்கள் தாய்.செட்டிநாட்டுப்பகுதியில் பெண்குழந்தைகளுக்கு அதிகமான சீர் வரிசை செய்வது வழக்கம்.பால் விற்ற காசு,மற்ற உபரி வருமானங்களால் வரும் வரவுகளை பாத்திரச்சீட்டுக்கட்டுவது,சில்லறைகளை உண்டியலில் சேர்த்து,நிறைந்ததும் உண்டியலை அதிக சேதமில்லாது உடைத்து (பிறகு ஃபெவிக்கால் வைத்து ஒட்டி பின் அதில் மறுபடி சேமிப்பது) அந்தப்பணத்தில் பாத்திரங்கள் வாங்கி சேர்ப்பது என்று எங்கள் அம்மா மிகவும் சமர்த்து.சினிமா முதல் பூ வாங்குவது வரை திட்டம் போட்டுத்தான் செய்வார்கள்.தங்க நகைகளை வெளியில் செல்லும் போது அணிந்து சென்று வீடு வந்ததும் கழட்டி வைத்து,இன்று வரை மெருகு மாறாது வைத்திருக்கும் அவர்களின் கட்டுப்பாடு,ஆசைகளை சீரமைத்து, போதுமென்ற மனதோடு நிறைவாய் வாழவும்,பழிகளுக்கு அஞ்சி கௌரவம் பேணவும்,சிக்கனம்,சோம்பலற்று இல்லம் பேணவும் கற்றுக்கொடுத்து,யதார்த்தங்களை ஏற்று அதற்குத்தகுந்தார் போல் வாழச்சொல்லிக்கொடுத்து,விரும்பியது கிடைக்காவிட்டால்,கிடைத்ததை விரும்பி வாழவும்,புகுந்தவீடு போற்ற எங்களை வாழ்விப்பதும் எங்கள் தாய் என்ற ஆலமரம்தான்.

ஒருமுறை எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.அவரைப்பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தாராம்.அவருக்கு மூன்று பெண்குழந்தைகளாம்.இரு பெண்களை நல்லமுறையில் திருமணம் செய்வித்து மூன்றாவது பெண்ணுக்கும் வரன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும்,போதியளவு சேமிப்பு இருப்பதாகவும் சொன்னாராம்.உடனே எழுத்துச்சித்தர் அவர்கள் எழுந்து அவரை வணங்கினாராம்.ஒரு மனிதனுக்கு இதைவிட என்ன வேண்டும்.இரு பெண்களைக்கரை சேர்த்து மூன்றாவது பெண்ணுக்கு வழி தேடிக்கொண்டிருக்கும் இவர் தான் வணங்கப்பட வேண்டியவர் என்று முடித்திருந்தார்.அப்படியானால் இரு பெண்களுக்கு மணம் செய்வித்து என் தந்தை இறந்ததும்,என் தந்தை விட்டுச்சென்ற சொத்தை அழிக்காது வளர்த்து,மற்ற மூன்று பெண்களைப்படிக்கவைத்து,திருமணம் முடித்து,மகனைப்படிக்கவைத்து,மணமுடித்து,இன்றும் உறுதுணையாக இருக்கும் எங்கள் தாய் என்றும் எங்கள் வணக்கத்திற்கும்,வாழ்த்துக்களுக்கும் உரியவர்.ஒளிரும் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பின்னும், உருகும் மெழுவர்த்தியாய் ஒரு பெண் இருக்கிறாள்.பெண் என்னும் பிறவியின் தியாகங்களால் நிரப்பப்பட்டது நம் புண்ணிய பூமி."அவளின் தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் தேவையில்லை.அவள் அவளுக்காக வாழவேண்டும்" என்று பெண்ணீயவாதிகள் போர்க்கொடி தூக்கினாலும் குடும்பம் என்ற கோவில் உருவாக அவளின் அர்ப்பணிப்புகள் தேவையாயிருக்கிறது.நம் சமூகத்தில் பெண் என்பவளின் பரிமாணங்கள் பன்முகம் கொண்டது.குடும்பங்கள் என்னும் கோவிலில் ஒளி தீபமேற்றும் பெண்கள் வாழ்க! வளர்க!

3.3.10

கிராமத்து மணம்

எங்கள் கிராமங்களில் அவல், பனங்கிழங்கு, நவாப்பழம் (நாவல் பழம்) நெல்லிக்காய்,மா வத்தல்,புளியங்காய்,ஈச்சங்காய் - பழம்,கொட்டிக்கிழங்கு,பாலப்பழம்,வீரப்பழம் இவையெல்லாம் எங்கள் பால்ய பருவத்தின் ஈர்ப்புகள்.

ஆடி மாதம் நாற்றுப்பாவுவதற்கு விதை நெல் கொண்டு போய்,நாற்றங்காலில் பாவியது போக மீந்த மீத நெல்லில் அவல் இடிப்பார்கள்.நெல்லை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து,மறுநாள் காலை தண்ணீரை வடித்து,ஒரு சணல் சாக்கில் கொட்டி இறுகக் கட்டி,அந்த மூட்டையின் மீது ஒரு பாரத்தை வைத்து ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள்.மூன்று நாள் கழித்துப்பார்த்தால் அந்த நெல் முளை விட்டு வந்திருக்கும்.முளைவிட்ட நெல்லை நன்றாகக் கொதிக்கும் நீரில் கொட்டி,தட்டுப்போட்டு மூடி ஒரு இரவு வைத்து மறுநாள் காலை வடி கூடையில் கொட்டி,தண்ணீர் வடிந்ததும்,பழைய மண்சட்டியில் சிறிது,சிறிதாகப் போட்டு படபடவென,பொரியும் வரை,வறுத்து நேரடியாக உரலில் கொட்டி,தாமதிக்காமல் உலக்கையால் இடிப்பார்கள்.நன்றாக வறுபட்டு விட்டால் அது அவலாக மாறாது.நெற் பொரியாகிவிடும்.வறுபடாவிட்டாலும் அவல் சரியான பக்குவமாக இராது.வறுத்தது ஆறிவிட்டாலும்,உரலில் இடிக்கும் போது நுணுங்கிவிடும்.சரியான பக்குவத்தில் வறுத்து,அடுப்புக்கு அருகிலேயே உரல் வைத்து இடித்து,சொளகிலிட்டு (முறம்) புடைத்து உமி நீக்கி அவலைத் தனியாகப் பிரிப்பார்கள்.இப்படித் தயாரிக்கப்படும் அவல் உடலுக்கு சத்து.ருசியும் கூட.குறுவை நெல்லில் தயாரிக்கப்படும் அவல் சிவப்பு நிறமாக இருக்கும்.

பனம்பழம் கிடைக்கும் காலத்தில் பனம்பழம் சாப்பிட்டு கொட்டைகளை தூர எறியாமல்,மண்,மாட்டுச்சாணம் காய்ந்து உதிர்த்தது கலந்து பாத்திபோல் செய்து அதில் பனங்கொட்டைகளைப்பதித்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைத்தெளித்து விடுவார்கள்.சித்திரை,வைகாசியில் பதிக்கப்படும் பனங்கொட்டைகள் மார்கழி மாதவாக்கில் கிழங்கு இறங்கியிருக்கும்.பாத்திகளை பொறுமையாகத் தோண்டி எடுத்து கிழங்குகளைப்பிரித்து எடுப்பார்கள்.

நாவல்பழம் பறிக்கப்போய் வந்தால் என்ன காரணமோ காய்ச்சல் வந்துவிடும்.நவ மரத்தில் பேய் இருக்கும் அதான்! என்று பயமுறுத்துவார்கள்.பாலப்பழம் சாப்பிட்டால் சூயிங்கம் போன்று இருக்கும்.நுங்கு,பதனீர்,சீம்பால்,கண்மாய் அழித்து கடைசியாய்ப் பிடித்து வரப்படும் கெண்டைக்குஞ்சு,கெழுத்தி மீன்,கண்மாய் விராமீன்,உரம் போடாமல் பயிரிடப்படும் சோளக்கருது (கதிர்),கீரைத்தண்டு,தோட்டத்துக்கத்திரிக்காய் இப்படி கிராமத்து ஸ்பெஷல் ஐட்டங்கள் ம்.ம்.. இப்போது நினைத்தாலும் மனமும்,நாவும் இனிக்கிறது.ஆனால் இவையெல்லாம் இப்போதும் கிடைக்கிறது.ருசிதான் மாறிவிட்டது.இதற்குக்காரணம்,மண்ணின் மணம் மாறிவிட்டதா?,காலம் மாறியதன் விளைவா? நமக்கு வயதானதன் காரணமா? எதுவாக இருந்தாலும் அந்தக்காலம் மீண்டு வருமா? ஏக்கத்துடன்...