மரணம் பூமியில் பிறந்த அத்தனை உயிருக்கும் உண்டு.ஏன் பூமிக்கே கூட உண்டு.என்றாலும் அறிவிற்குத் தெரிந்த இந்த உண்மையை மனம் ஏற்றுக்கொள்ளாது.சிலரின் மரணம் சிலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறது.அதிலும் அகால மரணங்கள் தருகிற வலி,அந்த இழப்பு சொல்லில் வடிக்கக்கூடியதன்று. எங்கள் ஊர்களில் இறந்தவர்களின் வீடுகளில்,இறந்தவரின் உறவுகளைக் கட்டியழும் சம்பிரதாயம் உண்டு.இறந்தவர்கள் மிகவும் வயதானவர்களாக இருந்தாலும்,எப்பப்போவார் இடமொழியும் என்ற நிலையில் இருந்து விடைபெற்றுப்போனவராக இருந்தாலும் கூட கட்டியழும் சம்பிரதாயம் உண்டு.முறைப்பாடு,சண்டை என்று இருப்பவர்கள் இறப்புக்கு வருவார்கள்.ஆனால் கட்டியழ மாட்டார்கள்.சம்பந்தப்பட்டவர்கள் இதை ஒரு குறையாகச்சொல்லி வருந்துவதும் உண்டு.இப்போதெல்லாம் ஒப்பாரிப்பாடல்கள் அருகிவருவதோடு இளையோர் கட்டியழ சங்கடப்பட்டு,ஏதோ சம்பிரதாயத்திற்கு தொட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதுண்டு.முன் நாட்களில் இறந்தவரின் உறவுகள் பேருந்து நிலையத்திலிருந்து ஒப்பாரியுடன் அழுதபடி வருவார்கள்.
திருமணம் ஆகும் வரை அம்மாவின் அப்பா,அப்பாவின் அப்பா,அத்தையின் கணவர் இறந்த அந்த மூன்று இறப்பு வீடுகளின் அனுபவம் மட்டுமே.திருமணம் ஆகிவிட்டால் ஒரே நாளில் பெரியோராகிவிடும் நம் சமுதாய சம்பிரதாயத்தில் திருமணமாகி முப்பதாம் நாளுக்குள் என் கணவரின் மூத்த பெரியப்பாக்கள் இருவர் அடுத்தடுத்த நாளில் இறந்து விட,நான் யாரையும் கட்டியழாது இருக்க பெரிய குற்றச்சாட்டு,விசாரணைகள்.எனக்கு ஒரே வியப்பு.காரணம் அவர்கள் இருவரும் 90 வயதிற்கு மேற்பட்டு,போனால் போதும் என்று இருந்தவர்கள்.சோறு ஊட்டிவிட்டு,நீராட்டி,துணி மாற்றி,மல,ஜலமெடுத்து அத்தனையும் செய்ய வேண்டி இருந்ததால் "நீ பாரு,நா பாரு,நா ஒரு மாசம் பாத்தேன்,நீ எத்தன நா பாத்தே!" இப்படியான சர்ச்சைகள் மகள்கள்,மருமக்களிடையே! ஜீவன் போனதும் அவர்கள் அழுத அழுகையிலும்,வைத்த ஒப்பாரியிலும்,"ஆத்தா! அவுகள யாராச்சும் அமத்துங்க! (அமத்துங்க என்றால் தீவிரமாக,வெகுநேரமாக ஒப்பாரியுடன் அழும் உறவுகளின் தாவாங்கொட்டை(chin)யைப்பிடித்து விடுங்க,விடுங்க என்று தேற்றுவது,இதுவும் ஒரு முறையாம்)" என்ற சப்தங்களும் எனது சப்த நாடியையும் ஒடுக்க நான் எங்கே கட்டியழ!
அதன் பிறகு ஒரு நாத்தனாரின் மாமனார் இறந்துவிட துக்கம் விசாரிக்கப் போனபோது அவரின் உடலருகே அந்த மூதாட்டி அழுது கொண்டிருக்கிறார்.கட்டியழப் போய் உட்கார்ந்ததும் அவரின் ஒப்பாரி,"ஐயா நா வாழ்ந்த ராசா! நீங்க நண்டு புடுச்சாருவீகளே! அப்புடி வப்ப,வப்பையா! இன்னி யாரு புடிச்சாருவா? நீங்க தோட்டத்துல பறங்கி வெதச்சி பறிச்சாருவீகளே,அப்புடி தொப்ப,தொப்பையா! இன்னி யாரு பறிச்சாருவா?கம்மாயழிச்சு கனக்கெண்டை புடிச்சாருவீகளே! அப்புடி புள்ள,புள்ளையா! இன்னி யாருய்யா! புடிச்சாருவாக? நா வாழ்ந்த ராசா!" இப்படியாக இன்னும் நீள நான் வாயில் சேலையை வைத்து அடைத்தாலும் சிரிப்பு சப்தம் வெளியில் வந்துவிட என் அம்மா ,"எந்திரிடீ,அடி,எந்திரிச்சு அங்கிட்டுப்போ" என்று அதட்ட,"ஐயோ! மாட்டிக்கிட்டோமா?" என்று நிமிர்ந்தால் என் அம்மா,மற்றும் என் உறவினர் கண்கள் சிரிக்க,சிரிப்பு சப்தம் வெளியில் வராமலிருக்க முந்தானையை வாயில் வைத்து இருகப் பொத்தி அமர்ந்திருந்தார்கள்.இப்படி சில நேரங்களில் மரணங்களில் வைக்கப்படும் ஒப்பாரி கூட நகைச்சுவையாகிவிடும் போலும்.இப்படி அடுத்தவரின் மரணங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத அந்த நாட்களில் என்னை பாதித்த,இன்றும் எங்களை உருக்கும் திடீர் மரணம் என் தந்தையின் மரணம்.அப்போது என் தாயின் தாய் வைத்த ஒப்பாரி,இன்னும் என் ஞாபக அடுக்கில் சுழல்கிறது.
மண்ணில் பொறந்தவுக மாளுறது நிச்சயந்தான்
என் மஞ்சன் மக சானகையா மையழிய சம்மதமா?
பூமிப்பொறந்தவுக போகுறது நிச்சயந்தான்
என் பொன்னான சின்ன மக பொட்டழிய சம்மதமா?
தங்கத்த உருக்கி தரையில் வார்த்து தரித்தரராப் போனோமே!
வெள்ளிய உருக்கி வீதியில வார்த்து நாங்க வீணராப்போனோமே!
மஞ்சனப்பொட்டி நா மாளுமட்டும் வேணுமின்னேன்.
சந்தனப்பொட்டி நா சாகுமட்டும் வேணுமின்னேன்.
கும்பிட்ட தெய்வமெல்லாம் கூட்டிக்கொடுத்திருச்சே!
கையெடுத்த தெய்வமெல்லாம் காட்டிக்கொடுத்திருச்சே!
சம்மதமா,சம்மதமா,சாமிக்கெல்லாம் சம்மதமா!
அசராமக் கும்பிட்ட அம்மனுக்கும் சம்மதமா!
என் சின்ன மக கொஞ்சுடுத்த சீரான கண்டாங்கி
என் கட்டி மக கொஞ்சுடுத்த காஞ்சிபுரக் கண்டாங்கி
வீட்டுக்குடுத்த விதவிதமா கண்டாங்கி
வெளிய உடுத்த விலை உசந்த கண்டாங்கி
நித்தியமும் சத்தியமா நிறைவாக வாழ்ந்த மகன்
வரன் பொரும் சத்தியமும் வழியாக பிழைச்ச மகன்
இன்னொருவர் சொத்துக்கு இச்சையும் வச்சதில்ல!
மற்றொருவர் சொத்துக்கு மனசும் வச்சதில்ல!
காணுவமா,காணுவமா இன்னிக்கண்ணாரக் காணுவமா!
அணைய சனத்தோட அருக வரக்காணுவமா!
மக்க,சனத்தோட மன்றம் வரக்காணுவமா!
ராஜாக்களோடு நடுவிருக்கக்காணுவமா!
போதும்.இதற்கு மேல் எழுத முடியாமல் கண்ணீர் திரையிடுகிறது.துக்கம் விசாரிக்க வந்த அத்தனை ஆட்களும் இந்த ஒப்பாரிகளைக்கேட்டு குலுங்கிக்குலுங்கி அழுதனர்.ஒரு படிக்காத பெண்ணிற்கு இப்படிப்பாடும் திறமை எப்படி வந்தது என்பது பெரும் வியப்பு.ஒவ்வொரு நாளும் துக்கம் கேட்டு வரும் ஒவ்வொருவரிடமும் ஒரு நாள் பாடிய ஒப்பாரியை என் ஆயா பாடமாட்டார்.இன்றும் எந்த இறந்த வீடு போனாலும் இந்த ஒப்பாரிகள் நினைவில் வந்து, அழுகை வந்துவிடும்.என் தந்தை இறந்து 19 வருடங்கள் ஆகிறது.இருந்தாலும் அந்த இறப்பின் வலி இன்னும் அப்படியே தான் இருக்கிறது.அதனால் என் தாய் வைத்த ஒப்பாரியை எழுத இன்னும் கொஞ்ச நாள் போகவேண்டும்.
மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். ஒப்பாரியை பற்றி ஒரு ஆவணப்படம் செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம். உங்கள் அனுமதியுடன் இதை நகலெடுத்துக்கொள்கிறேன். நன்றி..
பதிலளிநீக்குபடிக்கையிலேயே கண்ணீர் நிறைகிறது.
பதிலளிநீக்குஅன்பு சாந்தி உனக்கு என் வணக்கங்கள். அன்றைய நிகழ்வுகளை அருமையாக பதிந்திருக்கிறாய்.
பதிலளிநீக்குபொங்கிப்பெருகி வரும் கண்ணீரை நிறுத்த வழி தெரியவில்லை.
எல்லா நெருங்கிய சொந்த பந்தங்கள் பங்காளி வீடுகளிலும் என்(ஆத்தா) தாயார் ஒப்பாரி வைப்பார்கள் ஆனால் அவர்கள் இறந்த போது அவர்களுக்காக ஒப்பாரிவைக்க ஆளில்லை.
பழைய நினைவுகளில் மனம் நெகிழ்கிறது.
//என் தாய் வைத்த ஒப்பாரியை எழுத இன்னும் கொஞ்ச நாள் போகவேண்டும்.//
மனம் தாங்குமா.. நெகிழ்ச்சியுடன் மீனா